சகபயணி ஒருவரின் தடங்களில் விரித்துப் போடப்பட்ட முட்கள்

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

ஹெச்.ஜி.ரசூல்


இஸ்லாத்தை ஒற்றைப்படுத்தப்பட்ட அடையாளமாக அணுகுவது அதிகாரத்தை கட்டமைக்க மட்டுமே உதவும்.அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையை நண்பர் ஷுஹைப் செய்ய முற்படுகிறார் எனத் தோன்றுகிறது.(உயிர் எழுத்து செப்டம்பர் 2010 எதிர்வினை) அரபுவகைப்பட்ட வகாபிய ஒற்றை அதிகாரம் இஸ்லாத்தின் பிற பண்பாட்டு அடையாளங்களை அழித்தொழிக்கிறது என்பதும் ஒரு கருத்துநிலை. பன்மைச்சமுதாய சூழலிலே குரானிய கருத்தாக்கங்களை எப்படி அர்த்தப்படுத்துவது என்பதே இன்றைய காலத்தின் சவாலாக உள்ளது.இதனை ஹிஜ்ரா எனப்படும் மூன்றாம் பாலின திருநங்கைகள் குறித்தான கருத்தாக்கம் வரைக்கும் கூட நீட்டித்துப் பார்க்கலாம்.இதற்கு ஷுஹைபின் இதுபோன்ற மார்க்கபிரசங்கள் ஒருபோதும் உதவாது.

பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம்பிரதிகள் மூலநூலை வாசித்து புரிந்து கொள்ள முற்படாமல் நண்பர் ஜாகிர் ராஜாவின் விமர்சனத்திற்கு பதில் சொல்லும் போர்வையில் கி.பி.ஏழாம்நூற்றாண்டுகால மெத்தப்படித்த மேதாவியாக ஷுஹைப் தன்னை பாவனை செய்திருப்பது மிகவும் வேடிக்கையான ஒன்றாகும்.ஏனெனில் சூபி இசை, சூபிகளின் மாற்று உரையாடல்,தர்காபண்பாடு,வகாபிய
முதலாளித்துவம்,குரானிய புனிதம்சார்ந்த கற்பிதங்கள்,ஏகத்துவ ஓரிறைஅரசியல்,மவ்லிதுகள்,ஹிகாயத்துகளின் புனைவு மொழியுலகம் குரான், ஹஜ் சடங்குகளில் அனுமதிக்கும் விலங்குகளை பலியிடுதல்,(குர்பான்) ஷைத்தானை கல்லெறிதல் உள்ளிட்ட அரபுலக நாட்டார் சடங்குகள் எனப் பலவிதமான கருத்தியல்களின் மீதான மாற்று வாசிப்பு அந்நூலில் நிகழ்த்தப்பட்டுள்ளது.இவை குறித்த மதிப்பீட்டை
வரலாற்றியல்ரீதியானஆதாரங்களோடும்,மானுடவியல்,இனவியல்,மொழியியல் சார்ந்த அணுகுமுறைகளோடும் ஷுஹப் மறுத்திருந்தால் அந்த விவாதம் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

ஷுஹைபின் கருத்துப்படி பார்த்தாலும் சூபிசம் அத்வைதமென்றால்(அது அத்வைதமா என்பது தனி விவாதத்திற்குரியது)இஸ்லாமியம் என்ன துவைதமா.. குரானில் உள்ள அத்வைதக் கருத்துக்களை ஷுஹைப் என்ன செய்யப் போகிறார்?

ஒரே இஸ்லாம்தான் என ஷுஹைப் நிறுவ முற்பட்டாலும் கூட அதில் பல தத்துவ கல்வியியல் புலம்கள் செயல்படுவதை மறுக்கமுடியாது.குரான் ஒன்றே போதுமென கருத்தியலைமுன்வைக்கும்அஹ்லேகுரானிகள்,குரானையும்,ஹதீதுகளின்(அரபு வாய்மொழிவரலாறுகள்) ஒரு பகுதியையும் ஏற்றுக்கொள்ளும்வகாபிகள்,குரான்,ஹதீது,மத்ஹபுகள்(ஷாபி,ஹனபி,ஹன்பலி,மாலிகி மார்க்க சட்டப்பள்ளிகள்)தரீகாககள்
கருத்தாக்கங்களை ஏற்றுக் கொள்ளும் சுன்னத்துல் ஜமாத்தினர், குரானை அர்த்தப்படுத்துவதில் மாற்றுக்கருத்தாக்கம் கொண்டுள்ள அஹமதியாககள்(காதியானிகள்) ஷியாக்கள்,தேவ்பந்த், பரேல்வி,தப்லீக்ஜமாத் பிரிவுகள், ஆணதிகாரத்திற்கு எதிராக குரானை அர்த்தப்படுத்தும் இஸ்லாமிய பெண்ணியலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும்,கறுப்பின மக்களின் சமூக சமத்துவத்திற்கும்
குரல்தரும் இஸ்லாமிய விடுதலை இறையியலாளர்கள் எனப் பலவிதமான சட்டப் பள்ளிகளை நாம் இஸ்லாத்திற்குள் காணமுடியும். இவை வெறும் இறையியல் சம்பந்தப்பட்டதல்ல

