தவ்ஹீது பிராமணீயம்

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


இந்தியாவில் பிராமணீயம் ஒரு சாராரின் நலனை வற்புறுத்தி மற்றவர்களை இழிந்தவனாக்கும் முயற்சியை காலம் காலமாக செய்துக் கொண்டிருக்கிறது. இதனால் ஜாதிய தன்மையுடைய ஜாதிகளும் உருவாக பெண்கள் இழிவானவர்களாகவும், சூத்திரர்களும், அடிமைகளும், தீண்டதாகதவர்களும் இன்றளவும் இருந்து கொண்டு தானிருக்கிறார்கள் என்பது கண்கூடாகும். எல்லாவிதத்திலும் பிராமணனே உயர்ந்தவன் என்கிற வருணாஷ்ரம தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு பிராமணீயம் இயங்குகிறது. இதனால் இந்து பன்மை சமூகத்துக்குள் இருக்கின்ற வித்யாசங்கள் அடுக்குமுறை படித்தரதன்மையை கொண்டிருக்கிறது. குலத்துக்கொரு நீதி போற்றும் வருணதர்மம் பெண்களை அடிமைகளாக நடத்துகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. அதுபோல் மிக பெரும் மதமான இஸ்லாம் மதத்துக்குள் தவ்ஹீது எனும் சொல் பெருமை பேசுவோர்கள் ஒரு வித பிராமணீய மனோபாவத்துடன் செயல்படுகிறார்கள். இதனால் வெகுஜன, பிரேதேச, நாட்டார், இன்னபிற சிறுபான்மை முஸ்லிம்கள் ஒரு வித ஒடுக்குதல்களுக்கு அல்லது ஒதுக்குதல்களுக்கு ஆளாகின்றனர். இஸ்லாம் மதத்தை மார்க்கமாக , வாழ்க்கை நெறியாக கொண்டு ஏகத்துவம் எனும் தவ்ஹீது நிலையை பேசும் போதும், குர்ஆன், ஹதீதுகளின் அடிப்படையில் வாழ்க்கை முறைமைகளை அமைத்து செயல்படுகின்ற போதும் ஒற்றை அர்த்த, அதிகார மனோபாவம் கொண்டிருக்கும் தவ்ஹீது வாதிகள் மற்ற முஸ்லிம்களை தீண்டதகாதவர்களாக வெறுக்கும் குணம் மேலோங்கி வருவதை காணலாம்.

வெகுஜன முஸ்லிம்கள் அதாவது அன்றாடம் காய்ச்சிகள், ஏழைகள், உழைக்கும் பாமர, படிப்பறிவில்லாத இன்னபிற வாழ்நிலையில் வாழும் அடித்தள முஸ்லிம்களை பிராமாண மனோபாவத்துடன் அணுகும் முறை தவ்ஹீத் பிராமணீயத்தின் முக்கிய குணமாயிருக்கிறது. தங்களை வாகபிகள் என்றழைத்து கொள்ளும் இவர்கள் கிட்டதட்ட “ஆஷடான அனுஷ்டானங்களை, ஆச்சாரங்களை கடைபிடிப்பவர்களாக” அதாவது இஸ்லாமிய வாழ்க்கை நெறியை சுருங்கிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் பிரிவினராக செயல்படுவதை பார்க்கும் போது அசல் பிராமணர்களையே மிஞ்சி விடுவதை காண முடிகிறது. தாங்கள் தான் உண்மையான இஸ்லாமியர்கள் என்பது போன்ற பிம்பத்தை கட்டமைப்பு செய்கின்ற முறை பிராமணீய தன்மை கொண்டது என்பதை நன்கறியலாம். ஷிர்க் (இணை வைத்தல்), நேர்ச்சை, ஜோதிடம், கண்ணேறு, பில்லி, சூன்யம் (ஸிஹர்) பேய், பிசாசு, ஜின்கள், பித்அத், வஸீலா, முஹஜாஸாத் (அற்புதங்கள்) கராமத் (ஜhலம்) ஷ்பா அத் (பாpந்துரை), மறைவான ஞானம், சொர்க்கம் – நரகம்,கனவுகள் போன்ற விஷயங்களுக்கு இவர்கள் தரும் விளக்கங்கள் யாவும் ஒரு வித அதிகார