காங்கிரஸ் கவனிக்க !

This entry is part [part not set] of 44 in the series 20090813_Issue

பி.ஏ.ஷேக் தாவூத்


மக்களவையில் உள்துறை அமைச்சகத்தின் செயல்திட்டங்களுக்கான நிதி ஒதுக்குதல் தொடர்பான விவாதம் நடைபெற்றபோது நுனிப்புல் மேய்ந்து கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர் நமது பாராளுமன்ற பயில்வான்கள். ‘உள்நாட்டுப் பாதுகாப்பை பலப்படுத்த நடிகர்கள் விஜயகாந்த், அர்ஜுன் மற்றும் மோகன் லாலை இராணுவத்தில் சேர்க்க வேண்டும். அதன் மூலம் உள்நாட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படும்’ என்று சொன்னாலும் சொல்லி விடுவார்களோ நமது மக்களவை உறுப்பினர்கள் என்ற அச்சமும் நமக்கிருந்தது. ஏற்கனவே மோகன் லாலுக்கு கௌரவ லெப்டினன்ட் பதவி இராணுவத்தில் கொடுத்தாயிற்று. அப்பதவிக்கு காத்திருப்போர் பட்டியலில் விஜயகாந்தும் அர்ஜுனும் இருக்கலாம். இத்தகைய நிகழ்வுகளுக்கு ஒப்புதல் அளிப்பதிலோ அல்லது அதில் கலந்து கொள்வதிலோ நமது பாதுகாப்பு துறை அமைச்சர் உட்பட பலரும் வெட்கம் கொள்வதில்லை. நாட்டின் சுதந்திரத்திற்காக எவ்வளவோ தியாகம் செய்த பல தியாகிகள் இன்னும் நம்மிடையே இருக்கும் போது அவர்களை கவுரவிக்க அல்லது குறைந்தபட்சம் கவனிக்க கூட மறந்த இந்த அரசு  கோடிகளில் புரளும் கிரிக்கெட் வீரருக்கும் பின்னர் நடிகருக்கும் லெப்டினன்ட் பதவியை அளிப்பது வெட்க கேடானது.

அத்தகைய அறிவுஜீவிகளுக்கு மத்தியில் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளில் ஒன்றான சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தொல் திருமாவளவனின் உரை இந்த நாட்டின் அடிமட்ட மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஓர் உரையாக இருந்தது என்பது மிகையான கூற்றல்ல. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரான திருமாவளவனின் புலித்தேசிய அரசியல் உட்பட பல அரசியல் நிலைப்பாடுகளை முழுவதுமாக ஆதரிக்க இயலாதெனினும் அவருடைய இந்த மக்களவை விவாத உரையில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் அடிமட்ட மக்களின் மேல் அனுசரணை கொண்ட எவருக்குமிருக்க இயலாது.

“தேசிய பாதுகாப்பு என்பது அகநிலை பாதுகாப்பையும், புறநிலை பாதுகாப்பையும் உள்ளடக்கியது. உள்நாட்டுப் பாதுகாப்பு வெறும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் மட்டுமில்லை. மாறாக புறநிலைப் பாதுகாப்பும், அகநிலைப் பாதுகாப்பும் உள்ளடங்கியது. உள்நாட்டுப் பாதுகாப்பு என்பது இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரிவினரையும் பாதுகாப்பதில் அடங்கியிருக்கிறது. தேசிய பாதுகாப்பு என்பது மக்களின் வாழ்வுரிமைகளைப் பாதுகாப்பதிலும், மக்களின் அனைத்து வகையான உரிமைகளைப் பாதுகாப்பதிலும் அடங்கியிருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்புத் துறைகளான காவல்துறை, இராணுவத்துறை மற்றும் உளவு – கண்காணிப்புத் துறை போன்ற துறைகளில் தலித்துகளும் இஸ்லாமியர்களும் வெகுவாக புறக்கணிக்கப்படுகிறார்கள். தலித்துகளும் இஸ்லாமியர்களும் மட்டுமே தேச விரோதிகளாக சித்தரிக்கப்படுவதற்கு காரணம் இப்படிப்பட்ட அதிகார மையங்களிலே தலித்துகளும், இஸ்லாமியர்களும் புறக்கணிக்கப்படுவதேயாகும். ஒரு தனி நபரோ, தனி சமூகமோ அல்லது ஒரு மாநிலமோ புறக்கணிக்கப்பட்டால், இழிவுபடுத்தப்பட்டால் அவர்கள் வன்முறையை நோக்கி நகருவார்கள் என்பதுவும் அதை நம்மால் தடுக்க முடியாது என்பதையும் நன்கறிவோம். அந்த வகையிலே பார்க்கும்போது RAW, IB, CBI , Military Intelligence என்கிற உளவு கண்காணிப்பு துறைகளில் சுத்தமாக தலித்துகளும் இஸ்லாமியர்களும் இடம்பெறுவதே இல்லை என்பது மிகப்பெரிய புறக்கணிப்பாக இருக்கிறது”. இது தான் திருமாவளவன் பேசியதில் முக்கிய சாராம்சமாகும்.

