சிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

கற்பக விநாயகம்


****

நாட்டார் தெய்வங்களைப் பற்றிய சரியான அறிமுகம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை. ‘மாடனைக் காடனை வணங்கும் அறிவிலிகாள் ‘ எனப் பாரதி பாடியதன் உள்நோக்கத்தை நான் எழுதியதும் அதற்கு வந்த எதிர்வினைகள் இதற்கு சாட்சியாய் உள்ளன. எனவே இச்சிறு கட்டுரை மூலம் நாட்டார் தெய்வம் குறித்து விளக்க முயன்றுள்ளேன்.

நிகழ் காலத்தில் இத்தெய்வங்களைக் குறித்து ஆழமான ஆய்வுகளை பேராசிரியர்கள் அ.கா.பெருமாள், ஆ.சிவசுப்பிரமணியன், தொ.பரமசிவம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு முன்னோடியாக பேராசிரியர் நா.வானமாமலை இத்துறையில் கணிசமான அளவில் ஆய்வுப்பணி செய்து, இத்தகைய ஆய்வுகளுக்கென்றே ‘ஆராய்ச்சி ‘ எனும் பத்திரிக்கையை பாளையங்கோட்டையில் இருந்து நடத்தி வந்தவர்.

இத் தெய்வங்களை ஒரு வசதிக்காக சிறு தெய்வம் என்றும், பெருங்கோவிலினை மையமாகக் கொண்ட வைதீகம் சார்ந்த தெய்வங்களை பெருந்தெய்வம் என்றும் வகைப்படுத்திக் கொள்ளலாம். இச்சிறு தெய்வ வழிபாடு காலப்போக்கில் பற்பல மாறுதலுக்கு உள்ளாகி வந்திருக்கின்றது.

அப்பர் தமது தேவாரத்தில் ‘சென்று நாம் சிறுதெய்வம் சேரோம் அல்லோம் ‘ எனப் பாடியதில் இருந்து, சிறு தெய்வ வழிபாடு அப்பரின் காலத்தும் இருந்தமை தெளிவாகின்றது.

இன்று இருப்பது போல் இல்லாமல், ஒரு காலத்தில் மூதேவியைத் தெய்வமாக வழிபட்ட மக்கள், தமிழ் நாட்டவர். மூதேவியை ஜேஸ்டா தேவி எனும் வடிவத்தில் வணங்கியதை, இப்போது கோக்கோ கோலாவுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தின் மையமான கங்கை கொண்டானுக்கு அருகில் இருக்கும் ஆண்டிச்சிப் பாறை குடைவரைக்கோவில் சாட்சி சொல்கிறது.

சலவைத்தொழில் செய்யும் வண்ணார் சாதியின் மற்றொரு பெயர், ஏகாலி என்பதாகும். ஏகாலி = ஒற்றைக்காலி- ஒத்தைச் சடை அணிந்த பெண்ணை வணங்குபவர் என்றும் ஒத்தைச் சடை பின்னிய தெய்வம், மூதேவியே என்றும் எட்கர் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.

மூதேவியை, சைவத்துள் கரைக்க முற்பட்டார் அப்பர். வைணவப் பார்ப்பனரான தொண்டரடிப் பொடியாழ்வாரோ , ‘சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே ‘ என மூதேவியை ‘வறுமையின் சின்னம் ‘ என எள்ளி நகையாடி இருக்கின்றார். பக்தி இயக்கக் காலத்திலேயே இவ்வாறு சிறு தெய்வங்களை கற்கட்டுமானக் கோவில் உருவாகும் வரை வைதீகப் பார்ப்பனீயம், நாட்டார் மரபை உள்வாங்கும் முயற்சியில், பழைய தெய்வங்களான மூதேவி முதலியானவர்களை உள்வாங்கவோ, அல்லது வெளித்தள்ளவோ தெரியாமல் திணறியுள்ளது.

பெரியாழ்வார் திரு மொழியில், ‘பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர்ச்சோறும் உண்டற்கு வேண்டி ஓடித் திரியாதே ‘ எனக் குறிப்பிடப்படுவது, இன்றும் நெல்லை மாவட்டத்தில் வெகுஜனங்களால் வணங்கப்பெறும் பே(ய்)க்கோவில்களே. (பே = அச்சம்) பெரியாழ்வார் குறிப்பிடும் இந்த வழிபாட்டு முறை, தூத்துக்குடி மாவட்ட மாடன் கோவில்களில் நடைபெறும் ‘சூறை ‘ யே எனலாம்.

