இரண்டு தீர்ப்புகள்

This entry is part [part not set] of 22 in the series 20050819_Issue

பரிமளம்


இந்தியாவின் பெரும்பாலான அரசியல் கட்சிகளும், தலைவர்களும் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் காட்டினாலும் தனியார் பொறியியல் மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கையில் அரசு தலையிடக் கூடாது என்னும் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு மிக மிகச் சரியானதேயாகும்.

உயர்ந்துவரும் மக்கள்தொகையோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் மைய மாநில அரசுகள் கல்விக்கும் மருத்துவத்துக்கும் ஆண்டுதோறும் ஒதுக்கும் பணத்தின் விகிதம் குறைவாகும். மக்கள் தொகை பெருகுவதற்கேற்ற விகிதத்தில் பொது மருத்துவமனைகளோ பொதுக் கல்வி நிறுவனங்களோ பெருகவில்லை. இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தைத் தனியார் மருத்துவமனைகளும், தனியார் கல்வி நிறுவனங்களும் தோன்றி நிரப்பிக்கொண்டிருக்கின்றன.

இந்தத் தனியார் அமைப்புகள் வணிக நோக்கத்தில் லாபத்துக்காக நடத்தப்படுபவை. இவற்றிடம் பொது நோக்கத்தை எதிர்பார்ப்பது சரியல்ல. தனியார் மருத்துவமனைகள் ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்தவிலையிலோ மருத்துவம் பார்க்கவேண்டும் என்று அரசு கட்டளையிடுவது எவ்வாறு தவறானதோ அவ்வாறே தனியார் கல்வி நிறுவனங்கள் அரசால் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கவேண்டும் என்று கட்டளையிடுவதும் தவறாகும். இந்த வகையில் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

இந்திய மைய மாநில அரசுகள் மக்களுக்கு இலவச, இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் அமைந்த கல்வியை வழங்குவதாக அறிவித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் இதை நிறைவேற்றுவதற்கு இந்த அரசுகள் பணத்தைச் செலவிடத் தயாரில்லை. அதற்குப் பதில் ?கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் கதையாக ? தனியார் கல்வி நிறுவனங்களின் இடங்களை அபகரித்து மாணவர்களுக்குக் கொடுத்து வெகு புத்திசாலித்தனமாகத் தாமே கல்வியை வழங்குவதுபோல ஒரு பாவனையைக் காட்டிக்கொண்டிருந்தன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த வழிப்பறிக்கு முடிவு கட்டுவதாக இருக்கிறது.

இந்தத் தீர்ப்பால் ஏழைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பது பலரின் முக்கியமான கவலை. (வல்லரசான இந்தியாவில் ஏழைகள் இருக்கிறார்கள் என்று சொன்னால் பல NRIக்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள்) இந்தத் தீர்ப்புக்கு முன்னரும் அரசுக்கல்விக் கூடங்கள் உட்பட எந்தக் கல்வி நிறுவனத்திலும் ஏழைகளுக்கென்று இட ஒதுக்கீடு இருப்பதாகத் தெரியவில்லை. சாதியும், கல்வித் தகுதியுமே இட ஒதுக்கீட்டுக்கு அடிப்படையாக இருக்கின்றன. இந்த இரண்டு தகுதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பலர் ஏழைகளாக இருக்கின்றனர். அவர்களால் ஓரளவு படிப்பைத் தொடர முடிந்தது. புதிய தீர்ப்பால் இவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பது உண்மையே.

ஏழைகளுக்குக் கல்விக்கான வாய்ப்புகள் அளிக்கப்படத்தான் வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பை வழங்கும் கடமை அரசுக்கு உண்டேதவிர தனியாருக்கு இல்லை. எனவே போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எதிராகப் போராடுவது தவறான மரத்தை நோக்கிக் குலைப்பதாகிவிடும்.

நீதிமன்றத்திலோ அல்லது மக்கள் மன்றத்திலோ நிறுத்தப்படவேண்டியது கல்வியை வழங்காத அரசே தவிர தனியார் நிறுவனங்களல்ல.

இதற்கு எவ்வாறுதான் முடிவு காண்பது ?

தற்போதைய நிலையே தொடரும் வகையில் புதிய சட்டமியற்றி உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செல்லாததாக்கலாம் என்று யோசனை முன்வைக்கப்படுகிறது. இப்படி ஒரு சட்டம் இயற்றப்படுமானால் அது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாகவே இருக்கும் என்பதால் இப்படி ஒரு சட்டத்தை இயற்றுவது இயலாது என்றே நினைக்கிறேன். அதோடு இப்படிப்பட்ட சட்டம், ?கல்வியை வழங்குவது ? என்ற தன் அடிப்படைக் கடமையிலிருந்து நழுவிக்கொள்ள அரசுக்கு ஒரு வழியேற்படுத்திக் கொடுப்பதாக அமைந்துவிடும்.

மேலும் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்க அனுமதி தரலாம். நிறுவனங்கள் அதிகமானால் கட்டணங்கள் குறையலாம்.

