ஆணாதிக்க உலகில் பெண்ணாய் வாழ்தல்

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

செல்வன்


1. மாமியார் என்ற பெண்

மாமியார் என்ற உறவு பட்டமாக மாறி மருமகளுடன் அதிகாரத்துக்காக போட்டியிடும் நிலை உருவாக்கப்பட்டதால் பெண்ணிய கோணத்தில் மாமியாரும் ஒரு பெண் என்ற அளவில் இந்த விஷயத்தை அலசலாம் என இருக்கிறேன்.

மாமியார் என்பவர் யார்?

மாமியார் என்பவர் ஒரு ஆணின் தாய்.இன்னொரு ஆணின் மனைவி.இந்த இரு வேலைகளையும் செய்து களைத்துபோய், உடல் இளைத்து,நலிந்துபோன ஒரு அடிமை.மருமகளாய் வீட்டுக்கு வந்து அடிமையாய் ரிடையர் ஆன ஒரு பெண்.தான் பெற்ற பிள்ளையை தானே வளர்க்க முன்வராத ஆண்வர்க்கத்தின் சார்பாக குழந்தையை வளர்க்கும் முழுநேர பொறுப்பையும் கையில் எடுத்துக்கொண்டு அந்த சுமை காரணமாக தனது கெரியரை இழந்தவர்.மன்னன் மனைவியானாலும் நம் நாட்டில் ஒரு பெண்ணுக்கும் நடுத்தெருவுக்கும் இடையில் நிற்பது ஒரு ஆண் மட்டுமே…அந்த ஆண் இல்லையென்றால் அந்த பெண் நடுதெருவில் தான் என்ர நிலையில் தான் நாம் நமது பெண்களை வைத்திருக்கிறோம்.அந்த விதியின் கீழ் தாய்,மனைவி என்ற இருசுமைகளை சுமந்து பணிசெய்து இளைத்து, குடும்பத்தின் முதல் அடிமை மாமியார்.

மருமகள் என்பவர் யார்?

மாமியார் எனும் அடிமை ரிடையர் ஆனதால் அவரது பணிகளை செய்ய புது அடிமை தேவைப்படுகிறது.அதனால் கல்யாண சந்தையில் பேரம் பேசி மருமகள் என்ற இன்னொரு அடிமையை கொண்டுவருகின்றனர் ஆண்கள்.மருமகள் என்பவர் ஒரு குடும்பத்தில் மாமியரை ரீப்ளேஸ் செய்யும் அடிமை.

மாமியார் என்பது கவுரவத்துக்குரிய பட்டமா?

ஜெயிலில் சீனியர் கைதிகளை கன்விக்ட் வார்டர் என்ற பதவி கொடுத்து ஜூனியர் கைதிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்துவார்கள்.அந்த பொறுப்புக்கு பரிசாக அந்த கன்விக்ட் வார்டருக்கு கிடைக்கும் சலுகைகள் கால் காசுக்கு பெறாத கான்விக்ட் வார்டர் என்ற பட்டம்.மற்ற கைதிகளை விட நல்ல உணவு.நல்ல ஜெயில் அறை.சூபரெண்டிடம் மதிப்பு…இதுமாதிரி அலங்கார பட்டம் தான் மாமியார் என்ற பட்டமும்.குடும்பத்துக்கு வந்த ஜூனியர் அடிமைகளை மேற்பார்வை செய்யும் சீனியர் அடிமை மாமியார்.

மாமியார் மருமகள் சண்டை ஏன்?

ஆங்கிலத்தில் என்று சொல்வார்கள்..மாமியாரின் நலன் மருமகளை ஒடுக்குவதில் தான் இருக்கிறது என்பது போல் ஆக்கப்பட்டதால் மாமியார்,மருமகள் இருவரும் கிடைக்கும் கால்காசு அதிகாரத்துக்கும்,அந்தஸ்துக்கும் போட்டியிட வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.கோழிப்பண்னையில் கோழிகளை கூண்டில் அடைத்துவிட்டு உணவை வீசினால் கோழிகள் உணவுக்காக அடித்துக்கொள்ளத்தான் செய்யும்.இல்லத்திலும் நிலைமை அதுதான்.