இவ்வச்சம் தரும் வழிபாட்டை இன்றளவும் பின்பற்றி வருபவர், பிற்பட்ட /தாழ்த்தப்பட்ட மக்களே.

ஆகம வழி நின்ற பெருந்தெய்வ முறைகள், காலங்காலமாய் சிறு தெய்வங்களை உட்செரித்தோ, அல்லது வெறுத்து ஒதுக்கியோ நூற்றுக்கணக்கான ஆண்டுகாலம் தம் அரசியலைத் திறம்படச் செய்து வருகின்றன.

அக்காலத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் இருந்த மணல் / கல்லால் கட்டப்பட்ட ஒவ்வொரு கோட்டையின் வடக்கு வாசலிலும் அரசே ரத்தப்பலி கேட்கும் தாய்த்தெய்வக் கோவிலை நிறுவ வேண்டிய கட்டாயம் இருந்துள்ளது. இக்கோவில்களே வடக்குவாச்செல்லி அம்மனாகும்.

செல்லி அம்மனை லெக்கான் கோழி முட்டையோடு அடங்கிப் போகச்சொன்ன தமிழக அரசின் செயலை மக்கள் ஆதரிக்கவில்லை.

இவ்வகையான தாய்த்தெய்வக்கொவில்களில் வீரர்கள் தங்கள் கழுத்தைத் தாங்களே அறுத்துக் கொடுக்கும் (நவ கண்டம்) செயலைச் சிற்பங்கள் செப்புகின்றன. இத் தற்கொலைகளின் நீட்சியே கருணாநிதி, ஜெயலலிதா சிறைப்பட்டபோது தம்மை மாய்த்த தமிழர்களின் செயலும் எனலாம்.

சிறு தெய்வ வழிபாட்டை வைதீகம் தன்னளவில் இழிவாகவே பார்த்தது. இன்றும் அவ்வாறே கருதுகிறது.

****

அ.கா.பெருமாள், இத்தெய்வங்கள் உருவான விதத்தை ‘கர்ப்பமாய்ப் பெற்ற கன்னிகள் ‘ நூலில் விவரித்துள்ளார்.

பாளையக்காரர்கள், ஜமீன்தார்கள், சிறு மிராசுதார்கள், கிராம முன்சீப்கள், தலையாரி, கணக்குப் பிள்ளைகள் ஆகியோரின் பாலியல் வன்முறைக்குப் பலியான பல இளம்பெண்கள் கன்னி தெய்வங்களாக மாறி உள்ளனர்.

சாதி, மண மறுப்பின் காரணங்களால் கொல்லப்படுதல், அல்லது தற்கொலை செய்தல், திருடர்களை எதிர்த்து அகால மரணமடைதல், தீ அல்லது நீர் விபத்தில் மாண்டு போதல் ஆகியவையும் சிறு தெய்வங்களை உருவாக்கியுள்ளன.

வெகு மக்களால் வணங்கப்படும் தீப்பாய்ச்சி அம்மன் எனும் தெய்வத்தை பொதுவாக 1) கணவன் இறந்தபின் உடன்கட்டை ஏறிய பெண் 2) சாதி காரணமாய் நெருப்பிடப்பட்ட பெண் 3) தீவிபத்தில் மாண்ட பெண் எனும் வகைமையில் அடக்கலாம்.

இவ்வாறு இறந்தவர்கள், கயிலாய மலைக்கு சென்று சிவனிடம் வரம் பெற்று வந்து சாமியானார்கள் எனப் பெரும்பாலான ஸ்தலபுராணங்கள் சொல்வது வழக்கம். இவ்வாறு சாமியானவர்களைப் பிரபலமான தாய்த்தெய்வத்துடன் இணைத்து, அத்தெய்வங்களின் அம்சமாகக் காட்டுவதன் மூலம், அத்தெய்வங்களின் இயல்பை இழக்கச் செய்து, பெருந்தெய்வ வழிபாட்டுள் சேர்த்து விடுவது எளிதானது. இந்த அரசியல் வெகு காலமாகவே நடந்து வருகின்றது.

