தேறுமா என் தேர்தல் அறிக்கை ?

This entry is part [part not set] of 22 in the series 20050819_Issue

திருதிருக்கை


வரஇருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூஸ்தீப்புகள் முனைப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய சுழலில் எந்த மாதிரியான தேர்தல் அறிக்கை மக்களுக்கு தேவை,என்பதை காட்டும் ஒரு மாதிரி தேர்தல் அறிக்கை. தேறுமா என் தேர்தல் அறிக்கை. கிழ்க்கண்டவற்றை செய்ய, செய்ய நினைப்பதோ, வேட்பாளராகும் தகுதிகளாகும்!!!!

• அரிசியில் கல்

அரிசியில் கல் கலப்படம் செய்வதை தடுத்து கடும் சட்டம் இயற்றப்படவேண்டும். துறை அமைச்சர்கள், அதிகாரிகள் கடைகள்தோறும் சென்று அரிசியை நீரில் நனைத்து கல் உள்ளதா என ஆராய்ந்து புலனாய்வை மேற்கொள்ள வேண்டும். இந்த மாதிரியான சோதனைகள் ஆண்டு முழுவதும் வழக்கமான ஒரு நடைமுறையாக செயல்படவேண்டும். கல் நீக்கப்பட்ட அரிசி என்ற ஒரு ரகமே இல்லாமல்,எல்லா அரிசியுமே கல் இல்லாத அரிசியாக செய்யவேண்டும்.

• இறைச்சி கடை வைப்பவர்களுக்கு லைசென்ஸ் முறையை அமல்படுத்தி, யாரிடமிருந்து வாங்கப்பட்டது,என முறையான ரிக்கார்டு வைத்திருத்தல் அவசியமாக்குதல். தற்பொழுது மாமிச உணவுகளின் வழியாக வியாதிகள் பரவும் சுழலில் இந்நடைமுறை மிகவும் அவசியமாகிறது. இறைச்சிக் கடை கழிவுகளை அகற்றும் முறைகளை மேம்படுத்துதல். தற்போது யார்வேண்டுமானலும், ஞாயிற்றுக்கிழமைகளில் கடை திறக்கின்றனர்.

• பஸ் ஸ்டாண்டுகளில் இருக்கும் கழிப்பிட வசதிகள் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக உள்ளன. இவைகள் சீர்திருத்தம் செய்யப்பட்டு, நல்ல நிலைமையில் இருக்க, தனியாரிடம் சில கட்டுப்பாட்டுடன் விடுவது நல்லது.

• விவசாய மற்றும் கட்டிட தொழிலாளர்களுக்கு கட்டாய Bar code அடையாள அட்டை.

• அனைத்து பள்ளி மாணவர்களும் ஆண்டுக்கொருமுறை கல்விச் சுற்றுலா சென்று வர மானிய உதவியால் அரசு பஸ்கள் வழங்கப்படவேண்டும். கட்டாய சுற்றுலா திட்டம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு வருட படிப்பு முடிவதுடன் இன்ன இன்ன இடங்களை சுற்றிப் பார்த்திருக்கவேண்டும் என்ற திட்ட அளவு.

• GPS, செல்போன், கம்யூட்டர் Barcode கார்டுகளின் மூலம் விரைவுப்பேருந்து நகர்தலை ஒவ்வொரு பஸ்ஸ்டாண்டிலும், இணைய தளத்திலும் பார்க்கும்படி வசதி செய்தல். இதனால் நீண்ட தொலைவு பயணம் செய்யும் பயணிகளின் மனக்கவலை சிறிது குறையும். இதற்கான கணிப்பொறி நெட்வொர்க் அமைத்தல்.(இந்த வசதி இரயில்வேயில் முன்னமே உள்ளது). இதன் மூலம் எதாவதொரு பஸ் பிரேக்டவுன் ஆகிவிட்டால் இப்பொழுது உள்ளது போல அடுத்து வரும் பஸ்ஸில் நின்று கொண்டு செல்லாமல், மாற்று பேருந்து விரைந்து அனுப்ப வழி கிடைக்கும்.

• Latitude, Longitude and MSL அளவுகளை ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் அமைத்தல். மலைப்பிரதேசங்களில் இதுபோல ஏற்கனவே உள்ளது.

• பஸ் ஸ்டாண்டு கீப்பர் என்ற பதவியின் மூலம் பஸ்ஸ்டாண்டின் வசதிகளை 24 மணிநேரமும் கண்காணித்தல்.

• மினரல் வாட்டரில் உள்ள specification எப்படி மாறுபடுகின்றன என்பதை உறுதி செய்தல்.

• சட்டமன்ற தேர்தலின்போது 30% சதவீத பெண்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தல்.

• ஆபாச இணைய தளங்களை தடுத்து நிறுத்தும் வகையில் மசோதா நிறைவேற்றல்.

• நீர்வளம் குறைவதை தடுக்க நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த விதிமுறைகள், ஒவ்வொரு ஆழ்துளைக்கிணறு அமைக்கும்போதும் அதன் ஆழ விவரங்கள் நகராட்சியால் பதிவு செய்யப்படல்.

• நீர்பிடிப்பு பகுதிகளில் மினரல் வாட்டர் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்க தடை விதித்து, அதிகமாக மழைபொழிவு உள்ள பகுதிகளில் அதிகளவு மழைநீரை, ஆழ்துளை கிணறுகளின மூலம் நிலத்தடியில் பாறைப்படிவுகளினிடையே சேகரித்தல்.

