Last Kilo byte – 11 ஒத்த சொல்லு, ஒத்த பானம், ஒத்த கேசு, ஒத்த பேரு

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

கே. ஆர். மணி


நகரத்தின் சிறந்த பெண்கள் பாரின் முதலாளிகளில் ஒருவன். அந்த பார் சிறப்பான ஒன்று. அவன் இளமையானவன். அவனது எல்லா பார்களும் wifiயால் இணைக்கப்பட்டு மென்பொருள்களின் உதவியால் அப்போதைய வரவு செலவு கணக்குகளைப் பார்ப்பவன். Black Berry, இமெயில், My SAP என்று கொஞ்சம் டெக்னிகலான ஆளு. எம்பிஏ முடித்த அந்த ஷெட்டியோடு பேசிக்கொண்டிருந்தேன்.

மும்பை பார் உலகம், தனியான சரித்திரமும் நிறமும் உள்ளது. அலுவலகங்களில் மதராசிகள், ஹோட்டல்களில் ஷெட்டிகள், பங்குச் சந்தைகளில் குஜராத்திகள், கார் மற்றும் டப்பாவாலாக்கள் உபிக்காரர்கள் என்று சில வரைமுறையோடு சீர்குலையாது போய்க்கொண்டிருந்த மும்பையின் வரைமுறைகள் கலைவதைப் பற்றிக் கவலையோடு சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருந்தான்.

மும்பையில் இப்போது வெத்திலைக் கடைபோல பியர் கடைகள் திறந்துகொள்ளலாம். அங்கு பியர்கள் மட்டுமே கிடைக்கும். பியர் மென் திரவமாகிவிட்டதாய்க் கருதப்படுவதாலும், பெண்களும் போய் வாங்கிக்கொள்ள, பியர்கள் மற்ற குடித்திரவங்களோடு சேராமல் நடுத்தர வீடுகளில் அங்கீகரிக்கப்பட்டதன் அடையாளம்தான் இந்தக் கடைகள். ஆனால் ஒரு Catch. அந்த உரிமைக்கான வியாபாரத்தில் கட்டாயம் ஓரு மண்ணின் மைந்தர் மராத்தியர் பங்குதாரராக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

துபாயில் ஷேக்குகள் எப்படி தூங்கும் பங்குதாராக இருக்க வேண்டுமோ (Sleeping partner) அதுபோல இங்கேயும். இப்போது சிவசேனையில் உ.பி.க்காரர்களும், தமிழர்களும், ஷெட்டிகளும் கலந்திருக்கிறார்கள். ஆனாலும் சிவசேனை ரொம்பவே தெளிவாய் இருக்கிறது. பியர்கடையில் மராத்தி மானுசு என்ற எழுதப்படாத விதி, வேறெந்த சமிஞ்ஞைகளையும் ஆரம்பித்துவிடாமல் தேசிய நீரோட்டத்திற்குப் பங்கமில்லாமல் இருக்க, பரமபிதாவை வேண்டுவதைத் தவிர வேறென்ன வழி?

ஆனால் ஷெட்டி நொந்து போயிருந்தான். தனது பணம், தனது உழைப்பு, தன்னுடைய ரிஸ்க், ஒன்றுமில்லாமல் காலாட்டிக்கொண்டே அடுத்த முட்டு ஆள் வெறுமனே சம்பாதிப்பது ஆங்கிலேயருக்குக் கப்பம் கட்டியதற்கு ஒப்பானது. லஞ்சம் வாங்குபவனாவது கொஞ்சமாவது நமக்கு ஏதாவது விதத்தில் வேலையோ, உதவியோ, உபத்திரக் குறைப்போ செய்கிறான். இங்கோ வெறுமனே கப்பம் மட்டும் வாங்கிக்கொண்டு போகிறார், தூங்கும் பங்குதாரர். அவன் வலி எனக்குப் புரிந்தது. அதிகமாகப் புலம்பினான், ‘பேசாம இதெல்லாம் மூடிட்டு ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிர்லாமானு யோசிக்கிறேன்’

‘இக்கரைக்கு அக்கரை ஷெட்டி.. அவ்வளவுதான்.. மொத்தத்தில நல்லாதானே ஓடுது.. ஏன் புலம்பற..” என்ன இன்னும் கொஞ்ச நாள்ல 12 மணி வரைக்கும் டைமிங்க நீட்டிட்டா.. கவலையில்லல்லை.” – நான் சொன்னேன்.

