உயர் கல்விக்கூடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு.

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

சின்னக்கருப்பன்


பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதாவது பி.சி. அல்லது ஓ.பி.சி வகுப்பினருக்கு உயர் கல்விக்கூடங்களில் இட ஒதுக்கீடு செய்யும் மசோதாவை மனித வள மேம்பாடு அமைச்சர் அர்ஜுன் சிங் அறிவித்திருக்கிறார்.

வேலைகளிலும் கல்வி நிலையங்களிலும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை பிற்பட்ட வகுப்பினருக்கு வழங்கும் இந்த மசோதாவை பிற்பட்ட வகுப்புத்தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்த மசோதாவுக்கான ஆதரவு எல்லாக் கட்சிகளிலும் உள்ள பிற்பட்ட வகுப்புத்தலைவர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

இது தேர்தல் காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது தேர்தல் ஆணையத்தின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. தேர்தல் காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சி தனக்கு சாதகமாக மக்களை ஓட்டுப்போட வைக்கும் முயற்சி என்று தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த மசோதாவின் படி மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் மட்டுமே தான் இந்த இட ஒதுக்கீட்டை செய்ய முடியும். (இதே கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு ஆகும் செலவை குறைக்க முரளி மனோஹர் ஜோஷி முயன்றது பழைய கதை. அதன் மூலம் பிற்பட்ட வகுப்பு ஏழை மாணவர்கள் சேர்வது அதிகரித்திருக்கும். அதையும் இன்று இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அதே இன்போஸிஸ் நாராயண மூர்த்தி உட்பட்ட கூட்டம் எதிர்த்தது என்பதையும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். மேலும் இந்த கல்வி நிறுவனங்களில் இருக்கும் இடங்கள் மிக மிகக் குறைவானவை. 1964க்குப் பிறகு இங்கிருக்கும் இடங்கள் இருக்கும் மக்கள்தொகைக்கேற்ப அதிகப்படுத்தப்பட்டனவா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டின் மக்கள்தொகைக்கேற்பவும், தேவைக்கேற்பவும் இங்கிருக்கும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும். கலாமும் இதையே கூறுகிறார் என நண்பர் அரவிந்தன் நீலகண்டன் கூறினார்)

ஆனால், கல்வி மத்திய மாநில அரசு இருவருமே பங்கு பெறும் துறையாக இருப்பதால், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை செய்வது மாநில அரசுகளின் கையிலேயே உள்ளது.

தமிழ்நாடு தவிர்த்த மற்ற மாநிலங்களில் 49 சதவீதம் அளவுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. குறைந்த அளவு 27 சதவீதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி நிறுவனங்களிலும் அரசாங்க வேலைகளிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. (அருணாசல பிரதேசம் போன்ற ஒரு சில மாநிலங்களில் அனைத்து மக்களுமே பழங்குடியினராக கருதப்படும் நிலையில் இந்த 27 சதவீத ஒதுக்கீடு இல்லை)

நான் இந்த இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன்.

ராணுவம் போன்ற ஒரு சில இடங்களைத் தவிர அனைத்து மத்திய மாநில வேலைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், அதற்கான முயற்சிகளும் வரவேற்கத்தக்கவை.

இந்த இட ஒதுக்கீடு அம்பேத்கார் கோரியபோது 25 வருடங்களுக்கு மட்டுமே என்று கேட்டாலும், 25 வருடத்துக்குள் அவர் எதிர்பார்த்த சமத்துவம் வராத நிலையில், இந்த இட ஒதுக்கீட்டை நீடிப்பது தேவையான ஒன்று.

சமத்துவம் என்பதை எல்லோரும் எல்லா விதங்களிலும் சரி சமம் என்ற அடிப்படையில் எழுதவில்லை. அப்படிப்பட்ட சமத்துவம் என்று புரிந்துகொள்வது நடைமுறைக்கு ஒவ்வாததும், விதண்டாவாதத்துக்கு வழி வகுப்பதுமாகும்.