குரானையும்,இஸ்லாத்தையும் சமூகவியல்,அறவியல் சார்ந்துயதார்த்தமாகபுரிந்துகொள்ளாமல்மிகைபுனிதங்களோடும், கற்பிதங்களோடும் அணுகுவதால்தான் முஸ்லிம்களை அடிப்படைவாதிகளாகவும்,பயங்கரவாதிகளாகவும் மேற்குலகம் கட்டமைத்துள்ளது. பிற சமுதாயங்களின் சமயங்களின் பண்பாடுகளின் அழிப்பில் ஒற்றை இஸ்லாம், முஸ்லிம்
கிலாபத்என்பதாகவும்இதுஉருவாக்கப்பட்டுள்ளது.சலபிகள்,வகாபிகள்,குதுபிகள் என நீண்டு படர்ந்து தலிபான்கள், அல்கொய்தாக்கள் என பலப்பல இயக்க அடையாளங்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.அமெரிக்க ஐரோப்பிய அதிகாரத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான பின்நவீன ஜிகாத் என்ற நிலையிலிருந்தும் இவ்வகை கருத்தியல் மாறுபட்டுள்ளது.

எனவேதான் கிறிஸ்தவ யூதர்களை குரானிய வசனங்கள் பங்கப்படுத்துவதாகவும், பாலியல் அதிகார உரிமை ஆணுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறி குரான் புனிதநூலை தடை செய்ய வேண்டுமென நெதர்லாந்தின் வலதுசாரிக் கட்சித்தலைவர் கிரீட்வைல்டர் கோரினார். அல்ஜெசீரா தொலைக்காட்சி செய்திக்கு 2007 ஆகஸ்ட் 3 ல் பிரிட்டன் கிரென்மெரின் இணையதள பதிவு இதற்கு மறுப்பையும் கண்டனத்தையும் பதிவு
செய்தது.

இதன் மற்றுமொரு முகம்தான் 2001 செப்டம்பர் 11 நியூயார்க் உலக வர்த்தக மைய கட்டடங்கள் மீது நடைபெற்ற தாக்குதல் தினத்தன்று 2010 செப்டம்பர் 11 ம் தேதி முஸ்லிம்களின் புனித நூலான குரானை எரிக்கப் போவதாக அமெரிக்க மத போதகர் டெர்ரிஜோன் ஸ் அறிவித்ததும் அதைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட கண்டனங்களும் எதிர்ப்புகளும் ஆகும்.இறுதியில் டெர்ரி தன் அறிவிப்பை பின்வலித்துக் கொண்டார்.
இச்சூழலில் இங்கும் சில மார்க்க உலமாக்கள் செப்டம்பர் 11 வர்த்தகமைய இடிப்பு குறித்து குரானில் மறைமுக முன்னறிவிப்பு உள்ளது என வியாக்கியானம் செய்வதுஇத்தகையதான போக்குகளை ஊக்கப்படுத்தவே செய்கிறது.

தொழுகை நிலையில் தக்பீரை வயிற்றிலா நெஞ்சிலா எங்கு கட்டுவது ,அத்தஹியாத் இருப்பில் விரலை அசைப்பதா அசைக்க கூடாதா என்பது போன்ற மார்க்கப் பிரச்சினை விவாதங்களில் துவங்கி தமிழக முஸ்லிம்கள் சுன்னத்துல் ஜமாத் அந்நஜாத்,ஜாக், தமிழக தெளகீதுஜமாத்,மற்றும் முஸ்லிம்லீக்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்(தமுமுக)விடியல் வெள்ளியினர், பாப்புலர்பிரண்ட், இந்திய தெளகீது
ஜமாத் எனப் பலப்பல கொள்கைப் பிரிவுகளாக துண்டாடப் பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

வகாபியதெளகீது ஜமாத், சுன்னத்துல் ஜமாத் தொழுகை மஸாயில் பிரச்சினைகளை முன்வைத்ததன் உச்சகட்ட விளைவாக செப்டம்பர் 5 ம் தேதியில் திருவாரூர் மாவட்டம் திருவிடைச் சேரியில் தெளகீது ஜமாத்திற்கு ஆதரவு தரவந்த குழுவினரில் ஒருவரான ஹஜ்முகமது உணர்ச்சி நிலையில் துப்பாக்கியால் சுட்டதில் கிராம ஜமாத்தை சேர்ந்த தலைவர்
முகமதுஇஸ்மாயில்உட்படஇரண்டுபேர்உயிரிழந்துள்ளனர்.ஐந்துபேர் குண்டுபாய்ந்து படுகாயமடைந்துள்ளனர்.

