ஹாங்காங்கில் சீன வருடப்பிறப்பு: அனுபவம் புதுமை

This entry is part [part not set] of 28 in the series 20100227_Issue

சித்ரா சிவக்குமார்


சீனாவில் வருடப்பிறப்பை மூன்று நாள்கள் கொண்டாடுவார்கள். அவை விடுமுறை நாள்களும் கூட. அதனால் ஹாங்காங்கில் வாழும் பெரும்பாலான நம்மவர்கள் இந்தியா சென்று வருவர். அல்லது பக்கத்து நாடுகளுக்கு பயணம் செல்லவோ, நண்பர்களின் வீடுகளுக்கு செல்லவோ, மலையேற்றம் செல்லவோ திட்டம் இடுவர். முடிந்தால் சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்யும் ஊர்வல நிகழ்ச்சியைக் காணச் செல்வர்;. அல்லது வான வேடிக்கை நிகழ்வைக் காணச் செல்வர்;. புல இடங்களுக்குச் சென்று செய்யப்பட்டிருக்கும் அலங்காரங்களைக் காணச் செல்வர். இப்படித்தான் இத்தனை வருடங்கள் நாங்களும் செய்து வந்தோம்.

இந்த புலி வருடத்தில் புதிய அனுபவம் கிட்டியது. ஹாங்காங் சுற்றுலாத் துறை தங்களது கொண்டாட்டங்களில் இந்தியர்களையும் கலந்து கொள்ள டிசம்பர் மாதம் அழைப்பு விடுத்தனர். மூன்று நாள்கள் நடன நிகழ்வு செய்ய வேண்டும் என்று பணித்தனர். இராணி சிங் தலைமையிலான இந்தியக் கலை வட்டம் அதற்கான வேலைகளில் துரிதமாக ஈடுபட்டது. நடனம் ஆட குழந்தைகளுக்கு அழைப்பு விடுத்தனர். குளிரின் காரணமாகவும் விடுமுறை திட்டங்களின் காரணமாகவும் பத்து வயது முதல் இருபது வயதுக்குட்பட்ட இருபத்து நான்கு பெண்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வந்தனர். அதில் என் மகளும் பங்கு பெற்றாள். என்ன பாடலுக்கு நடனம்? முக்கிய நிகழ்விற்கும் நான்கு முக்கிய இடங்களில் ஆடுவதற்கும், நம் இசைத் திலகம் ஏ. ஆர். ரஹமானின் ஜெய் ஹோ என்று முடிவானது. ஊர்வலத்தில் நடக்கும் போது ஓம் சாந்தி ஓம் என்றும் முடிவானது. மற்ற இரண்டு நாள்களுக்கு பாலிவுட் புகழ் பெற்ற வேகமான நடனத்திற்கு உகந்த பாடல்கள் தெரிவு செய்யப்பட்டன.
ஹாங்காங்கில் பலரும் அறிந்த யோகா பயிற்சி தரும் ஹரி ஓம் என்பவரை நடனம் கற்றுத் தர வேண்டினர். தன் வேலை முடிந்த பின் ஞாயிற்றுகிழமை 8:00 மணியளவில் வந்து நிகழ்ச்சிகளுக்குத் தேவையான ஆறு பாடல்களுக்கு நடனத்தை அமைத்தார். கணிசமான பயிற்சி பெற்றதும், சுற்றுலாத் துறையினர் பயிற்சியின் போது வந்து பற்பல விசயங்களை மேற்பார்வையிட்டனர். உடை, அணிகலன், ஒவ்வொரு இடத்திலும் எப்படி நடனம் செய்ய வேண்டும் என்று பலதரப்பட்ட விசயங்கள் முடிவு செய்யப்பட்டன.
பிப்ரவரி 10ஆம் தேதி புதன்கிழமை நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் முன்னோட்டம். அன்றோ குளிர் அதிகம். இருந்தபோதும் பெண்கள் பெருத்த உற்சாகத்தோடு கலந்து கொண்டனர். அதன் பிறகு நிகழ்ச்சி வெள்ளோட்டம் 13ஆம் தேதி. மழையோ தூறிக்கொண்டு இருந்தது. குளிரும் கூட. அன்று தான் நிகழ்ச்சியின் பிரம்மாண்டம் புரிந்தது. அனைத்துக் குழுக்களும் வந்திருந்தன. மேடையில் ஏறி பயிற்சி செய்து கொண்டிருந்தனர். எங்கள் முறை வர பதினொரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. இரவு பன்னிரண்டு வரைக்கும் அந்த வெள்ளோட்டத்தில் கலந்து கொண்டு திரும்பினோம்.

