கவலைகிடமான மொழிகளின் நிலை

This entry is part [part not set] of 32 in the series 20090305_Issue

சித்ரா சிவகுமார்



ஹாங்காங்கில் வாழும் எனக்கு மலேசியாவைச் சேர்ந்த நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். நான் ஹலோ என்று சொல்ல, அவர் காலை வணக்கம் என்றார். எப்போதும் தமிழர்களிடம் பேசும் போது கூட குட் மார்னிங் சொல்லியே பழக்கப்பட்ட எனக்கு காலை வணக்கம் எனக் கூறிக் கேட்பது சற்றே வித்தியாசமாகப்பட்டது. தமிழிலேயே உரையாடல். பின் நன்றி வணக்கம் என்று கூறி அவர் முடிக்க எனக்கோ தேங்ஸ், பை என்று கூறவே வாய் வந்தது. கட்டுப்படுத்திக் கொண்டு நன்றி வணக்கம் என்று சொல்ல முயன்றேன். மலேசியாவிலே பிறந்து வளர்ந்த அவரது தமிழ்ப்பற்றுக்கு முன், சென்னையிலேயே பிறந்து வளர்ந்த என்னுடைய மொழிப்பற்று தலை தாழ்ந்து நின்றது.
மொழி நாட்டின் உயிர். கலாசாரத்தின் நாடி. பண்பாட்டின் வேர். மக்களின் மூச்சு.
மொழி இல்லையேல் நாடு இல்லை. கலாசாரம் இல்லை. பண்பாடு இல்லை. மக்கள் இல்லை. மற்ற உயிரினங்களைப் போல் மனித இனமும் பேச்சற்று ஊமையாக வேண்டியது தான்.
அப்படிப்பட்ட மொழிக்குச் சாவு. மொழிக்குக் கூட சாவு உண்டா? உண்டு என்கிறது தற்போது யுனஸ்கோ செய்திருக்கும் ஆராய்ச்சி. இன்று உலகத்திலிருக்கும் மொழிகள் 6700. அதில் பன்னிரண்டு மொழிகளைப் பேசுவோர் ஒரேயொருவர் மட்டுமே இருக்கின்றனராம். கடந்த வருடம் அலாஸ்கா நாட்டில் இயாக் மொழி பேசுபவர் இறந்த போது, அம்மொழி செத்தது. தற்போது பால்டிக் பகுதியில் பேசப்படும் லிவோனியன் மொழியைப் பேசுபவர் ஒருவர் மட்டுமே இருக்கிறாராம். இப்படிப் பல மொழிகளுக்கு சாவு விரைவில் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மூன்று தலைமுறைகளில் 200க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துவிட்டிருக்கின்றன. இன்னும் 538 மொழிகள் அழிந்துபடும் நிலையில் இருக்கின்றன.
இப்படி மொழிக்கு ஏற்படும் அழிவை நாம் ஏன் கண்டு கொள்ள வேண்டும்? எந்த மொழி செத்தால் நமக்கென்ன? இப்படி இருக்கலாமா?
மொழி எப்போது சாகும்? அன்னியர் ஆக்கிரமிப்பு, தம் மொழியின் மேல் பற்றில்லாமை போன்ற காரணங்களைக் கூறலாம். இன்று உலகில் பரவலாகப் பேசப்படும் ஆங்கிலம், பிரன்சு, ஸ்பெயின் மொழிகள் அந்நாட்டின் ஆதிக்கத் திறத்தாலேயே, இந்த அளவிற்கு பரவியுள்ளது. சீனாவிலும் இந்தியாவிலும் மக்கள் தொகையின் காரணமாக, சீன மொழிகளும் இந்திய மொழிகளும் அதிக மக்களால் பேசப்பட்டு வருகின்றன.
இன்றைய அறிவியல் விஞ்ஞான வளர்ச்சி பெரும்பாலும் ஆங்கிலம் பேசும் நாட்டினரால் வெளிக்கொணரப்படுவதால், ஆங்கிலம் இன்று உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்துள்ளது. கணிப்பொறி அறிமுகத்தினால் தான் அந்த வேகமான வளர்ச்சி.
ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள், அமெரிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள், இவர்களையெல்லாம் விட ஆங்கிலம் பேசும் சீனர்கள் அதிக அளவில் இருப்பதாக ஒரு கணிப்புக் கூறுகிறது.
இன்று இந்தியாவில் இந்திய மொழிகளின் நிலை என்ன? இந்தியா கணிப்பொறி வளர்ச்சியோடு இணைந்து, கை கோர்த்துக் கொண்டு, ஆங்கில மொழி பேசும் திறத்தால் வளர்ந்து, உலகளவில் தலை நிமிர்ந்து நிற்கிறது. இனி வரும் தலைமுறை என்ன செய்யும்? தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து, மொழித்திறனை வளர்த்துக் கொள்வார்களா? அல்லது வளர்ச்சியின் பின்னால் ஓடி ஓடி மொழியை மறந்து விடுவார்களா? இதைப் பற்றி நாம் சற்றே கவனம் செலுத்துவது நலம்.