குவிப்பை, பிராமணீயத்தை கட்டமைப்பதை ஜாதிய தீண்டாமையை உருவாக்குவதை அடிப்படையாக கொண்டிருப்பதை போல் இருந்து கொண்டு அவ்வாறே இயங்குகிறார்கள். சாதாரண மக்களின் இஸ்லாத்துக்கும், இவர்கள் சொல்லுகின்ற ஆச்சாரங்களுக்கும் நிறைய வித்யாசம் இருப்பதால் சடங்குகளை பிராதானபடுத்தும் பிராமணீயத் தன்மை உடையதாகவே தவ்ஹீது நடைமுறையில் காணப்படுகிறது. எனவே தவ்ஹீது பிராமணீயம் தொடர்ந்து மேற் கட்டுமான, உட்கட்டுமான சடங்காச்சாரங்களால் படித்தரத்தை முன்னிறுத்தி நகர்வதால் இஸ்லாமிய திரிபுவாதம் ஜாதிய மனோபாங்கை உட்வாங்கி செயல்படுகிறது எனலாம். மேலும் இந்திய வாழ் வெகு ஜன முஸ்லிம்கள் நாட்டுபுற நம்பிக்கைகளுடன் வாழ்க்கையை அமைத்து இசுலாமிய வாழ்வை வாழ்வதை நாட்டுபுறம் , நகர்புறம் என்ற இருமை எதிர்வில் பிராமணீயம் செயல்படும் அதே நிலையில் தவ்ஹீது பிராமணீயம் செயலாற்றுகிறது.

சாதாரணமாக தவ்ஹீது பிராமணீயத்தின் குரல் என்பது “படைத்த இறைவனை நம்பிவிட்டு திருதூதரை நம்பி விட்டேன், அதனால் நான் ஒரு முஸ்லீம், நான் சொக்கத்தக்குரியவன்” என்று சொல்கிற அடித்தள முஸ்லிம் நம்பிக்கையை ஏளனம் செய்கிறது. ஒரு மனிதன் தான் தூங்கி எழும்பியதிலிருந்து மறுபடியும் தூங்க செல்லும் வரை இஸ்லாம் எந்த நெறியை காட்டித் தந்துள்ளதோ அதனை சமூக, பொருளாதார, குடும்ப, தனிமனித நடவடிக்கைகளில் பிசகாமல் வாழ்பவனே முஸ்லிம் என்று தங்களை அங்கீகரித்து கொள்கிறார்கள், மற்றவரை பற்றிய வேறுபாடான கண்ணோட்டத்தை கொண்டு இஸ்லாத்தை ஒரு கொள்கையாக கட்டமைக்கின்ற தந்திரோபாயத்தை தொடர்ந்து தவ் ?ீது பிராமணீயம் செய்கிறது. அப்படியெனில் தான் ‘ஏஜமானர்கள்’ மனோநிலையில் இருக்க முடியும் என்கிற இந்திய பிராமணர்களின் நடைமுறையிலான கொள்கை பற்றிய தீர்மானத்துக்கு ஒத்திசைத்து நடக்கிறார்கள். குலத்துக்கு ஒரு நீதி என்பதே பிராமணீய கொள்கை. இந்த கொள்கையை நடைமுறையில் வாழ்ந்து காட்டவும், செயல்படுத்தவும் செய்கிறவர்கள் தான் கொள்கை பிராமணர்கள். இந்த மனோநிலையில் தான் இஸ்லாத்தை கொள்கையாக அறிவித்து தவ்ஹீது பிராமணீயம் செயல்பட்டு வருகிறது. கொள்கையுடையவன் சிறந்தவன், கொள்கையற்றவன் மோசமானவன் என்ற இருமை எதிர்வின் அதிகார வடிவமே தவ்ஹீது பிராமணீயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தின் கொள்கைகளை விளங்கி அதற்கு மாறு விளைவிக்காமல் இஸ்லாம் விதிக்கும் சட்டங்களை மீறாமல் யார் செயல்படுகிறார்களோ அவர்கள் தான் உயர்ந்த முஸ்லிம்கள் என்றும் அதற்கு மாறாக இஸ்லாம் எது என்றே தெரியாமல் ஒரு மனிதன் முஸ்லிமாக வாழ்ந்தால் இவர்கள் தான் தீண்டதாகதவர்கள் என்கிறது தவ்ஹீது பிராமணீயம் பிராமணர்கள் பொதுவாகவே உச்சி குடுமி வைத்து, பூணூல் போட்டு கொண்டு வேத மந்திரங்களை பாராயணம் செய்து