சில கதைகளும், உண்மைகளும்

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

கற்பக விநாயகம்


கோல்வல்கர் பற்றிய மர்மக்கதை ஒன்றை எழுதிச் செல்லும் மலர்மன்னன், ஏன் இன்னமும் அய்.நா. சபையில் காஷ்மீர் ஒரு பிரச்சினைக்குரிய பகுதியாய் இருக்கின்றது என்பதையும் சொன்னால் சிறப்பாய் இருக்கும். இந்தியா அய் நா வில் அறிவித்தவண்ணம் ஏன் இன்னும் அங்கு ‘கருத்து வாக்கெடுப்பு ‘ நடத்தப்படவில்லை என்பதையும் சொல்வது நலம். இத்தகைய நிலையில் இருக்கும் காஷ்மீர் விசயத்தில் கோல்வல்கருக்கு என்ன பெருமை இதனால் வரும் எனத் தெரியவில்லை.

இவர் காஷ்மீரை இணைக்க உதவிய கதையை விட சுவாரஸ்யமான வரலாறு ஒன்று இருக்கிறது.

திருவாங்கூர் சமஸ்தானத்து திவான் சர். சி.பி. ராமசாமி அய்யர் கடுமையான ஒடுக்குமுறை ஆட்சி நடத்தி அனைத்து மக்களின் மேலன்பைப் பெற்றிருந்தார். பிரிட்டிஷார் வெளியேறும்போது திருவாங்கூரை தனி நாடாக அறிவிக்க நீண்ட நாட்களாக அவர் ரகசியமாய் சதி செய்து வந்தார். அதன்படியே 1947 ஜூன் 11ம் தேதி தன் முடிவைப் பகிரங்கப்படுத்தினார். ஆனால் மக்களோ அந்நாட்டை இந்தியாவோடு இணைக்க வேண்டுமென்று போராடினர்.

திவான் வெறும் அறிவிப்போடு நிற்கவில்லை. பாகிஸ்தானுக்கு ஒரு பிரதிநிதியையும் திருவாங்கூர் சார்பில் நியமித்தார். ஜின்னா இந்நடவடிக்கையை வரவேற்று 1947 ஜூன் 20ம் தேதி ஒரு தந்தி அனுப்பினார். அதே நாளில் ராமசாமி அய்யருக்கு மற்றொருவரிடம் இருந்தும் தந்தி ஒன்று வந்தது. திருவாங்கூர் மாநிலத்தை சுதந்திர நாடாக அறிவித்த துணிச்சலையும், உறுதியையும், தொலை நோக்கையும் மிக உற்சாகமாகப் பாராட்டி இருந்த அந்தத் தந்தியை அனுப்பியவர் யார் தெரியுமா ? வீர் சாவர்க்கர்தாம் அவர்.

என்னய்யா இது கோல்வர்க்கர் காஷ்மீரில் புகுந்து விளையாடினால், அவரின் சகா இந்த மாதிரி கோடாரிக்காம்பு வேலை செய்திருக்கிறார் என்கிறீர்களா ?. நான் சொன்னது வரலாறு. எவரிடமும் சென்று சேகரித்த கிசுகிசுப்பு இல்லை இது.

****

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் பற்றிப் போகிற போக்கில் ஒரு கதை சொல்லிப் போனார் மலர்மன்னன்.

அது என்னதென்று ஆராய்ந்து பார்த்த பின்னர்தான், மலர்மன்னன் எப்படி எல்லாம் வரலாற்றைத் தன் இஷ்டம் போல் திரிக்கிறார் எனத் தெளிவானது.

வேலூர் நகரக் கோட்டை கோவிலுக்குள் இருந்து ‘லிங்கம் ‘ அகற்றப்பட்டதற்கு முசுலீம் படையெடுப்புதான் காரணமென்றும், அதை மீண்டும் அங்கு நிறுவுவதற்குத் தடையாகத் தொல்லியல் துறை இருந்ததால் அதையும் மீறி அங்கு லிங்கத்தை நிறுவும் தெய்வீகத் தொண்டை தாம் வீரதீரத்தோடு செய்து முடித்ததாக விஸ்வ ஹிந்து பரிசத் தின் மலர்மன்னன் சரடு விடுகிறார்.

