தமிழக அரசியல் – இன்று!

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

தாஜ்



தமிழக அரசியல், மற்ற மாநிலங்களின் அரசியல் மாதிரியானது அல்ல! ஆட்சியை தங்க வைத்துக் கொள்ள, குடும்ப அரசியலை ஸ்திரப்படுத்த, கட்சிக்கான நிதியினைக் குவிக்க, சொந்த பந்தங்களின் சம்பாத்திய ராஜியத்தை விரிவு செய்ய, மக்கள் பார்வையில் இருந்து அதைமறைக்க, வெற்றிகொள்ள முடியாதுப் போகிற மக்களின் ஜீவாதாரப்பிரச்சனைகளை பூசிமொழுக, இவர்கள் கைகொ ள்ளும் அரசியல் சாதுர்யங்கள் அலாதியானது! அதை வெளிப்படுத்தும் விதம் தீவிர அரசியல் கணக்கு சார்ந்தது! அவர்களின் திரைக்குள் யவரும் அத்தனை சீக்கிரம் தலை நுழைந்து, நிஜம் கண்டு விட இயலாது! கண்டுக் கொண்டவன், எழுத்தில் அதைச் சொல்லிமாளாது! அதன் பின்னல் அப்படி! அப்படியே சொன்னாலும், அதற்கு நேரம் செலவழித்து படிக்கவோ, அதை உள்வாங் கிக் கொள்ளவோ நம் மக்களுக்கு பொறுமை கிடையாது.

மக்களின் இந்த சாந்த, சொரூப, மயக்க நிலைதான் அரசியல்வாதிகளுக்குப் பிடிக்கும். அரசியல் வியூகங்களை வகுப்பதும், அதற் கான காய்களை நகர்த்துவதும் இந்தமக்களின் குணாதிசயத்தை நம்பித்தான்! அபூர்வமாக சிலநேரம் மக்கள் விழித்துக் கொள்வதும் உண்டு! அப்பொழுதெல்லாம் அரசியல்வாதிகளின் சலுகைகளும், இனாம்களும் ‘தாம்தூம்’ படும்! இந்த வகைக் கூத்துக்களை உள் ளடங்கிய நமது அரசியலை, தள்ளியிருந்து தீர ரசிப்பவனுக்கு அது தரும் ரசனை அலாதியானது! செய்தி தாள்களில் அரசியல் தலைவர்கள் வெளிப்படுத்துவது மாதிரி, அவர்களது அரசியல் நடவடிக்கைகள் பெரும்பாலும் வெள்ளையானது அல்ல! அப்படி நம்பும் நல்ல மனம் படைத்தவர்கள் வேறு பக்கங்களுக்குப் போய், ‘சொடுக்கி’ தீவிர கவிதைகளைத் தேடிக் கண்டு படிக்கலாம்.

வட இந்தியா அரசியலில் மிஞ்சிமிஞ்சிப் போனால் மத மாச்சரியங்களின் வீம்புதான் பெரிதாக இருக்கும்! மசூதியை இடித்து வம்புக்கு இழுப்பதும், சூலம் ஏந்திய சன்னியாசிகளை அரசியல் அரங்கத்தில் திரிய விடுவதும்! எதிராளி, முக்கிய தலைநகரில் குண்டு வைத்து கட்டிடங்களை தரைமட்டமாக்கி உயிர்களை துவசம் செய்வதும்! பொழுதுப் போகவில்லை என்றால் ரயில் பெட்டிகளுக்கு அவன் குண்டு வைப்பதும்! … சகிக்க முடியாத காட்சிகள்! தமிழத்தில் இந்த மாதிரியான மண்டை குடைச்சல்கள் குறைவு. இந்த மண்டைக் குடைச்சல்கூட, தமிழகத்தில் வட இந்திய அரசியலின் தாக்கம் எட்டியப் பார்த்தப் பிறகுதான்! தமிழகத்து அரசியல் போக்கு என்பது முற்றிலும் வித்தியாசமானது! அந்த வகையில் நமக்கு கிடைத்த அரசியல் பாக்கியங்கள் நம்ம கலைஞரும் / புரட்சி தலைவி அம்மாவும்!

தமிழக அரசியல் போக்குகளின் நளினத்தை உள்வாங்கிக் கொள்ளும் யவரும் அதன் பிரமாத ரகத்தை ஒப்புக் கொள்ளவே செய் வார்கள். தமிழக மக்கள் மௌன சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்க / இந்துத்துவா பெரும் தலைகள் வேலூர் சிறைச்சாலை வாச லில் வந்து குவிந்து கர்ஜனை செய்ய / சங்கராச்சாரியார்களை செல்வி ஜெயலலிதா மாறி மாறி கைது செய்து சிறை வைத்த அழுத் தத்தை இந்திய மாநிலங்களில் வேறு எந்தவொரு அரசும் அப்படி கனவுகூட காண இயலாதது! அம்மா அப்படி யென்றால் இந்தப் பக்கம், கலர் டிவி / கேஸ் ஸ்டவ் / இரண்டு ஏக்கரா நில வாக்குறுதிகள் என்று மக்களை திளைக்க வைத்து அய்யா கலைஞர்,அவ ர்களின் ஓட்டுகளைவாங்கி, அரியணையில் அமர்ந்த சுலபமும் சாதாரணப்பட்டது அல்ல! இந்திய அரசியலில் எங்கே தேடினாலும் இப்படியொரு சுலப தேர்தல் வெற்றிக்கும் வேறுமாநிலங்களில் முன் உதாரணங்களே கிடைக்காது! இவைகள் ஊடான அவர்களின் அரசியல் வியூகங்களை பெரும்பாலானவர்கள் அத்தனை சீக்கிரம் கண்டுப் பிடித்துவிடவும் முடியாது!

