2 கவிதைகள்

This entry is part of 17 in the series 20010219_Issue

விஜயகுமார் சிவராமன்


1.
காலை நேரத்து பனிப்போர்வை,
அந்த பனிப்போர்வையில் ஜோடிக் குயிலின் பாட்டு,
மாலை நேரத்து மழை மேகங்கள்,
மாரிக்காலத்து மழையின் முதல் துளி,
அந்த முதல் துளியின் சாறல்,
மலரக்காத்திருக்கும் மல்லிகை மொட்டுக்கள்,
தொட்டவுடன் சுருங்கும் தொட்டாச்சுணங்கி,
தூரத்து மழையின் மண்வாசனை,
மூங்கிலோடு உரசும் மூங்கிலின் இன்னிசை,
நீலக்கடலின் மெல்லிய அலைகள்,
கருவானத்தில் கொட்டிக்கிடக்கும் விண்மீன்கள்,
அந்த வீண்மீன்களின் நடுவில் மூன்றாம் பிறை,
இயற்கையில் தான் எத்தனை அற்புதங்கள்,
ஆனால்,
இவை அனைத்தும் வெறும் கனவுகளாய்,
வாகனப் புகையையே சுவாசமாய் கொண்டு,
பேருந்து நெரிசலில் காகிதங்களாய் நசுங்கி,
கால்களையே இறக்கைகளாய் கொண்டு,
எதையும் ரசிக்க நேரமில்லாமல்,
திரும்பி வராத பழைய வாழ்க்கையை நினைத்து,
இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம் இயந்திரங்களாய்,
இந்த ஒரு சாண் வயிற்றுக்காக!

2.

அதிவேக ரயில் ஒடும் அதிர்வுகளாய்
இதயம்,

ஒரே ஒரு முறை பார்க்கமாட்டாயா ?
ஏங்கும் விழிகள்,

இமைக்கக்கூட மறந்து நிற்கும்
இமைகள்,

ஏதோ ஒன்று அழுத்த – பாரமாய் போகும்
மனது,

தான் மட்டும் தனித்து விடப்பட்டதாய் தோன்றும்
எண்ணங்கள்,

தொண்டைக்குழி அடைக்க – சுவாசிக்க திணறும்
நாசி,

அசைவுகள் இல்லாமல் – பசை போல் ஒட்டிய
கால்கள்,

இத்தணையும் நிகழ்கிறது பெண்ணே!
நீ என்னை கடந்து போகும் – அந்த

ஒரு வினாடியில்!

Series Navigation