நம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே நம் மொழி படும்பாட்டை கண்கூடாகக் காட்டும். குழந்தைகளே.. உங்களால் எளிதில் ஒரு வரியையேனும் ஆங்கிலக் கலப்பின்றி பேச முடியுமா? இளைஞர்களே.. உங்களால் ஆங்கில வார்த்தையின்றி ஒரு நிமிடம் பேச முடியுமா?
நம்மில் பலரும் ஆங்கிலத்திலேயே யோசிக்க ஆரம்பித்து விட்டோம். அதனால் தமிழில் பேச வேண்டுமென்றால், மனத்தில் தோன்றியதை தமிழில் மொழிபெயர்த்தே பேச வேண்டிய நிலையில் இருக்கின்றோம். அந்நிலையில் நாம் மொழியை எப்படிக் காப்பாற்றப் போகிறோம்? இனி வரும் தலைமுறையினர் இதையேத் தொடர்ந்தால் தமிழ் வாழ முடியுமா?
இன்று சென்னை நகரத்திலும் தமிழகத்திலும் காலை வணக்கம் கூறுவோhரும் நன்றி கூறுவோரும் எத்தனை பேர்? இவை இரண்டுமே நம் பண்பாட்டுக் கூறுகள். ஆனால் பயன்படுத்துகிறோமா? குழந்தை பிறந்ததிலிருந்து தமிழ் ஆங்கிலக் கலப்பு மொழியையே கேட்டு வளர்ந்தால், அதனால் நல்ல தமிழ் பேச முடியுமா? விரைவில் ஒரு புதிய மொழி உருவாகும் வாய்ப்ப நிச்சயம் ஏற்படுமேயொழிய தமிழ் வளரும் வாய்ப்பற்றுப் போகும்.
தமிழை வளர்ப்போர் ஒரு புறம் தீவிரமாகப் போராடிக் கொண்டு இருக்க, மிக லேசான வழியில் அதனை மெல்ல மெல்ல நசுக்க பல பேர் காரியங்களைச் செய்ய, வெற்றி யாருக்கு கிடைக்கும்?
தமிழ் சாகாது. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியங்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் அனைத்தும் அச்சிடப்படுகின்றன. வலையேற்றப்படுகின்றன. அதனால் சாக வாய்ப்புக் கிடையாது என்ற சிலர் கூறலாம். தமிழை கணிப்பொறியில் தட்டச்சு செய்யவும் பல எழுத்துருக்கள் ஆங்கிலத்தையே பயன்படுத்துகின்றன. பேச்சு மொழி சுத்தமாக இல்லாமல் ஏட்டிலே மட்டுமே இருந்தால் மொழியால் வாழ முடியாது.
இன்று சீனாவில் ஆங்கிலம் கற்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இங்கு எளிதில் வேலை வாய்ப்பு. இந்த வேகத்தில் போனால், உலகின் கடினமான மொழியான சீன மொழியை, மிகவும் எளிய மொழியான ஆங்கில மொழி நிச்சயம் முழுங்கி விடும் நாள் மிகத் தொலைவில் இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. குழந்தைகள் 3000 எழுத்துக்களைக் கொண்ட சீன மொழியைக் கற்க விரும்புவார்களா அல்லது 26 எழுத்துக்களே கொண்ட ஆங்கில மொழியைக் கற்க விரும்புவார்களா? சீன உடைகளை பண்டிகை நாட்களில் மட்டுமே இப்போது பார்க்கலாம். மொழியைப் போன்றே மேற்கத்தியக் கலாச்சாரம் சீனக் கலாச்சாரத்தோடு கலந்து வருகிறது.
அதே நிலைதான் இந்தியாவிலும் ஏற்பட்டு வருகிறது.
ஆஸ்கர் விருது வாங்கிய போது இசைப்புயல் ஏ. ஆர். ரஹமான் அவர்கள் தமிழில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று சொன்ன போது, ஆங்கிலம் கோலோச்சிய அந்த அரங்கத்தில் தமிழ் மொழி பேசியது எத்தனை பேரை பெருமிதம் அடையச் செய்தது? எத்தனை பேருக்கு “தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா” என்ற வரிகள் நினைவுக்கு வந்தது?
மொழி காலக் கண்ணாடி. அதை உடைக்க முயலக் கூடாது. அதை வளர்க்க அவரவர் தாய்மொழியைப் பேசுவது மட்டுமின்றி, அதைத் தங்கள் சந்ததியினருக்கும் சொல்லிக் கொடுத்து, ஊக்கம் தந்து வளர்க்க வேண்டும். இன்று பல்வேறு நாடுகளில் தமிழ் வகுப்புகளை நடத்தி, வருங்கால சந்ததியினரைத் தமிழ் கற்க வைக்கும் அனைத்து ஆர்வலர்களுக்கும் நன்றி கூறியேயாக வேண்டும். அனைத்துக் கண்டங்களிலும் தமிழர்கள் இருக்கின்றனர். அனைத்துக் கண்டங்களிலும் தமிழை வளர்ப்போம்.
வாழ்க தமிழ். வளர்க தமிழ் மக்கள்.


Series Navigation

சித்ரா சிவகுமார்

சித்ரா சிவகுமார்