இன்றைக்கு செய்திகளின் வழியே நம் பார்வைக்கு விரிக்கப்படுகிற விசேச அரசியல் நடவடிக்கைகளில் முதன்மைப் பெற்றிருப்பது கலைஞர் குடும்பத்திற்கும் மாறன் குடும்பத்திற்குமான பகைமை குறித்த செய்திகளே! மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவல கம் தீவைப்பு! / மூவர் பலி! / என்பதில் இந்த அரசியல் நிகழ்வு தொடங்கி இருபத்தி ஐந்து நாட்களுக்குமேல் ஆகிவிட்டது. நம் தினசரிகள் இதுதொடர்பான அடுத்தடுத்த செய்திகளை தொடர்ந்து வற்றாமல், அலுக்காமல் இன்னும் வழங்கிக் கொண்டிருக்கிறது! நமது வாழ்வின் பகுதியாக மாறிவிட்ட நம்முடைய புலணாய்வு இதழ்கள், தங்களது பங்கிற்கு இதையொட்டி புதைந்திருக்கும் தக வல்களென ஏதேதோ செய்திகளை கொண்டு வந்து நம் தலையில், வாரத்திற்கு இரண்டுமுறை கணக்கில் திணித்துக் கொண்டிருக்கி றது.

தொடர்ந்து எழுதப்படும் அல்லது நமது தலையில் திணிக்கப்படும் அந்தச் செய்திகள், தினகரன் அலுவலகம் தீவைப்பை யொட்டி பத்திரிகை சுகந்திரத்தின் மீதான தாக்குதலின் எதிர்வினை என்றோ, அந்தத் தாக்குதலை நடத்திய மதுரை தி.மு.க.வின் ‘நம்பர் ஒன்’ பற்றிய எதிர்வினை என்றோ யாரும் கருதவேண்டாம்! இந்த தொடரும் செய்திகள் வேறு ரகம்! தயாநிதி மாறன் ராஜினாமா வில் துவங்கி, கலைஞர் டி.வி. வழியாக, அந்த டி.வி.க்கு ரஜினியின் சிவாஜி / மொழி போன்றப் படங்கள் எல்லாம் வாங்கப் பட்டு விட்டது, ஆகஸ்ட் பதினைந்தில் தொடங்கும் அந்த டி.வி.யில் முதல் பட ஒளிப்பரப்பே ‘மொழி’ என்பதாக துப்புத் துலக்கியப்படி, கனிமொழி மேல்சபை எம்.பி. ஆகும் செய்தியையும், அவருக்கு மத்திய மந்திரி பதவிகிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதான ஹே ஸியங்களும் செய்திகளாகின்றன!

தினகரன் அலுவல தீவைப்பும்; அதில் மாண்ட மூவரும் என்கிற நிகழ்வை, செல்வி. ஜெயலலிதா ஆட்சியின் போது நடந்த தர்ம புரி பஸ் தீவைப்பு கொடுமைக்கு நிகராக தமிழ்ச் சமூகத்தால் பார்க்கப்பட்டது குறித்தோ, அன்றைய தினம் மதுரையில் ஆளும் கட்சிக்காரர்களாலேயே அவர்களின் அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப் பட்டமைக் குறித்தோ, சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீஸ்துறை இந்த சம்பவத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த வேடிக்கைக் குறித்தோ நமது ஊடகங்கள் தொட ர்ந்து எழுதாததும், ஆட்சிக்கு வலுவான கண்டனங்கள் செய்யாததும் அதன் மரபு சார்ந்த நெறிக்கு உகந்ததாக இல்லை. ஜனநாய கத்தின் தூண்களில் ஒன்றான இந்த ஊடகங்கள் இனியொருதரம் எங்கேனும் நிஜத்தைப் பேச முற்படும்போது அதில் நம் கவனம் குவியும் என்று நான் நினைக்கவில்லை! மாறாக, அப்பொழுது சிரிப்பே எழும்.

தமிழகஅரசியலை மூன்றாவது கண்கொண்டுப் பார்க்கும் எவரும், தினகரன் தீவைப்பையெட்டிய நமது செய்திதாள்களின் செய்திக ளோடு ஒருபோதும் ஓட்ட மாட்டார்கள்! வெளியுலகில் பெரிய தலைகள் சிலர் கணிக்கிற மாதிரி, கலைஞர் கிழித்த சாணக்கிய கோட்டின் மீதே செய்திகளும் அதற்கான அரசியல் சம்பவங்களும் பயணிப்பதாக நம்ப இடமுண்டு. தவிர, தினகரன் தீவைப்பு ஒட்டிய சம்பவங்களின் / செய்திகளின் அதீதத்திலிருந்தே இதை சுலபமாக யூகிக்கவும் வாய்ப்பிருக்கிறது!