“அதுக்கு அந்தாள் விடமாட்டான்” அந்த அமைச்சரின் பெயரைச் சொன்னார். அவர் சேனையிலிருந்து ஒரு சாதாரண மனிதர்களைப்பேணும் பாரம்பரிய தேசியக் கட்சிக்குத் தாவியவர். பார் கடைகளின் அசோசியேஷன் தலைவருக்கும் அவருக்கும் நடந்த தனிப்பட்ட சில வார்த்தை பரிமாற்றந்தான் இத்தனை பெரிய பிரச்சினை [பார் கதவடைப்பு, நேரம் குறைப்பு etc.,] நீட்டிப்பின் காரணமென்ற கதை உங்களுக்கு ஆச்சரியப்படுத்தலாம்.
“பாரில பெண்ணுகள தடுத்தேனா.. உன்னோட பெண்டாட்டி, பெண்ணைகளைக் கூட்டி ஆட வெச்சிடுவேண்.. பைசா வாங்கிட்டி என்னய்யா நாடக மயிரா பண்றீங்க..” என்று அந்த அசோசியேஷன் தலைவர் சர்தார்ஜீ, அமைச்சரை அம்மணப்படுத்த, என்னதான் காசு வாங்கினாலும், ஒரு தண்ணிக் கடைக்காரன் நம்மள இப்படியெல்லாம் பேசிட்டானேன்னு நினைச்ச வன்மம்தான் அடிவேர் என்கிறான் என் நண்பன். தீவிரவாதம், கலாச்சாரச் சீரழிவு என்றெல்லாம் பேசிப் பேசி இந்த இரவு பாரையே ஓழித்துவிட்டுத்தான் மறுவேலை என்று மங்கம்மா சபதம் எடுத்திருக்கிறார் அமைச்சர்.

நம்ப முடியாவிட்டாலும் நம்பித்தானாக வேண்டும். ஒத்த சொல்லு.. தவிர்க்கப்பட்டிருக்கலாம். விழுந்த சொல் பொறுக்க முடியாது. தயிர் பாலாகாது. கருவாடு மீனாகாது. ஒத்த சொல்லு.. ஒத்த பானமில்லை. பெத்த பானம்.

ஒத்த கேசு:

கடந்த சில மாதங்களாய் மலேசியத் தமிழர்கள் போராட்டம் – அதிகமாக ஊடகங்களில் பேசப்பட்டது. பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.அதன் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வேதமூர்த்தி, மும்பை வந்தார். தாராவி சென்றார். ஊடகங்களைச் சந்தித்தார். மலேசிய தூதரகம் முன் சின்னதாய்ப் போராட்டம் செய்தார். சில மனங்களை வென்றார்.

இரவு அவருடான சந்திப்பில் சில விடயங்களைப் பேசிக்கொள்ள முடிந்தது. கோயில்கள், பள்ளிகள் எப்படி குறைந்தன, திட்டமிட்டு அழிக்கப்பட்டன என்பதைத் தெளிவாக விளக்கினார். மேல்தட்டு மக்கள் தங்களது அடுத்த தலைமுறையை அமெரிக்காவிற்கோ, ஆஸ்திரேலியாவிற்கோ அனுப்பி அனைத்து முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கும்போது அடித்தட்டு தமிழர்கள், சிறுபான்மை இந்தியர்கள் வேறு வழியின்றி மதம் மாறவோ, தீவிரவாதியாகவோ அல்லது தற்கொலை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் நிதர்சனத்தைக் கோடிட்டுக் காட்டினார். இந்து கோயில்கள் மட்டுமின்றி சீனக் கோயிலுக்கோ, சர்ச்சுக்கோ அதிகமான கெடுபிடிகள் உள்ளதென்பதை ஆதாரத்தோடு காட்டினார்.