கொண்டு வாழ்பவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் அது போலவே உடலளவில் நீண்ட தாடியும், சிறுக கத்தாரித்த மீசையும், முழுங்காலுக்கு மேலே உடைகளை அணிவதையும் அடையாளபடுத்தி, இதுவே உன்னத அடையாளம் என்று தவ்ஹீது பிராமணீயம் கட்டமைப்பு செய்யப்படுகிறது. கருவறையில் மற்றவரை நுழைய தடுக்கும் பிராமணீயம் இஸ்லாத்தில் தொழுகையில் விரல் அசைப்பதை கொண்டு உயர்ந்தவர் யார் ? தாழ்ந்தவர் யார் ? என்கிற அடையாள அரசியலை நடத்துகிறது. தொழுகையில் நெஞ்சில் கை வைத்து தக்பீர் கட்டுவதும் அத்தஹியாத்தில் விரலசைப்பதும் செய்வது நபி வழி என்று தன்னை உயர்த்தவகளாக பாவித்து மற்றவர்களின் நடைமுறை செய்கைகள் அடங்கிய ஷாபி, ஹனபி, ஹம்பிலி, மாலிகி மதுகப் சட்டங்களை அவமாரியாதை செய்வது என்பதும், பிரிவுகளில் உயர்ந்தவர் நபி வழியினரே என்பது ஜாதிய தன்மை கொண்ட தவ்ஹீது பிராமணியம் முன்னிறுத்தும் மற்றொரு முகமாகும். தங்களை மாத்திரமே முஸ்லீம்கள் என்றழைத்து கொள்ளும் இவர்கள் மற்ற முஸ்லிம்களை பெயர் தாங்கிகள் என்று இழிவு படுத்துகிறார்கள. இழிவு செய்தல் என்பது பிராமணீய தன்மை உடையதாகும். இதை தான் தவ்ஹீது பிராமணீயம் செய்கிறது.

திருகுர்ஆன் மற்றும் ஹதீதுகளை தங்களிஷ்டத்துக்கு திரித்தும் உருமாற்றியும் அர்த்த வியாக்கியானங்கள் அமைத்தும் கடந்த நூற்றாண்டுகளாக செய்து கொண்டிருக்கிறார்கள் மக்கத்து அல்லது அரபு முஷ்ரிக்களின், யூதர்களில், கிறிஸ்தவர்களில், நெருப்பு வணங்கிகளின் கடவுள் கொள்கை, வழிபாட்டு பழக்க வழங்கங்களை கேள்விக்குட்படுத்திக் கொண்டு இறங்கிய இறை வசனங்களையும் நெறிகளையும் இன்றைய காலங்களுக்கு பொருத்தி ஷிர்க்யை உருவாக்குபவர்களாக வெகுஜன முஸ்லிம்கள் இருப்பதை கண்டிக்க செய்யும் பத்தாம் பசலித்தனமான அறிவு வாதத்தை,தர்க்கத்தை கட்டமைப்பு செய்வது என்பது பிராமணீய தன்மை என்று விளக்கி கொள்ளலாம். திருக்குர்ஆன், ஹதீதுகளை ஆதாரமாக காட்டுகிறோம் எனும் பெயரில் இஸ்லாமிய தூய்மைவாதம் எனும் பிராமணீய சிந்தனையை உட்வாங்கி இடை செருகல்களான ஹதீதுகளை கவித்துவம் வாய்ந்த மொழிநடையை ஒற்றை அர்த்தமுடன் விளக்கம் செய்து இஸ்லாமிய தத்துவத்தை, வளர்ச்சியை மழுங்கடிக்க செய்கிற முயற்சி குயுக்தீ வாதமாக உருமாறிபோனது. ஆதாரம், சாட்சி, மெய்பித்தல், வாதங்கள் போன்றவை சட்டங்களுக்கு பயன் மிக்கவையாக கருதபடும் ஏதேச்சாதிகார வடிவை கையிலடுத்து கொள்வதினால் போலித்தனம் மறக்கடிக்கபடுகிறது. ஒரு அப்பாவி முஸ்லிமை சந்தர்ப்ப சாட்சிகள், ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் பயங்கர வாதி என்று முத்திரை குத்தி போலீஸ் காவலில் வைப்பது என்பது இந்த தடயங்களின் பாசிச வன்முறையின் முக்கிய செயல் பாடாகும் இந்த போலித்தனமான