ஒரு சுனாமியின் பின்னே…

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

நரேந்திரன்


2004-ஆம் வருடம் தென்கிழக்கு ஆசியாவை உலுக்கியெடுத்த சுனாமி விட்டுச் சென்ற வடுக்கள் இன்னும் நம்மை விட்டு மறையவில்லை. அதற்குள்ளாக கடந்தவாரம் இன்னொரு சுனாமி இந்தோனிஷிய கடற்பரப்பை மிரட்டிச் சென்றிருக்கிறது. நல்லவேளையாக கடந்தமுறையைப் போல சேதாரம் அதிகமில்லை. இயற்கையின் வலிமைக்கு முன்னால் மனிதன் எத்தனை நிராதரவானவன் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது.

உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த 2004-ஆம் வருடத்திய சுனாமி நிகழ்ந்து சில மாதங்களுக்குப் பிறகு, “தி ஐரிஷ் டைம்ஸில்” ராகுல் பேடி (Rahul Bedi) எழுதிய ஒரு கட்டுரையைத் தற்செயலாகப் படிக்க நேரிட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவுவது என்கிற போர்வையில், அமெரிக்கா தனது ஆளுமையை இந்தியப் பெருங்கடலில் நிலை நிறுத்த முயற்சி செய்கிறது என்பது அதன் சாராம்சம். அதற்கான ஆதாரங்களை ராகுல் அடுக்கி இருந்தாலும், இந்தியர்கள் மத்தியில் அக்கட்டுரை போதிய கவனம் பெறவில்லை.

அதே சமயம், ராகுல் பேடியின் கட்டுரையில் காணப்பட்ட செய்திகளை நிரூபணம் செய்வது போல, சமீப காலங்களில் தெற்காசியப் பகுதியில் நடந்தேறும் காட்சிகள் அமெரிக்கவின் உள்நோக்கம் குறித்தான சந்தேகங்களை எழுப்பவே செய்கின்றன. அமெரிக்கக் கப்பற்படையின் நடமாட்டம் பெருமளவு இந்தியப் பெருங்கடலில் அதிகரித்திருக்கிறது. அட்மிரல் நிமிட்ஸ் போன்ற அணுசக்திக் கப்பல்கள் அடிக்கடி இந்தியத் துறைமுகங்களில் காட்சி தருகின்றன. இந்திய-அமெரிக்க கப்பற்படைகளின் கூட்டுப் பயிற்சிகள் நடந்து முடிந்ததுடன், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க-இந்திய ராணுவங்களின் ஒத்துழைப்பும் அதிகமாகியிருக்கிறது. இந்திய அரசாங்க மட்டத்தில் நடக்கும் திரை மறைவுப் பேரங்கள் பொதுவாக இந்தியக் குடிமக்களைச் சென்றடைவதில்லை (அடைந்தாலும் அவர்களால் செய்ய முடிவது ஒன்றுமில்லை; வலிமையுள்ளவன் வைப்பதுதான் சட்டம் அங்கே). முன்னெப்போதைக்கு இல்லாது திடீரென நிகழும் அமெரிக்க-இந்திய ராணுவ ஒத்துழைப்புகளிலும் திரைமறைவுப் பேரங்கள் நடந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலாமல் இருக்கும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் எப்பாடுபட்டேனும் காலூன்ற வேண்டும் என்ற எண்ணம் அமெரிக்காவிடம் பன்னெடுங்காலமாகவே இருந்து வந்திருக்கிறது. அச்சமூட்டும் வகையில் மிக வேகமாக வளர்ந்து வரும் சீனாவின் பொருளாதார, மற்றும் ராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில், இந்தியப் பெருங்கடலில் ஒரு பலம் வாய்ந்த ராணுவ, விமான மற்றும் கப்பல் தளங்களை அது பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது அமெரிக்கா. இதுவரை அதற்கென எடுத்த பல முயற்சிகள் பலவும் பலனளிக்காமலேயே போயிருக்கின்ற நிலையில், எதிர்பாராமல் வந்த சுனாமியை தனக்குச் சாதகமாக அமெரிக்கா புத்திசாலித்தனமாக உபயோகிக்க முயற்சி செய்கிறது என்கிறார் ராகுல் பேடி.

அதன் துவக்கமாக, வியட்நாம் யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் உபயோகித்துப் பின் கைவிடப்பட்ட தாய்லாந்து நாட்டின் உடாபோ (Utapo) விமான தளத்தினை மீண்டும் தனது பயன்பாட்டிற்கு எடுத்துக் கொண்டது அமெரிக்கா. மேலும், அமெரிக்க ராணுவத்தின் முன்னனி அங்கமான டாஸ்க் ·போர்ஸ் 536 அந்த விமானதளத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. அத்துடன் நில்லாது பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து நாடுகளுடன் காலாவதியாகிப் போன ராணுவ ஒப்பந்தங்களை மீண்டும் புதுப்பித்துக் கொண்டது அமெரிக்கா. மேலும், சிங்கப்பூருடன் ஏற்படுத்தியிருந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமெரிக்கக் கடற்படை அந்நாட்டின் துறைமுகங்களை தனது உபயோகத்திற்கு எடுத்துக் கொண்டது.