கோயில்கள் விடுத்து பொருளாதார அதீத சலுகை, இஸ்லாமிய நீதிமன்றங்களுக்கு மேல்முறையீடின்மை, எல்லா ஊடகங்களுக்குமான அதிகப்படியான தணிக்கை, Sleeping partner என்ற பெயரில் லாபத்தில் 30 விழுக்காட்டை விழுங்கும் மண்ணின் மைந்தர்கள் கொள்கை – என்று நீண்டுகொண்டே போனது தேரா மன்னனைப் பற்றிய அநீதிப் பட்டியல். இப்போதெல்லாம் அநீதி கண்டோ , சாபத்தாலோ எந்த நகரங்களும் தானே எரிவதில்லை. நீதிக்காக எரிவதைவிட அண்ணன், தம்பி பங்காளி சண்டைக்காகத்தான் எரியூட்டப்படுகிறது. நிலைமை நீடித்தால், சிறுபான்மையினரான அடிமட்டத் தமிழர்கள், இந்தியர்களின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கும்போல, 7% அயல் மண்ணின் மைனாரிட்டி திரிசங்குகளுக்கு.

ஒரு சிறுபான்மையினர் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு உதாரணம்.

http://specials.rediff.com/news/2008/apr/09video6.htm

அமெரிக்காவில் போலிசு எப்படி மைனாரிட்டி இந்துக்களை நடத்த வேண்டுமென்று இந்து மதத்தைப் பற்றிய ஒரு சின்ன விளக்கப் படத்தை வெளியிட்டிருக்கிறது. மற்ற மதத்தின் அடிப்படைகளை வெறுப்பின்றி மரியாதையோடு புரிந்துகொள்ள முயலும்போது மட்டுமே பன்முக கலாச்சார மத பரிவர்த்தனைகள் சாத்தியமாகின்றன.

ஆனால் மலேசியா, அண்மையில் இஸ்லாத்தைத் தழுவியதால் மற்ற இஸ்லாமிய சீனியர் நாடுகளைவிட தங்களது ஆசாரத்தை நிலைநாட்ட மிகப் பெரிய தவறுகளைச் சிறுபான்மை அடக்குமுறைகளைச் சர்வ சாதாரணமாய், பல்குத்திக்கொண்டே செய்துகொண்டிருக்கிறது என்றார். சில நல்ல கேள்விகள் பலதரப்பட்ட மக்களிடமிருந்து வந்திருந்தன.

“இவ்வளவு காலமில்லாமல் இப்போது மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு?”

“ஹிண்ட்ராப் – இந்து அமைப்பு தானே. இந்தப் போராட்டத்திற்கு மதச்சாயம் வந்துவிடாதா..?”

“மலேசிய போன்ற வளரும் நாடுகளில் ஏற்கெனவே இடம் குறைவாய் இருக்கும்போது முக்கு முக்கு கோயில் கட்டிவைத்துவிட்டு இடிக்கமாட்டேன் என்றால் அது வளர்ச்சிக்குத் தடையாக இருக்காது?”

“இங்கிருக்கிற இந்தியர்களைவிட வசதியாத்தானே இருக்கிறார்கள். பிழைக்கப் போன இடத்தில் எதற்கு உரிமை கோரல்?”

“ஹிண்ட்ராப் செய்வதாலேயே தமிழக அரசுகள் கொஞ்சம் தள்ளியே நிற்கின்றனவா?”

“இந்திய அரசாங்கத்திடம் என்னத்தைதான் எதிர்பார்க்கீறீர்கள்?”

வேதமூர்த்தியின் பதில்கள் ஆர்ப்பாட்டமில்லாமல், ஆழமாயிருந்தது என்னைக் கவர்ந்தது. சேகுவரா, காந்தி என்று எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் காந்திய வழியைத்தான் தேர்ந்தெடுப்பேன் என்றார். வாழ்க காந்திகிரி!!
பூங்காக்களுக்கு, குழந்தைகள் விளையாட்டிற்கு, கழிப்பறைகளுக்கு என்று கட்டாய இடம் ஓதுக்கீடு செய்வதைப் போல அந்தந்த நாட்டு மக்கள் தொகைக்கேற்ப இத்தனை சதுர அடி என்று கோயில்களுக்கும் ஒதுக்கிவிடலாம். இடப் பிரச்சினை பெருகி வரும் வளரும் தேசங்களிலும், மெட்ரோக்களிலும் அதுதான் சரியான தீர்வாக இருக்கலாம். அண்டை நாடான சிங்கப்பூர் அதைத் திறம்பட செய்திருப்பதாக அறிய முடிகிறதே ஏன் மலேசியாவில் அது முடியவில்லை..?” என்று கேள்வி எழுப்பினேன்.

