அங்காடி தெரு காட்டும் கண்ணாடி

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

சின்னக்கருப்பன்


அங்காடி தெரு சமீபத்தில் நான் பார்த்த தமிழ் திரைப்படங்களிலேயே உண்மைக்கு அருகில் வந்த ஒரு படம். நிகழ்கால வாழ்வின் அபத்தங்கள், அனர்த்தங்கள், தாழ்வுகள், உயர்வுகள், கசப்பானவைகளிலிருந்து மீண்டு எழும், எழவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளான மனித வாழ்வை பற்றி பேசும் முதல் தமிழ்த் திரைப்பட்மாக இதைப் பார்க்கிறேன். இது தமிழின் சமீபத்திய படங்களில் மட்டுமல்ல, தமிழ்த் திரைப்படங்களிலேயே முக்கியமான ஒன்றாகவும் இருக்கப்போகும் திரைப்படம்.
இதன் பேசு பொருள் நகரம். பொதுவாகவே அங்காடி தெரு என்பது மனித வாழ்வின் ஆதாரமான ஒரு விஷயம். மனிதன் மனிதனாக ஆவதே வியாபாரத்தின் மூலமாகத்தான். வியாபாரத்தின் மூலமாகவே அவன் தனி மனிதனால் அறியப்படமுடியாதவற்றை அறிந்தான். கடலை பார்த்தே இராதவனால் சிப்பி மாலைகளை அணிய முடிந்தது வியாபாரத்தின் மூலமாகவே. இது மனிதனை விலங்குகளிலிருந்து மாற்றி அமைத்த முக்கியமான அம்சம். (இணைப்பு 1)
அங்காடி தெரு நகரத்தின் மையப்புள்ளி. இங்குதான் மனிதர்கள் மற்ற மனிதர்களிடமிருந்து அன்றாடம் புழங்கும் பொருட்களை வாங்குகிறார்கள் விற்கிறார்கள். அங்காடி தெருவினாலேயே நகரம் உருவாகிறது. எங்கெல்லாம் வியாபாரமே முக்கியமான விஷயமாக ஆகிறதோ அவையெல்லாம் நகரங்களாக ஆகின்றன.
நகரம் தொடர்ந்து மனிதர்களை கிராமங்களிலிருந்து அழைத்துகொண்டே இருக்கிறது. கிராமங்களில் தொடரும் ஒரே விஷயம் விவசாயம். விவசாயம் பொய்க்கிறபோதெல்லாம் மனிதர்கள் ஓடுவது நகரத்தை நோக்கியே.
திரைப்படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை, ஒவ்வொரு காட்சியிலும் மக்கள் நகரத்துக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள். ரயில்களும் பஸ்களும் ஆட்களை உமிழ்ந்துகொண்டே இருக்கின்றன. இவர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் நகரத்தின் வேர்வை அப்பி ஒட்டியிருக்கிறது. கசகசப்பான வெக்கை புழுதியினூடே வந்து குழுமும் மக்களை புழுக்கும் பண்டத்தின் மீது ஒட்டுமொத்தமாக அப்பும் ஈக்கூட்டமாக காட்டிக்கொண்டே இருக்கிறது இந்த படம்.
இதில் வேலை செய்ய கங்காணிகள் போன்ற ஆட்கள் கிராமங்கள் கிராமங்களாகச் சென்று வேலையாட்களைப் பிடித்துகொண்டு வருகிறார்கள். இங்கேதான் ஒரு முக்கியமான அவதானிப்பை இந்த திரைப்படம் செய்கிறது.
இங்கே முதலீட்டியம் முதலீட்டியத்தின் மதிப்பீடுகளோடு இல்லை. அது நில உடமை காலத்து மதிப்பீடுகளோடு இருக்கிறது. ஒரு முதலாளி தனது கடையில் கோவிலுக்குள் நுழைவது போல கால் செருப்புகள் இல்லாமல் நுழைகிறார். இது எடுக்கப்பட்ட விதத்தை பார்ப்பவர்கள், ஒரு பண்ணையார் காலில் செருப்பில்லாமல் மரியாதையுடன் நிலத்தில் இறங்குவதை போன்ற காட்சியமைப்பைப் பார்த்து திடுக்கிடுவார்கள். கடை திறக்கும் முன்னால், கடைக்கும், கடை முன்னால் அமர்ந்திருக்கும் தெய்வச்சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது. முதலீட்டிய மதிப்பீடுகளில் வியாபார நிலையங்கள் இது போல தெய்வீகப்படுத்தப்படுவதில்லை என்பது மிகச்சாதாரணமான அறிவு.
எவ்வாறு ஒரு பண்ணையார் ஒரே நேரத்தில் உழும் நிலத்தைக் கோவிலாக கருதினாலும், உழைக்கும் மக்கள் மீது கட்டுப்பாடு என்னும் வன்முறையை செலுத்துகிறாரோ அதே போல, இந்த கடையிலும் வேலை செய்பவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள் போன்றே நடத்தப்படுகின்றனர். எப்படி பாலுறவு வன்முறை பண்ணையார்த்தனத்தின் ஒரு பகுதியாக இருக்கிறதோ அதே போல, இங்கும் அதன் நீட்சி காட்டப்படுகிறது.
இது கங்காணியால் நிர்வகிக்கப்படும் கொத்தடிமைகள், அல்லது தோட்டத்தொழிலாளர்கள் போன்ற அமைப்பே இங்கு அங்காடித்தெருவில் நிலவுகிறது என்பதை வெளிப்படையான விமர்சனமாக திரைப்படம் வைக்கிறது. இதில் போலீஸ், சட்டம் ஆகியவை அனைத்தும் முதலாளிக்காகக் கையகப்படுத்தப்படுகின்றன. இங்கு மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்ட பெண், வன்முறை, பாலுறவு பலாத்காரம் ஆகியவை அனைத்துமே மூடி மறைக்கப்படுகின்றன.

