சிவம்; மானுடத்தின் மீது காதல் கொண்ட மகத்தான மனிதர்;;;;

This entry is part [part not set] of 27 in the series 20090507_Issue

நடராஜா முரளிதரன் (கனடா)



என்னோடு கடந்த வாரம் சனிக்கிழமை இரவு ஏறத்தாள ஒன்றரை மணிநேரம் “சென்ற்.ஜோர்ஜ்” சப்வேக்கு அருகாமையில் இருந்த “ரொறன்ரோ” பல்கலைக்கழக மண்டபத்திலே நடைபெற்ற கூட்டத்தை முடித்துக் கொண்டு “ஸ்காபுரோ ரவுண்சென்ரர்” கார்த்தரிப்பிடம் வரை நடந்து கொண்டும், “சப்வேயிலே” பயணித்தபடியும் உரையாடிக்கொண்டே வந்த “சிவம்” என்ற கலை, இலக்கிய நண்பர் அதற்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை உயிர் பிரிந்திருக்கின்றார்.

பத்து வருடங்களுக்கு முன்னரே நான் அவரைக் கண்டிருக்கின்றேன். அப்போது அவர் பெயர் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் கரககரத்த அவர் “குரல் ஒலி” அவரை மற்றையோரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்ற அடையாளமாக ஒலித்ததை என்னால் இன்னும் ஞாபகப்படுத்திக் கொள்ள முடிகிறது. அந்த நிகழ்வு ஏதோ ஓர் நூல் தொடர்பான “விமர்சனக் கூட்டத்தில்” ஏற்பட்ட சந்திப்பு என நினைக்கின்றேன். அன்று நான் அவரோடு அதிகம் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக அவரை அவ்வப்போது அடிக்கடி சந்திக்கும்படியான வாய்ப்புக்கள் ஏற்பட்ட வண்ணமேயிருந்தது. அவையெல்லாம் “இலக்கியச் சந்திப்புக்களாகவோ”, “நூல் வெளியீட்டு விழாக்களாகவோ”, “படைப்பிலக்கிய விமர்சனக் கூட்டங்களாகவோ” அல்லது இலங்;கையின் இனப்பிரச்சினை தொடர்பான “கருத்தரங்கங்களாகவோ” இருந்தன. அவற்றில் சில எனது வீட்டிலே கூட நடைபெற்றன. அந்தச் சந்திப்புக்களின் போதெல்லாம் அவர் என்னை நோக்கி வந்து “உரையாடலை” ஆரம்பிப்பது வழக்கமாயிருந்தது. அவர் என்னை நோக்கி, நோக்கியே வந்து கொண்டிருந்தார் என்பதே பொருத்தமான சொற்றொடர்.

முழுக்க முழுக்க இடதுசாரிச் சிந்தனைகளோடு பொதுவாழ்வுக்குள் பிரவேசித்த மனிதர் சிவம். தொழிலாளர்கள் தலைமையிலான “வர்க்கப் போராட்டத்தை” முன்னெடுத்து அதனை வெற்றிகொள்ளச் செய்வதன் மூலம் மனித சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் ஓரளவு வெற்றி கொள்ள முடியும் என்ற “பொதுவுடமைச் சித்தாந்தத்தின்” அடித்தளத்தில் வேரூன்றியிருந்த நம்பிக்கையின் பாற்பட்டது அது. “இடதுசாரிச் சிந்தனைகள்” பரந்தும், “தேசிய இன ஒடுக்குமுறைக்கு” எதிரான உணர்வுகள் மேலோங்கியும் ஒருங்கிணைந்த நிலையில் அரசியலுக்குள் உந்தப்பட்டவன் நான். இன ஒடுக்குமுறையின் கொடூரத்தால் பாதிக்கப்பட்டு அரசியலுக்குள் ஈர்க்கப்பட்ட பலரை “இடதுசாரிக் கருத்தியல்கள்” ஆகர்சித்திருக்கின்றன. அண்மைக்கால உலக வரலாறுகள் எங்கணும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது விடிவு குறித்துப் பிரக்ஞை கொள்ளவோ, போராடவோ புறப்படுகின்ற வேளைகளில் பல்வேறு காரணங்களை முன்வைத்துப் பொதுவுடமைக் கோட்பாடுகளைப் புறந்தள்ள முடியாத அக, புறச்சூழ்நிலகள் அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகின்றன. அந்த வகையில் இங்கு என்னை விடப் பத்து வருடங்களுக்கு முன்னால் பிறந்திருந்த சிவம் அவர்கள் இளவயதிலேயே “சமதர்மக் கருத்துக்களால்” ஈர்க்கப்பட்டு அன்று அவர் வாழ்ந்த யாழ்ப்பாணச் சமூகத்தில் நிலவிய சாதீய அடக்குமுறைகளுக்கு எதிரான “சமூகப் போராளியாகப்” பொதுவுடமைக் கட்சியொன்றின் பின்னணியோடு முகிழ்த்தெழுகின்றார்.