அப்படியும் ஓர் இடத்தில் ஒதுக்கப்பட்டதாம், கழிவறைக்கு பக்கத்தில், பயன்படுத்தவே முடியாதபடி. கோயில்களை வெறும் ரியல் எஸ்டேட் பிரச்சனையாக மட்டும் பார்க்காதே என்று ஒரு வலதுசாரி நண்பர் அந்தக் கூட்டத்திலே என்னை வறுத்தெடுத்துவிட்டார்.

தண்ணீர், காற்று, இடம் எல்லாம் பெருக முடியாதவை. இருப்பவை கொண்டுதான் இனிவரும் மனித குலம் ஒப்பேத்தியாக வேண்டும். அதனால் இருக்கிற பெரிய பழங்காலக் கோயில்களை அப்படியே புராதான சின்னமாக வைத்துவிட்டு புது வழிபாட்டுத் தலங்கள் குறைவாக, கவனமாகவே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது என் எண்ணம். அவை முடிந்தளவு பொது வழிபாட்டுத் தலங்களாக அமைந்தால் குறைந்த இடத்தில் நிறைய பக்த வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய முடியும் மற்றும் நீண்ட கால பொது ஆன்மீகம் ஏற்பட வழி வகுக்கலாம் என்று நினைத்தேன். பேசியிருந்தால், ‘டின்’ கட்டிருப்பார்கள் என் வலதுசாரி நண்பர்கள்.

சாப்பாட்டுத் தட்டுடன் வேதமூர்த்தி எனக்குத் தனியாகப் பதில் கொடுத்தார். ‘இந்துக்களுக்கு கோயில்கள் மட்டும்தான் இடம். மற்ற மதக்காரர்கள் இறந்தால் எரிப்பதில்லை. புதைப்பதனால் அரசாங்கத்திற்கு மிகப் பெரிய நில இழப்பு ஏற்படுகிறது’ என்று மென்மையாய்ச் சொன்னார். புரிந்தது. அதனால் அந்த இடங்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ, மற்ற மதங்களின் அடையாளச் சின்னமாகவோ மாற வாய்ப்பிருக்கிறது. நிலமும் அதிகாரமும் மனித மனம் என்கிற Mind Share-ம் மதத்திற்கும் தண்ணீரும் வெயிலும் போல. அதுசரி, நமக்கு தேவை ஒற்றை மரங்களல்ல, கூட்டான தோப்புகள். முடியுமா?

மறுபடியும் வேதமூர்த்திக்கு வருவோம். எனக்குள் பூதாகாரமாய் வளர்ந்த அந்தக் கேள்வி, “எது இந்த மனிதனை நாடு கடந்து, உறவுகள் பிரிந்து போராடத் தூண்டிற்று. மெல்ல மெல்ல வளர்ந்ததுதான் என்றாலும், இந்த விருட்சத்தின் வேர் எங்கே, தனிமனிதனாய் அவருக்கு முள் எங்கே தைத்தது. What is his driver?

பதில் : ஒத்த கேசு

ஆம். இவரது ஒரு வாடிக்கையாளரின் வழக்குதான் அந்த மனம் கிளறிய விதை. வாடிக்கையாளருக்குச் சொந்தமான கோயிலை, பெரிய சிவன் கோயிலை எந்த முன்னறிவிப்பும் இன்றி ஏதோ ஒரு கிணற்றை, பழங்கிணறைத் தகர்ப்பதைப் போல, ஒரு நாளுக்குள் சர்வ சாதரணமாய்த் தகர்த்துவிட்டு போயிருக்கிறது, அரசாங்கம். அதுவும் கேள்வி கேட்க முடியாத அரசாங்கம். அந்த வழக்கை எடுத்துக்கொண்டு சில வருடங்கள் வாதிடும்போது மலேசியா என்கிற மாபெரும் இஸ்லாமிய நீதிமன்றத்தின் முடிச்சுகளின் சூட்சுமம் புரிந்திருக்கிறது. அதன் யதார்த்தம் பயங்கரமாய்த் தாக்கியபின் இந்த அறப் போராட்டம் மெல்ல அம்பலம் ஏறுகிறது.