மிகைபுனிதங்களால் கருத்தியல்ரீதியாக உருவாக்கப்பட்ட மனோநிலை ஒரு முஸ்லிமை வன்முறையாளனாக மாற்றுவது இவ்வாறுதான்.கருத்துக்கு மாற்றுகருத்து என்றில்லாமல் ஊர்விலக்கம், மதவிலக்கம் செய்வதும் ஒரு வகையிலான் படுகொலைதான்.உலகப் புகழ்பெற்ற மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞர் அஸ்கர் அலி இன்ஜினியருக்கு எதிராக அவர் சார்ந்த ஷியாபிரிவு போரா முஸ்லிம் சமூக மதகுருவால்
மதவிலக்கம் நிகழ்ந்ததும் இவ்வாறுதான்.

இஸ்லாத்தின் இத்தகைய வன்முறை முகத்தை மாற்றுவதற்கான மிக முக்கிய பண்பாட்டு முகம் சூபி இஸ்லாம்தான்.ஓரிறை அரசியல் பேசினாலும் இதற்குக் காரணம் சூபிகள் இஸ்லாத்தை அணுகிய ஜனநாயக், மதசார்பற்ற பார்வைதான்.அதிகாரத்திற்கு எதிராக செயல்பட்டதால்தான் சூபிமன்சூர் ஹல்லாஜ் மரபுவழி இஸ்லாமிய ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டார்.பல சூபிஞானிகள் நாட்டைவிட்டு
துரத்தப்பட்டார்கள்.ஏன் தக்கலை சூபிஞானி பீர்முகம்மது விலியுல்லா கூட மரபுவழி காயல்பட்டணம் சதக்கத்துல்லா ஆலீம் ,உள்ளூர் முஸ்லிம்களால் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டார்.பாரசீகத்தில் துவங்கிராபியத்துல் பஸரிய்யா, ராபியத்துல் அதவியா எனத் துவங்கி தமிழகத்திலும் எண்ணற்ற பெண்சூபிகள் தோன்றக் காரணம் என்ன..இவற்றையெல்லாம் கூர்ந்தாய்வு செய்ய வேண்டும்.

இவற்றோடு சச்சார் அறிக்கையின் அடிப்படையில் வட இந்தியச் சூழலில் பிளவுண்டு கிடக்கும் முஸ்லிம்களில் அஷ்ரப் பிரிவினர் தவிர்த்த அஜ்லப்,அர்சால் முஸ்லிம்களான தலித் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டு அரசியல் கோரிக்கையை முன்வைத்து இயங்கும் தலித் பேக்வேர்டுமுஸ்லிம் மோர்ச்சா இஜாஸ் அலி, பஸ்மந்தா முஸ்லிம் மஹாஸின் அலிஅன்வர் உள்ளிட்ட அறிஞர்களின்
இயக்கங்களையும் கவனப்படுத்தலாம்.

தமிழத்திலும்உருது,தமிழ்முஸ்லிம்கள்,மரக்காயர்,ராவுத்தர், லெப்பை பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு அரசியலில் ஒஸா உள்ளிட்ட முஸ்லிம்தலித்துகள்,தலித்களிலிருந்து இஸ்லாத்திற்கு வந்து இன்னும் பழைய வாழ்நிலையிலேயே இருக்கும் தலித் முஸ்லிம்கள், மற்றும்நகர்ப்புற சேரிகளில் அவஸ்தையோடுவாழும் சேரிமுஸ்லிம்கள், பக்கிர்கள், முஸாபர்கள்,பீடி
சுற்றியும் பாய்முடைந்தும் நலிவடைந்த நிலை முஸ்லிம்கள் தோல்தொழில் உழைப்பாளிகள் இன்னும் பற்பல அடித்தள முஸ்லிம்களின் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமை கொடுப்பதற்கான எத்தனிப்புகளும் மிக மிக அவசியம்.

ஷுஹைப் போன்ற மார்க்க பிரசங்கிகள் கொஞ்சம் கீழிறங்கிவந்து அடித்தள முஸ்லிம்கள், முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளோடான தடத்தில் நிதானமாக முன்செல்ல முயலுவார்களென்றால் விடுதலைக்கான பெரும் பயணப்பரப்பில் தமிழின் முக்கிய நாவலாசிரியர் ஜாகிர் ராஜாவைப்போல், இன்னும் பல படைப்பளிகள் விமர்சகர்களைப் போல் நண்பர் ஷுஹைபும் கூட ஒரு சகபயணியாக மாறலாம். ஆனால் இந்த
தடம் சுகவாசிகளுக்கான தடமல்ல.முட்கள் விரித்துப் போடப்பட்ட தடம்.பாதங்களை கீறும் முட்களிடம் அன்பு செலுத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.அவசியமென்றால் முட்களை பிடுங்கிப் போடவும் வலு இருக்க வேண்டும்.

நன்றி: உயிர் எழுத்து, அக்டோபர் 2010

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்