மாமியாரும், மருமகளும் ஒரே குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட இரு பெண்கள்.அந்த முறையில் அவர்களுக்கிடையே இரு பெண்களுக்கிடையே நிலவும் இயல்பான சகோதரபாசம் மறைந்து அவர்கள் எதிரிகளானதற்கான காரணம் முழுக்க இந்த ஆணாதிக்க சமூகத்தின் வடிவமைப்பாலேயே நிகழ்ந்தது.

கணவனின் வயதான பெற்றோரை பார்த்துக்கொள்வது மருமகளின் கடமை ஆகாதா?

இல்லை.ஆணாதிக்க உலகில் பெண்களிடம் சுமத்தப்ப்டும் இப்படிப்பட்ட மருமகள் கடமை, தாயின் கடமை ஆகிய அனைத்தும் ஆண்கள் தமது பொறுப்பை தட்டிகழித்துவிட்டு பெண்களை அடிமைப்படுத்த செய்யும் சூழ்ச்சியே ஆகும்.தனது குழந்தையை தான் கவனிக்கும் கடமையை தட்டிகழித்து மனைவியின் தலையில் அதை கட்ட தாய்மை என்ற பொறுப்பு பெண்களின் தலையில் கட்டப்படுகிறது.அதேபோல் தனது பெற்றோரை தான் தான் கவனித்துகொள்லவேண்டும் என்ற ஆணின் கடமை மனைவியின் தலையில் கட்ட மருமகள் என்ற இன்னொரு கடமை பெண்ணின் தலையில் கட்டப்படுகிறது.

இப்படி ஆணின் வேலையை பெண் செய்வதால் அவளது கெரியர் அழிந்து ஆணை சார்ந்திருக்க வேண்டியவளாகிறாள்.இத்தகைய சார்ந்திருத்தல் ஆணின் பலத்தை அதிகரித்து பெண்ணை நிரந்தர அடிமையாக்குகிறது.

இதற்கான தீர்வு என்ன?

பெண்னை பெண்ணாக வளர்ப்பதும், ஆணை ஆணாக வளர்ப்பதும் ஒழியவேண்டும்.ஆண் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சமையல் கற்றுதரவேண்டும்.வீட்டுவேலைகள் அனைத்தும் செய்ய அவர்கள் பழக்கப்படுத்தப்படவேண்டும்.பெண் குழந்தைகளை மட்டும் இதை செய்ய வைத்துவிட்டு ஆண்குழந்தைகளை கிரிக்கட் ஆட அனுப்பும் போக்கு ஒழியவேண்டும்.

ஆணாதிக்கம் ஒழிய பெண் ஆணைப்போல் வேலை,கெரியர் என்ற கண்ணோட்டத்தில் வளர்க்கப்டுவதும், ஆண்கள் பெண்களைபோல் குடும்ப பொறுப்பை ஏற்று நடத்தும் விதத்திலும் வலர்க்கபடவேண்டியது முக்கியமாகிறது.தனது வீட்டின் வேலைகள் எதுவாக இருந்தாலும் அதை கணவனும், மனைவியும் பக்ரிந்து செய்யவேண்டும்.துணி துவைப்பது,பாத்திரம் கழுவுவது ஆகியவை அசிங்கமல்ல,ஆண்மைக்கு இழுக்கல்ல என்பதை ஆண்கள் உணரவேண்டும்.அடிமைகளை மேலும், மேலும் உருவாக்கும் கூட்டுகுடும்பமுறை ஒழிந்து காதல்மணங்களும், தனிகுடித்தனங்களும் பெருகவேண்டும்.

குழந்தைகளுக்கு பாலின ஏற்றதாழ்வின் இழிவை பற்றி எப்படி கற்பிப்பது என்பதை நாம் ஒரு சமுகமாக முடிவு செய்யவேண்டும்.பாலின ஏற்றதாழ்வு என்பது பிறப்பால் வரும் ரேசிசமே என்பதை நம் குழந்தைகளுக்கு கற்பிப்பது முக்கியமாகிறது.

ஆணாக பிறப்பதால் சில தொழில்களை செய்யும் உரிமை, சலுகைகள், சிறப்புக்கள் ஆண்களுக்கு உண்டு என கருதுபவர்கள் யாரும் ஆரிய இனவாதத்தை கற்பித்த நாஜிக்களாகவும்,தீண்டாமையை கற்பித்த வருனாசிரமவாதிகளாகவும்,வெள்ளை இனவாதத்தை உருவாக்கிய காலனி ஆதிக்கவாதிகளுக்கு ஒப்பானவர்களாகவும் கருதப்பட்டு சமூகத்தில் ஒதுக்கப்படவேண்டும்.குறி இருப்பதே பெண்கள் மேலான ஆதிக்கத்துக்கு தகுதி என கருதிக்கொண்டு இருக்கும் சமூகம் திருந்த குழந்தைகளிடம் இருந்தே கற்பித்தலை துவக்க வேண்டும்.

அப்பா ஆபிசுக்கு போவார், அம்மா சமைப்பார் என சிறுவர் பாடபுத்தகங்களில் இருக்கும் வாசகங்களை மாற்றியமைக்க வேண்டும்.ஆண்பிள்ளைகளுக்கு பைக் பொம்மையும், பெண் பிள்ளைகளுக்கு டாய் கிட்சனும் வாங்கிதரும் பழக்கம் ஒழியவேண்டும்.பிள்ளைகள் விளையாடும் அப்பா, அம்மா விளையாட்டில் அம்மா சமைப்பதும் அப்பா ஆபிசுக்கு போவதுமாக இருக்கும் ஆட்டவிதிகள் மாறவேண்டும்.

இவை மாரவேண்டும் என்பதற்காக ஆண்பிள்ளையின் பைக் பொம்மையை பிடுங்குவது தீர்வாகாது.இவர்கள் இம்மாதிரி விளையாட காரணம் என்ன என்பதை யோசிக்க வேண்டும்..இவர்கள் இம்மாதிரி விளையாட இவர்கள் மனதில் ஆணுக்கு இந்த வேலை,பெண்ணுக்கு இந்த வேலை என்ற அழுத்தமான பிம்பம் சிறுவயதிலேயே பதிவதுதான் காரணம்..

இது அவர்கள் மனதில் பதியகாரணம் தாய்-தந்தைதான்.வீட்டில் தந்தை பாத்திரம் கழுவுவதையும்,துணி துவைப்பதையும் பையன் பார்த்திருந்தால் அவன் பொம்மைகடையில் டாய் கிட்சனை கேட்க வெட்கப்படமாட்டான்.அம்மா அப்பாவுக்கு எப்போதும் அடங்கிபோவதை மகள் பார்த்திராவிட்டால் அவளும் நாளை தன் கணவனிடம் அடங்கிபோகாமல் இருக்க கற்றுக்கொள்வாள்.

எந்த வயதில் பெண்குழந்தைகள் கையில் விளக்கு மாற்றையும்,பத்துபாத்திரத்தையும் கொடுக்கிறோம் என்பது முக்கியமான விஷயம்..அவளிடம் மட்டும் தருகிறோமா அல்லது பையனிடமும் இதை தருகிறோமா என்பதும் முக்கியம்.ஆணோ,பெண்ணோ..எந்த பிள்ளையாக இருந்தாலும் சமைக்க கற்றுக்கொடுப்பது முக்கியம்.வீட்டுவேலை கற்றுக்கொடுப்பது முக்கியம்.பெண்ணுக்கு மட்டும் இதை கற்றுக்கொடுக்கும் குடும்பங்கள் பிறப்பால் வரும் ஏற்றதாழ்வை தலைமுறை தலைமுறையாக பரப்பிவரும் தவறை (தெரியாமல்) செய்கின்றவை.அது சமூகமாக உணர்ந்து திருந்த வேண்டிய விஷயம்.சமூகம் இவ்விஷயத்தில் திருந்த நாட்கள் ஆகும் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.

அது நிகழும் வரை ஜாதியும், இனவெறியும், மதவெறியும் நிரம்பிய உலகில் வாழ முற்போக்குவாதிகள் பழகிகொண்டதைபோல் இதனுடனும் வாழ பழகிகொள்ளவேண்டியதுதான்…இப்படிப்பட்ட உலகில் வாழும்போது வெறுமனே பிறந்தோம்,வளர்ந்தோம் என இல்லாமல் அடுத்த தலைமுறைக்கு தன் தலைமுறையின் தவறுகளை அடிக்கடி எடுத்து சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்….

செல்வன்

www.holyox.blogspot.com

Series Navigation

செல்வன்

செல்வன்