ஆனால், கத்திமேல் நடக்கிற வேலை, வேதமூர்த்தி குழுவினருக்கு. கொஞ்சம் பிசகினாலும், தமிழர் போராட்டமாகவோ, புலம்பெயர்ந்த இந்தியர்களின் தேவையற்ற கூக்குரலாகவோ, இந்துக்களின் போராட்டமாகவோ அழைக்கப்பட்டு அதன் திசை மாறி தவறாய்ப் பயணப்பட்டு விடலாம். அல்லது திசை திருப்பப்பட்டுவிடலாம். மற்றொரு ஈழமாக மாறிவிடக் கூடாது.

எங்கு இந்தியர்களுக்கு தீமை விளைந்தாலும் சங்கு முழங்கப்பட வேண்டும், சாணக்கியத்தனமாக. வேதமூர்த்திக்கு மார்டின் லூதர் கிங்கின், சின்ன டிப்ஸ்: “விடுதலைக்கான நம் தாகத்தை (மனக்) கசப்பு மற்றும் வெறுப்பின் கோப்பைகளிலிருந்து அருந்தி தணிக்க வேண்டாம்”. வெறுப்பினால் விளையும் செயல் நம்மை எதிரியின் குணங்களுக்கு பக்கத்தில் கொண்டு செல்லும்.

சின்ன திருப்புமுனைகள் பெரிய பாதைகளைப் போட வைத்துவிடுகின்றன. ஆனாலும் போகவேண்டிய தூரம் ரொம்பவே அதிகம்.

பெயரில் என்னயிருக்கிறது பெயர் – ஒத்த பேரு.

இந்திய அமைதியாக கணிப்பொறி மூலமாக e-Goverance புரட்சி செய்து வருகிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் இதன் வீச்சு பொது மக்களுக்குப் போய்ச் சேரலாம்.

பெயரில் என்னயிருக்கிறது பெயர் – ஒத்த பேரு.

இந்திய அமைதியாக கணிப்பொறி மூலமாக eGoverance புரட்சி செய்துவருகிறது. இன்னும் கொஞ்சகாலத்தில்
இதன் வீச்சு பொது மக்களுக்கு போய்ச்சேரலாம்.

வளர்ந்த நாடுகளில் ஒரு நிறுவனத்தை பதிவு செய்து தொடங்குவது அது சம்பந்தமான
அரசாங்க காரியத்தை செய்வது ஒரு மின்னஞ்சல் தயாரித்து கொள்வதைப்போன்று அத்தனை எளிது, விரைவும் கூட. நம்
பாரத மணித்திருநாட்டில் அவ்வளவு இலகுவான காரியமன்று. பொது நிறுவனத்திற்கான பெயர், பதிவுசெய்தல், அதன் நிர்வாக
இயக்குநர்கள் பதிவு, அறிவிப்பு என்று குறைந்தது மூன்று மாதமிழுத்து விடுவார்கள். வேறென்ன, ஓவ்வொரு தளத்திலும்
கொஞ்சுண்டு பணம் ஆவியாகும். பணத்தைவிட அதற்கான காலவிரயம் எந்த கம்பெனிக்கும் பேரிழப்பாகவும், புதுமுனைவர்களுக்கு
பெரும் தலைவலியாகவும் பெரும்பாலும் அமைந்துவிடுவதுண்டு. ஆனாலும் இந்த கட்டத்தில் செய்யப்படுகிற சிறு தவறுகள் கூட
விசுவரூபமெடுத்து நிறுவனத்தை அதலபாதளத்திற்கு கொண்டு சென்றுவிடுபவை. காலமெடுத்தாலும் கட்டாயம் கவனமாய்
செய்யப்படவேண்டிய அரசாங்க சடங்குகள் இவைகள்.

அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும் ஓரிரு நாட்களில் செய்யப்படுகிற இந்த வேலைகள் இந்தியாவில் 25 நாட்கள் எடுக்கிறது என்கிறது
புள்ளிவிவர கணக்குகள். ஏதோ அரசாங்கம் மட்டுமே ஏமாற்றுகிறது என்கிற எண்ணம் வேண்டாம். இந்திய நிறுவனங்களும்
நிறைய அப்படித்தான். பொதுநிறுவனங்களுக்குரிய சலுகையை பெற்றுவிட்டு மஞ்சள் நோட்டிசு கொடுத்து லீகலாக ஓடிப்போகிற
முனைவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகம். பெரிய கம்பெனிகள் அதற்குள் நிறைய குட்டி குட்டி நிறுவனங்களை வைத்துக்
கொண்டு அதினுள் புழங்கும் பாயும் பண ஓட்டம் அத்வதைத்தை விட மாயக் குழப்பமானது. அவர்களுக்கு வரி மாயம்.
லாபம் மட்டுமே யதார்த்தம். ரிலையன்ஸிக்கு குறைந்தது ஒரு எழுபது கம்பெனியாவது அதன் பின்புலத்தில் இயங்குகிறது.
ஜீடில் (GTL) என்கிற நிறுவனத்திடம் குறைந்தது 120 குறு நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த டைரக்டர் அங்கவும், அந்த
டைரக்டர் இங்கயுமென குழப்ப நதி தெளிவாய் பெருக்கெடுத்து ஓடும். அரசாங்கத்தால் அனைத்தையும் ட்ராக் செய்வதென்பது
அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதற்கெல்லாம் ஓரளவு விடைகண்டுபிடித்திருக்கிறது அரசாங்கத்தின் eGoverance திட்டமான
www.mca.gov.in

அரதப் பழசாயிருந்த ரிஸிஸ்டர் ஆப் கம்பெனி (ROC) கணனிமயமாக்கப்பட்டிருக்கிறது. எல்லா டைரக்டர்களுக்கும் ஒரு எண் DIN என்கிற Director Identification Number கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் எத்தனை கம்பெனிகளுக்கு நீங்கள்
டைரக்டராகயிருக்கீறீர்கள் என்பதை DIN3 என்ற பதிவின் மூலம் அரசாங்கத்திடம் பதிவு செய்துவிடவேண்டும்.
ஆகவே ஒருவரே நிறைய கம்பெனிக்கு டைரக்டராகயிருப்பது, ஆட்டை தூக்கி மாட்டில் போட்டு மாட்டின் லாபத்தையும் சம்பாதிப்பது
என்று முன்பிருந்த கோல்மால்களுக்கு ஓரளவு செக், ஆப்பு. இந்திய அரசாங்கம் ஆசியாவில் மிகப்பிரமாதமாய் செய்து
முடிக்கப்பட்ட திட்டம் என்று மார்தட்டிக்கொள்கிறது. பாராட்டுவோம்., well done.

இதிலென்ன பிரச்சனை ? அட ஒரு சின்ன பெயருக்கு சார், ஒரு சூசூபி பெயருக்கு என்ன பிரச்சனை.

பெயரில்தான் பிரச்சனை. ஒரு சின்ன பெயரில் பிரச்சனையிருக்ககூடாதுதான். ஆனால் இருக்கிறதே. இந்தியா முழுவதற்குமான பெயர் Format எப்படியிருக்கலாம்.? அதற்குமுன்,

எனது பெயர் நாலாவது முறையாக DIN (Director Identification Number) பதிவில் நிராகரிக்கப்பட்டது. DINக்கான பதிவில், நம்மூர் வழக்கப்படி பெயரை K R MANI என்று கொடுத்தேன். Kக்கு மற்றும் R விளக்கம் கேட்டார்கள். K Kadayanullur (ஊர்ப்பெயர்) ; R Ramalingam (அப்பா பெயர்) Mani – மணி

(எனது பெயர் ) என்று முறையே முதல், இடை, கடை பெயர் என்று எழுதிக்கொடுத்தேன். அந்தோ பரிதாபம், கடையநல்லூர் எனது பெயராகவும், மணி எனது சாதிப்பெயராகவும் எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. சாதிப்பெயர் போடாமல் எழுதிப்பழகி ரொம்பநாளாகிவிட்டது. இப்போது எந்த சான்றிதழ் பெயரிலும் அநேகமாக அதில்லை. ஆனால் அரசாங்கம் கேட்கிறது, கடைசிப்பெயரோ, சாதிப்பெயரோ எழுதச் சொல்லி.