ஆதார விஷயத்தை கையிலெடுத்து கொண்டு இஸ்லாம் பற்றி பேசுவது என்பது பாசிசத்தை நியாயபடுத்துவது என்பதை புரிய வேண்டும். மேலும் திருகுர்ஆன் வசனங்களின் பன்மை தன்மைகள் தான் இஸ்லாத்தில் எவ்வளவு பிரிவினைகள் இருக்கிறதோ அவ்வளவு பிரிவினைக்கும் ஆதாரமாகிறது. மேலும் பல பிரிவினரின் ஹதீதுகளை தவ்ஹீதுவாதிகள் ஏற்றுக் கொள்வதும் இல்லை வாதத்தில் மிகைத்து விட்டால் தாங்களே சிறந்தவர்கள், அறிவாளிகள் என்று பிரகடனபடுத்துவது கூட பிராமணீய தன்மையின் வெளிபாடே. எப்படியெனில் பிராமணீயம் சமண, பெளத்த துறவிகளை வாதத்தில் வென்று கழுவேற்றி கொன்றிருப்பதை சரித்திரம் விட்டு வைக்கவில்லை. அது மட்டுமல்லாது வாதத்தில் மிகைத்தவனே அறிவாளி இதுவே உண்மை எனில் நல்ல ஒரு திறமையான வக்கீலை வைத்து வாதத்தில் வெல்லுவது சாத்தியமான விஷயமே. மட்டுமல்லாது வாதம் வெற்றி பெற்ற போதும் உண்மை மறைக்கப்பட்டால் வாதத்தில் பிரயோசனமில்லை என்பது கூட புரியாமல் இருக்கிறதோ ? எனவே தவ்ஹீதின் தன்மையானது ஆதார வாதங்களை பேசுவதினால் மிகவும் பலவீனமானது என்றே சொல்ல முடியும், இதன் மூலம் அப்பாவி மக்களை ஏமாற்றுவத என்பது தான் பிராமணீய முறையாகும்.

திருகுர்ஆன் வசனங்கள், ஹதீதுகள் ஆகியவற்றின் காலத்தேவை, சந்தர்ப்பங்கள், சூழல் யாரை நோக்கியது ? என்பன போன்ற விஷயங்கனை கணக்கிலெடுக்காமல் அவற்றை வைத்து விவாதம் செய்வது பொருத்தமானதல்ல. மேலும் ஹதீதுகள் அதிகப்படியான புனைந்துரைகளை கற்பிதம் செய்கிறது. நம்பகமான, வரலாற்று செய்திகளை கூட மாறுபட்ட புனைவாக சொல்லுவதினால் அதன் நம்பகத் தன்மை சந்தேகத்துக்குரியதே. ஷகீனான ஹதீதும் கூட முரண்பாடுகளாக,தெளிவற்றதாக இருக்கிறது. இதனை முதன்மைபடுத்தி பேசுவது கூட பிராமணிய தன்மையினாலாகும். ஏனெனில் உண்மையை மறைத்து ஏமாற்றுவது, பொய் பேசுவது என்பது பிராமணீயத்தின் ஒரு குணமாகும். வரலாற்று புத்தகங்களில் சில திரிபுகளை செய்து வைத்துக் கொண்டு பிராமணர்கள் ஒளரகசீப் கொடுகோலன். இந்துக்களை கொடுமை படுத்தியவன் என்ற பொய்யை உண்மையை மறைத்து ஏமாற்றுவது பிராமணீயத்தின தன்மை என புரிய முடிகிறது. எனவே தெளகீது பிராமணீயத்தின் ஏமாற்றும் குணம் இப்படித்தனிருக்கும் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. மேலும் சமஸ்கிருத மயமாக்கல் என்பது பிராமணியத்தின் மிக முக்கிய கூறாகும். இதை தெளிவாக பிராமணீயம் அரபிமயமாக்கல் எனும் பெயரால் தூய்மை வாதத்தை பேசுகிறது. அதாவது பித்அத் எனும் புதியவைகள் இஸ்லாமிய மார்க்கத்தில் பாத்திஹா, கத்தம், மவ்லூத், தாயத்து, தட்டு, தரிக்கா போன்ற விஷயங்களை நபிகள் நாயகம் அனுமதியளிக்கவில்லை. இவைகளை களைய வேண்டும் என்ற முழக்கத்துடன் கபுறு ஜியாரத்து செய்வதை கேலி செய்தும், இறை நேசர்களை அவமாரியாதை