மறக்க முடியாத நாளாக மறுநாள் அமைந்தது. ஹாங்காங் கலை மையமே விழாக்கோலம் பூண்டது. அனைவரும் கூடியிருந்தனர். எப்படியும் ஐநூறு பேர்கள் வரைக்கும் கலந்து கொண்டனர் என்றே எண்ணுகிறேன். இருநூறு பேர்களுக்கு மேல் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தனர். இடமே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. ஹாங்காங்கில் இத்தகைய அனுபவம் புதுமையாக இருந்தது. குழந்தைகளை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விட்டுவிட்டு பெற்றோர்கள் வெளியே காத்திருக்க ஆரம்பித்தோம். எட்டு மணியளவில் நடக்கவிருக்கும் ஊர்வலத்தைக் காண ஐந்து மணியிலிருந்தே மக்கள் கூட ஆரம்பித்தனர். இத்தனை ஆர்வத்துடன் மக்கள் காத்திருப்பதைக் காண ஆச்சரியமாகவே இருந்தது. அத்தகைய நிகழ்ச்சியை நான் காண்பது இதுவே முதல் முறை. அதனால் இந்த அனுபலம் அலாதியானதாய் இருந்தது. நண்பர்களுக்கு தொலைக்காட்சியில் இந்த நிகழ்வு வரும் என்று கூறியிருந்தோம். நண்பர்கள் பலரும் நிகழ்ச்சியைப் பார்க்க காத்திருந்தனர்.
ஊர்வலத்தின் முக்கிய அம்சமான கலை நிகழ்வின் போது ஹாங்காங்கின் முக்கிய நிர்வாகி டோனால்ட் சங் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். குழுக் குழுவாக தங்கள் நடனங்களை ஆடிவிட்டு ஊர்வலத்தை ஆரம்பித்தனர். ஊர்வலம் வரும் வழியில் நாங்கள் காத்திருக்க ஆரம்பித்தோம். இந்திய அணியினர் ஜெய் ஹோ நடனத்தை ஆடிவிட்டு, குளிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு கிலோ மீட்டர் ஊர்வலத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்கு கொண்டனர். கூட்டத்தினரும் அவர்களை வெகுவாக உற்சாகப்படுத்தனர்.
அன்று வீடு திரும்ப பதினொரு மணி ஆகிவிட்டது. மறுநாள் மாலை 4:00 மணிக்கும் அதற்கு அடுத்த நாள் 6:00 மணிக்கும் மேடை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதில் 20 நிமிட பாலிவுட் நடன நிகழ்ச்சியைத் தந்தனர். தேச பக்திப் பாடலோடு ஆரம்பித்து, பல நடனங்கள் ஆடிய பின் ஜெய் ஹோ பாடலுடன் முடித்தனர். முதல் நாள் தூறல் காரணமாக ஏறக்குறைய 300 பேர்களும், இரண்டாம் நாள் குளிராக இருந்த போதும் ஏறக்குறைய 500 பேர்களுக்கும் மேலானோர் நிகழ்ச்சியினைக் கண்டு ரசித்தனர். 15ஆம் தேதி 8:00 மணிக்கு நடந்த வான வேடிக்கை நிகழ்ச்சியும் எப்போதும் போல பிரம்மாண்டமாக நடந்தேறியது.

சீன புது வருடத்தில் ஒரு புது அனுபவத்துடன் நிகழ்ச்சி முடிந்து திரும்பினோம். அனைவருக்கும் நிறைவாக இருந்தது. சீன வருடத்தை அவர்களும் சேர்ந்து கொண்டாடிய திருப்தி இருந்தது. என்றும் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது.

Series Navigation

சித்ரா சிவக்குமார்

சித்ரா சிவக்குமார்