• அரசு மருத்துவமனைகள் கணிப்பொறிமயமாக்கப்பட்டு, முறையான விவர சேகரிப்பு மற்றும் நோயாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படவேண்டும். 8 மணி நேரத்திற்கும் அதிகம் பணிபுரிய நேர்ந்தால் அதிகநேரம்(overtime) வழங்க வழி செய்வது.

• அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனைகளில் பணிபுரிய தடைவிதிப்பது, அல்லது தனியாக மருத்துவமனையில் பணிபுரிந்தால் ஆண்டுக்கு ஒருமாதம் தாமாகவே முன்வந்து சம்பளம் இல்லாமல் கிராமப்புறங்களில் பணிபுரிய ஒத்துக்கொள்வது.

• பெற்றோர்கள் தாங்கள் விரும்பாவிடில் சாதிப்பெயரை TC ல் குறிப்பிடாமல் விடும் வசதி. சாதிப்பெயர்களுக்குப் பதிலாக Barcode முறையை அமல்படுத்தும் வசதி. சாதிவாரியான வகுப்பு வித்தியாசங்களை நீக்க, முதல் படிக்கட்டாக, ஒன்றாம் வகுப்பில் சேர்க்கும்போது, பெற்றோர் என்ன சாதி என்று கேட்கும் கொடுமையை இது அறவோடு ஒழிக்கும்.

• ஒவ்வொரு ஊருக்கும் மின்னணு வரைபடம் தயாரித்தல்.

• திரும்ப அழைத்தல் முறை – ஒரு சட்டமன்ற உறுப்பினரின் 5 ஆண்டு பதவிக்காலத்தில் அவர் சரிவர பணிபுரியவில்லை என்றால் அவரை திரும்ப அழைத்துக்கொள்ள வழிவகைகள் இல்லை. ஆதலால் இரண்டரை ஆண்டு முடிவு காலத்தில், அவரது பணி நிறைவு தருகிறதா ? இல்லையா என ஆராய ஆம்/இல்லை என்ற வாக்குப்பதிவு நடத்தி, ஆம் என்று கிடைத்தால், அவர் மேற்கொண்டு பணிபுரிய அனுமதிப்பதும், இல்லை என்று வந்தால், சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் இடத்தை பிடித்தவரை எம்எல்ஏ ஆக்குவதும் நடைமுறைப்படுத்தல். இந்த நடைமுறையால் ஆட்சியின்மீது உள்ள பயம் காரணமாக உறுப்பினர்கள் மக்களுக்காக பணிபுரிய தொடங்குவர்.

• நகர்தோறும் சமுதாயப்பூங்காக்களை அமைத்து, அவ்வப்பகுதி மக்களையே பொறுப்பேற்கச் செய்வது.

• ஓட்டுப்போடும் போது, போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளருக்கும் ஓட்டுப்போட இஷ்டமில்லை எனில், அதை ஓட்டுச்சீட்டில் பதிவு செய்யும் வசதி.

• பொறியியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு அரசு ஒப்பந்த பணிகளை வழங்குவதில் முன்னுரிமை அல்லது கல்லூரி மாணவர் சங்கங்களில் வணிக பிரிவை ஏற்படுத்தி அவற்றுக்கு ஒப்பந்த பணிகளை அளித்தல்.

• அரசு பல்கலைக்கழங்களை, புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் வருவாய் ஆதாரங்களை பெருக்க முனைப்பு.

• தமிழகம் முழுவதும் மின்சார ஒயர்களை கம்பங்களிலிருந்து மாற்றி கேபிள் மயமாக்குதல், மின்சார மீட்டர்களை டிஜிட்டல்மீட்டர்களாக மாற்றுவது.

• பேருந்து மையங்களில் பயணிகள் வரிசையில் நின்று பஸ்ஸில் ஏற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விளம்பரங்கள்.

• சுற்றுலாத்தளங்களான குற்றாலம் மற்றும் திருச்செந்னர் முதலிய மக்கள் அதிகம் குளிக்கக்கூடிய நீர்வீழ்ச்சி, கடற்கரை பகுதிகளில் 24 மணிநேர உயிர்மீட்பு படை அமைக்கப்பட்டு நீரில் தவறி முழ்குபவர்களின் உயிரைக்காப்பது.

• குற்றாலம் முதலிய சுற்றுலாத்தலங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சோப்பு, ஷாம்பு மற்றும் துணிதுவைக்கும் டிடர்ஜெண்ட் பெருமளவில் உபயோகிக்கப்படுவதால், குற்றால ஆற்று நீரின் பாசன விவசாயிகளின் விளைநிலங்கள் பாழகிப்போவதை பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். இதனை தவிர்க்கும்பொருட்டு செயற்கை குளியல் சோப்புகளைத் தவிர்த்து,எண்ணெய், சீயக்காய், அரப்புத்தூள் போன்ற மட்கிப்போகக்கூடிய இயற்கை பொருட்களை உபயோகிக்கும்படி உத்தரவு பிறப்பித்தல்.

• சுற்றுலாத்தலமான முக்கொம்பு பகுதியில் சில இடங்களில் மணல் புதைகுழிகள் உள்ளன. இவை பலநூறு உயிர்களை இதுவரை பலிகொண்டுள்ளன. இதனைத் தவிர்க்கும் பொருட்டு இந்த இடங்கள் கான்கீரிட் தளங்கள் அமைக்கப்படுமாயின் இத்தகைய துர் மரணங்கள் தவிர்க்கப்படும்.

• பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்து தேர்தல்களில் அனைத்துக் கட்சியினரின் பொது தலித் வேட்பாளரை நிறுத்தி சாதிய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அனைத்துக்கட்சியினரும் முன்வரவேண்டும்.

****

thirukkai@gmail.com

Series Navigation

திருதிருக்கை

திருதிருக்கை