இத்தனை நடவடிக்கைகளும் சுனாமி நிகழ்ந்த ஒரு சில மாதங்களுக்குள் எடுக்கப்பட்டவை. அதற்கான காரணங்கள் இல்லாமலில்லை. முன்பே கூறியபடி, இந்தியப் பெருங்கடல் பகுதியில் குறிப்பாக தெற்காசியப் பகுதியில் குறிப்பிடும்படியான அமெரிக்க ராணுவத்தளங்கள் எவையும் இல்லை. அப்பகுதியில் இருக்கும் ஒரே ராணுவத்தளம் இந்தியாவிற்குத் தெற்கே ஏறக்குறைய ஆயிரம் மைலுக்கு அப்பால் இருக்கும் டியோகா கார்ஸியாவில் (Diego Garcia) இருக்கிறது. மேலும் டியோகா கார்ஸியா தீவு அமெரிக்கவிற்குச் சொந்தமானதல்ல. இங்கிலாந்து அரசிற்குச் சொந்தமன இத்தீவு, 1966-ஆம் வருடம் தொடங்கி அமெரிக்காவிற்கு ஐம்பது வருட குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது. 2016-ஆம் வருடம் முடிவுக்கு வரும் இக்குத்தகை காலத்திற்குள் இன்னொரு வலிமையான ராணுவத்தளத்தை தெற்காசியப் பகுதியில் அமைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது அமெரிக்கா.

ராகுல் பேடியின் கட்டுரையின்படி, அமெரிக்கா தனது கடற்படைத் தளத்தை இலங்கையின் கிழக்குப்பகுதியில் உள்ள திரிகோணமலை அல்லது தெற்கிலுள்ள கல்லே (Galle)-வில் அமைக்க முனைப்புடன் இருப்பதுடன், அதற்கான நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இலங்கை அரசாங்கத்தின் ஆரம்ப தயக்கங்களை உதாசீனம் செய்துவிட்டு, சுனாமிக்கு உதவும் போர்வையில் அமெரிக்கக் கடற்படையினர் இலங்கையில் இறங்கியதும் இதற்கான முன்னோட்டமே என்கிறார் ராகுல்.

இலங்கையில் ஒரு கடற்படைத்தளம் அமைக்கப்படுவதன் மூலம் இந்திய மற்றும் சீன நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளை எளிதாகக் கண்காணிக்க முடிவதுடன், தனது டியாகோ கார்ஸியா தளத்திற்கு கொண்டு செல்லப்படும் அத்தியாவசிய பொருள்களின் தூரமும் குறையும் என எண்ணுகிறது அமெரிக்கா.

மலேஷிய மற்றும் இந்தோனேஷிய நாடுகளுக்கும் இடையில் அமைந்திருக்கும் மலாக்கா ஸ்ட்ரெய்ட் (malacca straight) கடற்பகுதி மிக முக்கியமான ஒன்று. சீனர்களின் ஆதிக்கம் இப்பகுதியில் மிக அதிகம். மேலும், ஜப்பானுக்குக் கொண்டு செல்லப்படும் தொண்ணூறு சதவீத எண்ணெய் இதன் வழியாகத்தான் சென்றாக வேண்டும். பொருளாதார மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது அமெரிக்காவிற்கு இன்றுவரை எளிதாக இருந்ததில்லை. இந்தோனேஷியாவும், மலேஷியாவும் இஸ்லாமிய நாடுகள். அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் உள்நோக்கம் குறித்த சந்தேகம் மிகுந்த இவ்விரு நாடுகளும், மலாக்கா ஸ்ட்ரெயிட்டில் அமெரிக்க ராணுவ மற்றும் கப்பற்படை நடமாட்டம் குறித்து தொடர்ந்து எதிர்த்தே வந்திருக்கின்றன. இண்டர்பிரஸ் சர்வீசைச் சேர்த்த ஜிம் லோபின் (Jim Lobe) கட்டுரையின்படி, அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இந்தோனேஷியாவுடன் காலாவதியான ராணுவ ஒப்பந்தந்தத்தை புதுப்பிக்கத் தேவையான முயற்சிகளைத் தொடந்து நடத்தியதாகத் தெரியவருகிறது.

சுனாமி நிகழ்வதற்கு முன்பிருந்தே, அமெரிக்க ராணுவத் தலைமை இந்திய ராணுவத் தளங்களையும், விமான மற்றும் துறைமுகங்களையும் தனக்கென உபயோகப்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்திருக்கிறது (Joseph, Josy: “Target Next: Indian Military Bases”, rediff.com, April 21,2003). குறிப்பாக அமெரிக்க விமானப்படை, இந்தியாவில் விமான தளங்களை அமைப்பதில் அல்லது இருக்கும் தளங்களை உபயோகித்துக் கொள்வதில் பேராவல் கொண்டிருந்தது. 2003-ஆம் வருட காலப்பகுதில் இந்தியாவின் முக்கிய பதவியில் இருந்த சில மூத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் சீனியர் அமெரிக்க அதிகாரிகளின் மத்தியில் உலா வந்த, “Indo-US. Military Relations: Expectations and Perceptions” ஒரு மிக முக்கியமானதொரு ஆவணம்.

மத்திய ஆசியாவையும், தெற்கு ஆசியாவையும் இணைக்கும் SLOC எனப்படும் (Sea Lanes of Communications) கடல் வாணிபப் போக்குவரத்து நிறைந்த, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கும் இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் அமெரிக்க ராணுவத் தலைமையை ஈர்த்திருக்கிறது. இந்தியாவில் அமைக்கப்படும் ராணுவத் தளங்களைக் கொண்டு தெற்காசியாவின் பிறபகுதிகளுக்கு எளிதில் சென்றடைவதுடன், ஆசியப் பகுதியின் பிறபகுதிகளில் உண்டாகும் பிரச்சனைகளில் உடனடியாகத் தலையிடும் வாய்ப்பும் கிட்டும் என்று அமெரிக்க ராணுவம் நம்புவதாக மேற்படி ஆவணம் கூறுகிறது.

ஆசியாவின் பிற பகுதிகளில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட் ஒப்பந்தகளில் சிக்கல்கள் அதிகரித்தால், இந்தியா-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பின் முக்கியத்துவமும் அதிகரிக்கக் கூடும் என நம்ப இடமிருக்கிறது.


narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்