நில உடமை காலத்திலிருந்து முதலீட்டிய காலத்துக்குள் விரைந்து அடியெடுத்து வைக்கும் அனைத்து நாடுகளுக்குமான பிரச்னை இது. சீனாவில் ஃபாக்ஸ்கான் என்ற கம்பெனி அங்கு உழைப்பாளர்களைக் கொத்தடிமையாக நடத்துகிறது. இந்த ஃபாக்ஸ்கான் என்ற சீன கம்பெனியே ஆப்பிள் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு ஐபாட், ஐபோன் ஆகியவற்றை உருவாக்கித் தருகின்றன. ஃபாக்ஸ்கானில் கடந்த வாரம் 12ஆவது ஊழியர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். (இணைப்பு 2)

சீனாவில் அரசாங்கமே யார் நகரத்துக்கு வர முடியும் என்பதைக் கண்காணிக்கிறது, கட்டுப்படுத்துகிறது. நகரத்துக்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்று வராதவர்கள், நகரத்தின் கழிவு குப்பை மேடுகளில் பொறுக்கி வாழ்கிறார்கள். அரசாங்க கங்காணிகள் கிராமங்களுக்குச் சென்று அங்கு நகரத்துக்கான கொத்தடிமைகளை பொறுக்கிக் கொண்டுவந்து செங்கற்சூளைகளிலும் ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்களிலும் வேலைக்கு வைக்கிறார்கள்.

இந்தியாவில் அந்த வேலைகளை அந்தந்த துணிக்கடை, உணவு விடுதி முதலாளிகளின் கங்காணிகள் செய்கிறார்கள். இதனை அற்புதமாக ஆவணப்படுத்தியிருக்கிறது அங்காடித்தெரு திரைப்படம். இந்த கொத்தடிமைத்தனத்தில் இந்த தொழிலாளர்களைக் கட்டிப்போட்டிருக்கும் ஒரே சங்கிலி அரசாங்கம் அல்ல. கிராமத்தில் வாழும் சொந்தங்களின் வறுமை. அந்த வறுமைக்குக் காரணமான பாழடைந்து புழுதி பறக்கும் விவசாயமற்ற நிலங்கள். கிராமங்களை காட்டும்போதெல்லாம் அங்காடித்தெரு திரைப்படம் பசுமையே அற்ற செம்மண் நிலங்களையே காட்டுகிறது. இது நிச்சயம் எதேச்சையானதல்ல என்று முதல் பார்வையிலேயே தெரிகிறது. பசுமை பொங்கும் சினிமா கிராமங்களிலிருந்து மாறுபட்டு ராமநாதபுர கிராமங்களை காட்டுகிறது அங்காடித்தெரு. எந்த ஊரிலிருந்து இந்த தொழிலாளர்கள் வருகிறார்கள் என்று ஆய்வு செய்யாமல் இது செய்யப்பட்டிருப்பதற்கு சாத்தியமே இல்லை. இந்த திரைப்படம் எடுக்கும் முன்னால், ஒரு கடுமையான நேரம் எடுக்கும் ஆராய்ச்சியும் பேட்டிகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது படத்தில் முழுவதும் தெரிகிறது. ஜெயமோகனின் பஞ்ச் வசனங்களுக்குப் பின்னே பலரது கடுமையான உழைப்பும் ஆராய்ச்சியும் இருக்கிறது என்பது வெளிப்படை.

