சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3

This entry is part of 33 in the series 20070913_Issue

வெங்கட் சாமிநாதன்


சற்று முன்னர் முப்பதுக்களில் மலர்ந்த ஒரு மறுமலர்ச்சியின் ஆதர்ச புருஷராக வ.ரா. இருந்தார் என்று சொல்லியிருக்கிறேன். அது அம்மறுமலர்ச்சியின் இலக்கியம் சார்ந்த அங்கத்தை மனதில் கொண்டாகும். ஈ.கிருஷ்ண அய்யரும் ருக்மிணி அருண்டேலும் தமிழ் நாட்டின் நீண்ட பாரம்பரியம் கொண்டிருந்த ஒரு நாட்டிய மரபு தேய்ந்து மறைந்து கொண்டிருந்த காலத்தில் அதை மீட்டெடுத்து புதுப்பித்து வாழ்வு கொடுத்த காரியமும் இம்மறுமலர்ச்சியின் மற்றொரு அங்கம் தான். தமிழ் நாட்டின் மேடைக் கச்சேரிகளில் தமிழில் பாடுவதே அரிதாகிக் கொண்டிருந்த காலத்தில் தமிழிசை மரபை நினைவுறுத்தி அதற்கு உரிய இடத்தைப் பெற்றுத்தர எழுந்த தமிழிசை இயக்கமும் இந்த மறுமலர்ச்சியின் அங்கம் தான். இவையெல்லாம் தேசம் முழுதும் சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் நாடு பெற்ற விழிப்புணர்வின் விளைவுகள் தாம். தேசீய விழிப்புணர்வின் விளைவாகவே வங்காளத்தில் புதிய பாணி ஓவிய முயற்சிகள் தோன்றியது போல. நான் இப்போதைய சந்தர்ப்பத்தில் இலக்கியத்தோடு நின்றுகொள்கிறேன். தமிழ் நாட்டில் முப்பதுகளில் தோன்றிய இலக்கிய மறுமலர்ச்சி, தேசீய எழுச்சியும் சுதந்திர உணர்வையும் மக்களிடையே பரப்புவதற்கென்றே, சுதந்திரப் போராட்ட வீரர்களால் தோற்றுவிக்கப்பட்ட மணிக்கொடி பத்திரிகையைச் சுற்றியே மலர்ந்தது. முன்னரே சொன்ன வ.ரா. தவிர பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா, புதுமைப் பித்தன் போன்றோரையும் சேர்த்துச் சொல்லவேண்டும். இவர்களில் சி.சு.செல்லப்பாவும் பி.எஸ்.ராமையாவும் தீவிரமாக சுதந்திரப் போராட்டத்தில் இயங்கியவர்கள். சிறை சென்றவர்கள். இப்போது 86 வயதாகும் செல்லப்பா ஒருவர் தான் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இருந்த எழுத்தாளர்களில் இப்போதும் நம்மிடையே வாழ்பவர். அவரை இன்னமும் நம்மிடையே பெற்றிருக்கும் பாக்கியம் நமக்கு. முப்பதுக்களின் சுதந்திர போராட்ட காலத்ததிய அன்றைய வாழ்க்கையைச் சொல்லும் 1700 பக்கங்களுக்கு விரிந்துள்ள சுதந்திர தாகம் என்ற மூன்று பாகங்கள் நீளும் ஒரு நாவலை அவர் தன் வாழ்வின் அந்திம காலத்தில் எழுதியிருக்கிறார். அது ஒரு ஆவணமும் ஆகும். அது உண்மையில் சுமார் ஏழாண்டு கால(1927-1934) நடப்புகளைத்தான் விவரிக்கிறது. காந்தியின் ஆணையைத் தலைமேற் தன் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே துறந்து சத்தியாகிரஹியாகி சிறை சென்ற நடப்புகள் அவை. இந்த பிரம்மாண்ட நாவல் என்னவோ மதுரையையும் அதைச் சுற்றியும் நிகழும் சம்பவங்களை மட்டுமே விவரித்தாலும், (செல்லப்பா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அதற்கு மேல் இட விஸ்தாரம் பெறவில்லை), அதன் உணர்வுகள் நாடு முழுதும் கொந்தளித்துக்கொண்டிருந்த சுதந்திரப் போராட்டத்தையே பிரதிபலித்தன. புதுமைப் பித்தன் (1907-1947) ஒரு தனி பிறவி. அவர் எந்தப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவரில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக ஈடுபடும் எந்த செயலிலும் தன்னையும் அதில் ஒருவராக இணைத்துக்கொள்ளும் இயல்பு அவரிடம் இல்லை. அவர் ஒரு தீவிர தனி நபர் வாதி. தன் தனித்வத்தை அதன் எல்லைவரை இட்டுச் செல்பவர். ஆனால் ஆளும் ப்ரிட்டீஷ் அரசாங்கம், அதற்கு சேவுகம் செய்வதில் பெருமை கொள்ளும் கருப்பு நிற அதிகார வர்க்கம், சரிகைத்தலைப்பாகைகள் மீது அவருக்கு இருந்த ஆக்கிரோஷ வெறுப்பு அத்தனையும் அவருடைய எழுத்துக்களில் வந்து கொட்டும். சந்தர்ப்பம் இருக்கிறதோ இல்லையோ, தேவை உண்டோ இல்லையோ, எழுதும் போக்கில் ஆங்கில அரசின் குட்டி தேவதைகளுக்கு எதிரான அவர் தனது சீற்றத்தையும் , கிண்டலையும் போகிற போக்கில் உதிர்த்துக் கொண்டே போவார். அவரது எழுத்து முழுதிலுமே இத்தகைய கிண்டலும் வெறுப்பும் தெளித்திருக்கக் காணலாம். அடிமைப் பட்டுக்கிடந்த இந்தியாவில், தமிழ் நாட்டில் ஒரு சுதந்திர ஜீவி இருந்தாரென்றால் அது அவர் தான். எந்த அதிகாரத்தையும், அது வெளிநாட்டிலிருந்து வந்ததோ அல்லது உள்நாட்டிலேயே பிறந்து வந்ததோ, அவர் மதித்ததில்லை.

