சிவகாசி திலகபாமா
வயதுக்கு
வந்தபோது
வாராத ஆசையுன்
வட்டமிடும் கண்பார்த்து
வந்து விட்டதே
வெள்ளித்திரையில்விரியும்
விளங்காத காட்சிகள்உன்
கண் பார்த்து
மண்பார்த்தபோது
புரிந்து போனதே
மீசை பற்றிகேட்டாள்தோழி
ஆசைகொண்ட நேரத்தில்
பசை போட்டு ஒட்டவில்லை
உன்முகமென்றால்
வசைபாடுவாளே
கடவுள் கூட
பிடித்துபோனது
உன்பெயரை அவருக்கு
வைத்திருப்பதால்
கனவு தந்து
கவிதை தந்து
காதல் தந்தது
உறவு தந்து
உயிரும் தந்து
உடலில் கலந்தது
இரவு கொன்று
இனிமை தின்று
இதயம் தீர்ந்தது
கண்மை கலைத்து
பெண்மை எழுந்து
மென்மையானது
தன்மை மறந்து
தவிக்கும் நெஞ்சம்
தனலாய் ஆனது
மலர்ந்த மலரிது
மடியும் முன்னே
மழையாய் வந்திடு
கலந்த இதயம்
கலங்கு முன்னே
கண்ணே வந்திடு
எனக்குள் இருந்து
எழும்பும் எழுத்திற்கும்
ஏக்கம் இருந்திடும்
தாக்கம் கண்டு
காக்க நீயுமெனை
நோக்கி வந்திடு
நேரம் கடந்தென்
நிலையை மறந்துன்
நினைவால் ஏங்குகின்றேன்
காலம் கடந்து
கனவில் நடந்தோர்
கனவைத் தேடுகின்றேன்
உலகம் மறந்து
உள்ளம் கலந்த
உள்ளத்தைத் தேடுகின்றேன்
விழிக்குள்ளே
விழித்திருக்கும் என்
உயிரைத் தேடுகின்றேன்
ஓர் இதயத்துள்ளே
ஒளிந்து கொண்டஎன்
இதயத்தைத் தேடுகின்றேன்
காயும் நிலவென
பாயும் ஒளியென
தாயென வருவாயே
உலகம் மறந்து
உலவும் உடலை
உனக்கா தருவது
அக்னியின் முன்னே
அழிக்கப்பட்ட என் ஆசையை
அழித்தா விடுவது
பிற மஞ்சம் ஏறினாலும்
நெஞ்சம் மாறாததை
வஞ்சம் என்பாயா
அர்ச்சிக்கப்பட்ட
மலரென்றாலும்
அட்சதையாய் விழுவதை
அள்ளிக் கொள்வாயா
எச்சில் பட்டாலும்
ஏற்றுக் கொள்வாயா
அணில் கடித்ததென
பூஜிக்கப்பட்ட
மலரென்றாலும்
பிரசாதமென ஏற்றுக் கொள்வாயா ? ? ?
திண்ணை
|