1949களில் இந்திய-பாகிஸ்தானியப் பிரஜாவுரிமைச் சட்டம் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் 1960 களில் “தமிழ்த் தேசியம்” மிகவும் வலுப்படைத்ததாக மாறுகின்ற தருணங்களிலேயும் தமிழ் பேசும் மக்களிடையே தம்மின மக்கள் என்று கூறிகொள்வோரிடையே ஒரு சாரார் பிறிதோர் சாராரை மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட வகையில் சாதியின் பேரால் இழிநிலைக்கு உள்ளாக்குகின்ற கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட வண்ணமே இருந்தன. அவற்றின் கொடூரம் தற்போது தணிந்து காணப்பட்டாலும் நம்மவரிடையே சாதீயம் பல்வேறு வடிவங்களில் தொடரவே செய்கின்றன. சிவம் அவர்கள் வாழ்ந்த வடமராட்சிப் பிரதேசத்தில் சாதீய ஒடுக்குமுறைகள் உச்சம் பெற்றிருந்த காலகட்டத்திலே “தாழ்த்தப்பட்டவர்கள்” என்று கூறப்படுபவர்களுக்கு எதிராக மேல் சாதியினர் இழைத்த கொடுமைகளையெல்லாம் நேரிலேயே கண்டுகொள்ளும் வாய்ப்பு அவருக்கு இருந்திருக்கும். மற்றும் அவரது குடும்பப் பின்னணியில் பெரிய தந்தையார் பொன்.கந்தையா பொதுவுடமை இயக்கத்தின் தலைமைப்பீடத்தில் இருந்தவர். பருத்தித்துறைப் பாராளுமன்றத் தொகுதியில் பொதுவுடமைக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே தமிழர். அப்பகுதி மக்களிடையே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த தன்னலமற்ற தியாகி அவர். எனவே இயல்பாகவே “மனிதநேயம்” கொண்ட எவரையும் பற்றியிழுக்கக் கூடிய பொதுவுடமைக் கருத்தியல் கோட்பாடுகள் சிவம் என்ற மனிதரையும் காலூன்ற வைத்திருக்கின்றது சமூக ஒடுக்குமுறைத் தளத்தில்.

ஆனாலும் 1980களில் சிறுபான்மையினரான தமிழ்பேசும் மக்களுக்கு எதிராகச் சிங்களப் பேரினவாதம் கொடுஞ் சூறாவளியாக சுழன்று சூறையாடிய வேளைகளில் சிவம் போன்ற சமதர்மப் போராளிகள் இன,மத,மொழி பேதமற்றுத் தொழிலாள வர்க்கம் தலைமை தாங்க வேண்டிய வர்க்கப் போராட்டத்திற்;கும் அப்பால் அசுரபலம் கொண்டு ஆர்ப்பரிக்கின்ற தேசிய இன ஒடுக்குமுறை குறித்துத் தீவிரமாகச் சிந்திப்பவர்களாக மாற்றம் பெறுகின்றார்கள் என்பதையே என்னால் உய்த்துணரக் கூடியதாக இருக்கின்றது. எனவே அத்தகைய தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்ற தேசிய விடுதலைப் போராட்டம்; பொதுவுடமைக் கருத்தியல்கள் என்ற விழுதுகளைப் பற்றிக்கொண்டு எழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் கொண்டவர்களில் ஒருவராகவே சிவம் அவர்கள் அமைந்திருந்திருப்பார் அல்லது அமைந்துள்ளார்.

அவர் என்னை நோக்கி ஓடியோடி வந்த வேளையில் எல்லாம் குறைந்த பட்ச வேலைத்திட்டத்தின் அடிப்படையில்; மானுடத்தின் விடுதலையை நேசிக்கின்ற சக்திகளுக்கிடையில் ஓர் புரிந்துணர்வை, ஐக்கியத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற ஓயாத உந்துதல் அவர் மன ஆழத்தில் இருந்திருக்க வேண்டும். எனவேதான் அவர் என்னை மாத்திரமல்லாமல் இன்னும் பலரையும் நோக்கி ஓடிக்கொண்டே இருந்திருப்பார். இன்னும் சிலரை அவர் துரத்திக்கொண்டும் இருந்திருப்பதற்கான வாய்ப்புக்களைக் குறைத்து மதிப்பிடவும் முடியாமல் இருக்கின்றது. வெறுமனே தத்துவங்களை மாத்திரம் பேசிக்கொண்டிராமல் அரசியல், சமூக விடுதலைக்கான வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டுமென்று எண்ணுகின்ற நடவடிக்கையாளர்கள் வரலாற்றை முன்நோக்கி நகர்த்துவதற்கான அதீத ஆவலினால் இவ்வாறு உந்தப்பெற்று மிகச் சரியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அலைந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்களை முன்னிறுத்திப் பிரபல்யம் பெறுகின்ற, இலாபம் தேடுகின்ற அரசியலுக்குள் தங்கள் மூக்கை நுழைத்துக் கொள்வதில்லை. இவர்களில் ஒருவராக “யார் குத்தியும் அரிசி ஆக வேண்டும்” என்பதால் தன் உளவியலை நிறைத்துக் கொண்டு திருப்தியடையும் மனிதராகவே சிவம் இப்போதும் என்முன் காட்சியளிக்கின்றார். சோவியத்யூனியன் சிதறுண்டு, பொதுவுடமை அரசுகள் வீழ்ந்து, செஞ்சீனத்துக்குள் திறந்த பொருளாதாரம் நுழைந்து பொதுவுடமைச் சித்தாந்தத்திற்கு என்னென்னவோ ஆகியபோதிலும், எப்படியிருந்த போழ்தும் சிவத்தின் ஆழ்மனம் அந்தச் சிந்தாந்தங்களை வலுவாக அணைத்தபடியே இருந்தது. அவை தொடர்பான விவாதங்கள் எங்கள் இருவரினதும் சம்பாசணைகளுக்குள் அகப்படாதபோதும் என்னால் அதை உறிதியாகக் கூறமுடியும்.

சிவம் என்ற மனிதரது வாழ்வியல் பரப்பென்பது எனது கண் நோக்கும் காட்சியெல்லைகளைக் கடந்தது. அவற்றில் நான் உற்று நோக்கும் சிறு துளிப்பிரதேசங்களைத் துல்லியப்படுத்துவதே இங்கு நான் மேற்கொள்ளும் வலிதான முயற்சி.;

கடந்த வருடம் நான் மற்றும் டானியல் ஜீவா, மெலிஞ்சிமுத்தன் ஆகிய மூவருமாக இணைந்து இலக்கியம் சார் உரையாடல்களுக்கான களத்தை இங்கு ரொறன்ரோவில் வேறோர் தளத்தில் திறப்பதற்கான முயற்சியை ஆரம்பித்திருந்தோம். பல்வேறு இலக்கிய நண்பர்கள் இலக்கியம் தொடர்பாக வௌ;வேறு வேலைத்திட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள் என்பதையும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். இதன் முதற்கட்டமாக சில நூல்கள் குறித்த விமர்சனக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள் அனைத்திற்க்கும் சிவம் அவர்கள் உரிய நேரத்திற்கு வருகை தந்து விடுவதோடு மட்டுமல்லாமல் தனக்குத் தெரிந்த இலக்கிய ஈடுபாடு கொண்டவர்களையும் அழைத்துக் கொண்டு வருவார். இளங்கோ எழுதிய “நாடற்றவனின் குறிப்புகள்” என்ற கவிதைத் தொகுப்பிற்கான விமர்சன உரையாடலை நாங்கள் ஓர் நாள் நிகழ்த்திக் கொண்டிருந்தோம். அப்பொழுது எனது முறை வந்தபோது கவிதை விமர்சனத்துக்குள் நுழைவதற்கு முன்பாக நான் கவிதை என்பதை எவ்வாறு வரையறுத்துக் கொள்வது, எழுதப்படும் எல்லா வரிகளையும் கவிதைகளாகக் கொள்ளலாமா? என்பது குறித்துக் கருத்துக்களை கூற ஆரம்பித்திருந்தேன். நான் தொடங்கிச் ஒரு,சில நிமிடங்கள் ஆகியிருக்கும். சிவம் அவர்கள் வாயை ஒருபக்கம் இழுத்து முகத்தைக் கோணலாக்கிக் கொண்டு “முரளி உதை விட்டிட்டு விசயத்துக்குப் வோவம்” என்றார். அன்று நான் அந்த விமர்சனக் கூட்டத்திற்கு மயிலிட்டியைச் சேர்ந்த எனது நண்பன் அருளையும் அழைத்து வந்திருந்தேன். கூட்டம் முடிவடைந்து வீட்டுக்குச் சென்ற அருள் “ஏன் மச்சான் அவர் உன்னோடை உப்பிடிக் கதைச்சவர்” என்று தொலைபேசி மூலம் என்னிடம் விசாரித்தான். எனது நண்பன் இலக்கியப் பரிச்சயம் இல்லாதவன். அதற்கும் அப்பால் ஏன் அவர் அவ்வாறு சொன்னார் என்பதற்குப் பதிலாக நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் நோக்கில் பல்வேறு விடைகளையிறுத்து விடலாம். அவ்வாறு சொல்லப்படும் விடைகளில் சிலவோ, பலவோ என்னைக் கசப்பில் ஆழ்த்துவதாகவும் அமையலாம். எதுவாக இருந்தபோதிலும் விசயத்துக்குள் துரிதமாகச் சென்று விடவேண்டும் என்ற அந்தரமே அவ்வாறு அவர் கூறியதற்கான காரணமாக என்னால் கற்பித்துக் கொள்ள முடிகிறது.

மீண்டும் இக்கட்டுரையின் முதல் பந்திக்கு வருகின்றேன். என்னோடு கடந்த வாரம் சனிக்கிழமை இரவு ஏறத்தாள ஒன்றரை மணிநேரம் நடந்து கொண்டும், “சப்வேயிலே” பயணித்தபடியும் உரையாடிக்கொண்டே வந்த “சிவம்” எதையெல்லாம் பற்றி என்னோடு உரையாடிக்கொண்டு வந்தார் என்பதை பதிவுக்குள்ளாக்க வேண்டிய பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவே நான் கருதுகின்றேன். அப்போது எங்களோடு சிவத்தின் நண்பரான அருளும் உடனிருந்தார். அதில் ஓர் பகுதியை அவருடைய இறுதி அஞ்சலிக்கான கூட்டத்தின் போது உரையாற்றியவேளையில் நிறைவேற்றிவிட்டேன். மீண்டும் எழுத்தில் பதிவுக்குள்ளாக்க வேண்டியுள்ளது மிகச்சுருக்கமாக சில வரிகளில். “முரளி இன்று வன்னிப்பிரதேசங்களி;ல் வாழும், போராடும் பொதுமக்களோ , போராளிகளோ அல்லது போராளித் தலைவர்களோ கொல்லப்படக் கூடாது. அவர்கள் அனைவரையும் காப்பாற்றுவதற்கு எங்களால் முடிந்ததைச் செய்யவேண்டும்” என்ற வார்த்தைகளே சிவம் அவர்கள் என்னிடம் விட்டுச் சென்றவை.
எனவேதான் எம்மையெலாம் விட்டுப்பிரிந்து போன சிவம் என்ற அந்த மனிதரை “மானுடத்தின் மீது காதல் கொண்ட மகத்தான மனிதர்” என்று அழைக்க எனது மனம் அவாவுறுகின்றது.


Series Navigation

நடராஜா முரளிதரன் (கனடா)

நடராஜா முரளிதரன் (கனடா)