எழுதுவதில் பெரிய பிரச்சனையில்லை. ஆனால் அந்தப்பெயரிலே ஏதாவது அரசாங்க டாகுமெண்டுகள் சமர்பிக்கப்படவேண்டும்.
எனது பாஸ்போர்ட்டில் எனது சர்/சாதிப்பெயர் : மணி, முதற்பெயர் – கடையநல்லூர் ; கடைசிப்பெயர் : ராமலிங்கம். ஆகவே
அதன்படி எனது பெயர் – கடையநல்லூர் ; வங்கியில் என் முதற்பெயர் – ராமலிங்கம் ; சாதிப்பெயர் – மணி . ஒரு அடையாளங்களில்
கூட சரியாகயில்லை. ஓழுங்காக எழுதவேண்டுமென்றால் மணி ராமலிங்கம் XXX(சாதிப்பெயரை) போட்டிருக்கவேண்டும். அப்படி
எந்த டாகுமெண்டுமே இல்லாதது பெருங்குழப்பம், கவலை, நேரவிரயம், கடுப்பு. ஒரே தேசம், எத்தனை குழப்பங்கள்..
பெயரில் என்ன இருக்கிறது பெயர்..

ஏன் இந்த குழப்பம். உலகத்தின் தரத்திற்க்கு Formatற்கு நாமும் இப்போது மாறிக்கொண்டிருக்கிறோம். www.mca.gov.in உலகத்தரத்தை பெயரளாவில் கடைபிடிக்க முனைகிறது. இந்தியாவில் நாம் கடைசிபெயரை சொல்லி கூப்பிடுவோம். அவர்களுக்கு முதற்பெயர் சொல்லி கூப்பிடும் வழக்கம். இது அடிப்படை வேறுபாடு.

எப்படியோ, பெயரெழும்போது நீங்கள் நினைவில் வைக்கவேண்டியவை சில டிப்ஸ்கள் கீழே:

1. உங்கள் பெயரை எப்போதும் விரித்தே எழுதுங்கள்.
KR MANI, KVVS RAMAN, SM SHANKAR – என்று எழுதவேண்டாம். ஓவ்வொரு எழுத்தும் அதற்கான விரிவான அர்த்ததோடே எழுதப்படட்டும்.

2. முதல், இடை, கடை என்ற நடையில் உங்கள் பெயரிருக்கட்டும்.
முதலில் உங்கள் பெயர், சூட்டப்பட்ட பெயர். மேலுள்ள உதாரணத்தின்படி முதல்பெயர்கள் : மணி, ராமன், சங்கர்
இடைப்பெயர் : ஊர்ப்பெயர்/அப்பா (அ) கணவன் பெயர் /
கடைப்பெயர் : சாதி/சர்ப்பெயர்/குழுப்பெயர்/அப்பா (அ) கணவன் பெயர்/
முடிந்தளவு மேற்கண்ட மூன்றிலும் தெளிவாய் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதையே பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
எனது பெயர், K R Mani அல்ல, மணி ராமலிங்கமே.

3. உங்கள் ஆவணங்களிலெல்லாம் ஓரே மாதிரியான பெயரிருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். ( வங்கி, கடவுச்சீட்டு (Passport), PAN, DIN, Demat) இப்படி எல்லா ஆவணங்களிலும் ஓரே பெயரே இருக்கட்டும். இன்னும் கொஞ்சநாளில் எல்லாம் கணிப்பொறி உதவியுடன் இணைந்துவிடும்.

4. முடிந்தால் கெஜட்டிலும் பதிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

5. தலைமுறை, பராம்பரியம், அப்பா, ஊர், சாதி, மண் எல்லாம் எப்படி விட என்று அதீதமாய் குழப்பிக்கொள்ளாதீர்கள். சிரார்த்தத்திற்காக மட்டுமே அவை உபயோகப்படுத்தப்படவேண்டும்.

இந்த பொருள் பொதிந்த கட்டுரையொன்று லெமுரியா (மும்பையிலிருந்து புதிதாய் வந்திருக்கிற மாத இதழ்) வெளியிட்டிருந்தது.
ஆர்வமாய் படித்தேன். நுனிப்புல். ஏன் இத்தகைய வேறுபட்ட பெயர் வழக்கங்கள் என்று கொஞ்சம் ஆராய்ந்திருந்தாலே இந்தியாவின் பன்முகத்தன்மையும், வேற்றுமையில் ஓற்றுமையும் கண்டடைய, பெரிய ஜனநாயகத்தின் உளவியலை உணரும் தேடலின் தொடக்கமாகவும் அமைந்திருக்கும்.