பெருந்தெய்வமாகும் சிறுதெய்வங்களுக்கு உதாரணமாய் அ.கா.பெருமாள், கிருஷ்ணகிரிப் பகுதியில் வழிபடப்படும் செல்லியம்மனை உதாரணமாய்ச் சொல்கிறார். கவுண்டர் சாதிப்பெண்ணான செல்லி, பறையர் ஒருவரைக் காதலித்ததால் கொல்லப்பட்டுத் தெய்வமானாள். தற்போது இந்தத் தெய்வம் ‘அபய முத்திரை ‘யுடன் செல்லியம்மனாக வைதீகத்துள் செரிக்கப்பட்டு விட்டது.

ஏன் சிறுதெய்வங்களுக்கு இவ்வாறு சிவன் போன்ற பெருநெறியுடன் இணைக்கும் புராணக்கூறுகள் கற்பிக்கப்படுகின்றன ?

17, 18ஆம் நூற்றாண்டில் தொடங்கி ஒவ்வொரு பிற்பட்ட / தாழ்த்தப்பட்ட சாதியினரும் தம்மை ‘உயர் குடியினர் ‘ எனக் கற்பிதம் செய்து கொள்ளும் போக்கு இங்கு உள்ளது. சமஸ்கிருதமயமாக்கல் எனும் போக்கு அது. இதன்படி 19ம் நூற்றாண்டின் இறுதியில் நாடார்கள், தம்மை சத்திரியர் என்று கற்பிதம் செய்து பூணூல் தரித்தனர். இப்போக்கைச் சகிக்க மாட்டாமல், மறவர்கள் தொடுத்த தாக்குதலே 1899ல் நடந்த சிவகாசிக் கலகம்.

வன்னியரும் தம் சாதிக்கு புராண விளக்கம் தந்து தம்மை மேலோர் எனக் கருதத் தொடங்கினர்.

இலை வாணியர், தம்மை, கந்தபுராணம் குறிப்பிடும் வீரபாகு என்பவரின் வாரிசுகள் எனக் கருதிக் கொண்டனர்.

அருந்ததியர் சாதியைச் சேர்ந்த ‘மதுரை வீரனை ‘, பிறப்பால் அவன் உயர்குலத்தவன் என்றும், அருந்ததியர் அவனைக் கண்டெடுத்து வ ளர்த்தனர் என்றும் இடைச்செருகலைச் சேர்த்து மதுரை வீரனை மேல் நிலையாக்கம் செய்தனர்.

இந்தப்போக்கும், சிறு தெய்வங்களை, இந்து சமயத்துள் கொண்டு சேர்க்கும் வேலையைச் செய்தது. ஆனாலும் இம்முயற்சிகள் எல்லா இடங்களிலும் வெற்றிபெற்றதா எனத் தெரியவில்லை.

சோழர்கள் காலத்திலேயே நாட்டார் தெய்வத்தை பெருநெறிக்குள் இழுத்தமைக்கு, தஞ்சை மாவட்டத்தில் வழிபடப்படும் ‘சிங்கள நாச்சியார் ‘ உதாரணமாகும். முதலாம் ராஜராஜன், ஐந்தாம் மகிந்தன் எனும் சிங்கள மன்னனை வென்று சிறைப்பிடித்தபோது அவன் மனைவியையும் கைதியாக்கிக் கொண்டு வந்தான். சிறையில் இருக்கையில் இச்சிங்கள அரசி தற்கொலை செய்து கொண்டாள். இவளைப் பத்தினி தெய்வமாக மக்கள் வழிபட்டனர். கல்வெட்டுகளில் குறிக்கப்பெறும் ‘ஸ்ரீ பூரண மங்கல தேவி ‘ இத்தெய்வமே எனினும், நாட்டார் வழிபாட்டில் இதை ‘சிங்கள நாச்சியார் ‘ என்றே குறித்தனர்.

கொள்ளையர்கள் வெட்டுப்பட்டு மாண்ட இடங்களில் அக்கொள்ளையரும் வணங்கப்பட்டனர் என்பதை தொ.பரமசிவம் தனது ‘அழகர்கோவில் ‘ ஆய்வில் நிறுவி உள்ளார். அழகர் கோவில் எனும் வைணவக் கோவிலைக் கொள்ளையிட வந்தவர்களை அரச படையினர் வெட்டிக் கொன்றனர். அவர்கள் மாண்ட இடமான அழகர் கோவில் வாசலில் ‘பதினெட்டாம்படிக் கருப்பசாமி ‘ ஆடு வெட்டி வணங்கப்படுகிறார்.