தமிழக அரசியல் விமர்சனத்தில் துக்ளக் திரு.சோவுக்கு வலுவானதோர் இடம் உண்டு! அதில், அவர் கெட்டி என்று இன்னும் பலர் கருதவே செய்கிறார்கள். இன்றைக்கு, இந்த வாழும் அரசியல் பிரச்சனைக் குறித்து அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப் போம். அவர் தனது பத்திரிகையின் எச்சரிக்கை பகுதியில் இப்படி எழுதியிருக்கிறார்:

‘எச்சரிக்கை’ / இந்த இதழ் அச்சாகிற தருவாயில், தயாநிதி மாறனை, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்குத் தேவை யான நடவடிக்கைகளை எடுக்குமாறு, முதல்வரை, தி.மு.க. நிர்வாகக் குழு கேட்டுக்கொள்ள – அதை ஒட்டி, தயாநிதி மாறன் ராஜி னாமா செய்திருக்கிறார். அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்றும் தி.மு.க. நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

தி.மு.க.வினரால் – முக்கியமாக கலைஞரால் – உருவாக்கப்பட்டவர்கள்,(கலைஞர் உதவியால் உதயமாகி, வளம் பெற்ற) சன் டி.வி. யின் ‘சக்தி’யும், பண பலமும், தி.மு.க.வையே நிலை குலையச் செய்யக் கூடிய திறன் படைத்தவை என்று எண்ணி விட்டார்கள். அதன் விளைவுதான் இப்பொழுது நடந்திருப்பது.

தோல்வியைக் கூடத் தாங்கி விடலாம்; ஆனால் வெற்றியைத் தாங்கிக் கொள்ள, நிதானமும், மனோ பலமும்தேவை. அது இல்லை யென்றால், சிலர் பெறுகிற வெற்றிகளே, அவர்களுக்கு வினையாகிவிடும். இதை அரசியலில் முன்பும் பார்த்திருக்கிறோம்; பின்பும் பார்ப்போம்; இப்பொழுதும் பார்க்கிறோம். – துக்ளக் / 23.05.2007

தினகரன் பத்திரிகை தாக்குதல் ஒட்டி, தாயாநிதிமாறன் பதவி விலகியதை முதல்பாராவில் செய்தியாக தந்திருக்கும் சோ, பிறகான இரண்டு பாராக்களில் அவர் என்ன சொல்லவருகிறார் என்பதை நாம் அனுமானம் கொண்டுதான் புரிந்துக் கொள்ள வேண்டியிரு க்கிறது. கருணாநிதியால்தான் சன் டி.வி. இத்தனைக்கு வெற்றிப்பெற்றது என்றும், அந்த வெற்றிகண்டு அவர்களே பயந்துவிட்டார் கள் என்பதாகவும் சொல்லுகிறார். இன்னொரு தாக்குதலாக, மாறன் சகோதரர்களை நோக்கி ‘வெற்றி குவித்திருக்கிற மலையளவி லானப் பணம், அது தந்த மம்மதையின் வினைகளால், இப்பொழுது அவர்கள் வீழ்ச்சியை எதிர் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் சொல்வதாக யூகிக்க முடிகிறது.

இந்த பிரச்சனைக் குறித்து செல்வி. ஜெயலலிதா என்ன சொல்கிறார் என்பதை அவரது ஜெயா டி.வி. வாயிலாக அறிய முடிந்தது. தினகரன் சம்பவம் நடந்த நாள்தொட்டு நிறையத் தகவல்களை அந்த டி.வி. தந்து வருகிறது. ‘கருணாநிதி குடும்பத்திற்கும்/ மாறன் குடும்பத்திற்கும்’ நிகழும் ‘ஈகோ’ பிரச்சனையிது என்றும், கருணாநிதியின் குடும்பஅரசியல் சந்திச் சிரிக்கிறது என்றும் அது தூற்றி வருகிறது. துக்ளக் சோ, செல்வி ஜெயலலிதா மட்டுமல்ல பல்வேறு தரப்புகளும், ஊடகங்களும் பெரும்பாலும் அப்படித்தான் கணி க்கிறது! எழுதுகிறது!

நமது தமிழக அரசியலின் நிஜமான தரிசனத்திற்கு மூன்றாவது கண் தேவைக்குறித்து மேலே சொல்லி இருந்தேன். அது அதிகம்! அரசியல்வாதிகளுக்கும் உண்மைக்குமான இடைவெளியை அறிந்தவர்களாக நீங்கள் இருந்தாலேபோதும்! அரசியல்வாதிகள் உண் மையே பேச மாட்டார்கள் என்கிற யதார்த்தம் புரிய வந்தால்கூட போதும். ரெண்டும் ரெண்டும் நாலு என்பதுமாதிரி சின்னக் கண க்கு இது! இதையொட்டி எந்த அரசியல் நிகழ்வையும் நாம் எளிதாக கூட்டிக் கழித்து வகுத்துவிடலாம். என்ன…. பழைய அரசியல் நடப்புகளையெல்லாம் கொஞ்சம் நினைவுப்படுத்த வேண்டியிருக்கும்! அதுதான் கஷ்டம்!