படம் வெறும் ஆவணப்படமல்ல. அது மனிதர்களைப் பற்றி கதைத் தன்மையோடே பேசுகிறது. மனிதர்களின் அசாத்தியமான நம்பிக்கையை நமபகமான வழியில் பேசுகிறது. படத்தின் ஆரம்பத்தில் வரும் குருடாக இருக்கும் தெரு வியாபாரியிடமிருந்து வரும் வார்த்தைகளே படத்தின் கரு எனலாம். மனிதர்களை நம்பி கடையை ஆரம்பித்தவரது நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை. ஓரிருவர் ஏமாற்றலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் என்று படத்தை வெறுமே அவல காட்சியின் தொடர்ச் சங்கிலியிலிருந்து மீட்டெடுக்கிறது திரைக்கதை. இப்படி ஒரு வியாபாரியை நானே சென்னையில் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தின் பாதசாரிப் பாலத்தில் பார்த்தேன்.

படம் கதையில் நடுவிலிருந்து தொடங்குகிறது. பொதுவாக படங்கள் நேர் கோடு போல ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கதை சொல்லும். ஒரு சில படங்கள் முடிவை காட்டிவிட்டு பிறகு ஆரம்பத்திலிருந்து ஃப்ளாஷ் பேக் போன்று கதையை சொல்லும். இந்த படத்தில் கதை நடுவிலிருந்து ஆரம்பிக்கிறது. இதற்கு காரணம், இந்த கதை மட்டுமல்ல, எல்லா நகரத்தின் கதைகளுக்கும் ஆரம்பமோ முடிவோ இல்லை. எதாவது ஒரு இடத்திலிருந்து ஆரம்பித்தால் அது எந்த ஒரு கதையின் நடுவாகத்தான் இருக்கும். ஏன் பலரின் கதைகளின் நடுவாகக் கூடத்தான் இருக்கும். சமூகத்தில் எந்தக் காலப் புள்ளியுமே பல்லாயிரம் கதைகளின் நடுப்புள்ளிதான், ஏதோ ஒரு கட்டம்தான். இதில் துவக்கம் எங்கே இருந்தாலென்ன?
இரண்டாவது இதில் கதை என்பது தெளிவாக வரையறுக்கப்படவும் இல்லை. கதை நகரங்களின் பல கோடி மக்களின் கதம்பமாக இருக்கிறது. இதன் நடுவே ஒருவனது கதையை சொல்வது இத்தனை உப கதைகளும் சொல்லாமல் சாத்தியமும் இல்லை. இதில் யாரும் ஹீரோவும் இல்லை வில்லனும் இல்லை. கடை முதலாளி கிராமத்திலிருந்து கொண்டுவரும் ஆட்களுக்கு உதவி செய்வதாகச் சொல்கிறார். அதனை வில்லன் என்று பார்த்தால் அவர் பொய் சொல்கிறார் என்றும் பார்க்கலாம். ஆனால், அவர் உண்மையையே சொல்கிறார். இந்த வேலைகளும் இல்லை என்றால், கிராமங்களில் இன்னும் வறுமை தாண்டவமாடத்தான் செய்யும். அவர் அந்த கிராமத்தினருக்கு வாழ இடம் கொடுக்கிறார், உணவளிக்கிறார், வேலை செய்த பணத்தை வீட்டுக்கு அனுப்ப உதவுகிறார். மொத்தத்தில் அவர் அவர்களை பாதுகாக்கிறார். ஒரு கட்டுப்பாடு மிக்க குடும்பத்தலைவர் போலவோ, அல்லது பண்ணையார் போலவோ இருக்கிறார். (உறங்க இடம் இல்லாதபோது கதாநாயகனும் கதாநாயகியும் அல்லலுறும்போது, முன்னர் இருந்த ஓரளவுக்கு பாதுகாப்பான சூழ்நிலைக்கு அவர்களை ஏங்க வைத்திருக்கலாம்) நில உடமை மதிப்பீடுகள் மனித வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் நிர்ணயிக்கின்றன. முதலீட்டிய மதிப்பீடுகளில் அவனது உழைப்பும் ஒரு பண்டமாக வியாபாரம் செய்யப்படுகிறது. அந்த உழைப்பை அந்த கால நேரத்துக்கு விற்றதும், அவன் தன் சொந்த வாழ்க்கையில் என்ன செய்கிறான், யாரை கும்பிடுகிறான் என்பதை அது கண்டுகொள்வதில்லை. ஆனால், முதலீட்டிய வழியில் செல்லும் நகரத்தில் நில உடமை மதிப்பீடுகளின் மனிதர் உட்காரும்போது அவர் வேறு வழியின்றி வில்லனாகிவிடுகிறார்.