****

சில படையெடுப்புக்களும், மக்களின் இடப்பெயர்வுகளும் கூடப் புதிய தெய்வங்களை இங்கு கொண்டு வந்துள்ளன.

மைசூர்ப்படையினரின் மதுரைத் தாக்குதல் (மூக்கறுப்புப் போர்), மாரியம்மனை இங்கு அறிமுகம் செய்துள்ளது.

தெலுகு மக்களின் இடப்பெயர்வு ‘சக்கம்மா ‘, ‘எல்லம்மா ‘, ‘ரேணுகா தேவி ‘ ஆகிய சாமிகளை தமிழ் நாட்டுக்கு இறக்குமதி செய்துள்ளது. கணபதி கூட வாதாபியை பல்லவன் வென்றபிறகு வந்ததுதானே.

சென்ற நூற்றாண்டுகளில் நடந்த சாதிக் கலவரங்களின்போது பெருவாரியான மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர். அப்போது அவர்கள் வணங்கிய தெய்வங்களையும் உடன் எடுத்துப் போயுள்ளனர். 50களில் வைகை அணை கட்டியபோது பல கிராமங்கள் நீரில் மூழ்கின. (வைர முத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் இந்நிகழ்வை, இதன் பின்னால் நடந்த இடப்பெயர்வைப் பதிவு செய்துள்ளது). அப்போது தன் தெய்வத்தை இம்மக்கள் தலைச் சுமையாகவே எடுத்து வந்து தாம் வாழும் ஊரில் நிறுவியுள்ளனர்.

****

இவற்றைத் தவிர குல தெய்வ சாமிகள் என்பனவும் மக்களால் வழிபடப்பெறுகின்றன.

குல தெய்வம் என்பது ஒரே கொடி வழியில் தந்தை வழியிலோ / தாய் வழியிலோ மட்டும் வணங்கப்படும் சாமி. அதற்கு உரிமையுள்ளவர்கள் பங்காளிகளாகவே இருப்பர். சில சமயங்களில் ஆண் வாரிசே இல்லாது பெண் மட்டும் பிறக்கையில் அப்பெண்ணிற்குள்ள அக்கோவிலின் உரிமை, அப்பெண் வழியாக சம்பந்திகளுக்கும் சென்று விடுவது வழமை.

எங்கள் குல தெய்வம், தாமிரபரணியின் வாய்க்கால் ஓரமாய் இருந்தாலும், பங்குனி உத்தரம் நாளில், நாங்கள் வாழும் ஊர்களில் இருந்து அங்கு சென்று ஒன்றுகூடி வணங்கும் வழக்கம், முன்னாளில் நடந்த புலப்பெயர்வை எமக்கு நினைவூட்டுகின்றது.

தென்மாவட்டங்களில் குல தெய்வத்தை, சாத்தாங் கோவில் என்று கூறுவது, முன்னர் நிலவிய சமணத்தின் ‘சாத்தன் ‘ தெய்வ வழிபாட்டின் எச்சமாய் இருக்கக்கூடும். இந்தச் சாத்தாவின் சிலை/பீடத்திற்கு முன்னால் அசைவப்பலி இல்லை.

கறாராய் அகமண முறை, வழக்கில் உள்ள தமிழ் நாட்டில் இவ்விதமாய் ஒரே சாதிக்குள்தான் குல சாமி கும்பிடுவது இருந்து வருகின்றது.

இவை அனைத்தும் இடை நிலை / தலித் இந்துக்களால் ரத்தப்பலி கொடுத்து வணங்கப்படுவன.

அபூர்வமாய் சில அம்மன்கள் இரு சாதிக்கு உரிமையாய் இருக்கலாம். அதன் பின்னணி வரலாறு அனேகமாய் காதல் நிறைவேறாமல் இரு சாதியைச் சேர்ந்த ஜோடிகள் தற்கொலை செய்தமை அல்லது அவர்கள் படுகொலை செய்யப்பட்டமை என 7 அல்லது 8 வகைமைக்குள் ஆய்வாளர்கள் அடக்கி விடுகின்றனர்.