மாறன் சகோதரர்களின் சொத்துக் குவிப்பும் அதையொட்டிய அவர்களின் டாம்பிகம், அத்து மீறல்கள் என்பவை எல்லாம் தினகர னின் கருத்துக் கணிப்புக்கும், மதுரை தினகரன் தீவைப்புக்கும் பிறகே கலைஞர் அறியவந்தாரா என்ன? என்கிற கேள்விக்கு இல் லை, அவருக்கு முன்கூட்டியே தெரியும் என்பதுதான் பதிலாக இருக்கமுடியும்! இப்பொழுது அதையேதான் கழகத்தினர்களும் சொ ல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம் – 2006, பொதுத்தேர்தல் காலத்தில், தமிழக தேர்தல் மேடைகள் தோறும் மாறன் சகோதரர்களைப் பற்றி, அவர்களது செல்வச் செறுக்கு / டாம்பீகம் / அத்து மீறல்கள்/ நாளை அவர்கள் எப்படியெல்லாம் தொழில் துறைகளிலும் விஸ்வரூபம் எடுக் கப் போகின்றார்கள் என்பது மட்டுமல்லாது, அரசியலிலும் அவர்களது கணக்குகள் வலுவானவை என்கிற பேச்சாகத்தானே இருந் தது. மதிமுகவின் பொதுசெயளாளர் வை.கோ. அதை சுட்டி முழங்கிய முழக்கம் கண்டம் விட்டு கண்டமல்லவா கேட்டது! அவர் மீது மாறன்சகோதரர்கள் கோர்ட்டில் மான நஷ்டஈடு வழக்கல்லவா தொடுத்தார்கள்! அந்த வழக்கை “கோர்ட்டில் இந்த வை.கோ. நேருக்கு நேர் சந்திப்பான்” என்றாரே அவர்! அந்த அளவுக்கு அன்றைக்கு மேடைதோறும், மாறன் சகோதரர்களைப் பற்றிய சர்ச் சைகள் களைக்கட்ட, பத்திரிகைகளும் சுடச் சுட செய்திகளை அள்ளி வழங்கியதே!

இந்த பேச்சையொட்டி, மானநஷ்ட ஈடு வழக்கு தொடுப்பேன் என்ற மாறன் சகோதரர்களும், அதை சந்திப்பேன் என்ற வை.கோ. வும் இன்றைக்கு ஏதோ ஓர் ஒப்பந்தத்தில் கோர்ட் படியேறாது வழக்கைத் தவிர்த்திருக்கலாம்! ஆனால், அன்று பேசப்பட்ட நிஜங் களையும்/ அது குறித்த மான நஷ்டஈடு பேச்சுகளையும் மக்கள் அத்தனை சீக்கிரம் மறந்துவிட மாட்டார்கள்! இன்றைக்கு கலை ஞர் எடுக்கும் நடவடிக்கையின் படியும்கூட, எல்லாம் முன்கூட்டியே அவர் அறிந்ததாகத்தான் செய்திகள் நமக்கு கூறுகிறது.

முன்கூட்டியே தெரிந்த ஓர் நிஜத்திற்கு, மாறன் சகோதரர்கள் மீது எந்தவொரு சின்ன நடவடிக்கையும் எடுக்காமல், அழகிரியின் அரசியல் செல்வாக்கு குறித்த கருத்துக் கணிப்பையொட்டி தினகரன் அலுவலகம் கொளுத்தப்படும்வரை கலைஞர் ஏன் காத்திருந் தார்? சாதாரண கேள்வியாகத்தான் படுகிறது இது! ஆனால், அத்தனை எளிதாக கருதிவிட முடியாத வலுவான கேள்வியாக இது இன்றைக்கு மக்கள்மத்தியில் உலவுகிறது! இது குறித்து அவர்கள் சர்ச்சிக்கும் பதில்கள் ரொம்பவும் ஆழ்ந்த நோக்கு கொண்டவை. அவர்கள் போட்டு சொல்கிற கணக்கும்கூட அதிர்வலைகளை தரக்கூடியவை. இந்த கேள்விக்கான பதிலை நாம் தெரிந்து கொள் ளும் முன், மக்கள் மத்தியில் பேசப்படும் இன்னும் வேறு சில அலசல்கள் குறித்தும் அறியலாம்.

சட்லைட் டி.வி.ஒளிப்பரப்பிற்கான அனுமதியை இந்தியஅரசு வழங்கத்துவங்கியக் காலக்கட்டத்தில், வடக்கே இரண்டொரு சேனல் கள் அந்த அனுமதியைப் பெற்று ஒளிப்பரப்பத் தொடங்கியது. அப்படி ஒரு ஒளிப்பரப்பு தங்களுக்கு தேவையென்று தி.மு.க. நினைத்தபோது, திரு.மாறனின் ஆலோசனையுடன் அதற்கு முயன்றார்கள். மாறனின் மூத்த மகனும், கலைஞரின் பேரனுமான கலா நிதி மாறனை முன் நிறுத்தி, அதற்கான அனுமதி பெறப்பட்டது. ஒரு சேனல் தொடக்கம் என்பது, அன்றைக்கே அது கோடிகளின் விவகாரம். பேங்கில் டெப்பாசிட் செய்யப்பட்டிருந்த தி.மு.க.வின் நிதி ஆதாரங்களை சாட்டுதலாக வைத்து, கடன் பெற்று சன் டி.வி. உதயமானது! இந்த வரலாற்றுப் பின்னணியை வை.கோ. அன்றைக்கே மேடைகளில் பேசினார்.