முதலாவதாக, வேலூரில் உள்ள கோட்டைகள் மற்றும் நகரக் கோட்டைக்குள் உள்ள கோவில் எப்போது, யாரால் கட்டப்பட்டது என்ற உண்மையை அவர் மூடி மறைக்கின்றார். வேலூர் கோட்டைகளும், கோவிலும் இந்து ஆட்சியாளர்களால் கட்டப்படவில்லை. அப்படி ஓர் இந்து ஆட்சி அங்கு நிலவியதாக வரலாறும் இல்லை. அவை முசுலீம் ஆட்சியாளர் காலத்தில்தாம் கட்டப்பட்டன.

ஆங்கிலேயக் காலனிவாதிகளிடம் சரணடைந்து, ஆட்சி அதிகாரத்தை ஆற்காடு நவாபு அடகு வைத்தபோது, விடுதலைப்போர் தொடுத்த மைசூரை ஆண்டு வந்த டிப்பு சுல்தான் குடும்பத்தினர் ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டு வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். முசுலீம்களால் கோட்டைக்கோ, கோவிலுக்கோ எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆற்காடு நவாப்போடு சேர்ந்து ஆங்கிலேய காலனியவாதிகளுக்கு அடிமை ஊழியம் செய்த புரோகிதர்கள்தாம், ‘மைசூரை ஆளும் முசுலீம் மன்னன் படை எடுத்து வருகிறான்; கோவில்களை இடிப்பான்; இந்துக் கடவுள் சிலைகளைத் தாக்கி உடைப்பார்கள்; இந்துக்களைக் கொன்று போடுவார்கள்;பெண்களைக் கற்பழிப்பார்கள் ‘ என்று புரளி கிளப்பி, கோட்டை கோவில் லிங்கத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டார்கள்.

ஆனால் ஆர் எஸ் எஸ் காரர்கள் வெளியிட்டுள்ள ஒரு நூலிலே அவர்களே ஒப்புக்கொண்டுள்ளபடி ‘அந்தக்கோட்டை கோவில் இன்னமும் சிதிலமடையாமல் அழகாக ‘ இருக்கிறது என்றால் ‘படை எடுத்து வந்த ‘ முசுலீம்கள் அதற்கு எந்தப் பாதிப்பையும் செய்யவில்லை என்றுதானே அர்த்தம் ? மேலும் அவர்களால் இந்துக்களுக்கு எந்தவிதத் தீங்கும் அங்கு நடந்ததாக சிறு வரலாற்று ஆதாரமும் சம்பவமும் கிடையாது.அதற்கு மாறாக, பாழடைந்த பல ‘இந்து ‘க்கோவில்களைப் புதுப்பிக்கவும் பூசை நடத்தவும் டிப்பு சுல்தான் உதவியதாகத்தான் சரித்திரம் கூறுகிறது.

ஜெர்மனியில் மட்டுமல்லாது, தான் ஆக்கிரமித்த பலதேசக் கலைக் களஞ்சியங்களைச் சூறையாடிய ஹிட்லர் உட்பட பாசிஸ்டுகள் அனைவருமே வரலாற்றுச் சின்னங்களை மாற்றி அமைத்து, பாமர மக்களின் ஆதரவைத்தேடிக்கொள்ள எத்தணிக்கின்றனர்.அது போன்றதொரு செய்கைதான் வேலூர் கோட்டை கோவிலுக்குள் லிங்கத்தை நிறுவிய செயல்.

காஞ்சி மடாதிபதி முதல் மாவட்ட ஆட்சியர் வரை ஆர் எஸ் எஸ் காரர்களோடு சேர்ந்து நிறைவேற்றியிருக்கும் இந்தச் செயலை ஏதோ கடும் எதிர்ப்புக்கிடையே புரிந்த சாதனையைப் போல இங்கே சித்தரிக்கிறார் மலர்மன்னன். திட்டமிட்டு சுற்றுப்புறக்கிராமங்களில் இருந்து கூட்டம் திரட்டி வந்தபோதும், ஏதோ மக்கள் தாமே திரண்டு வந்ததைப் போல் பிலிம் காட்டுகிறார் அவர்.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்ன என்றால், இல்லாத ஒரு பிரச்சினையை உருவாக்கி ஊதிப் பெருக்கி பரபரப்பை ஏற்படுத்தியதுதான்.

இதே மாதிரிதான் மண்டைக்காட்டிலும், கடலில் சென்று நீராடிய பிறகே பகவதி கோவிலுக்கு வர வேண்டும் என ஒருப் புதுப் பழக்கத்தைப் புகுத்தி அமைதியைக்கெடுத்தனர் இவர்கள்.

இதன் உள்நோக்கம் என்னவென்றால், கடற்கரையில் பரவி இருக்கும் கிறிஸ்தவ மீனவர்களின் குடியிருப்பு வழியாக ஊர்வலம் விட்டு பதட்டத்தை உருவாக்குவது.

இதே உள் நோக்கத்தில்தான் 1990 வரை தமிழ் நாட்டில் இல்லாத வழக்கமான ‘விநாயகர் சதுர்த்தி ‘ ஊர்வலமும் இவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

நான் ஒருமுறை சென்னையில் இந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைப் பார்த்திருக்கிறேன். போகும் வழியில் முஸ்லிம் ஓட்டல் இருந்தால் கல்லை ஓட்டல் உள்ளே எறிவார்கள் (ஸ்டாரன்சு ரோடு, ஓட்டேரியில் உள்ள தாஸ்மக்கான் ஆகிய இடங்கள்)

‘நாலும் நாலும் எட்டு; துலுக்கன வெட்டு ‘ ‘மூணும் அஞ்சும் எட்டு; துலுக்கன் பொண்டாட்டியக் கட்டு ‘ என்று சில திருக்குறள்களை உரக்கக்கத்தி விநாயகருக்கு பக்தி செலுத்துவார்கள் (இரண்டாவதாய் நான் குறிப்பிட்ட குறள் சரியானதுதானா என்பதை மலர்மன்னன் சமூகம் திருத்திக் கொடுத்தால் தேவலாம்)

****

ஒரு வாதத்திற்காக மலர் மன்னன், ஜலகண்டேஸ்வரர் கோவில் லிங்கத்தை நிர்மாணம் செய்தது சரி என்றே ஒப்புக் கொள்வோமாயின்,

திருமலை நாயக்கர் காலத்தில் ஓர் அரசாணை மூலம் பழனி முருகன் கோவிலின் பூசனை செய்யும் உரிமையை சூத்திரர்களிடமிருந்து கைப்பற்றிக்கொண்ட பிராமணர்களிடமிருந்து அவ்வுரிமையை மீட்டுத்தரும் தெய்வீகத் தொண்டைத் தொடங்கலாமா ?

அழகர் கோவிலை மீண்டும் சமணர்களிடம் ஒப்படைத்து விடும் ‘தெய்வீகத் தொண்டை ‘த் தொடங்குவோமா ?

திருப்பதி கோவிலை உரிமை கொண்டாடும் முருக பக்தர்களிடமோ அல்லது அதற்கும் முந்தைய சமணர்களிடமோ ஒப்படைத்து விடுவோமா ?

மலர்மன்னனின் இந்து இயக்கம் இதற்கு ஒப்புக்கொள்ளுமா ?

****

உலகாயதம் வேறு ஆன்மீகம் வேறு எனும் நுட்பம் அறியாப் பாமரர்கள் என ராமநாதபுரத்தை சேர்ந்த ஆட்டோக் காரர் சொன்னதாய்ச் சொல்வதன் மூலம், மதம் மாறுபவர்களைக் (அதாவது தலித்களை) கொச்சைப்படுத்தும் மலர்மன்னன், எது அப்பாமரர்களைப் பாமரர்களாக ரெண்டாயிரம் வருஷமாய் வைத்திருக்கின்றது என்பதைச் சொல்வாரா ?

தாழ்த்தப்பட்ட மக்கள் ஏழைகளாகவும் கல்வி அறிவற்றவர்களாகவும் அடிமைகளாகவும் இருப்பதற்குப் பார்ப்பன மதமே காரணம். அவர்களை 4 வர்ணத்திலும் சேராத அவர்ணர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் ஒதுக்கி வைத்து அவர்கள் மீது எல்லாவிதமான கொடிய அடக்குமுறைகளையும் ஏவியது இந்து மதம் என்று சொல்லப்படுகிற பிராமண மதம். ‘இது மதமல்ல.ஒரு தண்டனை ‘ என்கிறார் அம்பேத்கர்.

‘உங்களை மனிதர்களாக மதிக்காத, நீங்கள் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுக்காத-உங்களைக் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்காத மதத்தை நல்ல மதம் என்று எப்படிக் கருத முடியும் ? நீங்கள், கல்வி கற்பதற்குத் தடை விதிக்கிற, உங்களுடைய பொருளாதார முன்னேற்றத்தில் குறுக்கிடுகின்ற மதத்திற்கு ‘மதம் ‘ என்ற பெயர் இருக்கலாமா ? தன் மதத்தைச் சேர்ந்த சகோதரர்களுடன் பழகும்போது அவர்களை மனிதத்தன்மையுடன் நடத்த வேண்டும் என்று கற்பிக்காத மதம் ஒரு மதமன்று; அது ஓர் ஆதிக்கச் சக்தியே ஆகும் ‘.

‘விலங்குகளிடமும் அன்பு காட்டுங்கள் என்று தன்னைப் பின்பற்றுபவர்களுக்குப் போதிக்கும் மதம், மனிதன் தொட்டால் தீட்டு என்று கூறுவது போலித்தனமானதல்லவா ? சில வகுப்பினரை மட்டும் கல்வி கற்பதிலிருந்து விலக்கி வைத்து விட்ட மதம், அவர்கள் செல்வம் சேர்ப்பதையும் ஆயுதங்கள் ஏந்துவதையும் தடை செய்து விட்ட மதம் – அவமானத்தின் சின்னமே ஆகும். அறியாமையில் இருப்பவர்கள் அறியாமையிலேயே அழுந்திக் கிடக்க வேண்டும் என்றும் ஏழைகள் என்றென்றும் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துகின்ற மதம் ஒரு தண்டனையே ஆகும். ‘

தாங்கள் விதித்த தண்டனையில் இருந்து தப்பித்துச் செல்பவர்களைப் பார்த்துத்தான் இவர்கள் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

‘ஐயோ கிறிஸ்தவர்களும் முசுலீம்களும் அவர்களை ஏமாற்றிவிடுகிறார்களே ‘ என்று பரிதவிக்கிறார்கள்.

‘என்னுடைய கோவிலுக்குள் நீ நுழையக் கூடாது. என் சாமியின் தேரை நீ இழுக்கக்கூடாது. உன் தெருவுக்குள் என் சாமி நுழையாது- ஆனால் நீயும் நானும் ஒரே மதம் ‘ என்று சொல்வதை யாராவது ஏற்க முடியுமா ? அவ்வாறு இருக்க முடியுமா ?

இல்லை. தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடியினரும் எந்தக் காலத்திலும் இந்து மதத்தில் இருந்ததில்லை. இது மறுக்க முடியாத வரலாற்று உண்மை. அவர்கள் இந்து (பிராமண) மதக் கடவுளர்களை வணங்கியதும் இல்லை. இறந்து போன முன்னோர்களையும் இயற்கையையுமே அவர்கள் வழிபட்டு வந்தனர்.

1911-ல் பிரிட்டிஷ் அரசு எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தாழ்த்தப்பட்ட மக்களும் பழங்குடியினரும் ‘இந்துக்கள் அல்லாதவர்கள் ‘ என்றே குறிப்பிடப்படுகின்றனர். அதற்கான 10 வரையறைகளை அன்றைய சென்சஸ் கமிசனர் கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுள்ளார். அம்பேத்கர் தன்னுடைய ‘தீண்டத்தகாதோர் யார் ? ‘ எனும் நூலில் இதை ஆதாரம் காட்டுகிறார்.

‘பிராமணரின் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் ‘, ‘வேதங்களின் ஆளுமையை மறுப்பவர்கள் ‘, ‘இந்துக்கடவுளரை வணங்க மறுப்பவர்கள் ‘, ‘பிராமண பூசாரியின் பூசையையே மறுப்பவர்கள் ‘, ‘ஆலயப் பிரவேசம் மறுக்கப்பட்டவர்கள் ‘, ‘தொட்டால் அல்லது குறிப்பிட்ட தூரத்தில் வந்தால் தீட்டுக்குக் காரணமானவர்கள் ‘, ‘பசுவை வணங்காதவர்கள் ‘, ‘மாட்டுக்கறி சாப்பிடுபவர் ‘ இன்ன பிற.

இதை மலர்மன்னன் ‘பிரிட்டிசாரின் பிரித்தாளும் சூழ்ச்சி ‘ என்றெல்லாம் அழுகுணி ஆட்டம் ஆட முடியாது. ஏனென்றால் ‘தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடியினரும் இந்துக்கள் அல்ல ‘ என்ற இவ்வரையறுப்பை அன்றைய சங்கராச்சாரி முதன் சவுண்டிப் பிராமணர் வரை அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.

தலித்களை தீண்டத்தகாதவர்கள் என்று பிராமணர்கள் புறக்கணித்ததைப் போன்றே, தலித்களும் பிராமணர்களை வெறுத்துப் புறக்கணித்தனர் என்ற உண்மையையும் சான்றுகளோடு நிறுவுகிறார் அம்பேத்கர்.

எனவே தலித்களை கோவிலுக்குள் அன்று நுழையக் கூடாது என சாதி இந்துக்களும் பிராமணர்களும் அன்று சொன்னதுக்குக் காரணம் அவர்கள் முசுலீம் கிறிஸ்தவர்களைப் போன்று இந்து மதத்தைச் சேர்ந்தவர்களல்ல என்பதுதான்.

தலித்துகளும் இந்துக்களின் ஓர் அங்கம் என்று இன்றைக்கு வந்து மோடி வித்தை காட்டும் மலர்மன்னன், வட்ட மேசை மாநாட்டில், இதே மாதிரிப் பேசத்துணிந்த காந்திக்கு அம்பேத்கர் கொடுத்த பதிலடிகளை எடுத்துப் படிக்கட்டும். தாம் சொல்வது எத்தகைய அபத்தமான கருத்து என்று ம.ம.வுக்கு விளங்கும்.

****

தலித்கள் மட்டுமல்ல, தம்மை இந்துக்கள் என்று கருதிக்கொள்ளும் இடை நிலைச் சாதிகளும் இந்து சமயத்தில் இருந்தது கிடையாது.

இன்னமும் சமஸ்கிருதமயமாகாத எண்ணற்ற சாதிகளில் திருமணம் எனும் சடங்கில் பார்ப்பனர்களுக்கு இடம் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். நூறு வருசங்களுக்கு முன்பு பல இடை நிலை சாதிகளில் ‘குடிமகனோ ‘, ‘சாதி அம்பலகாரரோ ‘ திருமணம் நடத்தி வைத்திருக்கிறார். (*குடிமகன் – முடி திருத்தும் நாவிதர்; அம்பலகாரர்- நாட்டாமை; நெல்லை, கரிசல் வட்டாரச் சொல்)

அவற்றில் சில சாதிகள் படிப்படியாக பிராமணத் தன்மைகளை சுவீகரித்து இன்று இந்துத் திருமண முறைக்கு, அதாவது வட மொழி மந்திரத்துக்கு மாறி விட்டன. குடிமகனிடம் இருந்து திருமணம் செய்துவிக்கும் உரிமை பிராமணர்களுக்குப் போய் விட்டாலும், அதன் எச்சமாக இன்னும் அத்திருமணங்களில் குடிமகன் தம் தலையில் தலைப்பாகை அணிந்து மணமக்கள் முன் அமர்ந்து இருப்பார்.

(ஆதாரம்: – முனைவர் தொ.பரமசிவம் ‘பண்பாட்டு அசைவுகள் ‘)

திருமணச் சடங்கில் இந்து அடையாளம் நுழைந்து விட்டாலும், அவர்கள் கொண்டாடும் நாட்டார் கோவில் கொடைகளிலோ, அவர்களின் குல தெய்வக் கோவில்களிலோ எங்கும் இந்து மத அடையாளம் கிடையாது. இவ்வடையாளங்களை அழித்திட ஜெயா உயிர்ப்பலி தடை சட்டத்தை கடுமையாக அமுல்படுத்திப் பார்த்தார். கதை நடக்கவில்லை. இன்னமும் அக்கோவில் பூசாரிகளுக்கு சமஸ்கிருதம் கற்பித்து இந்து மதத்திற்குள் இழுக்க இந்துத்துவா முயல்கிறது. திருச்சியில் உள்ள சப்பாணி மாட சாமியை, ‘மாட ஸ்வாமி ‘ ஆக்கி இருக்கிறார்கள். சுடலை மாடனை சிவனின் மகன் எனக் கயிறு திரிக்கிறார்கள்.

****

இந்து மதத்தில் இருந்து 1981ல் இஸ்லாமுக்கு மாறினால் அது மதம் மாற்றம். ஆனால் அதே ஆண்டில் இடிந்த கரையில் கிறிஸ்தவத்தில் இருந்து ஆர் எஸ் எஸ் தூண்டுதலால் இந்து மதத்திற்கு மாறுவது இவர்களின் மொழியில் ‘தாய் மதம் திரும்புதல் ‘.

ஆர் எஸ் எஸ் வெளியிட்டுள்ள ஒரு நூலில் அவர்கள் செய்த காரியம் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்கள்

‘ஏறக்குறைய இதே கால கட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் – இடிந்தகரை என்ற ஒரு கடற்கரை கிராமத்தில் முதலாவதும் ஒரு மிகப்பெரியதுமான நிகழ்ச்சியை விசுவ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்தது. அங்கே சுமார் நானூறு கிறித்தவக் குடும்பங்கள் இந்து முகாமுக்குத் திரும்பினார்கள்;இந்துக்களுக்கென்று ஒரு கோவில் கட்டப்பட்டது. இந்துக்குரல் மிகவும் மெலிதானதாக உள்ள இந்த மாநிலத்தில் மதம் மாறியவர்கள் இந்துக் குடும்பத்துக்குத் திரும்பியது, இந்து தேசியத்தின் எழுச்சிக்காகக் காத்திருந்தவர்களுக்கு ஒரு மாபெரும் உத்வேகமளித்தது ‘.

மத மாற்றத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே, தாமே மத மாற்றத்தில் ஈடுபட்டனர் இவர்கள். ஆனால், தாம் செய்வது ‘வீடு திரும்புதல் ‘ எனக்கூறி நியாயப்படுத்தினர். அதே சமயம் ‘இந்து மதத்தில் இருந்து வெளியேறி ‘ மாற்று மதத்திற்கு ‘மதம் மாறுவது ‘ பொருளுதவி செய்தும், ஆசை காட்டியும் என்று கதை விடுகின்றனர்.

****

மார்க்சியப் பொருளாதாரம் பயின்றதாகக் காட்டிக்கொள்ளும் மலர்மன்னன், அது எவ்விதத்தில் நமக்கு ஒவ்வாதது என்பதையும்,

சந்தைப் பொருளாதாரம் எவ்விதம் நமக்கு ஏற்றது என்பதையும் விளக்கமாக எழுத வேண்டும்.

அண்ணாவின் பொருளாதாரப் பார்வை பற்றிப் பேசுவதெல்லாம் கிடக்கட்டும்.

மலர் மன்னன் விரும்பும் பொருளாதாரத்திட்டம் என்ன என்பதை சற்றே விளக்கினால் நல்லது.

எப்படி அது அனைவருக்குமான வாய்ப்பாக அமையும் என்பதையும் விளக்கவும்.

தற்போதைய அரசின் கொள்கை முடிவின்படி இந்தியாவுக்குள் விரைவிலேயே வால் மார்ட் முதலான பிரம்மாண்டமான பலசரக்குக் கடைகள் நுழைய இருக்கின்றன. அதன் அசுர பலத்தின் முன் அழியப்போகின்றார்கள் இந்திய சிறு வணிகர்கள்.

மலர் மன்னன் மெச்சும் சந்தைப்பொருளாதாரத்தின் கோரமுகங்களில் இதுவும் ஒன்று.

‘இந்துக்களே! இந்துக் கடைகளிலேயே பொருட்கள் வாங்குங்கள் ‘ என்று இப்போது உசுப்பேத்துகிறார்கள் இந்து மதக் காவலர்கள்.

வால் மார்ட் வந்த பிறகு இந்த வஜனத்தைக்கேட்டு இந்துக்கள் இந்துக்கடைகளிலேயே சாமான் வாங்கிடப்போனால்,

எந்த இந்துவும் – எந்த இந்தியனுமே- கடைவைத்திருக்க மாட்டான். குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டிருப்பான்!

அவனை, அவனின் சில்லறை வணிகத்தைக் காக்க என்ன பொருளாதாரத்தீர்வு வைத்திருக்கிறார் மலர்மன்னன் ?

இந்து மக்களின் எழுச்சிக்காக மலர்மன்னன் காத்திருக்கட்டும். ஆனால் அந்த இந்து மக்கள் உட்பட அனைவரும் நம்பி இருக்கும் நமது குடி நீர் ஆதாரங்களான தாமிரபரணி போன்ற ஆறுகள் ‘ஆவுரித்தித் தின்றுழலும் ‘ மிலேச்சர்களான அமெரிக்க கம்பெனிகளுக்கு அடகு வைக்கப்படுகின்றதே.

(தாமிரபரணியில் கோக் நிறுவனம் தன் ஆலையை நிறுவி, தினமும் 12 லட்சம் லிட்டர் நீரை உறிஞ்சி நம்மிடமே லிட்டர் 12 ரூபாய்க்கு விற்கப்போகின்றது. குடிக்கத் தண்ணீர் இன்றி தென் மாவட்ட மக்கள் அனைவரும் சாகப் போகின்றார்கள்.)

நமக்கெல்லாம் புனிதமான கங்கா மாதாவே நாளை லெகெர் பெப்சிக்கோ / கோக்க கோலாவுக்கோ சொந்தமாகி விடுவாள். இந்திய நாட்டின் செல்வத்தை, இயற்கையைக் கூறு போட்டுக் கொண்டிருக்கின்றனர் ஏகாதிபத்தியவாதிகள். இதைத்தடுக்க என்ன செய்யலாம்!

எதிர்த்து மக்களோடு போராடலாமா ? அல்லது மாப்பிள்ளை விநாயகர், காளி மார்க் போன்ற உள்ளூர் குளிர்பானங்களை அழித்துவிட்டு உள்ளே நுழைந்த மிலேச்சர்களின் குளிர்பானங்களுக்கு ‘அருட்செல்வர் ‘ வழியில் ஏஜென்சி எடுக்கலாமா ? என்பதைப் பற்றியும் ம.ம. தெளிவுபடுத்துவது எம் போன்றோரை உய்விக்கும்.

****

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்