கடைசியாக அந்நாட்களின் வரலாற்றைப் பதிவு செய்தவர்களைப் பற்றிச் சொல்லவேண்டும். எல்லோருக்கும் முதலாக, ‘உலகம் சுற்றிய தமிழர்’ என்றே அறியப்பட்ட ஏ.கே.செட்டியாரைப் பற்றி. அவரது உலகப் பயணங்கள் பற்றி அவர் எழுதியது போக, காந்தி பற்றி அவர் எடுத்துள்ள செய்திப் படம். இது தான் இந்தியாவிலேயே காந்தி பற்றி எவரும் எடுத்துள்ள முதல் செய்திப் படமும் ஆகும். அந்நாட்களின் சுதந்திர போராட்டச் செய்திகளை, காந்தி பற்றிய செய்திகளை அரசு செய்திப் படங்களில் பார்க்கும்போது, ஒரு பெரிய திறந்த வெளியில் நூற்றுக்கணக்கில் சரிவர உடைகூட உடுத்தியிராத ஏழை ஸ்திரீகள், வயதானவர்கள் உட்பட உட்கார்ந்து கைராட்டினம் சுற்றி நூல் நூற்றுக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்திருக்கிறோமே, அது ஏ.கே.செட்டியார் காந்தி பற்றிய செய்திப்படத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட காட்சிதான். செட்டியார் தன் உலகப் பயணத்தில், எங்கெங்கோ தொலைவில் உள்ள நாடுகளில் கூட காந்தியின் பெயர் எழுப்பும் உத்வேகமும் வரவேற்பும் பற்றி வெகு உற்சாகத்துடன் எழுதுகிறார். இன்னும் பலர் அந்நாட்களைப் பற்றி எழுதியிருக்கின்றனர். கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை என் சரிதம் என்று எழுதியுள்ள சுயசரிதம்,. அவர் காலத்தில் நடந்த சுதந்திர போராட்ட நிகழ்வுகளையும், அவரது சரிதத்தையும் சொல்லும். தி.சு.சு.ராஜன் எழுதியுள்ள புத்தகம் ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் வரை நடை பயணம் சென்ற உப்பு சத்தியாக்கிரஹ நிகழ்ச்சிகளையே பெரும்பாலும் விவரிக்கும். திரு.வி.க வின் வாழ்க்கைக் குறிப்புகள் என்னும் சுயசரிதம், அறுபது ஆண்டு கால தொழிற்சங்க வரலாற்றையும், சுதந்திர போராட்டமாக விரியும் தேசீய அரசியலையும் பதிவு செய்துள்ளது. தனது வயதின் தொன்னூறுகளில் இறந்த ம.பொ.சிவஞான கிராமணியார், சுதந்திர போராட்டத்தில் தீவிர மாக இயங்கியவர் ‘விடுதலைப் போரில் தமிழகம் என்று ஒரு பிரம்மாண்ட நூலில் தமிழ் நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை மிக விஸ்தாரமாக, விவரங்கள் செறிந்த வகையில் உணர்ச்சிப் பெருக்கோடு சொல்லிச் செல்கிறார். இப்பங்களிப்பைப் பற்றி ம.பொ. சிவஞானம் அவர்கள் அளவுக்கு விஸ்தாரத்திலும் விவரப் பெருக்கிலும் உணர்வு பூர்வமாகவும் பதிவு செய்துள்ள வரலாற்று நூல் வேறு ஒன்று தமிழில் இல்லை. சுமார் 1200 பக்கங்களுக்கு விரிந்துள்ள இந்த வரலாறு முழுதும் ம.பொ.சி அவர்களால் வாய் மொழியாகவே நினைவிலிருந்து சொல்லச் சொல்ல பதியப்பட்டுள்ளது.

