இந்தியோடு உறவு

This entry is part [part not set] of 25 in the series 20091204_Issue

நேசமுடன் வெங்கடேஷ்


எதை வேண்டாம் என்று விலக்குகிறோமோ அதன்மேல் கவர்ச்சி இன்னும் அதிகமாகிவிடும் போலும். விலக்கப்பட்ட கனியில் இருந்து இதே கதைதான். சமீபத்தில் வேறொரு விஷயம் தொடர்பாக, தமிழ்ப் பத்திரிகைகள், தமிழகத்தில் வரும் ஆங்கிலப் பத்திரிகைகள் எல்லாவற்றையும் முழுவதும் படித்தேன். அதாவது எல்லா பக்கங்களும் படித்தேன். அப்போதுதான் அந்த ஆச்சரியகரமான விஷயம் என் மனத்துக்குப் புரிந்தது.

இந்தி வேண்டாம் என்று பெரிய இயக்கமே நடத்திய தமிழ்நாட்டில், இன்று எல்லா பத்திரிகைகளிலும் இந்தி நடிகர், நடிகைகள், இந்தி சினிமா ஆகியவையே நிறைந்திருக்கின்றன. டைம்ஸும், டெக்கான் கிரானிக்களும் இந்தி சினிமா செய்திகளைத் தொடர்ந்து தாங்கி வருகிறது. அதை அப்படியே பின்பற்றி, ஹிந்துவின் வெள்ளிக்கிழமை சப்ளிமெண்ட்டில் இந்தி சினிமா முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. ஹாலிவுட் சினிமா எப்போதும்போல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

வேறொரு விஷயமாக, சென்னைப் பள்ளி ஒன்றுக்குச் செல்லவேண்டி இருந்தது. அங்கே பேசிப் பழகிய மாணவிகளிடையே இந்தி சினிமா மிகச் சரளமாகப் புழங்குகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு கூட இப்படி இருந்ததா என்று தெரியவில்லை. நடிக நடிகையரின் லேட்டஸ்ட் படங்கள் முதல்கொண்டு, அவர்கள் முன்பு நடித்த படங்கள், பாடிய பாடல்கள் எல்லாம் அவர்களுக்கு அத்துபடியாக இருக்கிறது.

செல்பேசிகளில் பாடல்கள் டவுன்லோட் செய்யப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழ்ப் பாடல்களுக்கு இணையாக இந்திப் பாடல்கள் டவுன்லோட் நடக்கிறது. அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்துகொண்டு, செல்பேசிகளில் மாற்றிக்கொள்கிறார்கள்.

இதன் பாதிப்பை தமிழ்ப் பத்திரிகைகளில் நீங்கள் நிறையவே பார்க்கலாம். ஆனந்த விகடனின் இன்பாக்ஸ் பகுதியில் இந்தி நடிக நடிகையர் பற்றிய தகவல்கள் நிறைய இருக்கும். குமுதம் இந்தி சினிமாவுக்கென்றே ஒரு பகுதி வைத்துக்கொண்டு இருக்கிறது. சினிமா எக்ஸ்பிரஸ் இதழும் இந்தி சினிமாவைப் பற்றி தனிப்பகுதி வைத்துக்கொண்டு இருக்கிறது. குங்குமம் இதழும் அதன் நியூஸ் வே பகுதியில் இந்தி சினிமா பிரபலங்கள் பற்றி பேசுகின்றது.

பல வகைகளில் இந்தி சினிமா ஆர்வம், இங்கே, தமிழகத்துக்குள் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இதை நீங்கள் மோசமான பாதிப்பு என்று சொல்லவும் செய்யலாம். அது உங்கள் பார்வையைப் பொறுத்தது. நடை, உடை, பாவனைகள், பேச்சு, பழக்கங்கள் எல்லாவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தமிழ்ப் பெண்களுக்கு இந்தி கனவு நாயகர்கள் உருவாக ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ் நடிகர்கள் இந்தி ஹீரோக்களின் சாயல்களில் வளைய வர ஆரம்பித்துவிட்டார்கள். நேரடி உதாரணம்: பரத். ஏற்கெனவே இங்கே குணால், அப்பாஸ், வினய் மாதிரியான ஹீரோக்கள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் இந்தி சாயல் அதிகம்.

நடிகைகள் பற்றி தனியே சொல்லவே தேவையில்லை. எல்லா நடிகைகளுக்கும் இந்திதான் கனவு தேசம். இந்தி காஸ்டியூம் டிசைனர்கள், டான்ஸ் மாஸ்டர்கள் எல்லோரும் இங்கே பல ஆண்டுகளாக வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ், பிரபுதேவா போன்றோர் இந்தி சினிமா இயக்குவதில் காட்டும் ஆர்வம், நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

அதேபோல், இந்தி சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தமிழ்ப் படங்களைத் தயாரிப்பதில் நிறைய ஆர்வம் காட்டி வருகின்றன. இது இன்று என்று இல்லை. பல பத்தாண்டுகளாகவே நடந்துவருவதுதான் என்று விவரம் தெரிந்த சினிமாகாரர்கள் சொல்லுகிறார்கள். முதலில் பைனான்சியர்களாக இருந்தவர்கள் பின்னர் நேரடி திரைப்பட தயாரிப்பிலும் இறங்கி வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார்கள்.

இந்தி சினிமா, நம்மை தொடர்ந்து தேசிய நீரோட்டத்தோடு அணுக்கமானத் தொடர்பில் வைத்தே இருந்திருக்கிறது. மற்ற வகைகளில் வேண்டுமானால், நாம் இந்தி உலகோடு வேறுபட்டு, தனிமைப்பட்டுப் போயிருக்கலாம். ஆனால், சினிமா என்ற சாதனம் நம்மைப் பிணைத்தே வைத்திருக்கிறது.

Series Navigation

நேசமுடன் வெங்கடேஷ்

நேசமுடன் வெங்கடேஷ்