இக்கோவில்களில் படிநிலை வரிசையில் தமக்குக் கீழ் இருக்கும் சாதியினர் நுழைய முடியாது என்பதும் முக்கியமான விஷயம்.

இக்கோவில்களில் பிராமணர்கள், பூசை வைப்பதில்லை. மருத்துவர் (நாவிதர் / குடிமகன்), வண்ணார், வள்ளுவர், வேளார் (மண்பானை செய்பவர்), தமிழ்ப் பண்டாரம் (நந்தவனம் வைத்துப் பூவேலைகள் செய்பவர்), பறையர் ஆகிய குருமார் சாதியைச் சேர்ந்தவர்களே பூசை வைக்கின்றனர்.

****

இக்கோவில்களில் சாமியாடிகள் உள்ளனர். இவற்றிற்கு தினமும் ஆறுகாலப் பூசை கிடையாது. ஆண்டுக்கு ஒருமுறையோ, மூன்றாண்டுக்கு ஒரு முறையோ தத்தம் பொருளாதார நிலைக்கேற்ப கொடை கொடுக்கப்படுகின்றது. கவனிக்கவும். கொடை.

மக்கள்தான் தமது சாமிக்கு ஈகை புரிகின்றனர். கரிசல் பகுதிகளில் மழை பொய்த்துப் போய் தரிசாக நிலங்கள் கிடக்கும்போது இந்த தெய்வங்களும் அந்த வருசங்களில் கொடை இல்லாமல்தான் கிடக்கின்றன. ‘நாமளே லோல்பட்டுக்கிட்டுக் கிடக்கோம். இதுல சாமிக்கு கொடை கேக்குதாக்கும் ‘ என்று வெள்ளந்தியாய்ப் பேசும் அம்மக்களை நாம் நாத்திகர் என்று நினைக்க முடியாது. ஆனாலும் தம்மைப் போல் ஒருவர்தான் தமது சாமி என எண்ணும் எளிமை இது. தான் எதை உண்கிறோமோ அதனையே அச்சாமிக்கும் படைப்பதுதான், அச்சாமிகள் அசைவப் படையலிலும், பெருந்தெய்வங்கள் சக்கரைப் பொங்கலிலும் திளைப்பதன் காரணம்.

சாமியாடிகள், சில இடங்களில் கோமரத்தாடி என்றும், அருளாடி, மருளாயி என்றும் வட்டாரத்துக்குத் தக்க வேறுபட்ட சொற்களால் விளிக்கப்பெறுவர்.

சாமியாடிகள் கோவில் முன் அருள் வந்து ஆடுவர். பெண்கள் தலை மயிரை விரித்துப் போட்டு ஆடுவர். இச்செய்கைகள் பெருந்தெய்வ வழிபாட்டில் கிடையாது.

ஆண் தெய்வத்திற்கு (சுடலை மாடன்) தீப்பந்தத்தையும், பெண் தெய்வத்திற்கு (மாரியம்மன்) அக்கினிச் சட்டியையும் கையில் ஏந்திக்கொண்டு ஆடுவது வழக்கம்.

சில தெய்வங்களுக்கு பூக்குழி இறங்குவதும் உண்டு.

அப்போது மக்கள் பயபக்தியுடன், சாமியாடியுடன் உரையாடுகின்றனர். சாமியின் பிரதிநிதியாக/ சாமியாகவே அருள் வந்து ஆடுபவரைக் கருதி, தன் குறைகளை மக்கள் சாமி ஆடுபவரிடம் சொல்வர். பொதுவாக ‘பருத்தி இந்த வருசம் சரியா வெடிக்கல ‘ என்றோ ‘ஆடு மாடுக திருட்டு போவுது ‘ என்றோதான் இவர்களின் குறைகளும் இருக்கும்.

சாமியும் மக்களிடம் தன் குறையை சொல்லி முறையிடும் – ‘இந்த மாதிரி எனக்கு வெயில் படாமல் இருக்க முன் மண்டபம் கட்டு ‘ என்றோ, ‘ஏன் ரெண்டு வருசமா எனக்குக் கெடா வெட்டலை ‘ என்றோ சொல்வது வழக்கம்.

சாமி ஆடுபவருக்கு அருந்த, பானக்காரம் வழங்கப்படும். இப்பானம், கருப்பட்டியும் புளியும் நீரில் கரைத்து உருவாக்கப்படுகிறது.