—————————————————————————————————————

1997-ல் இந்திய சுதந்திரத்தின் 50-ஆண்டு நிறைவை ஒட்டி தில்லியில் மத்திய செயலக நூலகம் (Central Secretariat Library) நடத்தின் சுதந்திர போராட்டத்தில் எழுத்தாளர்கள் என்ற கருத்தரங்கில் பேசியது.

(இதற்கு முன்குறிப்புகளாக நான் உரையைத் தொடங்கும் சொன்னவற்றையும் இங்கு சொல்வது அவசியம்: அக்குறிப்புகள் இதோ:)

“இந்த உரையை உங்களுக்குச் சமர்ப்பிக்கும் முன் இவ்வுரை தனக்குள் வகுத்துக் கொண்டுள்ள எல்லைக் கோட்டின் வட்டத்தைப் பற்றிச் சொல்லவேண்டும். இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளவர்கள் தந்துள்ள 1900-1947 கால கட்ட வரையறை. அடுத்து இக்கருத்தரங்கு இலக்கியப் பங்களிப்பை மாத்திரமே கருத்தில் கொண்டுள்ளது. சீரிய இலக்கிய மாணவர்களுக்கெல்லாம் தெரியும், எந்த பெரிய நிகழ்வைப் பற்றியுமான ஆழமான சிருஷ்டி கர இலக்கியப் பதிவு அது நிகழ்ந்து முடிந்து அந்நிகழ்வின் தாக்கத்தின் சூடு ஆறிய பிறகு, எழுத்தாளன் தன்னை அதனிலிருந்து விலக்கி எட்டி நின்று, அந்நிகழ்வின் உணர்வுகளின் அழுத்தமும், சூடும் தன்னை பாதிக்காது அதன் குணத்தை அறிய முடிகிற போது தான் சாத்தியமாகிறது.

எனவே, ஒரு வேளை கருத்தரங்கை அமைத்துக் கொடுத்தவர்களின் நோக்கம், அத்தகைய ஆழ்ந்த சிருஷ்டி பூர்வ பதிவுகளின் இலக்கிய ஆராய்வு அல்ல, மாறாக, போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே அதன் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் எழுத்தாளர்களின் பங்களிப்பைப் பற்றி பேசுவது என்று தோன்றுகிறது. எனவே இங்கு நான் செய்துள்ளது போராட்ட கால கட்டத்திலேயே தமிழ் எழுத்தாளர்கள் அதை எப்படி எதிர்கொண்டார்கள், என்ன பதிவு செய்தார்கள், அது போராட்டத்திற்கே எத்தகைய பங்களிப்பைச் செய்தது என்பதேயாகும். இத்தகைய அவ்வப்போதைய கால கட்டத்தின் ஆவேச உற்சாகங்களையும் உணர்ச்சிப் பெருக்கையும் மீறி, எவை இன்று ஆழந்த இலக்கியங்களாக காலத்தை மீறி வாழ்கின்றன எவை சீரிய இலக்கிய சாதனைகளாகியுள்ளன என்று கணிப்பதல்ல..