செய்தும், தர்ஹா மரபு தேவையில்லை என்றும் இவையாவும் அனாச்சாரங்கள் என்றும் வாதங்களை முன்னிறுத்துகிறார்கள். பித்அத் என்று சொல்லப்படுகின்ற எல்லா விஷயங்களிலும் நாட்டார் மரபு பண்பாட்டு கூறுகள் அதிகமிருக்கின்றன. வெகுஜனமக்களின் தார்மீக மரபுகளை உடைதெறிவது என்பது பிராமணீயத்தின் குரலாக இருக்கின்ற காரணத்தினால், தவ்ஹீத் சொல்லும் பித்அத் ஏதேச்சாதிகாரமானது என்பதில் ஐயமில்லை. குர்ஆன், ஹதீது நூல்களில் மார்க்கத்தில் இல்லாத எதுவுமே பித்அத் எனில் பெண்கள் சிறுநீர் கழிப்பது எப்படி ? என்ற விஷயத்தை மார்க்கத்தில் காண முடியாது என்பதற்காக அதுவே பித்அத் எனில் பெண்கள் சிறுநீர் கழிக்க கூடாதா ? எனும் போது பித்அத்களின தன்மை விளங்கி விடுகிறது. எனவே வைதீகத்தை கட்டமைப்பு செய்கிற தவ்ஹீது பிராமணியம் தூய்மை,தீட்டு, உயர்வு தாழ்வு என்ற கொள்கைகளை மையமாக கொண்டு தான் இயங்குகிறது. பரந்துபட்ட இஸ்லாமிய குழுச் சமூகத்தின் தனித்தனியாக பண்பாட்டு கருத்தமைபுகளையும் அதனதன் பண்பாட்டு சூழல்களை வைத்து அதனதன் உலக வழக்கங்களை வைத்து கண்ணோட்டங்களையும், உள் இயங்குதளங்களையும் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியதேவை எழுந்துள்ளது. தவ்ஹீது பிராமணீயம்; இஸ்லாமிய சமூக அமைப்பில் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் மட்டுமல்லாது சடங்கியல் தளத்தில் தூய்மை, தீட்டு என்ற முரணை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. மேலும் வெகு ஜனமக்களின் நம்பிக்கைகளை இழிவு செய்வது அதிகாரத்தின் மேலாதிக்கமான பாசிச செயல்பாடு ஆகும். சாதாரண இஸ்லாமியர்களை புறகணிப்பதன் மூலம் ஆதிக்க வேறுபடுத்தலையும், வகைபடுத்தல் மூலமான வேறுபடுத்தலையும் செய்கிறது. இவ்விதமான பிராமணீய கூறுகள் தவ்கீதுவாதிகளிடத்தில் காணப்படுவதினால் தான் எச்சரிக்கையுடன் இவையாவும் அணுக வேண்டி இருக்கிறது. இனி பிராமணீயத்தின் முக்கிய அம்சம் அகமண முறையாகும். அகமண முறையை தக்க வைப்பதன் மூலமாக மேலாதிக்கத்தை தக்கவைப்பது என்கிற கருத்தியல் வன்மை இதில் அடங்கியுள்ளது. தவ்கீது பிராமணியத்தில் அகமண அமைப்பு முறையை எப்படி கட்டமைப்பு செய்யப்படுகிறது என்றால் வரதட்சணை வாங்குவது என்பது இஸ்லாத்துக்கு ஹராமான காரியம். மாறாக மஹர் கொடுத்து பெண்ணை திருமணம் முடிக்க வேண்டும் என தவ்கீதுவாதிகள் வரதட்சணையை எதிர்ப்பதன் மூலமாக வரதட்சணை வாங்காத ஒரு சமூகத்தை கட்டமைக்கின்றனர். இந்த வரதட்சணை வாங்காத சமூகம் பிற்பாடு கொள்வினையையும், கொடுப்பினையும் செய்கிற போது அதுவே ஒரு சமூக அகமண முறையாக மாறி விடுகிறது. மற்ற வெறுக்க தக்க முஸ்லிம்கள் என்பவர்கள் வரதட்சணையை ஊக்குவிப்பவர்கள் என்ற கட்டமைப்பு அகமண முறைக்கு அடிநாதமாக அமைகிறது.