தங்களது இழி நிலைக்கு ஒப்புக்கொண்டே நம் மக்கள் மத்திய கிழக்கு செல்கிறார்கள். (பார்க்க : காலச்சுவடு இதழில் இது பற்றி கண்ணனின் அற்புதமான அவதானிப்பு.) ஐரோப்பா அமெரிக்கா என்று செல்கிறார்கள். இன்னும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வருகிறார்கள். நகரங்களிலிருந்து பெரு நகரங்களுக்கும் செல்கிறார்கள். எத்தனை படித்தாலும், என்ன திறமை இருந்தாலும், என்னவொரு அசாதாரணத் திறமை இருந்தாலும் உலகில் பெரும்பாலான மனிதர்கள் கூலிக்காரர்கள்தாம். தினக்கூலி, வாரக்கூலி, மாதக்கூலி- ஆனால் கூலி.
அந்தக் கடையில் ஆட்களை மேய்க்கும் மேனேஜரும் முதலாளிக்கு வேலை செய்கிறோம் என்பதை உணர்ந்து இருக்கிறார். முதலாளி கருணையுடன் இரு என்று ஆணையிட்டிருந்தால் அதனையும் செய்திருப்பார். இவருக்கு தனியாக ஒரு ஆளுமை கிடையாது. அவர் சரியாக வேலை செய்யவில்லை என்றால், முதலாளி அவரை தூக்கி எறிந்துவிட்டு அவரை போன்ற ஒரு ஆளை அந்த இடத்தில் நியமித்திருப்பார். ஆகவே அவரும் அடுத்த வேளை சாப்பாட்டுக்காக அஞ்சி காதலை இழந்தவனை போன்று, அடுத்த வேளை சாப்பாட்டுக்காக அஞ்சி கருணையை இழந்த ஒருவர் தான்.

கக்கூசை கழுவி சுத்தமாக வைத்திருந்து அதன் மூலம் பிழைப்பவனும், குருடாக இருக்கும் தெரு வியாபாரியும், இன்னும் பலரும் மானத்துடனேதான் தங்களது வியாபாரத்தை தொடர்கிறார்கள். வியாபாரம் என்பது அதன் அளவிலேயே புனிதத்துவம் பெறுவது இவர்களால்தான். இவர்களிடம் வாங்குபவர்களுக்கும் இவர்களிடம் விற்பவர்களுக்கும் மதங்கள் இல்லை. இவர்கள் நேரடியாக மக்களிடம் வியாபாரம் செய்கிறார்கள். கடந்த முப்பது வருடங்களில் சிறு வியாபாரிகள் பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறார்கள். காலமும், இவர்களின் உழைப்பும், சாமர்த்தியமான நிதி நிர்வாகமும், கணிப்புள்ள முதலீடும், பலரைச் சிறு வியாபாரிகள் என்ற நிலையிலிருந்து பெரு வியாபாரிகள் என்ற நிலைக்கு கொண்டு சென்றிருக்கின்றன. பல பெரு வியாபாரிகள் நில உடமை கால மதிப்பீடுகளையும் வழிமுறைகளையும் கொண்டு வெகு விரைவில் உயர்ந்தாலும், அவர்களால் முதலீட்டிய வியாபார மதிப்பீடுகள் முன்னரோ, அல்லது அதன் வழிமுறைகள் முன்னரோ போட்டி போட முடியாது. அதனை இந்த படம் காட்டவில்லை. அது இன்னொரு படமாக வசந்தபாலன் பின்னர் எப்போதேனும் தரலாம். அதே போல கிராமத்தினர் அதிகமாக பழமொழிகள் உபயோகப்படுத்தக்கூடியவர்கள். metaphor மூலம் பேசுபவர்கள். rational மனத்தில், நகரம் சார்ந்த மனத்தில் பழமொழிகளும் உவமைகளும் வருவதில்லை. ஆனால் கதாநாயகன் முக்கியமான தருணத்தில் பழமொழி மூலமாகவும், பொதுமைப்படுத்தல் மூலமும் (மனிதனுக்குத்தான் தீட்டு, சாமிக்கு ஏது தீட்டு) பேசுகிறான். ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் இது வராமலிருப்பது ஏன் என்று தெரியவில்லை. முதலாளி, தொழிலாளிகள் என்று அனைவருமே கிராமத்திலிருந்து வந்தவர்களாக இருக்கும் இந்த படத்தில் கிராமத்தினர் சாதாரணமாக பேசும்போது வந்துவிழும் பழமொழிகள் காணப்படவில்லை.

வாழ்க்கை என்பது வேறு வழியின்றியே இயங்கித்தொலைய வேண்டிய நிலை என்று படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை காட்டப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் நின்று வெரிகோஸ் வெயின் பிரச்னை வந்து சக்கையாக தூக்கி எறியப்பட்டவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை. உட்கார்ந்து பார்த்துகொண்டேதான் இருக்கிறார். வயசுக்கு வந்த பெண்ணை நாய்க்கொட்டடியில் வைத்திருக்கும் குடும்பத்துக்குத்தான் அவள் மீண்டும் வேலைக்கு போகிறாள். காலை இழந்தாலும் உயிர் வாழ்ந்துதான் தொலைக்க வேண்டியிருக்கிறது. மகளின் பணத்தால் உயிர்வாழ்ந்தாலும் அவளுக்கு கால் போனதும் உதவ முடியாமல் அப்பா ஓடுவதும் இது போன்ற வாழ்ந்து தொலைக்க வேண்டிய நிலைதான். இந்த உபகதைகளில் வருபவர்கள் வாழ்க்கை உட்பட ஏதோ ஒரு விதத்தில் மாற்றமடைந்துகொண்டே செல்கிறது.

ஆனால், இங்கே சுயத்தை இழந்தவர்கள் ஒரு புறமும் சுயத்தை இழக்க விரும்பாதவர்கள் மறுபுறமும் இருக்கிறார்கள். தொடர்ந்த வேலைக்காக காதலை தியாகம் செய்தவன், வேலைக்காக கருணையை இழந்தவன், பணத்துக்காக மனிதாபிமானத்தை இழந்த முதலாளி ஆகியோர் ஒரு புறமும், வேலைக்காக காதலை இழக்க விரும்பாத கதாநாயகன், கதாநாயகி மறுபுறமும், படத்தை ஆக்கியவர்கள் எந்தப்பக்கம் என்பது தெளிவு. அவர்கள் வேறெதனால் நாயக, நாயகியாகி இருக்க முடியும்? இந்தச் சாய்வால்தான் இது ஆவணப்படமல்ல, கதைப்படம் என்பதும் தெளிவு. இந்த தெரிவு நிலைகளே இந்த படத்தை இந்த கால கட்டத்தின் படமாக ஆக்குகின்றன. இங்கும் சார்புநிலைகளே சாத்தியம். இங்கும் ஒரு முழுமையான rational வாழ்க்கை சாத்தியமல்ல. எங்கும் சாத்தியமல்ல.

ஆரம்ப காட்சியில் வாழ்நாள் முழுவதும் நின்றே இருந்து வெரிகோஸ் வெயின் வந்து நடக்கமுடியாதவனாக ஆனவனும், இறுதி காட்சிகளில் காலை இழந்து தெருவில் வியாபாரம் செய்பவளாக வருபவளும் ஆரம்பத்தையும் இறுதியையும் இணைக்கிறார்கள். காலை இழப்பது என்பது இங்கே இன்னொரு குறியீடாக செயல்படுகிறது- loss of mobilityதான் இது. இவர்களால் இனி எங்கும் ஓடி விட முடியாது. மீண்டும் கிராமத்துக்குக் கூடச் செல்ல முடியாது. என்னதான் தன்மானத்துடனோ அல்லது கருணையுடனோ இருக்க முயன்றாலும் இவர்கள் நகரத்தால் விழுங்கப்பட்டவர்கள். இவர்கள். இனி இவர்கள் நகரத்தை விட்டு ஓடுவது சாத்தியமில்லை.

இணைப்பு

1) http://news.nationalgeographic.com/news/2006/06/060622-jewelry.html

2) http://www.telegraph.co.uk/finance/china-business/7773011/A-look-inside-the-Foxconn-suicide-factory.html

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்