இங்கே சமத்துவம் என்று நான் குறிப்பிடுவது, வாய்ப்புகள் மட்டுமே. இன்று ஒரு கிராமத்தில் உள்ளவருக்கும், நகரத்தில் உள்ளவருக்கும் இடையேயான கல்வி வாய்ப்புகள், ஒரே ஊரில் இருந்தாலும் ஒரு மேல்ஜாதியில் உள்ளவருக்கும் தாழ்த்தப்பட்ட ஜாதியில் உள்ளவருக்குமான கல்வி வாய்ப்புகள் ஆகியவற்றை ஒப்பிடும்போது, அவை மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி உடையவையாக இருப்பதை நாம் பார்க்கிறோம்.

இன்று இட ஒதுக்கீட்டை நான் ஆதரிக்கிறேன் என்று சொன்னாலும், அப்படிப்பட்ட சமமான வாய்ப்புகளுக்கான சமத்துவம் என்ற குறிக்கோளை நாம் மறந்துவிடக்கூடாது என்று கருதுகிறேன்.

இன்று இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற குரல் அந்த குறிக்கோளை மறந்துவிடும்போது ஒரு சாதியின் குரலாக இழிந்துவிட வாய்ப்பு இருக்கிறது. சொல்லப்போனால், அப்படித்தான் இன்று இழிந்துவிட்டது.

இட ஒதுக்கீடு இல்லாத நிலை, இட ஒதுக்கீடு தேவையில்லாத நிலை தான் நாம் விரும்பும் சமூகம். ஆனால், அதனை நோக்கி செல்லும் வழி இட ஒதுக்கீடு கொண்டதாகத்தான் இருக்க முடியும். ஆனால், இட ஒதுக்கீடே ஒரு முடிவான நிலை அல்ல.

ஒவ்வொரு முறை இட ஒதுக்கீடு கோரிக்கை வைக்கப்படும்போதும், அதன் அடிப்படையில் சமூக குழுமங்களும், அரசியல் கட்சிகளும் அமைக்கப்படும்போதும், விவாதம் ஜாதிப்பெருமையாகவும், ஜாதிகளுக்குள் பகைமையாகவும் இழிவதை பார்க்கிறேன். ஆனால், அதன் காரணமாக இட ஒதுக்கீட்டை வெறுத்தொதுக்கும் நிலைக்கு சிலர் தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கிறேன். இட ஒதுக்கீடு அனைத்து மக்களின் எதிர்கால நல வாழ்வு என்ற குறிக்கோளின்றி, வெறும் அரசியல் கோஷமாகவும், ஒரு சிலர் அரசியல் பதவிகளை பிடிக்கவும் ஏதுவான ஏணியாகவும் உபயோகப்பட்டாலும், இட ஒதுக்கீடு என்பதில் உள்ள அடிப்படை நியாயங்கள் என்னை அதன் ஆதரவாக பேச வைக்கின்றன.

முதலாவது 90 மதிப்பெண்ணுக்கும் 85 மதிப்பெண்ணுக்கும் பெரிய அடிப்படை வித்தியாசம் கிடையாது என்று கருதுகிறேன்.

இரண்டாவது ஜாதி அடிப்படையில்தான் திறமை இருக்கிறது என்பதையும் மறுக்கிறேன்.

மூன்றாவது, சமூகப்பார்வையில் பொதுவாக, கல்வித்தரம் என்பது சொல்லிக்கொடுப்பவரைப் பொறுத்துதான் இருக்கிறதே தவிர கல்வி கற்பவரைப் பொறுத்து அல்ல.

நான்காவது வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால், சூழ்நிலை கொடுக்கப்பட்டால், நேரம் கொடுக்கப்பட்டால் எல்லோராலும் எல்லா வேலைகளையும் செய்ய முடியும் என்று கருதுகிறேன்.

ஐந்தாவது என்னதான் ஒரே குடும்பத்தில் ஏறத்தாழ ஒரே மரபணுகூட்டத்தோடு பிறந்திருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட ஆர்வம் இருக்கிறது என்று கருதுகிறேன்.