அதுசரி என் வலி எனக்கு. லெமூரியா.. நல்ல பெயர். இந்தியாவின் வேர். நமது பிதாவின் நிலம். மறக்காமல் சிரார்த்தம் செய்ய வந்திருக்கிறது லெமுரியா பத்திரிக்கை. முந்தைய அடையாளங்களை மீட்டெடுக்க முடியாதெனினும், தொலைத்தாலும் மறக்கக்கூடாது. இயற்கைக்கு முன்னால் மனிதன் தம்மாத்துண்டு, மற்றும் மாற்றங்கள் மட்டுமே மாறாதது என்றாலும் லெமூரியாவிலிருந்து வந்து கொண்டேயிருக்கும் ஆதி தமிழனின் பெருமூச்சு.

வடவர் வருகையால் முழுவதுமாயிருந்த திராவிட நாடு வேங்கிடமலையோடு சுருங்கிப்போயிற்று. ஒருவேளை லெமுரியா கண்டம்
அழிக்கப்படாமல் இந்தியா முழுவதுமாய் ( இந்தியா என்ன, இந்தியா..) திராவிட நாடு மட்டுமிருந்திருந்தால் எனக்கு இந்தப்
பிரச்சனையே வந்திருக்காதோ என்னவோ. முதல், இடை, கடை பெயரில் என்ன போட தொல்காப்பியர் ஏதாவது காப்பியம்
எழுதிவிட்டு போயிருக்கலாம். திருவள்ளுவர் பெயர் சூடல் என்று ஒரு அதிகாரத்தை எழுதியிருக்கலாம். லெமூரியா என்ற பெயர்
குரங்கிற்கு முன்னிருந்த விலங்கினத்திற்கு வைக்கப்பட்ட பெயராம். லெமூரியா மூழ்க மூழ்க இமயமலை உயர்ந்ததாம் – சுதா ஸேசனின் உரையும், ஆன்மீகமான அறிவியலும், அறிவியல் தோய்ந்த ஆன்மீகமும் சேரும்போது தான் உன்மத்தங்கள் நடக்கின்றன –
என்ற எளிமையான தவத்திரு அடிகளாரின் சமூகம் சார்ந்த பேச்சும் பிரமாதப்படுத்தின. புதியிதழ் – தூறலாய் ஆரம்பித்து மழையாய்
பொழிந்து மும்பையில் ராஜ் தாக்கரே மூக்குவரைக்கும் போகாது தமிழ் மண் மணக்க எங்கும், நம்மிலும் நிறைந்திருக்கும்
பிரம்மன் ஆசிர்வதிக்கட்டும்.

லெமூரியா- நல்ல பெயர். பெயரிலென்னயிருக்கிறது ? பெயரில்தான் எல்லாமிருக்கிறது போலும்.

எனது பெயர்தான் குழம்பிக்கிடக்கிறது. கடைசியாக ஒன்று செய்தேன். K – கடையநல்லூரை தொலைத்தேன். என் பெயருக்கு
இப்போது முதல் மற்றும் கடைப்பெயர்தான் உண்டு. முன்பு சொன்னதுபோல என்னை மணி ராமலிங்கம் என்று நாமகரணம் செய்து அதற்கேற்ப
ஆவணங்களை தயார்செய்து கொண்டேன். கடையநல்லூர் நழுவிற்று, என் பெயரிலிருந்து. என் தலைமுறையிலிருந்து. ஓழுங்காக செய்திருந்தால் எல்லாமிருந்திருக்கும், உன் அஜாக்கிரதை என்கிறார்கள். என்னவோ .. உலகத்தமிழனுக்கு அவன் காலடி பட்டயிடங்களெல்லாம், அவன் நாக்கு தமிழ் பேசும் வரைக்கும் அது லெமூரியாதான். பெயரிலென்னயிருக்கிறது
பெயர்..> ஹ¥ம்.. ஹ¥ம்..

பெத்த பேரு.. ஒத்த பேரு..


mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி