ஏ.வி.எம்-ரஜினி-ஷங்கர் கூட்டணியில் ‘சிவாஜி ‘

This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue

திசைகள் அ.வெற்றிவேல்


ஏ.வி.எம்-ரஜினி-ஷங்கர் கூட்டணியில் ‘சிவாஜி ‘-மிகப் பிரமாண்ட முறையில் தயாரிக்கப்படுகிறது என்றும்,தமிழக வரலாற்றிலேயே அதிக விலையில் விற்கப்பட்டுள்ளது என்றும், சுமார் 100 கோடி வசூலாகும் என்றும்,தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை என்றும் தொடர்ந்து பத்திரிக்கைச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

மூன்று பெரிய தலைகள் சம்பந்தப்பட்டுள்ளதாலே,இந்தப் படமே தமிழ்த் திரை உலகின் சாதனை என்று எழுதுகிறார்கள்.இந்த மூன்று பேருமே தமிழ்ப் பத்திரிக்கை உலகிற்கு செல்லப்பிள்ளைகள் என்பதால்,

பத்திரிக்கைகளின் இந்த உயர்வு நவிற்சி சொல்லாடல் எதிர்பார்த்ததே.இந்த மூவராலும் தரமிக்க, உண்மையிலேயே சாதனை என்று சொல்லக்கூடிய தமிழ்ப்படம் தர இயலுமா ?..முடியாது ..என்று சொல்ல ஒரு சாதாரண சினிமா ரசிகன் போதும்.

தமிழ் சினிமாவின் சாதனையைச் செய்ய உள்ள இந்த மூவரைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

1972-ல் எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கி, அரசியலில் தீவிரமாக இயங்கி,பின்னர் 1977-ல்

முதல்வரானவுடன், தமிழ் சினிமாவில் ஒரு பெரிய வெற்றிடம் தோன்றியது.இந்த கால கட்டத்தில் தான்

தமிழ் சினிமாவின் நல்ல இயக்குனர்கள் என்று இன்று வரை போற்றப்படும்,மகேந்திரன்,பாரதி ராஜா,பாலு

மகேந்திரா,ருத்ரய்யா போன்றவர்கள் தமிழ் சினிமாவை மறு கட்டத்திற்கு கொண்டுபோனார்கள்.வர்த்தக

ரீதியாக அதன் பின் விளைவுகளை நன்கு யோசித்து, தங்களது ஆதிக்கத்தை தமிழ் சினிமாவில் மறுபடியும்

மீட்டெடுக்க வேண்டி, மூன்று முடிச்சு,அவள் அப்படித்தான்,முள்ளும் மலரும், 16 வயதினிலே போன்ற படங்களில் நல்ல பாத்திரங்களில் நடித்து அன்று வரை நல்ல நடிகராக வளர்ந்து வந்து கொண்டு இருந்த ரஜினியை அணுகி, இன்று போல், மிகப் பெரிய தொகை கொடுத்து, முரட்டுக்காளை என்ற படம் பண்ணிய

புண்ணியவான்கள் இந்த ஏ.வி.எம்.நிறுவனத்தினர்.மற்றுமொரு நல்ல கலைஞரான கமலையும்

கூட்டிக்கொண்டு போய் அவசர அவசரமாக ‘பெரிய இடத்துப் பெண் ‘ என்று பழைய வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் படத்தை.. ‘சகல கலா வல்லவன் ‘ என்று எடுத்து தமிழ்ச் சினிமாவில் வசூல் சாதனை புரிந்தவர்கள்

இந்த ஏ.வி.எம்.நிறுவனத்தினர்.முரட்டுக்காளையுடன் முடிந்தது நல்ல சினிமாவுக்கான முயற்சிகள்.

அதே நோக்கம்..அதே முயற்சிதான்..அதே அவசரம் தான் இந்த ‘சிவாஜி ‘யிலும் தெரிகிறது.பாபா

தோல்விக்குப் பின்னர் பயத்துடனும் பதற்றத்துடனும் திரையுலகிலிருந்து ரஜினி விலகி இருந்த இந்தக்

காலகட்டத்தில் தான்..காதல்,ஆட்டோகிராப்,அறிந்தும் அறியாமலும்,ராம்,அழகி,சொல்ல மறந்த கதை..

போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் வந்து வெற்றிகரமாக ஓடி ஒரு புதிய வெளிச்சம் தெரியத் தொடங்கியுள்ளது. இந்த முயற்சியை வேருடன் பிடுங்கி எறியும் காரியமாகத்தான் இந்த அவசர அறிவிப்பு

வெளிவந்துள்ளது.மறுபடி அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சிதான். வாழ்க ஏ.வி.எம்!

சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் ‘ஆன்மிகச் செம்மல் ‘ என்ற புதிய பட்டப் பெயருடன் சந்திரமுகிக்குப் பிறகு

உலா வரும் ரஜினி..பாபா தோல்விக்குப் பிறகு அடுத்த படம் என்னவென்று கேட்ட போதெல்லாம் ‘கதை

சரியாக அமையவில்லை ‘ என்று காரணம் சொன்னவர் சந்திரமுகிக்குப் பிறகு கதை என்னவென்று

தெரியாமலே 20கோடி சம்பளம் பேசி கையெழுத்து போட்டுள்ளார்.காற்றுள்ள போதே சம்பாதிக்க வேண்டும்

என்பதை தவிர வேறு எந்தக் காரணமும் தெரியவில்லை.கடந்த மூன்று வருடங்களாக கதைக்காக

காத்திருந்ததாக கதை விட்டதெல்லாம் எந்த ஆன்மிகமென்று தெரியவில்லை.ஒரு படம் தோல்வி அடைந்தவுடன் இவ்வளவு பயமும் பதற்றமும்,வெற்றி பெற்றவுடன் பரபரப்பும் சந்தோஷமும் ஆன்மிகம் பயிலும் எந்த மனதிலும் காணக்கிடைக்காது.ஆன்மிகம் பற்றி எனக்கொன்றும் தெரியாது.ஆனால் ஒரு நிருபருடனும்,ஒரு புகைப்படக்கலைஞருடனும் இமயமலைவரை சென்று தியானம் பண்ணுவதாக ஒரு புகைப்படம்

எடுத்து அதை பத்திரிக்கைகளில் வரச்செய்வது ‘ஆன்மிகம் இல்லை ‘ என்பது மட்டும் எனது சிற்றறிவுக்குத்

தெரியும்.ஆன்மிகம் என்பது ஆழ்ந்த பக்தி என்றும், ஆழ்ந்த பக்தி என்பது கைம்மாறு கருதாமல் அன்பைச்

செலுத்துவது..என்றும் நான் படித்துள்ள ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன.ஆனால் இவருடைய ஆன்மிகம்.. ?

ஒரு படம் வெளியானவுடன் நன்றாகப் போகவேண்டும் என்று தனக்கு வசதியுள்ளதால் இமயமலை சென்று

சாமி கும்பிட்டுவிட்டு வந்து ஆன்மிகம் என்கிறார்.நமது தாய்மார்கள் திருப்பதிக்குப் போய் மொட்டை

போடுவது போல.இத்துடன் மட்டுமில்லை.என் மீது இவ்வளவு அன்பு வைத்துள்ள இந்த தமிழ் மக்களுக்கு

என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் ? என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் எல்லா மேடை,

பத்திரிக்கைகளிலும் உருகுகிறார்.ஏழை மக்கள் தனது ஒரு நாள் கூலியில் ஒரு டிக்கெட் வாங்கி இவரது சினிமா பார்க்கிறார்கள்.அவர்களது வயிற்றில் அடித்துவிட்டு..என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று

வசனம் வேறு.தான் வாங்கும் கோடிக்கனக்கான பணத்தை தமிழ் நாட்டில் கூட மூதலீடு செய்யாமல்,

வெளியில் நன்றாக முதலீடு செய்துவிட்டு..எச்சில் கையால் கூட காக்கா ஒட்டாமல்..என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று வசனம்..மூன்று மாவட்டங்களை சுற்றி சுழன்று அடித்ததே சுனாமி..எங்கிருந்தோ

வந்த விவேக் ஒபராய் தனது காசை செலவழிக்கவில்லையா..விஜயகாந்த் தனது காசை செலவழித்து

எவ்வளவு நல்ல காரியம் பார்க்கிறார்.தமிழ் மக்களின் காசில் உயர்ந்த வாழ்வு வாழும் ரஜினி

நினைத்தால்,ரஜினி ரசிகர்களில் வருடந்தோறும், ஒரு பத்து பேருக்காவது பொறியியல், மருத்துவம்

போன்ற தொழிற்கல்விகள் படிக்க வசதி பண்ணித்தரலாம்.தன்னை வளர்த்துவிட்ட திரை

உலகத்திற்காகவாது என்ன செய்துள்ளார்.. ?தன்னோடு தோளோடு தோள் சேர்ந்து வளர்ந்த கமல்,

ஹேராம்,மகாநதி,குணா,அன்பேசிவம், மும்பை எக்ஸ்பிரஸ்..என்று தோல்வி அடைந்தாலும்,தான் சம்பாதித்த காசை அதே சினிமாத் தொழிலில்தான் தான் முதலீடு செய்கிறார்.ஆன்மிகத்திற்காகவாது என்ன செய்துள்ளார்.இளையராஜாவின் ‘திருவாசக ‘ வெளியீட்டு மேடையில்,அருள்தந்தை ஜெகத் கஸ்பர்.

திருவாசக இசை ஆல்பம் தயாரிப்பதில் ஏற்பட்ட சிரமமும்,பணக்கஷ்டத்தையும் பற்றி அடிக்கடி

வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம் சொன்னார்.மேடையில் இருந்த ரஜினியிடம் இருந்து ஏதும் உதவி

எதிர்பார்த்திருக்கலாம்.ஆனால் ஆன்மிகவாதி ரஜினியிடம் இருந்தா.. ?ஒன்றும் செய்ய வேண்டாம்.தனது சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு,திரை அரங்கு முதலாளிகளிடம் பேசி குறைந்த கட்டணத்தில், இவரது படங்களை இவரது ரசிகர்கள் பார்க்க ஏற்பாடு செய்யலாம்.விநியோயஸ்தர்கள் வரை நீளும் இவரது

அதிகாரத்தை ,திரை அரங்கு உரிமையாளர்கள் மீறப்போவதில்லை.தனக்கு வாழ்வு தந்த முள்ளும் மலரும் வேணுசெட்டியார் மகன்,முதன்முதலில் இவரை கதாநாயகனாக book பண்ணிய கலைஞானம்,வில்லனில் இருந்து தன்னை வெளிக்கொணர்ந்த பஞ்சு அருணாசலம் போன்ற இவரது வளர்ச்சிக்கு துணை

நின்றவர்களை தூக்கிவிடவாவது இவர்களுக்கு படம் பண்ணிக்கொடுக்கலாம்.இப்படத்திற்கு ‘சிவாஜி ‘ பெயர் வேறு..150 படங்களுக்குப் பிறகு சிவாஜி நடித்ததில் பெரும்பாலானவை, தனது நண்பர்கள், தன்னுடன் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் படங்களில் தான்.தன்னைச் சுற்றி இருப்பவர்கள், தனக்காக உழைத்தவர்கள்,தன் மீது அன்பு கொண்டவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனது தான்

காரணம்.திராவிட இயக்க நாடகங்களில் நடித்ததற்கு ஊதியம் எப்போதும் பெற்றுக்

கொண்டதில்லை என்று கலைஞர் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.சீனப் போரின் போதும் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சிவாஜி வாரி வழங்கிய தொகை கணக்கில் அடங்காது.ஆனால் சிவாஜி வாய் கிழிய ஆன்மீகம் பேசியதில்லை.இதற்கெல்லாம் நல்ல மனசு வேண்டும்..சுனாமி போன்ற சமங்களிலே காணாமல் போனவர் தான் ரஜினி.காசு ஒன்று தான் குறிக்கோள் என்று செயல்படும் ரஜினியிடம் இதெல்லாம்

எதிர்பார்ப்பது கடினம்.முடிந்தால் தனது மனைவிக்கு, தனது பெயரையும்,தனது படம் போட்ட பனியன்,புகைப்படம்,கேஸட் விற்கும் உரிமை கொடுத்து,தனது ரசிகர்களிடம் மீதமுள்ள பணத்தையும் வாங்க ஏதாவது புதிய திட்டம் போடலாம். சம்பாதிப்பது ஒன்று தானே குறிக்கோள்..! வாழ்க ஆன்மிக ரஜினி!

ஷங்கர்..இந்தியத் திரை உலகத்திலேயே அதிக சம்பளமாக 10கோடி வாங்கும் பெரிய இயக்குனர்.

