இதோ ஒரு வார்த்தை

This entry is part [part not set] of 8 in the series 20000514_Issue

– ருத்ரா.


இளைஞனே!

உணர்ச்சியின் ‘பஃறுளியாறே ‘

காதல் எனும்

‘குமாிக்கண்டத்துள் ‘

நீ மூழ்கிப்போகுமுன்

ஒரு வார்த்தை.

காதல் பற்றி

புது புது வர்ணங்கள்

பூசுவதற்கு

புருசு தேடுவதே

கவிஞர்களின் தொழில்.

ஃப்ராய்டிசத் தினவுகளின்

அந்த விளிம்பு

உடையும் வரை

இவர்கள்

வார்த்தைகளை

இரத்த சதைகளின்

பிருந்தாவனம்

ஆக்கிக்கொண்டே

இருப்பார்கள்.

சூாியனை

பட்டாம்பூச்சி ஆக்குவார்கள்.

அதனால்

மனிதவாடையே இல்லாத

‘ஜ ‘ராசிக் ‘ உறுமல்களின்

யுகத்திலிருந்து கூட

உன் கலித்தொகையையும்

அகநானூற்றையும்

தூசி தட்டிக்கொண்டிருப்பார்கள்.

பாறாங்கற்களுக்கிடையே

‘ஃபாசில் ‘களாய்ப்

படுத்திருக்கும்

அந்த படிமங்களிலிருந்து கூட

கற்காலத்து

‘லைலா மஜ்னுக்களை ‘

தோண்டியெடுத்து

சினிமாப்பாட்டு

தயார் செய்துவிடுவார்கள்.

இண்டெர்னெட் எனும்

ஆகாய

நரம்பு முடிச்சுப்

பின்னல்களின்

சன்னல்கள் வழியே

அந்த

மின்னலின்

‘கலர் ‘க்கனவுகளை

‘கச்சாஃபிலிமில் ‘

கர்ப்பம் தாிக்க வைப்பார்கள்.

கணிப்பொறி கூட

காதலுக்கு

கண்ணி வெடிகளைப்

புதைத்து வைத்திருக்கும்

‘எலிப்பொறி ‘ தான்.

இளமையின் புயலே!

உன்

மத்தாப்புப் பிரபஞ்சத்தில்

இந்த ‘பாப் கார்ன் ‘ பொாிகளா

சூாியன்கள் ?

கிறங்கிய விழிகளில்

புதுக்கவிதைகள்.

ஊற்றுத்தீயில்

உற்சாகவிளையாட்டின்

சோப்புக்குமிழிகள்.

ஹார்மோன்கள் ஓட்டுகின்ற

இந்த

குதிரைப்பந்தயத்தில்

வேகம்

மைல்களைத் தின்று விடுகிறது.

பயணம்

பாதையை விழுங்கி விடுகிறது.

பிள்ளைக்குட்டிகளை

பெருக்கிக்கொள்ளும்

இந்த பொம்மை விளையாட்டில்

காதல் எனும்

நெருப்பின் தேனாற்றை

உன்மீது

ஊற்றிக்கொள்கிறாய்.

முட்டையா ?

கோழியா ?

எது முதல் ?

இது

வெறும் பண்டாரங்களின்

பாட்டு அல்ல.

அந்த வினாக்களைத் தின்ற

விடைகளும்

அந்த விடைகளை

எச்சமிட்ட வினாக்களும்

இன்னும்

பல்கலைக்கழகங்களின்

தாழ்வாரங்களில்

இறைந்துதான் கிடக்கின்றன.

ஆனால்

உனக்கு

முட்டைக்குள்ளும் காதல்

கோழிக்குள்ளும் காதல்.

நீ

அவிழ்க்கவேண்டிய

புதிர்கள்

இன்னும்

புதர்களாய்

மண்டிக்கிடக்கின்றன.

வெளிச்சம் சுவைக்கும்

ஈசல் பூச்சிகளின்

இருட்டு இறக்கைகளில்

ஈர்ப்பும் துடிப்பும்

ஐன்ஸ்டான் சூத்திரங்களாய்

அவிந்து கிடக்கின்றன.

உன்

மில்லினியக்கொண்டாட்டங்கள்

வெறும்

பூவாணங்களின்

தோட்டம் அல்ல.

இந்த மில்லினியம்

கரையாத கல்தூணும் அல்ல.

நிகழ்ச்சிகளில்

உருகியோடும்

மெழுகுவர்த்தி இது.

தீக்குச்சியை

இப்போது தான்

கிழித்திருக்கிறாய்.

காதல் எனும்

குச்சியோடு

எாிந்து முடிவது மட்டும்

வாழ்க்கை அல்ல.

நூற்றாண்டுகள்

முடியும்போது

அது

உன் தோரணங்களை

கேட்கவில்லை.

பனிக்கட்டித்துண்டுகள்

மிதக்கும்

ஸ்காட்ச் விஸ்கி கேட்கவில்லை

விடிய விடிய

உட்கார்ந்து கொண்டு

வானம் எனும்

கன்னிக்குடம்

உடைத்துக்கொண்டு வரும்

அந்த கற்பனைக் குழந்தைக்கு

போதை நர்த்தனங்களில்

உன்னை

பிரசவம் பார்க்கச்சொல்லவில்லை.

காதலைக்கொண்டாடுவதற்கு

மட்டும்

இந்த மில்லினியம்

உன் கையில் விழவில்லை.

மூக்குதுடைக்கும்

கைக்குட்டை கூட

உனக்கு

காதலியின் முகம்

ஆகிப்பொனதால்

அவள்

சுவாசப்பிரளயத்தில்

நீ

மூழ்கிப்போகும் முன்

இதோ ஒரு வார்த்தை.

உன் பங்குக்கு

என்ன தரப்போகிறாய் ?

இருட்டையா ?

வெளிச்சத்தையா ?

இந்த

நுரைப்படுகையில்

நீ

அமிழ்ந்தது போதும்.

பருக்கைக்கற்களில்

பளிங்குத் தாஜ்மகால் என்று

நீ

படுத்துக்கிடந்தது போதும்.

இளமைச்சூறாவளியே!

வெறும்

தெருப்புழுதியை

நீ

கிளப்பிக்கொண்டிருந்தது போதும்.

சமுதாயப்

பிணிகளையெல்லம்

சுட்டொிக்கும்

உன் எாிமலையின்

இமைகள் விாியட்டும்.

விழுச்சி கொள்!

எழுச்சிகொள்!

– ருத்ரா (இ.பரமசிவன்)

 

 

  Thinnai 2000 May 14

திண்ணை

Series Navigation

ருத்ரா

ருத்ரா