மேலும், இலக்கியத்திற்கு அப்பால் மற்ற துறைகளில், வாழ்வுத் தளங்களில், தொடர்பு சாதன வடிவங்களில் போராட்டத்திற்கு உதவியவர்கள், அவர்களின் சாதனைகளைப் பற்றிப் பேசவில்லை. நாடக மேடையில், திரைப்படத் துறையில் ஈடுபட்டிருந்தவர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், பொம்மலாட்டக்காரர்கள், பிச்சைக்காரர்கள், தெருப்பாடகர்கள் போன்றோரையும் விட்டு விட்டேன். ஆமாம், பிச்சைக்காரர்களும், தெருப்பாடகர்களும் தான்.

கற்பனை செய்து பாருங்கள். ஒரு பத்து வயது சிறுமி, எண்ணையற்ற பிசுக்கேறிய தலையும், அழுக்குச் சட்டை பாவாடையுமாக ஓடும் ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக இறங்கி ஏறி வருகிறாள். அடித்தொண்டையைக் கிழித்துக்கொண்டு உச்ச ஸ்தாயியில், பாடிக்கொண்டே பெட்டி பெட்டியாக நகர்ந்து கொண்டே,

பண்டித மோதிலால் நேருவை பறி கொடுத்தோமே,
பறிகொடுதோமே, பரிதவித்தோமே….

மோதிலால் நேரு மட்டுமல்ல, திலகரை பறிகொடுத்ததும், கஸ்தூரிபாவின் தியாகங்களும் அவளுக்குப் பிச்சையெடுக்க உதவும் பாட்டுக்களாக மட்டுமல்ல அவள் அலறல், ரயில் பயணிகளின் உள்ளத்தையும் தொடும். ஒரு நாள் பயணத்தில் தமிழ் நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை அவள் பயணம் செய்துவிடுவாள். எத்தனையோ ஆயிரம் பயணிகளுக்கு அவள் கதறல் போய்ச் சேரும். அவள் சற்று தூரத்தில் இறங்கி விட்டால் மற்றொரு சிறுமி அவள் இடத்தில் தோன்றுவாள்.. ஆங்கில அரசின் கரங்கள் திரைப்படங்களை, நாடகங்களை, புத்தகங்களை, பொதுக் கூட்டங்களை, புத்தகங்களை, பாரதியின் கவிதைகளை தடை செய்துவிட முடியும். ராஜாஜியை, மகாத்மா காந்தியை கைது செய்து சிறையில் அடைத்து விட முடியும். ஆனால் அந்த சூரியன் அஸ்தமிக்காத பகாசுர அரசு, தன் தொண்டை கிழிய கத்திப் பாடும் இந்த பிச்சைக்கார சிறுவர் சிறுமியரை அந்த அரசின் அதிகாரத்தை அறியாது மீறும், பணியாத இக்குரல்களை, அரசுக்கு எதிராக ஆயிரக் கணக்கான பயணிகளின் உணர்ச்சிகளைக் கொந்தளிக்கச் செய்யும் இந்த அழுக்குச் சட்டைப் பாவாடைகளை என்ன செய்ய இயலும்? இவர்களும் சுதந்திரப் போராட்டதிற்குப் பங்களித்தவர்கள் தான். காலத்தின் கதியில் நாம் மறந்து விட்ட, மறக்கப்பட்டுவிட்ட இப் பங்களிப்புகள் எல்லாம் உடனுக்குடன் பாதிப்பை ஏறுபடுத்தியவை. வெடிமருந்தைப் போல பயங்கர விளைவுகளையும் ஏற்படுத்தியவை. காட்டுத் தீயைப் போல படர்ந்து பரவும் குணத்தவை. ரயில் பெட்டிகளில் பாடிப் பிச்சையெடுக்கும் இச்சிறுமிகளுக்குக் கிடைத்துள்ளவர்கள் தயாராகக் காத்திருப்பவர்கள் (captive audience)- இருந்த இடத்தில் ந்கராது கேட்பவர்கள். மனது நெகிழ்வதற்குக் காத்திருப்பவர்கள். அரசியல் வாதிகளும், எழுத்தாளர்களும் மக்கள் மனதில் பாதிப்பைக் காண் தம் திறைமையெல்லாம் திரட்டி சாகஸங்கள் செய்யவேண்டும். இனி என் உரை..

…. தமிழ் இலக்கியத்துள் நிகழ்ந்துள்ள…..

வெங்கட் சாமிநாதன்/23.8.07

Series Navigation