அன்றைக்கு புதிதாக கட்டப்பட்ட தி.மு.க.வின் தலைமைபீடமான அறிவாலயத்தில் அந்த டி.வி. பாதுகாப்பாக அமர்த்தப்பட்டது. அதன் வளர்ச்சிக்கு மத்திய அரசின் உறுதுணை அவசியப்பட, அங்கே ஆட்சியில் அமரும் அரசுகளை…அந்த அரசு அவர்களின் கொள்கைக்கு நேர்மாறான அரசாக இருந்தாலும் அதனோடு ஒட்டி உறவாட தி.மு.க. முனைந்தது. தி.மு.க.வின் சகல ஒத்துழைப் போடு சன் டி.வி. வளர்ந்தது. பின்னர் அது, சன் டி.வி. குழுமமாகி கிளைத்ததுக் கொண்டும் இருந்தது. அது கிளைக்கத் தொடங் கிய காலக் கட்டத்தில் கட்சிக்காரர்களின் குறுக்கீடு கூடாதென்றது சன் டி.வி.யின் நிர்வாகம்! அந்த உத்தரவுக்கு கலைஞரும், கழக மும் உத்தரவாதம் கொடுத்தது. இப்படியே தொடர்ந்து, ‘கேபில் நெட் ஒர்கை’ அதற்கு அமைத்து தந்ததில் இருந்து, பின்னாளில் அந்த ‘நெட் ஒர்க்’ அரசுடமையாக ஆக்கப்பட இருந்ததை தடுத்துப் பாதுகாத்து தந்ததுவரை, கழகம் அதன் நலனில் குறியாகவே இருந்தது. முன்னூறு கோடிக்குமேல் கொடுத்து முன்னால் அமைச்சர் கே.கந்தசாமி குடும்பத்திலிருந்து தினகரனை சன் டி.வி. குழு மம் வாங்கியதிலும் கழகம் அதற்கு அதே பாதுகாப்பை தந்தது!

யதார்த்தப் பார்வையில், சன் டி.வி. அன்றைக்கு(ஆரம்பக் கலத்தில்) கழகத்தின் சொத்தாகவே கருதப்பட்டது! ஆனால்,அதன் வள ர்ச்சி தொடங்கிய காலக் கட்டத்திற்குப் பிறகான காலங்களில் அது கலாநிதி மாறனின் தனிபெரும் சொத்தாக வலியுறுத்தப்பட்டு வந்தது. அதன் பங்குதாரராக கலைஞர் எப்பொழுது சேர்ந்தார்? எந்தஅளவில் சேர்ந்தார்? என்பதெல்லாம் என்றைக்கும்,யாருக்கும் வெளிப்படாத செய்தி! ‘K- டி.வி.’ யை சன் டி.வி குழுமம் ஆரம்பித்தபோது அது கலைஞரின் டி.வி. என்றே பேசப்பட்டது. அதன் விபரமும் நாம் அறியமுடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. சமீப ஆண்டுகளில் தன்பங்காக கணிசமான கோடிகளைப் பெற்று, சன் டி.வி. குழுமத்தில் இருந்து விலகிவிட்டேன் என்றார் கலைஞர்! இதன் விபரம்கூட யாரும் கேட்க முடியாத பக்கத்தைக் கொண்டதே! இப்பொழுது, சன் டி.வி. குழுமத்தால், கலைஞருக்கோ, அவரது சொந்தக் குடும்பத்திற்கோ அல்லது கழகத்திற்கோ ஏதேனும் வரவுவரும் தொடர்புநிலை உண்டா? தெரியாது!ஆனால், மாறன் சகோதரர்கள், கலைஞரின் பேரன்தான் என்கிற நிலைப் பாட்டின்படி, சன் டி.வி. அவரது குடும்ப குழுமம் சார்ந்த அசையா சொத்து என்பதில் இரண்டு கருத்திருக்க முடியாது.

முன்கூட்டியே தெரிந்த ஓர் நிஜத்திற்கு, மாறன் சகோதரர்கள் மீது எந்தவொரு சின்ன நடவடிக்கையும் எடுக்காமல், அழகிரியின் அரசியல் செல்வாக்கு குறித்த கருத்துக் கணிப்பையொட்டி, தினகரன் அலுவலகம் கொளுத்தப்படும்வரை கலைஞர் ஏன் காத்திருந் தார்? அத்தனை எளிதாக தள்ளிவிட முடியாத வலுவானகேள்வியாக இன்று மக்கள்மத்தியில் இது உலவுகிறது! இது குறித்து அவ ர்கள் சர்சிக்கும் பதில்கள் ரொம்பவும் ஆழ்ந்த நோக்கு கொண்டவை. அவர்கள் இந்த கேள்வியை யொட்டிப் போட்டு சொல்கிற கணக்கும்கூட அதிர்வலைகளை தரக்கூடியவை! என்பதாக மேலே குறிப்பிட்டிருந்தேன். இங்கே, அந்த அதிர்வலை கணக்குகளை கவனிக்கலாம்.