ஆனால் பிராமணர்களோ, தம் வழிபாட்டில் கருப்பட்டி ஈறான பனைப் பொருட்களை தவிர்க்கின்றனர், நாடார் கைப்பட்ட தீட்டு என்பதால்.

தெய்வத்தின் அருள்பெற்று இவ்வாறு ஆடுதலை ‘வெறியாடல் ‘ எனத் தொல்காப்பியம்

‘வெறியறி சிறப்பின் வெவ்வாய் வோரன்

வெறியாட்டயர்ந்த காந்தளும் ‘

எனக் குறிப்பிடுவதாய் அ.கா.பெருமாள் கூறுகிறார்.

இச்சூத்திரத்தில் வரும் வெறியாட்டு, வேலன் நாட்டார் தெய்வமாக இருந்த காலத்தின் வெளிப்பாடு. வேலனாகிய முருகன் பெருநெறிக் கோவிலுள் அகப்பட்ட பின்னும் கூட பழனியில் தைப்பூச விழாவில் இன்றும் கூட வேலன் அருள் வந்து சாமி ஆடும் வழக்கம் இன்றும் உள்ளது. பிராமணர்களிடையே இவ்வழக்கம் இல்லை என்பதும் நோக்கத்தக்கது. இந்த உரையாடல் வைதீக நெறி நின்ற பெருந்தெய்வ வழிபாட்டில் கிடையாது.

வெறியாட்டம் முற்காலத்தில் முருகனுக்கு இருந்ததை சிலம்பின் குன்றக்கோவை

‘வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து, நீலப்பறவை மேல் நேரிழை தன்னோடும், ஆலமர் செல்வன் புதல்வன் வரும் ‘ என்றது.

கும்பாபிஷேகம் முதலான சமஸ்கிருதமயமாக்கல் நிகழ்ந்த நாட்டார் கோவில்களில் (பேச்சியம்மன், இசக்கி அம்மன் கூட இப்போது பெருந்தெய்வமாக்கப்பட்டு வருகின்றன) சாமியாட்டத்தை மக்கள் நிறுத்தச் சொல்லிக் கேட்கப்படுகின்றனர்.

‘கும்பாபிஷேகம் நடத்தி, அய்யர் பூசை வைக்க ஆரம்பிச்ச பிறகும் என்னா சார் இது டாசன்சியே இல்லாம ஆடுறாங்க ‘ என்பது தன்னுணர்வின்றி மேல்நிலையாக்கம் நோக்கிச் செல்லும் தலைமுறையின் குரல்.

****

பிராமணர், சைவ வேளாளர் தவிர்த்த எல்லா தமிழ்ச் சாதியினரும் ஏதேனும் ஒரு சிறுதெய்வ வழிபாட்டில் தொடர்புடையவரே.

பெரும்பாலும் உழைக்கும் மக்களின் தெய்வங்களான இக்கோவில்களில் அம்மக்களின் உணவான புலால் உணவே அத்தெய்வங்களுக்கும் படையல் இடப்படுகின்றன.

இந்து மதம் எனக் கற்பிதம் செய்யப்படும் மதத்துள் இச்சாமிகளை உள்ளிழுப்பதில் இப்படையல் இடைஞ்சலாக உள்ளது. தென் மாவட்டங்களில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவில்களில் இன்றும் ரத்தப்பலி கொடுக்கப்பட்டாலும் காஞ்சி மடத்துக்கு 1839ல் ஒரு வழக்குத் தீர்ப்பின் அடிப்படையில் சொந்தமான காமாட்சிக்கு அசைவப் படையல் இல்லை என்பதைக் கவனிக்கவும். சமீப காலத்தில் சைவ உணவுக்கு மாறிக்கொண்ட முத்தாரம்மன், இயக்கி அம்மன் ஆகியவர்களின் கதைப்பாடல்களில் அவர்கள் பெறும் உணவுப்பட்டியலில் ஆடு, கோழி இருப்பவை இதற்கு ஆதாரம்.