ஆறாவது, அந்த தனிப்பட்ட ஆர்வமே ஒருவர் அந்த துறையை எடுத்து பிரகாசிக்க காரணம் என்றும் நம்புகிறேன். இந்த தனிப்பட்ட ஆர்வத்தையே இந்துமரபு ஸ்வதர்மம் என்று அழைக்கிறது என்று கருதுகிறேன்.

ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்தமான துறைகளை தேர்ந்தெடுத்து அந்தத் துறைகளில் பரிணமிக்க உதவாத சமூக அமைப்பு இந்து மரபுக்கு எதிரானது என்றே கருதுகிறேன்.

ஒவ்வொருவரும் தங்கள் தங்களது ஸ்வதர்மத்தை எடுத்துக்கொள்ள தடையாக இருக்கும் இன்றைய ஒரு சமச்சீரற்ற அமைப்பு நிச்சயம் மனிதவள மேம்பாட்டுக்கு எதிரானது என்றும், அப்படிப்பட்ட வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கும் ஒரு சமூகச்சூழலை நோக்கி நம்மை நகர்த்த வேண்டும் என்றும் கருதுகிறேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்ற குறளின் படி, தங்கள் தங்கள் செய்தொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை இன்று இருந்தாலும் அப்படிப்பட்ட உரிமையை நடைமுறையில் செயல்படுத்துவது இன்று பல்வேறு சமூக பொருளாதார காரணங்களால் தடைப்பட்டுக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சமூக பொருளாதார காரணிகளை தொடர்ந்து அடையாளம் காண்பதுவும், அத்தகைய தடைகளை நீக்கும் முயற்சியும் குறிக்கோளை மனதில் கொண்டு இயங்கும் வழிமுறையும் தொடர்ந்து நம்மிடம் இருக்க வேண்டும்.

கடந்த காலத்து இந்தியாவின் ஜாதி அமைப்பு முறை அந்த காலத்துக்கு ஏற்றதாக இருந்திருக்கலாம். அன்றைய நிலம் சார்ந்த, கைத்தொழில் சார்ந்த அமைப்புக்கு உகந்ததாக இருந்திருக்கலாம். அத்துடன் கூடவே வந்த உப விளைவுகளான சாதிப்பாகுபாடு, ஏற்றத்தாழ்வு, தீண்டாமை போன்றவைகளுக்கு எதிரான ஒரு உணர்வை இந்து துறவிகள் தேர்ந்தெடுத்து போரிட்டு வந்திருக்கிறார்கள். பஸவன்னர், அக்கம்மா, நாராயண குரு, ராமானுஜர், விவேகானந்தர், அரவிந்தர் ஆகியோரும் சமீப காலத்திலேயே இந்த போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று பல நல்விளைவுகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆனால், இன்று சாதி அமைப்பு முறையை ஒரு பட்டப்பெயர் அளவுக்கு சுருக்கும் நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். அந்த நிலையை முழுவதும் அடைவதற்கு தடைக்கல்லாக இருக்கும் சாதிய, சமூக, பொருளாதார தடைக்கற்களை அடையாளம் காண்பதும், அந்த தடைக்கற்களை நீக்குவதும் நமது வேலைப்பாடாகவே இருக்கும்.

இட ஒதுக்கீடு இல்லாமல், கல்விக்கூடத்தில் சேர்வதற்கு முன்னர் பயிற்சிப் பள்ளிகள் மூலம் தரத்தை மேம்படுத்துவோம் போன்றவை வெட்டி வாசகங்கள். அப்படிப்பட்ட ஒரு வேலைப்பாடு இதுவரை பயனளித்ததாக ஒரு புள்ளிவிவரம் இல்லை. ஆனால், எனக்கு அனுபவத்திலேயே, குறைவாக மதிப்பெண்கள் வாங்கி கல்லூரிக்குள் புகுந்தவர்கள் தலைமை மாணாக்கர்களாக கல்லூரியில் படித்து பட்டம் பெற்றதை பார்த்திருக்கிறேன்.