ஆசிய அளவில், சன் டி.வி. குழுமம் முக்கிய ஸ்தானத்தில் இருக்கிறது. இதன் வருமானமும் பெருகிக்கொண்டே இருக்க, உலக அளவிலான பணக்காரர்களின் பட்டியலின் முக்கிய ஸ்தானத்திற்கு நகர்ந்தப்படி இருக்கிறார் காலாநிதி! நேற்றுவரை, தி.மு.க.வுக்கு பின்னால் சன் டி.வி. இருப்பதாக அறியப்பட்டபோது, அந்த டி.வி.யின் பணக்கார இமேஜ், தி.மு.க.வின் மீது படிந்தப்படியே இரு
ந்தது! தவிர, கலைஞரின் வீட்டிற்குத் தேடிக்கொண்டு, உலகப் பணக்காரர்களின் வரிசையில் முதலிடம் வகிக்கும் மைக்ரோ சாஃ ப்ட் முதலாளியான பில்கேட்ஸும், இந்திய பெரும் முதலாளிகளான டாடா குழும முதன்மை நிர்வாகி ரத்தன் டாடாவும், ரிலைய ன்ஸ் அதிபதி மறைந்த அம்பானியின் மகனும், அபரிமிதமான சொத்துக்களுக்கு சொந்தக்காரரும் ஆன்மீகவாதியுமான புட்டப் பத்தி மஹான் சாயிபாபாவும், இன்னும் காரணமே இல்லாமல் சுல்தானாஃப் ஓமனின் இளவரசர் என்று பல குபேர பெருந்தலைகள் வந்தப்படி இருக்கிறார்கள்!

ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஜனங்களிடம் ஓட்டு கேட்டு போகவேண்டிய கட்சிக்கு இந்த இமேஜ் பாதகமானது என்பதை கலை ஞர் அறிவார். அவருக்கு, எப்போதுமே எதிர்கட்சி தலைவியைவிட ஏழ்மை என்கிற அந்தஸ்த்தும் முக்கியம்! தன்னிடம் வருபவர் களுக்கு ‘ஜெயலலிதா தாராளமாக பெட்டித் தருகிறார்’ என்று கலைஞர் கூறிவந்தபோது, செல்வி ஜெயலலிதாவின் பணக்கார இமே ஜை ஜனங்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கையின் யூடே செல்வி ஜெயலலிதாவை வெறுக்கவும் செய்தார்கள். இப்படியே தனது கட்சி, எதிர் கட்சியை விட ஏழ்மைக்கொண்டது என்பதான இமேஜை ரொம்பகாலமாக கலைஞர் காப்பாற்றியும் வருகிறார்! அந்த இமேஜ் தரும் லாபம், மகத்தானது என்பதை அவர் அறிவார். செல்வி ஜெயலலிதாவிடம் இருந்து இரண்டு முறை ஆட்சியைப் பறி க்க அந்த இமேஜ் பெரியஅளவில் உதவியதை அத்தனைச் சீக்கிரம் அவர் மறந்துவிடவும் மாட்டார்! எனவே, சன் டி.வி. யாலும், மாறன் சகோதரர்களாலும் படியும் பணக்கார இமேஜை, தி.மு.க.வின் மீது ஒட்டாமல் தள்ளிவைக்க, வியூகங்களோடு கலைஞர் இப் பொழுது செயல்படத் தொடங்கி இருக்கிறார் என்பது விசயதாரிகளின் கணிப்பு.

தமிழகத்தில் தங்களுக்கென்று வலுவான ஊடகங்களை தவிர்க்க முடியாத பலம் பொருந்திய ஸ்தாபனமாக வளர்த்தெடுக்க வேண் டும் என்பது கலைஞரின் வெகுகாலக் கனவு! இந்து / தினத் தந்தி / மாலை முரசு / குமுதம் / போன்ற வளர்ந்த ஊடகங்களைப் பார்த்து அவர் மருண்ட காலம் ஒன்று இருந்தது. அன்றைக்கு அவரிடம் உதிர்த்த கனவுதான் அது! இன்றைக்கு சன் டி.வி., தினக ரன், தமிழ்முரசு, குங்குமம் போன்ற தங்களது ஊடகங்களின் பிரமாண்ட வளர்ச்சியில், அவர்தான் நினைத்த உயரத்தை தொட்டு விட்டார்! சட்லைட் டி.வி. / தினசரிகளில் காலை, மாலை / வாராந்திரியிலும் வெற்றி என்கிற வகையில் ஊடகங்கள் எல்லாவற்றி லும் அவர்கள் கூறிக் கொள்வது மாதிரி அவர்களே நம்பர் ஒன்! இந்த ஊடகங்களின் வெற்றிக்குப் பிறகு அவைகளை தள்ளி வைத்து நிலைப் படுத்துவதும், அவ்வப்போது (முக்கியமான நேரங்களில் மட்டும்) அவற்றின் ஆதரவைப் பெருகிற அளவில் அதன் உறவுகளை அமைத்துக் கொள்வதும்தான் சரியான முறை! இந்த சரியான முறையைத்தான் இப்பொழுது கலைஞர் சரி செய்துக் கொண்டிருக்கிறார்!

தி.மு.க.விற்குப் பின்னால் அவர்களது ஊடகங்கள் வரிசைக்கட்டி நின்று, தங்களது பலம் பொருந்திய நிலையையும் காட்ட, வெளி ஊடகங்களுக்கு திணரும் நிலை! அவர்கள் வெளிப்படையாக செயல்படுத்த முடியாத கழக எதிர்ப்போடும், மூச்சுத் திணரலோடும் மௌனம் காத்தார்கள். சன் டி.வி. ஏற்கனவே பத்திரிகைகளின் தனித்த லாப தண்டுவடத்தை முறித்து விட்டது! போதாதென்று ஒரு ரூபாயிக்கு அந்த குழுமம் தினசரி விற்க கிளம்பியது! பின்னே வெளிப் பத்திரிகைகள் மூச்சு திணராமல் எப்படி? இதே நிலமை இன்னும் அதிககாலம் நீடித்தால், அவர்களது ஒட்டுமொத்த எதிர்ப்பை கழகம் நேரிடையாக எதிர்கொள்ள வேண்டிவரலாம்! குறை ந்த பட்சம் தேர்தல் நேரத்தில் அவர்கள் ஒன்றுகூடி எதிர்த்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை! சன் குழும ஊடகங்களை தள்ளி வைப்பதாக நடவடிக்கை ஏதேனும் கழகம் எடுக்கும் பட்சம்தான், அவர்கள் எல்லோரும் கழகத்தை நெறுங்கிவர வாய்ப்புண்டு. கலைஞர் நாலையும் யோசிக்கக் கூடியவர்! இதற்கு வழி காண, அவர் காய் நகர்த்தாமல் இருப்பாரா யென்ன?

கலைஞரால் தீர்க்கப்பட முடியாதுப் போகிற, கர்நாடகாவோடான காவிரிப் பிரச்சனை, ஆந்திராவோடான பாலாறு, கேரளாவோ டான பெரியார் என்று எந்த பிரச்சையானாலும் அந்தப் பிரச்சனையின் வட்டத்திற்குள் சன் டி.வி. குழுமம் இடையிடையே வருகி றது. மேற்கண்ட மாநிலங்களில் சன் டி.வி. குழுமம் வேறு வேறு பெயர்களில் கொழுவீத்திருப்பதால் அந்த மாநிலங்களுக்கு எதி ராக தீவிரமான நடவடிக்கைகள் எடுக்க கலைஞரால் முடிவதில்லை. அப்படி நடவடிக்கைகள் எடுத்தரேயானால், அது அங்கத்திய சன் டி.வி. குழு மத்தின் வியாபாரத்தைப் பாதிக்கும். தவிர, அந்தந்த மாநிலத்தில் உள்ள சன் டி.வி.க்கள் அவர்களுக்கான செய்தி களைத்தான் முதன்மைப் படுத்திச்சொல்கிறது. இது குறித்து இங்கே விமர்சகர்கள் அவ்வப்போது பத்திரிகைகளில் எழுதி அவர் மண்டையைக் குடைகிறார்கள்.

இந்த காரணங்கள் பொருட்டும் சன் டி.வி. குழுமம் கழக வட்டத்திலிருந்து தள்ளி வைப்பதென்பது கட்டாயமாகிறது. சன் டி.வி. குழுமம் வேறு / கழகம்வேறு என்கிற நிலையெடுப்பதுதான் தி.மு.க.வுக்கு நல்லது. அப்பொழுதுதான் அவர்கள் நாளைய மக்களது கேள்விகளில் இருந்து தப்ப முடியும். இத்தனை நாள் அவர்கள், ‘காசு பண விவகாரத்தில் செல்வி ஜெயலலிதாவைவிட பல நூறு
மடங்கு அதிக வசதி வாய்ப்பு கொண்டவர்கள்’ என்கிற தகவல் துல்லியமாய் மக்களிடம் போய் சேராமல் தப்பியதே அதிகம்! சன் டி.வி.யை, தள்ளி வைப்பது என்பதும் சாதாரண சம்பிரதாயமாக நடந்தால், அது மக்களிடம் எடுபடாமல்போக வாய்ப்புண்டு. சண்டை சச்சரவுகளோடு அதை ஹைலைட் செய்ய வேண்டும்! அதற்காகத்தான் மதுரை/ தினகரன்/ தீவைப்பு/ மூணுபலி எல்லாம்! இப்படி கணிக்கும் விசயதாரிகளின் கணிப்புகளை அந்த நொடியில் மறுக்க வலுவான சான்றோ, கேள்விகளோ ஏதும் என்னிடம் இல்லை.

அந்த விசயஞானம் கொண்ட கணிப்பாளர்களை, அப்படி வெறுமனே விட்டுவிட முடியுமா யென்ன? அவர்களிடம் சின்னச் சின்ன வடிவிலான சில கேள்விகளை முன்வைத்தேன்.அவர்களும் அந்தப் பொட்டுகளின் மேல், பதிலாலும் எதிர் கேள்விகளாலும் சொல் கோலம் வரையத் தொடங்கினார்கள்! உன்னிப்பாய் கவனிக்கும்படி இருந்தது அது.

நிஜத்தில், தங்களது குடும்பப்பிரச்சனையை கழகப் பிரச்சனையாக மக்கள் சபையில் வைத்துத் தீர்க்க கலைஞர் முன் எப்பொழு தும் முயன்றது இல்லை! அவர்களது இந்தப் பிரச்சனையை, தங்களது குடும்ப உள்வட்டத்திற்குள் வைத்துத் தீர்த்துக்கொள்ள முடி யவில்லை என்பது வியப்பானது! நாட்டின் பிரச்சனைகளுக்கு விரல்சொடுக்கில் தீர்வுகாணும் கலைஞருக்கு இந்தப்பிரச்சனை சுண் டைக்காய் சமாச்சாரம்! அந்த உள்வட்டத்திற்குள், கலைஞருடையப் பேச்சை மீற எந்த கொம்பனுக்கும் நிச்சயம் தைரியம் இருக் காது! மீறினார்கள் என்பதெல்லாம் அம்புலி மாமா கதை! கருத்து கணிப்பை ஒட்டி, மதுரை தினகரன் தீவைப்பு சம்பவத்தை சன் டி.வி. தொடர் செய்தியாக்கியபோது ‘தி.மு.க. காலிகள்’ என்கிற வார்த்தையை திரும்பத்திரும்ப ஒளிப்பரப்பியது! இதன் பிறகும் பிற மாவட்டங்களில் உள்ள தினகரன் அலுவலகங்கள் தப்பித்தது எப்படி? தமிழ் நாடு பூராவும் சன் டி.வி. கேபிள் கனைக்சன்கள் அறுபடாமல் தப்பித்தது எப்படி? தலைநகர் சென்னையில் சன் டி.வி.க்கு தனி அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டதத் தருவாய் பார் க்க, இந்த சச்சரவுகள் மிகச் சரியாக எழுவதைக் கவனிக்க வில்லையா! உன்னிப்பாக மட்டுமல்ல, வியப்பாகவும் அவர்களை கவ
னித்தப்படி இருந்தேன். அவர்களின் சொல் கோலம் மேலும் முனைப்புடன் தொடர்ந்தது.