தன் கடமையை உணர்ந்து அரசே பல கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்கலாம். அல்லது உதவி தேவைப்படும் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்ளலாம். (அணுகுண்டு தயாரிப்பதில் காட்டும் ஆர்வத்தை இந்தியா இதில் காட்டப்போவதில்லை)

இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் குரல்கொடுத்து, ஏழைகளுக்காகக் கண்ணீர் வடிக்கும் கட்சிகளும் தலைவர்களும் தமிழகம் முழுவதும் கிராமங்களுக்கு அருகில் பல கல்விக் கூடங்களைத் தொடங்கி ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ கல்வியை வழங்கலாம்.

இதில் எதுவும் நடக்கப்போவதில்லை. இரண்டு நாட்கள் இதைப்பற்றி எல்லாரும் பேசிக்கொண்டிருப்போம். பிறகு எல்லாம் மறந்துபோக அதனதன் போக்கில் எல்லாம் போகும்.

***

கல்வி வியாபாரமாகிவிட்டது என்பது பலரது கவலையாக இருக்கிறது. ஏன் அப்படி வியாபாரமாகக் கூடாது என்பதுதான் புரியவில்லை. கல்வி வியாபாரம்தான். அப்படி வியாபாரமாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. தனியார் கல்வி நிறுவனங்கள் பணங்கொழிக்கும் இயந்திரங்களாக மாறிவிட்டாலும் இவற்றால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்பதை மறுக்கவியலாது. (ஆனால் வழங்கப்படும் ஊதியத்தைப் பற்றி என்ன சொல்ல… ?)

அதுபோலவே மாணவரின் ஆற்றலையும் பண்பாட்டுணர்வையும் ஒழுக்கத்தையும் மேம்படுத்துவதான் கல்வி என்றும் பலர் கூறுகின்றனர். இது, கல்வியானது நல்ல ஊதியத்தைப் பெற்றுத்தரக் கூடிய ஒரு தகுதியை மாணவருக்கு வழங்குவதேயன்றி வேறில்லை என்னும் நடைமுறையைக் காண மறுக்கும் குருடர்களின் ஒப்பாரியே தவிர வேறில்லை. பண்பாட்டை வளர்ப்பது கல்வியின் முதன்மைப் பணி அல்ல என்பதை இந்த ஒழுக்க சீலர்கள் உணர்ந்தால் நல்லது.

ஓஓஓ

‘நியூ ‘ படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்தியா ஒரு ஜனநாயக நாடல்ல என்பதற்கு இதுவும் ஒரு சான்று. அவமதிப்புக் குற்றத்துக்கு ஆளாக நேரிடலாம் என்பதால் இதற்குமேல் இதுபற்றிக் கூற விருப்பமில்லை. (தணிக்கைக்குள்ளான காட்சிகளைத் திரையிடுவது தவறு என்பது இதற்குத் தொடர்பில்லாதது)

திரைப்படங்களை (அல்லது வேறெந்தக் கலையையும்) தணிக்கைக்கு உட்படுத்துவது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது. பார்வையாளர்களின் வயதுக்கேற்பத் தரம்பிரித்துப் படங்களுக்குச் சான்றிதழ்களை வழங்குவதே நல்லது. மருத்துவர் ராமதாசோ அல்லது அவரைப்போன்ற மற்றவர்களோ திரைப்படங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும்போது நமக்கு எரிச்சலாக இருக்கிறது. ஆனால் அதே செயலைத் தணிக்கைக் குழுக்கள் செய்யும்போது (அதில் உள்ள பலர் கட்சி ஆட்களே) நாம் வாய்மூடி இருப்பது சரியல்ல.

இந்தத் தடைக்காக வழக்கு தொடுத்து வாதாடி வென்றவர் திக பேச்சாளர் அருள்மொழி என்பது மிகுந்த வியப்பை அளிக்கிறது. ஈவெராமசாமியின் போராட்டத்தை வெறும் பார்ப்பன எதிர்ப்பாகக் குறுக்கிக் கொள்பவர்கள் அவரது எதிரிகள் மட்டுமல்லர் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. எனக்குத் தெரிந்த ஈரோட்டு ராமசாமி இப்படிப்பட்ட படங்கள் நிறைய வரவேண்டும் என்று விரும்புபவராவே இருப்பார்.

திரைப்படத்திலோ அல்லது விளம்பரங்களிலோ அல்லது புகைப்படங்களிலோ தன் உடம்பின் எந்தப்பகுதியை எப்படிக் காட்டலாம் என்று முடிவு செய்யும் உரிமை ஒரு பெண்ணுக்கே உண்டு. அப்படிக் காட்டக் கூடாது என்று எழுப்பப்படும் எந்தவிதமான தடையும் தண்டனைகளும் ஆர்ப்பாட்டங்களும் பெண்ணுரிமைக்கு எதிரானவை. பெண்ணுக்குச் சொந்தமான விருப்பு வெறுப்புகள், உணர்வுகள், எண்ணங்கள் எல்லாவற்றையும் நசுக்கி நாசப்படுத்தும் சமூகம் அவளுக்குச் சொந்தமான உடம்பின் மீதும் கட்டுப்பாடுகளை விதித்து அவளை முழு அடிமையாக்கி வைத்திருக்க்ிறது. உடைகள் பெண்களின் விலங்குகள். இந்த விலங்கை உடைத்தெறிவதில் முன்னோடிகளாக இருக்கும் இந்திய நடிகைகள் புரட்சியாளர்கள். இவர்களை வாழ்த்தி வணங்குவோம்.

—-

janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்