27 வருட போர் : முகலாய பேரரசை வீழ்த்திய ராணி தாராபாயின் மராத்திய தலைமை

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

கேதார் சோமன்


1701இல் முகலாயர்களது முகாமில் பிரச்னைகள் முற்றுவதன் அறிகுறிகள் தென்படலாயின. ஜூல்பிகார் கானின் தந்தை அஸாத் கான் அவுரங்கசீப்பிடம் போரை நிறுத்திக்கொள்ளச்சொல்லி வற்புறுத்தினார். முன்னர் திட்டமிட்டதற்கும் மாறாக, அதனை விட அதிகமாக இழப்புகளை முகலாய பேரரசு அடைந்துவிட்டது என்று சுட்டிக்காட்டினார். 200 வருட முகலாய பேரரசு உடைவதன் அறிகுறிகள் வெற்றிபெற முடியாத போரின் நடுவே தென்பட்டன.

முகலாயர்களின் கஜானா வெகுவேகமாக காலியாகிக்கொண்டிருந்தது. ஆனால், அவுரங்கசீப் போரை வலியுறுத்தினார். தொடர்ந்து போரை நடத்தவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். தாராபாய் ஆட்சிப் பொறுப்பேற்றதும் அவுரங்கசீப் பார்லி கோட்டையை முற்றுகை செய்தார். பரசுராம் திம்பக் கோட்டையை பருவமழை வருவது வரை பாதுகாத்துவிட்டு பருவ மழை வந்ததுமே மெல்ல நழுவினார். மழையால் ஆறுகளில் பெருக்கெடுத்த காட்டுவெள்ளங்களில் முகலாய படை பெரும் அழிவை சந்தித்தது. இதே தந்திரோபாயங்கள் அடுத்து அவுரங்காபாத், பன்ஹாலா, ஆகிய இடங்களிலும் மராத்தாக்களால் செய்யப்பட்டன. இதே தந்திரோபாயமே விஷால்காட் கோட்டையிலும் செய்யப்பட்டது.

1704இல் அவுரங்கசீப் டோரானா, ராய்காட் கோட்டைகளை கைப்பற்றினார். மிகச்சிறிய எண்ணிக்கையுள்ள கோட்டைகளை கைப்பற்றுவதற்காக ஏராளமான வருடங்களை செலவழித்தார். 24 வருடமாக கடுமையாகவும் தொடர்ந்தும் போரிட்டாலும், மராத்தாக்களின் உறுதியும் அவர்களின் போரிடும் மன வலிமையும் அப்படியே இருப்பதை கண்டார்.

இறுதி எதிர்தாக்குதலுக்காக வடக்கில் மராத்தாக்கள் குழும ஆரம்பித்தனர். தாராபாய் தான் ஒரு பெரும் தலைவர் என்பதை மறுபடி நிரூபித்தார். ஒன்றன் பின் ஒன்றாக முகலாய பிரதேசங்கள் மராத்தாக்களால் கைப்பற்றப்பட்டன. முகலாயர்களால் இந்த தாக்குதலை எதிர்க்க தெம்பில்லை. முகலாய அரசின் கஜானா காலியாகியிருந்தது. வடக்கில் இந்த பிரதேசங்களை காப்பாற்ற போர்ப்படைகளும் இல்லை. 1705இல் நர்மதா ஆற்றை இரண்டு மராத்தா ராணுவ பிரிவுகள் கடந்தன. நேமாஜி ஷிண்டேயின் தலைமையின் கீழ் ஒரு படை வடக்கே போபால் வரை சென்றது. இரண்டாவது தபாடே தலைமையில் பரோச் மற்றும் மேற்கை ஆக்கிரமித்தது. எட்டாயிரம் போர்வீரர்கள் மஹோமத் கானின் 14000க்கும் மேற்பட்ட படையை முறியடித்தனர். இது முழு குஜராத் கடற்கரையையும் மராத்தாக்கள் வசம் கொண்டுவந்தது. ஆகவே வெகு வேகமாக முகலாயர்களின் உணவு, மற்றும் ஆயுத தள்வாட கடல்வழி பாதையை இறுக்க மூடினர்.

மஹாராஷ்டிராவில் அவுரங்கசீப் மனம் நொந்தார். மராத்தாக்களுடன் சமாதானம் பேச விழைந்தார். திடீரென்று பேச்சுவார்த்தையை முறித்துகொண்டு அருகே இருந்த சிறிய அரசான வாக்கிநாராவை தாக்கினார். வாக்கிநாராவின் அரசர்களான நாயக்குகள் தங்களது அரசகுல வம்சாவளியாக விஜயநகர பேரரசர்களை கொண்டவர்கள். அவர்கள் எப்போதுமே முகலாயர்கள் மீது பிரியம் கொண்டவர்கள் அல்லர். மராத்தாக்களுக்கு ஆதரவானவர்கள். அவுரங்கசீப் மஹாராஷ்டிராவிலிருந்து நகர்ந்ததால், வெகுவேகமாக தனாஜி சஹ்யாத்ரிக்குள் சென்று அங்கிருந்த பெரும் கோட்டைகள் அனைத்தையும் விரைவிலேயே கைப்பற்றினார். சதாரா, பராலி கோட்டைகள் பரசுராம் திம்பக்கால் கைப்பற்றப்பட்டன. ஷங்கர்நாராயண் சிங்காட் கோட்டையை கைப்பற்றினார். அதன் பின் தனாஜி திரும்பி தனது படைகளுடன் வாக்கினாராவுக்கு சென்றார். அங்கு நாயக்குகளுக்கு உதவியாக போரிட்டார். நாயக்குகள் வெகு தைரியத்துடன் போரிட்டனர். இறுதியில் வாக்கிநாராவை அவுரங்கசீப் கைப்பற்றினார். ஆனால், நாயக் அரசகுலம் வெற்றிகரமாக மிகக்குறைந்த இழப்புடன் தப்பிச்சென்றனர்.

தற்போது அவுரங்கசீப் தனது நம்பிக்கை அனைத்தையும் இழந்து பர்ஹான்புருக்கு திரும்பிசென்றுவிட முடிவு செய்தார். தனாஜி ஜாதவ் மீண்டும் அவரது வழியில் குறுக்கிட்டு பெரும் போரிட்டு பேரரசின் படையின் பின் அணி அனைத்தையும் அழித்தார். ஜூல்பிகார் கான் அவுரங்கசீப்பை காப்பாற்றி பர்ஹான்பூருக்கு அழைத்துச்சென்றார்

அவுரங்கசீப் தனது இறுதிநாட்களில் தனது மகன்களுக்கு நடுவே கசப்பான சண்டைகளை பார்க்க நேரிட்டது. தனியாளாக ஆகி, மன அழுத்தம் சேர்ந்துகொள்ள, கஜானா காலியான பேரரசுடன், வீட்டுக்கு வெகு தொலைவில் 1707 மார்ச் 3 ஆம் தேதி இறந்தார். “பேரழிவு கொண்டுவந்த என்னுடைய பாவங்களுக்காக கடவுள் என்னை மன்னிப்பார் என்று நம்புகிறேன்” என்பதே அவரது கடைசி வார்த்தைகள்.

இவ்வாறுதான் இந்தியாவின் மிக நீண்ட பேரழிவு கொண்டுவந்த போர் முடிவுக்கு வந்தது. முகலாய அரசு வெகு விரைவிலேயே சிதறுண்டு உடைந்தது. தக்காணத்தில் மராத்தா பேரரசு புதிய சூரியனாக எழுந்தது.

Series Navigation

கேதார் சோமன்

கேதார் சோமன்