தெய்வங்களுக்கு மிருகங்களையும் பறவைகளையும் பலி கொடுப்பது பற்றிய குறிப்பு தொல்காப்பியம் புறத்திணையில் (புறம்.17) இருப்பதாகவும், திருமுருகாற்றுப்படையில் (வரி 218) முருகனுக்கு ஆடு பலி கொடுக்கப்பட்டதையும், அக நானூற்றில் (309.வரி 2-6) பசு மாடு பலி கொடுக்கப்பதையும் அ.கா.பெருமாள் குறிப்பிடுகிறார்.

இவ்வழக்கத்தை ஒழித்து இத்தெய்வங்களை பெருந்தெய்வப் பட்டியலுள் இணைத்திட ராஜாஜி 1937ல் சென்னை மாகாண முதன்மை மந்திரியாக இருந்தபோது முயற்சி செய்யப்பட்டது.

கள்ளுக்கடை மறியல் மாதிரி ரத்தப்பலி மறியலை காங்கிரசுக் காரர்கள் மேற்கொண்டனர். அதன் பிறகு பலியைத் தடை செய்யும் சட்டத்தை ‘ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் ‘ அரசு இயற்றியது. ஆனால் அது காகிதத்தில் மட்டுமே இருந்தது. மக்கள் தம் போக்கிலேயே இருந்தனர்.

1996ல் கிராமப்பூசாரிகளை ஒருங்கிணைத்து இந்துத்துவ அமைப்புகள் அவர்களுக்கு சமஸ்கிருதம் கற்றுக்கொடுத்து, ரத்தப்பலியை நிறுத்தக் கேட்டுக்கொண்டது.

****

பல நாட்டார் சாமிகளுக்கு கள்ளு அல்லது சாராயம் படையலில் இடம் பெறும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில மாடன் கோவில்களில் மதுக்கொடை எனும் சடங்கு உண்டு. அரிசி மாவில் பீர் தயாரித்து, கொடை நாளன்று பொங்கி நுரைப்பது மாதிரியான தொழில் நுட்பம் இம்மக்களிடையே உள்ளது. இந்த பீரை மக்களுக்கும் பருக விநியோகம் செய்வர். இது பற்றி விளக்கமான கட்டுரை ஒன்றை ஆ.சிவசுப்பிரமணியன் ‘மதுக்கொடை ‘ எனும் பெயரில் எழுதியுள்ளார்.

தமிழ் நாட்டில் தற்போது கள்ளு, சாராயம் தடை செய்யப்பட்டுள்ளது. ரெண்டு வருசத்துக்கு முந்தி, சுடலை மாடன் கோவிலின் கொடை விழாவைக் காண எங்கள் ஊரில் இருந்தேன். சுடலைக்கு அன்று ‘மெக்டவல் ‘ பிராந்தி வழங்கப்பட்டிருந்தது. நல்ல வேளை எங்கள் ஊரில் இந்து முன்னணி இல்லை. இருந்திருந்தால் , ‘மெக்டவல் ‘ போன்ற கிறிஸ்தவப் பெயர் கொண்ட பானங்களை விடுத்து ‘சிவாஸ் ‘ பிராந்தி போன்ற இந்து சரக்கைத் தரச் சொல்லிப் போராடியிருப்பர்.

****

நாட்டார் மரபைப் பின்பற்றும் இக்கோவில்களில் தற்போது தீவிரமாக ஆரியமயமாக்கல் நடந்து வருகின்றன. அதன் முறைகளைக் கீழ்க்கண்டவாறு அ.கா.பெருமாள் பட்டியலிடுகிறார்.

1) ஆகம நெறிப்படி கோவிலைக் கட்டுதல்.

2) பலி, சாமியாட்டம், சடங்குகள் போன்ற கூறுகளுடைய நாட்டார் கலைகள் நிறுத்தப்படல்

3) வழிபாடு, விழாக்களில் வைதீக முறை பின்பற்றப்படல்; வட மொழி மந்திரம் ஓதப்படல்

4) துணைத் தெய்வங்களாக நவக்கிரகங்கள், விநாயகர், சுப்பிரமணியர் போன்ற பெருநெறித் தெய்வ உருவங்களை ஆகம முறைப்படி நிறுவுதல்; கருவறைத் தெய்வ உருவத்தைப் பெருநெறித் தெய்வமாக்கல்

5) கோவில் தொடர்பான பிரயோகங்கள் கூட வைதீக மரபில் கூறப்படல் (அபிஷேகம், நைவேத்தியம், கும்பாபிஷேகம், ஸ்ரீபலி, உற்சவ விக்ரகம், கர்ப்பக் கிரகம் முதலியன)