இன்னமும் கல்லூரியிலும், உயர் பள்ளிக்கூடங்களிலும் உள்ள பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் உள்ளே இருக்கும் ஜாதி உணர்வு முழுவதும் போய் விடவில்லை. ஒரே வகுப்பில் படிக்கும் இரு வேறுஜாதி மாணவர்களிடமும் வேறு மத மாணவர்களிடமும் வித்தியாசம் பாராட்டும் பேராசிரியர்களை பார்த்தே வந்திருக்கிறேன். கிரிஸ்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவ நண்பர்கள் எவ்வாறு கிரிஸ்துவ மாணவர்களிடம் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதை என்னிடம் பல மணி நேரம் பேசியிருக்கிறார்கள். பிராம்மணர்களால் நடத்தப்படும் பள்ளியில் படித்த எனக்கு அவர்களது பாரபட்சமும் தெரிந்ததே. இன்று கல்வி ஒரு திருகப்பட்ட நிலையை அடைந்துள்ளது. கிரிஸ்துவ கல்லூரிகளுக்கு, முஸ்லீம் கல்லூரிகளுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் மற்ற தனியார் கல்லூரிகளுக்குக் கொடுக்கபடுவதில்லை. அரசாங்க கல்லூரிகளும் பள்ளிகளும் அநாதரவாக விடப்பட்டுள்ளன. கிராமப்புற பள்ளிகளில் சரியான வசதிகள் கிடையாது. நகர்ப்புற பள்ளிகளிலேயே ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு விதத்தில். பணக்காரர்களுக்கான பள்ளிகள், ஏழைகளுக்கான பள்ளிகள் என்று பிரிந்து கிடக்கிறது. (இருப்பினும் மிகுந்த படிப்பார்வமுள்ள மாணவர்களை இவைகள் எந்த விதத்திலும் பாதிப்பதில்லை என்பதையும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்)

சமமான கல்வித்தரத்தை கொண்டுவருவதற்கான திட்டங்களைப் பற்றி யோசிக்க வேண்டும்.

1) எல்லா மாணாக்கர்களும் அந்த பகுதியின் அரசாங்க பள்ளிகளிலேயே படிக்க வேண்டும்.

2) எல்லா மாணாக்கர்களும் சீருடை அணிந்தே பள்ளிக்கு வரவேண்டும்

3) எல்லா மாணாக்கர்களுக்கான சீருடையும், புத்தகங்களும் அரசாங்கமே அளிக்கும்.

4) ஒவ்வொரு மாநிலமும் ஐ.ஐ.எம், ஐ.ஐ.டிக்கு இணையாக சில கல்லூரி, பல்கலைக்கழகங்களை அடையாளப்படுத்தி அவைகளுக்கு ஐ.ஐ.எம். ஐ.ஐ.டிகளுக்கு இணையாக நிதி உதவி செய்து அவைகளை மேற்கண்ட கல்வி நிறுவனங்களுக்கு இணையான தரமுள்ளவைகளாக மாற்ற வேண்டும்.

5) மத்திய அரசு தனது நவோதயா பள்ளிகள் அமைப்பு மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து மக்களும் இணைந்து படிக்கும் வண்ணம் உயர்தர பள்ளிக்கூடங்களை நடத்தி முன்மாதிரி பள்ளிகளாக விளங்கவேண்டும்.

இது போன்ற கருத்துக்களை முன் வைப்பதும், அதில் உள்ள பிரச்னைகளை பேசுவதுமே நம் முன்னுள்ள கேள்விகள் என்று கருதுகிறேன்.

***

அடுத்தது கிரீமி லேயர் என்று கூறப்படும் ஏற்கெனவே இட ஒதுக்கீட்டால் பயன் பெற்றவர்கள் பிரச்னை.