இவரது முதல் படமே இட ஒதுக்கீட்டை எதிர்த்து வந்த படம்.

இட ஒதுக்கீட்டால் பயனடைந்த தமிழ்ச் சமுதாயம்,ஜென்டில்மேனை வெற்றிப்படமாக்கியது விசித்திர

முரண்பாடு.சமீபத்தில் வெளிவந்த அந்நியன் கதாபாத்திரம் செய்யும் கொலை எல்லாம்,நாமம்,பூணூல்

போடாத,சாதாரணத் தவறுகள் செய்யும் சாமான்யர்களை மட்டுமே.சின்னத் தவறுகளை கண்டு கொதிக்கும் மனம் அனைத்தும் நாமம்,பூணூல் போட்டவர்களுக்கே உரியது.சும்மா இருப்பவர்களை தேடிப்பிடித்து

கொல்லும் அற்புதக் கதாப்பாத்திரம் இந்த அந்நியன்மூன்று மாத நடிப்பு வேலைக்கு 20 கோடியும்,

இயக்குவதற்கு 10 கோடியும்,ஷங்கரின் கண்ணில் சுரண்டலாகத் தெரியாது.பிரமாண்டம் என்ற கேலிக்கூத்து

இன்று ஷங்கரின் கைவண்ணத்தில் என்னவாகிறது ?..இரண்டு நிமிடமே ஒடும் ஒரு காலைக் காட்சியில்

கோயில் குளத்தை சுற்றி ஆயிரமாயிரம் விளக்குகள்..இதில் ஏதாவது ‘லாஜிக் ‘ இருக்கிறதா.. ? குறைந்தது

அன்று கார்த்திகைத் தீபமாவது இருந்திருக்க வேண்டும்..அதுவும் முருகனுக்கு உரியது.காட்டப்படும்

கதாபாத்திரங்களோ நாமம் போடும் வைணவர்கள்..இது குறித்து ஏதாவது சிறிய அறிவாவது இருக்க வேண்டும்.பிரமாண்டம் என்ற நோய் இவரை கடுமையாகத் தாக்கியுள்ளது. இல்லை என்றால் ஒரு

பாடலுக்கு,லட்சங்கள் செலவழித்து தெரு,லாரி,பாலம் என்று கண்டபடிக்கு வர்ணம் பூசியிருப்பாரா..

காட்சிக்குத் தேவையான பிரமாண்டங்கள் என்றுமே வரவேற்கப்படுகிறது.ஷங்கர் செய்வது ஒரு வித சைக்கோ பாதிப்பு.. ‘கனாக்காணும் காலங்கள்..நா.முத்துக்குமார்,உன் சமையலறையில் உப்பா,சர்க்கரையா..

கபிலன் போன்ற நல்ல பல்லவியும் பாடல் வரியும் எழுதும் திறமை பெற்ற கவிஞர்களை அழைத்து வந்து

தமிழ் வார்த்தைகளை குறைந்த அளவில் போட்டு,ரெமோ..நோக்கியா..என்று பாட்டு எழுத வைத்து தமிழ்க்

கொலைபுரியும்,தயாரிப்பாளர்களுக்கு தேவையில்லாத செலவு வைக்கும் ஷங்கருக்கு பாடம் புகட்ட எந்த அந்நியனை அணுகுவது என்றுதான் ரசிகர்களுக்கும்,சில தயாரிப்பாளருக்கும் தெரியவில்லை.வாழ்க

ஷங்கரின் சமுதாய அக்கறை!

இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து படம் எடுத்து தமிழ் சினிமாவில் சாதிக்க உள்ளார்கள்..தமிழ்த் திரை

ரசிகர்கள் பாவம்..

1996 தேர்தலின் போது ரஜினி சொன்ன ஒரு வாசகமே இப்பொழுது நமது நினைவுக்கு வந்து

தொலைக்கிறது.. அதே வசனம் தான்..இவர்கள் கூட்டணியில் உருவாகும் சிவாஜி வெற்றி பெற்றால்..தமிழ் சினிமாவை எந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

—-

திசைகள் அ.வெற்றிவேல்

ஜித்தா

சவூதி அரேபியா

vetrivel@nsc-ksa.com

Series Navigation

திசைகள் அ.வெற்றிவேல்

திசைகள் அ.வெற்றிவேல்