தவ்கீது பிராமணீயம் ஒரு சமூகத்தை உருவாக்க, கட்டமைப்பு செய்ய எத்தனிக்கிறது. அந்த சமூக மக்கள் உயர்ந்தவர்களாகவும், அகமண முறையை பின் பற்றுபவர்களாகவும் மற்ற முஸ்லிம்களை வெறுப்பவர்களாகவும் அவர்களது வாழ்க்கையே அனாச்சாரம் மிகுந்தது என்றும் தீண்டாமையை கட்டமைப்பு செய்வதையும், சமூகத்தில் அஸ்தஸ்து மிக்கவர்களாக காட்டி கொள்வதுடன் அரசியல் இலாபம் அடைவதற்கான நுணுக்கமான செயல் விஷயங்களுடன் செயல் படுபவர்களாகவும் இருக்கிறார்கள். சமூக அந்தஸ்து பெற்றவர்களாக காட்டிக் கொள்கிற இந்த சமூகம் மற்ற சமூக அமைப்புகளிடமிருந்து தனியே ஒதுங்கி தனக்கான அமைப்பு முறையை (ஜமாஅத்) உருவாக்கி வருவதும் தங்களை படிப்பாளிகளாகவும், அறிவாளிகளாகவும் புனைந்துரைத்துக் கொண்டு, தகவல் தொடர்பு ஊடகங்களின் வழியே அப்புனைகளை உண்மையாக்க முயலுவதும் தவ்கீது பிராமணீய கொள்கையமைப்பின் முக்கிய விஷயங்களாக இருக்கின்றன. அகமண முறையை கட்டமைப்பு செய்யும் போது பெண்களை பர்தாவுக்குள் அடங்கி ஒடுங்கி நிற்க செய்வது ஆணாதிக்க பிராமணீயத்தின் கருத்தொற்றுமையை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

மேலும் அண்டை, அயலான் என்கிற சக முஸ்லிம்களை நினைக்கிற மனபாங்கு மாறிபோய் அந்நியனாய் தன்னிடமிருந்த வெளியே என்ற நிலைபாட்டிற்கு ஒரு சமூக மக்களை, தவ்கீது நிலையை ஏற்காத காரணத்தினால் சபிக்கப்பட்ட சாத்தானின் மக்களாக உருவாக்கி விட்டது பிராமணிய வரலாற்று மன ஒட்டத்தின் வெற்றி எனலாம். இதனாலேயே அந்நியபட்ட மக்களை இழிந்த மக்களாக, பெயர் தாங்கிகளாக, அனாச்சாரம் மிக்கவர்களாக இஸ்லாமிய ஒளிவட்டத்திற்கு புறம்பானவர்களாக ஆக்க படும் வெறுப்புணர்வும் வளர்ந்து விட்டது. வெறுப்புணர்வு என்பது கூட பிராமணீய தன்மை கொண்டதாகும். அசல் பிராமணீயம் பிறப்பை வைத்து உயர்வு தாழ்வு கற்பிக்கிறது. ஆனால் தவ்கீது பிராமணீயம் செயலை வைத்து நபி வழி செயல்படுபவன் உயர்ந்தவர்களாகவும், நபி வழிபடி செயல்படாதவர்களை தாழ்ந்தவர்களாகவும், கருதும் மனோ நிலைமையை உருவாக்குகிறார்கள். மேலும் பிராமணீயத்தின் அரசியல் முகமே மிகவும் பிரதானமாகும் பிராமணீய மேலாண்மை செய்யும் மத ஆட்சியை நிறுவுவதே அதன் இலக்காகும். இந்த நிலையில் அரபு நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தவ்ஹீது பிராமணீயம் தவ்கீது மேலாண்மையை அங்கீகரித்து மத ஆட்சியை தக்கவைத்துக் கொண்டு பெருத்த இலாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. இந்திய சூழலில் தவ்ஹீது பிராமணியத்தின் குரலானது இஸ்லாமிய ஷரியத் சட்ட நெறிமுறைகளின் திருத்தல் முறையில் அமைந்திருக்கிறது. அதனாலேயே இந்தியாவிலிருக்கும் ஷரியத் சட்ட நெறிமுறை மரபுகளின் பித்கு சட்டதரங்களோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இதை மாற்றியமைக்க நபி வழி ஷரியபத் சட்ட