இந்த நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரந்து விரிந்து வாழுகின்ற ஒரு சமூகமாக தலித் சமூகமும் நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் இருக்கின்ற ஒரு சமூகமாக இஸ்லாமிய சமூகமும் இருக்கின்றது. இவ்விரண்டு சமூகங்களைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழுகின்ற மக்களாகவும், படிப்பறிவு இல்லாதவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களைத்தான் காங்கிரஸ் கட்சி தனது ஓட்டு வங்கிகளாக சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இன்று வரை பயன்படுத்தி வந்து கொண்டிருக்கிறது. சுமார் ஐம்பது ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சிக்கட்டிலின் சுகம் அனுபவிக்க இவ்விரு சமூக மக்களுமே முதன்மைக் காரணிகளாக இருக்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

இந்த நாட்டின் மக்கள் தொகையில் சற்றேறக்குறைய நாற்பது சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் இவ்விரு சமூகத்தை சார்ந்தவர்களே. இவர்களைத் தொடர்ந்து புறக்கணித்தல் என்பது இந்த நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லாது. மாறாக இவர்களில் சிலரை கேடிகளாகவும், குற்றவாளிகளாகவும்தான் மாற்றும். நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல் இன்று வரை நடைபெற்ற பெரும்பாலான கலவரங்களில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களும் இவ்விரு சமூகத்தைச் சார்ந்தவர்களே. தமிழகத்தின் தாமிரபரணி, கொடியங்குளம் கலவரங்களாகட்டும் வடஇந்தியாவில் மீரட் , பாகல்பூர் கலவரங்களாகட்டும் அல்லது குஜராத் இனக்கலவரங்களாகட்டும் அதிகபட்ச பாதிப்பை அடைவது இவர்களே.

தொடர்ந்து இவர்களை அடிமட்டத்தில் வைத்திருத்தல் காங்கிரஸ் கட்சியினரின் ஆட்சிக்கட்டிலின் சுகத்திற்கு அடித்தளமாக வேண்டுமானால் அமையலாம். அதுவும் இந்த சமூகங்கள் விழிப்படையும்வரைதான். இவர்கள் விழிப்படைந்து போராட ஆரம்பித்துவிட்டால் ராகுல்காந்தியின் பிரதமர் பதவிக் கனவு, கனவாகவே போய்விடும் அபாயமும் இருக்கிறது என்பதை அறியாததல்ல காங்கிரஸ் கட்சி. தொடர்ந்து இவர்களின் ஆதரவை காங்கிரஸ் தக்கவைக்க வேண்டுமானால் இவர்களின் முன்னேற்றத்திற்கு “கை” கொடுக்க வேண்டும். கை கொடுத்தால் இருக்கையை தக்க வைத்துக் கொள்ளலாம். எவ்வளவு காலம் தான் சிறுபான்மை அரசாக இருந்து பெரும்பான்மை அரசாக  மாறும் வித்தை பலிக்க முடியும்.?

“எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும். ”
என்ற வள்ளுவனின் வாக்குக்கேற்ப நீதி கேட்டு நிற்கின்ற இந்த மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா காங்கிரஸ் கட்சி? பன்னாட்டு பணமுதலைகள் , டாடாக்கள், அம்பானிகளின் முக்கல் முனகலுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து அவர் தம் இடங்களுக்கே சென்று குறைகளை களையும் காங்கிரஸ் அரசு அடிமட்ட மக்களின் குறைகளை களையுமா?அல்லது வள்ளுவன் சொன்ன முடிவை தேடிக் கொள்ளுமா?

– பி.ஏ.ஷேக் தாவூத்

pasdawood@gmail.com

Series Navigation

பி.ஏ.ஷேக் தாவூத்

பி.ஏ.ஷேக் தாவூத்