மூன்று பேர் (தொடர் நிலைச் செய்யுள்)

This entry is part [part not set] of 22 in the series 20010825_Issue

விக்கிரமாதித்தன்


கெளதமன் கூற்று : –

ஆசையாய்த் தான் என்னுயிர்

அகலிகையை மணமுடித்தேன்

புலன்களை அடக்கிச் சலித்து

போகம் செய்தேன் புதுப்புது சுகமும் பெற்றேன்

பூவை முகர்வது போலத்தான்

பெரிதும் காதல் கொண்டேன்

மாமுனியென்பதை மறந்துவிட்டேன்

மனுஷனென்பதை உணர்ந்து கொண்டேன்

இஷ்டமாய்த்தான் இருந்து வந்தேன்

இனிய நினைவுகளே சுமந்திருந்தேன்

ஆணுக்கும் பெண்ணுக்குமான அந்தரங்கவாழ்வை

அப்படியப்படியே அடுத்தவரிடம் எப்படிச் சொல்ல

நல்ல பாம்புகள் போலப் புணைந்து கிடந்தோம்

நல்லவிதமாய்த் தான் வாழ்ந்து வந்தோம்

விடியலை வெறுத்தோம் விஷம் போல

அடைவதை எதிர்பார்த்தோம் வரம் போல

தேவியவள் தெய்வமவள்

ஆவியவள் அற்புதமவள்

உடம்பில் மனசையும்

உயிரில் ஒளியையும் கண்டறிந்தோம்

உமையொருபாகன் உலகமுதல்வன்

உண்மையான கடவுளென உணர்ந்து கொண்டோம்

போகம் பொய்யில்லையென்று தெரிந்து கொண்டேன்

மோகத்தீயை முழுசாக அவித்து விட்டேன்

பெண்ணொரு புதிரென்று நினைத்துக் கொண்டேன்

கண்போலக் காப்பதென்று முடிவெடுத்தேன்

மான்கள் போல வாழ்ந்தோம்

மீன்கள் போல இருந்தோம்

எத்தனை இரவுகள் எத்தனை ருசிகள்

எத்தனை விதங்கள் எத்தனை வார்த்தைகள்

எத்தனை பார்வைகள் எவ்வளவு வாசங்கள்

எத்தனையெத்தனையோ விஷயங்கள் கனவுகள்

தாய் போல நடந்தாள் தாசி போல கிடந்தாள்

சொன்னதைச் செய்வாள்

சொல்லக் காத்திருப்பாள்

காலை குளித்தெழுந்து வருவதொரு அழகு

கோலம் போடுவதொரு அழகு குங்குமமிடுவதொரு அழகு

அடுப்பில் தீ மூட்டுவதொரு அழகு

அளவறிந்து பரிமாறுவதொரு அழகு

இருக்கிற அழகும் நடக்கிற அழகும்

எடுக்கிற அழகும் கொடுக்கிற அழகும்

பேசுவது கிளி போல

சிரிப்பது நிலவு போல

மனசைக் கல்லியெடுத்து மாயமாய்

முந்தானையில் முடிந்து வைத்துக் கொண்டாள் சண்டாளி

ஒத்த குடும்ப வாழ்க்கை

உலகில் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது

எங்கள் இல்லறம் பார்த்து

எத்தனை கண்கள் சுட்டிருக்கின்றன

சூறாவளி போலவா வருவான்

சண்டாளன் காமம் கொண்டு

இந்திர போகமென்றால்

யார் மனையாளோடுமா

தந்திரம் செய்து

தலைவி மனசைக் கெடுக்கலாமா

மந்திரம் படித்துவிட்டால்

மனசைக் கொன்று விட முடியுமா

நெஞ்சில் தீயிட்டான்

நிம்மதியைக் கொள்ளையிட்டான்

ஒருவன் மனசைக் கட்டிப் போட்ட பத்தினியென்றே

ஓர்மை வேண்டாமோ

காமம் கண்ணை மறைத்தால்

கண்கள் அயிரம் கொண்டு திரிய வேண்டியது தான்

வஞ்சகமாய் நிலத்தை அபகரிப்பதுண்டு

வஞ்சகமாய் பொருளை அபகரிப்பதுண்டு

ஆசையில் மண்ணள்ளிப் போட்டான் வஞ்சகமாய்

என்னுயிரை என் செல்வத்தை

என் வாழ்வைத் தீய்க்கவென்று வந்து விட்டான் மாபாவி

உனக்கென்னடா கோட்டியா

எனக்கென்ற மனசை எற்றி விளையாட

கொன்று போட்டிருப்பேன்

கூறு கூறாய் பிளந்து போட்டிருப்பேன்

சாது சண்டாளனாவதில்லையே

வேதம் படித்தது வீண் போவதில்லையே

கண் மறைக்கும் கோபத்தில்

கடுமையாய் சாபமிட்டேன்

அறியாதவளா என்ன அவள்

அடி மனசு புரியாதவளா என்ன

காமுகன் வந்து கை தொட்ட நேரம்

கண்மணியே நீ தந்த இடம்

கருத்தை இழந்தாயோ

கல்லாய் சமைந்தாயோ

ஆங்காரம் அறிவை மறைத்தது

அன்பே அவளை சபித்தது

பத்தினியே நீயும் பாவம்தான்

போகி அவனும் பாவம்தான்

என் பாவம் எனக்கு

என் சோகம் எனக்கு

கல்லாக்கியதும் காதலில்தான்

கல்லானபின்னே கசிந்துருகுவதும் காதலில்தான்

தேவியே தெரியுமா உனக்கு

ஆவியே நீதானடி எனக்கு

நீயாவது கல்லாய்

நானோ மண்ணாய்

இணையைப் பிரிந்து இருப்பதற்கு

இல்லாமலே போயிருக்கலாம் ஒரேயடியாய்

துணையை இழந்து தவிக்கும் துயருக்கு மாற்று

தேடிக் கண்டடைய முடியாது ஒரு நாளும்

காத்திருக்கிறேன் கனிவு கொண்டு

காத்திருக்கிறேன் காதல் கொண்டு

விடிவெள்ளி சாட்சியாக இருக்கட்டும்

விடிவு காலம் விரைவிலேயே பிறக்கட்டும்

(தொடரும்)

Series Navigation

விக்கிரமாதித்தன்

விக்கிரமாதித்தன்