கலைஞர் டி.வி., ராஜ் டி.வி.யின் மேற்பார்வையில் நிர்வாகம் நடக்கும் என்கிறார் கலைஞர்! ஆனால், எல்லாப் பத்திரிகைகளும் எழுதுகின்றன ஸ்டாலினின் மகன்தான் நிர்வாகம் செய்யப்போகிறார் என்று! ‘தனது ராசியான கரத்தால்’ அந்தப் பேரன்களுக்கு சன் டி.வி. ஆரம்பித்து வைத்தது மாதிரி, இந்தப் பேரனுக்கும் அதே ராசியான கரத்தால், ஒரு கலைஞர் டி.வி.! கலைஞர் டி.வி. உதயமாகும் மாதம், தேதி, கிழமை, நாழியெல்லாம் குறித்து விட்டார்கள்! ஆனால், இதன் பங்குதாரர்கள் குறித்த தகவல் இன்னும் மூடுபொருளாகவே இருக்கிறது! தயாநிதி மாறன் மீது கழகம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடுத்தக் கட்ட செயல்பாடு களும் புரியாமல்தான் இருக்கிறது! மந்திரிப் பணியை விட்டுவிட்டு வந்த தயாநிதிமாறன், தனது அடுத்தக்கட்டப் பணியினை விரை வில் தொடங்குவார்! சன் டி.வி. குழுமத்தின் விமான சர்வீஸ் போன்ற அவர்களின் அடுத்தடுத்த வளர்ச்சியில் அவர் கவனம் கொ ள்ள வேண்டாமா என்ன! எல்லோருக்கும் பிடிப்படாத அரசியல் சதுரங்கத்தின் காய் நகர்த்தல்…. மதுரை சன் குழும வளாகத்தில் தொடங்கிய அந்த ஆட்டம், இன்றைக்கு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இரு சக்கர வாகனத்திற்கான தலைகவச கலாட்டா தான் அதன் முற்றுப் புள்ளி! இந்த பரபரப்பான கலாட்டாவில், முந்தைய பரபரப்பை மக்கள் மறப்பதும் யதார்த்தம்! கலைஞரின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது அடுத்தக் காட்சியின் தொடக்கம்! நான் கவன ஈர்ப்புக் கொண்ட, அந்த கணிப்பாளர்களின் விசேசக் கோலம், விஸ்தீரணமாக இன்னும் இன்னும் விரிந்தப்படியே இருந்தது! என்னிடம் தான் தொடர் கேள்விகள் இல்லை.

அந்த கணிப்பாளர்களோடான அடுத்த அமர்வில், எதிர் கட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா குறித்த அரசியல் சபையேறியது.
தி.மு.க.வை அவர் பூண்டோடு அழிக்கும் சபதத்தை முன்வைத்து எல்லோரும் வாய்விட்டு சிரித்தார்கள். கலைஞர் இன்றைக்கு வானவெளியில் எலக்ரானிக்ஸில் கோட்டையே கட்டுகிறார்! இவர் என்னவென்றால்,எம்.ஜி.ஆர். மக்களின் இதயத்தில் கட்டிவைத்த எஃகுவான நிஜக் கோட்டையின் சாவியை தொலைத்தவராக அல்லவா நிற்கிறார்! உத்திரப் பிரதேசத்திலேயே, ராம நாமத்தை ஜபி த்த அரசியல்வாதிகள் இன்றைக்கு கைசேதப்பட்டு நிற்கிறபோது, பதினேழு லட்சம் வருஷத்திற்கு முன்பான, ராமர்பாலம் குறித்த கவலை என்பதெல்லாம் தமிழகத்தில் அரசியல் செய்யும் இவருக்கு அதிகம்! ஒரு லட்சத்திற்கு எத்தனை சைபர் என்றால், திண றும் நம் பாமரமக்களிடம், இவர் பதினேழுலட்சம் வருஷ சங்கதிகளைப் பேசுவது வியப்பிற்குறியது! கலைஞரின் சன் டி. வி. குறி த்த நுட்பம் சார்ந்த அரசியலை விட, செல்வி ஜெயலலிதாவின் இந்த ராமர்பால அரசியல் ஏகவிசேசம்! என்ற படி, சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திணறினார்கள். கணிப்பாளர்களின் இந்த திணறலைப் பார்க்கவும் எனக்கு சந்தோசமாக இருந் தது.

*********
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்