இலக்கை மையமாக கொண்டு, தவ்ஹீது பிராமணீயம் குரல் கொடுக்கிறது. இதன் வேறொரு குரலாக முற்போக்கு திரையை உருவாக்குவது. பிராமணீயத்தின் தன்மையே முற்போக்கு விஷயங்களை பேசிதான் தன்னெறியை, இருப்பை தக்க வைத்து கொள்வது என்பதாகும். அந்த வகையில் தவ்ஹீது பிராமணீயம் மத நல்லிணக்கம், மாற்று மத சோதரர்களை முற்போக்கு திரையில் காட்சிபடுத்துவது மாற்றுமத அடிப்படைவாத பாசிசங்களை எதிர்த்தல் போன்ற முற்போக்கு முக மூடியை அணிந்துக் கொண்டிருக்கிறது. இதற்கு மத பகுத்தறிவாதத்தை பயன்படுத்துவது, சூடோ விஞ்ஞானத்தை பேசுவது, ஜனநாயக முற்போக்கு வடிவங்களை ஆதரிப்பது போன்ற பல்வேறு பட்ட அடையாள அரசியல் வேறொரு முகமாக திரையாக இருப்பது ஒத்திருத்தல் விதியை உட்பொதிந்ததாகும்.

இவ்வாறு தவ் ?ீது பிராமணீயம் அசல் பிராமணீயத்தின் குளோனிங் நகலாகவே இருக்கிறது. சாதாரண பிராமணியத்தின் அனைத்து நவீன முற்போக்கு பிராமணியத்தின் தன்மைகளும் கலந்து புது வடிவில் தமிழ் மொழியின் படி ‘பழைய கள் புது மொந்தை’ என உருமாற்றம் நடத்தியிருக்கிறது. இந்த பிராமணீயம் ஒடுக்கப்பட்ட ஆண், பெண் இருபாலரின் மனித உரிமைகளை, விளிம்பு நிலை மக்களின் உரிமைகளை கண்ணெடுத்து பார்க்காது மாத்திரமல்லாது எதிர் உரையாடல்களை கட்டவிழ்க்கும் பயங்கரமான பன்முக வன்முறையை சாத்தியபடுத்தியுள்ளனர். வெகு ஜன முஸ்லிம்களானாலும், அடித்தள முஸ்லிம்கள் ஆனாலும் அவர்களின் இருப்பென்பதே பண்பாடும், மொழியும், சில நம்பிக்கைகளும் தான், இவற்றை விழுங்கி ஏப்பமிட துடிக்கிறது. பிராமணீய கருநாகம் எந்த புற்றில் என்ன பாம்பு இருக்குமோ ? என்ற அச்சவலையில் சிக்க வைத்த சாதுர்யம் பிராமணீயத்தின் பாசிச முகமாகும். பல்வேறுபட்ட முகங்ககளையும், பல்வேறுபட்ட முக மூடிகளும் அணிந்து கொண்டு பிராமணீயம் ஆலகால விருட்சமாய் வேர்விட்டு விழுது விட்டு வளர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த வகையில் தவ்ஹீது பிராமணீயம் களமிறங்கியுள்ளது. இதன் நச்சுக் கருத்துக்கள் மிதவாத தீவிரவாத தளங்களில் வன்முறையை கட்டவிழ்க்கின்றது. எனவே பிராமணீயம் என்ன வடிவில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டிய நிர்பந்தத்தில் அடித்தள மக்கள் இருக்க வேண்டும். எப்பொழுதும் கருத்துருவாக்க செயலின் எல்லா தளங்களிலும் பிராமணிய ஆன்மாவை மையமாக மறைத்து வைத்து புதிய பரிணாமங்கள் புரட்சி விளக்கங்கள் கொடுப்பது என்பது பிராமணீயத்தில் இருந்து வருகிறது. இதனால் உருவாக்குகின்ற மன முறிவுகள் ஏராளம். மக்களிடையே இதை தூவியுள்ள பிராமணீயத்திற்கு பல்வேறு தளங்களில் பல்வேறு சொல்லாடல்களும், பொது சொல்லாடல்களுமே மன முறிவுகளை சமனப்படுத்த முடியும் மனச்சிதைவையும் கட்டுப்படுத்த முடியும்.

எச்.முஜீப் ரஹ்மான்

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்