6) கோவிலின் பூசை செய்பவரைப் பிராமணராக நியமித்தல்

7) கோவிலின் முக்கிய தெய்வத்தின் பழைய கதை மறைக்கப்பட்டு, புராணங்களுடன் தெய்வம் தொடர்பான வரலாறு இணைக்கப்படல்

8) சமயப் பிரச்சாரக் கூட்டங்கள், பட்டி மன்றம், வழக்காடு மன்றம், கருநாடக இசைக் கச்சேரி நடத்தல்

9) பெண்களை ஒரே இடத்தில் கூட்டுவதற்குரிய திருவிளக்கு பூசை முதலியவற்றை நடத்தல் (இதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத்/ஹிந்து முன்னணி முதலிய அமைப்புகள் துணை நிற்கின்றன)

10) முக்கிய தெய்வத்தை கர்மா, மாயா போன்ற தத்துவார்த்தங்களுடன் இணைத்துப் பேசுதல்.

****

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய நோக்கமே அ.கா. பெருமாள் பட்டியலிட்டுள்ள வழிமுறைகளின்படி செயல்பட்டு, சிறு தெய்வங்களை இந்து மதத்துள் கரைத்து, ஒற்றைப் பண்பாட்டை ஏற்படுத்துவதுதான். ஆயினும், இச்செயல்கள் மூலம் சைவ,வைணவக் கோவில்களுக்கும், நாட்டார் தெய்வக் கோவில்களுக்கும் இடையிலான வேறுபாட்டை முழுமையாக நீக்க முடியவில்லை. இரண்டு வழிபாட்டு முறைகளையும் இணைப்பதற்குத் தடையாக சாமியாடலும், உயிர்ப்பலியும், சாராயமும் உள்ளன.

அண்மைக்காலத்தில், சிறு தெய்வங்களின் கோவில்களில் விநாயகர் சிலை / சிவலிங்கம் நிறுவி, அதனையே சாக்காக வைத்துப் பலியிடலைத் தடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். மக்களும் சளைத்தவர்கள் அல்லர். துணி ஒன்றால் விநாயகர் சிலையை மூடி விட்டு அவர்களின் சாமிக்குக் கெடா வெட்டிக் கொண்டனர். சில ஊர்களில் இந்தத் தடங்கலைச் சரி செய்ய, நிறுவப்பட்ட விநாயகர் சிலையைப் பெயர்த்து கோவிலுக்கு வெளியே நிறுவி விட்டு, வழக்கம் போல் கெடா வெட்டை நடத்த ஆரம்பித்து விட்டனர்.

ஆர் எஸ் எஸ் விரும்பிப் போற்றும் வட மொழி சார்ந்த பிராமணீயப் பண்பாட்டுக்கு எதிராய் நாட்டார் தெய்வங்கள் இருப்பதும், பெரும்பான்மை மக்களின் வழிபாடாக அவை இருப்பதும் இடஞ்சலாய் இருக்கின்றது. எனவேதான், இக்கோவில்களில் பூசை செய்து வந்த அ-பிராமணப் பூசாரிகளுக்கு சமஸ்கிருத மந்திரம் கற்றுக் கொடுப்பதும், தந்திரமாக சைவப் படையலுக்கு அச்சாமிகளை மாற்றுவதும் நடக்கத் தொடங்கி உள்ளது.

இது நிச்சயமாகப் பண்பாட்டுப் படையெடுப்புதான். இத் தாக்குதலை நாட்டார் தெய்வங்கள் சமாளிக்குமா ? அல்லது இவர்கள் விரும்பும் ஒற்றை அடையாளத்துள் கரைந்து போகுமா ? என்பதைக் காலம் தான் முடிவு செய்யும்.

ஆதார நூல்கள்:

1) கர்ப்பமாய்ப் பெற்ற கன்னிகள் – அ.கா.பெருமாள் -தமிழினி வெளியீடு

2) சமயங்களின் அரசியல் – தொ.பரமசிவம் – கங்கு வெளியீடு

3) நாட்டார் வழக்காற்றியல் அரசியல் – ஆ.சிவசுப்பிரமணியன் – கங்கு வெளியீடு

****

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்