ஏற்கெனவே இட ஒதுக்கீட்டால் பயன்பெற்றவர்களின் சந்ததியினர் இட ஒதுக்கீடு கொடுக்கப்படக் கூடாது. ஆனால் அரசியல் கட்சியினர் இதனை ஆதரிக்க மாட்டார்கள். ஏனெனில், இட ஒதுக்கீட்டால் பயன்பெற்றவர்களே இப்படிப்பட்ட இட ஒதுக்கீடு கோரும் சாதி அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும், அந்த ஜாதி அரசியல் கட்சிகள் நடத்த பணம் தருபவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் ஏற்கெனவே இட ஒதுக்கீட்டால் பயன் பெற்றவர்கள் சந்ததியினர் மீண்டும் இட ஒதுக்கீடு பெறக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுப்பார்கள் நம்புவது அல்லது எடுக்க வேண்டும் என்று கோருவது அறிவீனம்.

இட ஒதுக்கீட்டால் பயன் பெற்றவர்களின் சந்ததியினர் இட ஒதுக்கீடு பெறக்கூடாது என்று கோருவதுதான் நியாயமானதாக இருக்க முடியும். அப்படிப்பட்ட சூழ்நிலையிலேயே கிராமப்புற மாணவர்களும் இடஒதுக்கீட்டால் பயன்பெறாத குடும்பத்தினரும் இட ஒதுக்கீட்டால் பயன் பெற முடியும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் ஒரு சூழ்நிலையை சமூக அமைப்பை நோக்கிச் செல்ல முடியும். இல்லையெனில், இட ஒதுக்கீடு என்று கிராமப்புற மக்களைக் காட்டி நியாயக்குரல் எழுப்புபவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தொடர்ந்து அந்த இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ளும் இன்றைய அவல நிலையையே தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருக்க வேண்டும். இதன் மூலம் ஒரே ஜாதிக்குள்ளாகவே, இட ஒதுக்கீட்டால் பயன் பெற்று வளமை அடைந்த ஒரு பகுதியையும் இட ஒதுக்கீடு என்றால் என்னவென்றே அறியாத இன்னொரு பகுதியையும் நீடித்து வாழ வழி செய்கிறோம். இது இட ஒதுக்கீடு கிடைக்கவே கிடைக்காத ஒரு பகுதி தொடர்ந்து நீடித்திருப்பதற்கான சமூக அடிப்படையை உருவாக்குகிறது. இதன் மூலம் தொடர்ந்து இட ஒதுக்கீடு இருந்தே ஆகவேண்டிய சமூகக் கட்டாயமும் தொடர்ந்து நீடிக்கிறது.

***

இட ஒதுக்கீட்டால் பயன்பெற்றவர்களின் சந்ததியினர் இட ஒதுக்கீடு பெறக்கூடாது என்ற கோரிக்கை நிறைவேறும் என்று எனக்கு நம்பிக்கை இல்லையாதலால், தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

தற்போதைய 18 சதவீத இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பழங்குடியினருக்கும் போதுமானதாக இல்லை. அதில் பெரும்பாலானவற்றை ஏற்கெனவே இட ஒதுக்கீடு பெறுபவர்களே பெறுவதால், ஏற்கெனவே இட ஒதுக்கீடு பெறாதவர்களுக்கு என தனியாக இன்னொரு 18 சதவீதத்தை இட ஒதுக்கீடு செய்யலாம். அதில் ஏற்கெனவே தங்கள் பெற்றோர், பெற்றோரின் பெற்றோர் இட ஒதுக்கீடு பெறவில்லை என்று ஆதாரத்துடன் நிரூபிக்கக்கூடியவர்கள் மட்டுமே பெற முடியும் என்று கொண்டுவரலாம்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அதுபோல ஒரு கோரிக்கையை என்னால் வைக்க இயலாது. வளமையிலும் சமூக அந்தஸ்திலும் தாழ்த்தப்பட்டவர்களையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் ஒரே நிறையில் வைப்பது வெறும் அரசியலாகத்தான் இருக்க முடியும்.

***

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்