சித்திரலேகா
துவைத்துவிட்டு மறந்தே போன துணிகளை
தோட்டத்துக் கொடியில் உலர்த்தும்போது
மங்கலான நட்சத்திரங்களின் பின்னணியோடு
வானில் தோன்றியது,
பிரகாசமான விடிவெள்ளி.
கருப்பு வெல்வெட்டில் பதித்த
இந்த வைர அட்டிகை,
அடுக்குமாடி நகரத்தில் மங்கிப்போன
கிராமத்து ஞாபகங்களை,
இனிமையா, துக்கமா என
இனம் பிரிக்க இயலாத உணர்வோடு
வெளிச்ச ரேகையாகக் கொண்டு வந்தது.
ஆனால் ஏமாற்றமாகிப் போனது.
ஒரு துணியை உதறி நிமிர்ந்து பார்த்தால்,
விடிவெள்ளி
ஒரு விமானமாகி,
சப்தமில்லாமல் பறந்துபோனது.
மிகவும் சமீபத்து தேதியிடப்பட்டு
கணவனால் வேறொருத்திக்கு
எழுதிப்பட்டிருந்த
காதல் கடிதம் காலையில்
என் கண்ணில் பட்டது……
இடிந்து உட்கார்ந்து,
எல்லா வேலையும் பிந்திப்போய்,
வேளை கெட்டவேளையில் துணி உலர்த்தியது……
குறைந்தபட்சம்
இந்த விமான வெளிச்சத்தை
நிஜ விடிவெள்ளி என எண்ணி
ஏமாந்து போனதையாவது…