மோடிக்கு விசா மறுக்கப்பட்டது நல்ல விஷயம்தான்

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

அரவிந்தன் நீலகண்டன்


கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை திரு.கருணாநிதி ஆரம்பித்த இடம் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கிராமத்து பூசாரிகள் மாநாட்டின் மேடை. அந்த தேர்தலில் ஹிந்து விரோத நிலைபாட்டினை தெளிவாக எடுத்தவர் செல்வி.ஜெயலலிதா. இஸ்லாமிய மாநாடுகளிலும் கிறிஸ்தவ பாதிரிகளுக்கு எழுதிய கடிதங்களிலும், அம்மையார் தமது மதச்சார்பின்மை வேடத்தை நன்றாகவே போட்டார். பின்னர் தேர்தலில் திமுக-பாஜக-பாமக-மதிமுக கூட்டணியை அஇஅதிமுக-தமாக-காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டணி தோற்கடித்தது. அதன் பின்னர்தான் கருணாநிதியின் ஹிந்து தர்ம எதிர்ப்புணர்ச்சியின் தற்போதய சுழல் தொடங்கியது. பாஜகவையும் இதர ஹிந்து இயக்கங்களையும் சீண்டும் போக்கினை தொடங்கினார். கருணாநிதியின் நள்ளிரவு கைதை பாஜக கண்டித்த அதே நேரத்தில் காங்கிரஸின் மணிசங்கர் ஐயர் ‘கருணாநிதி காது முதல் காது வரையான புன்சிரிப்புடன் வந்து ‘ பின்னர் நாடகம் போட்டதாக நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில் எழுதினார். ஆனால் அதெல்லாம் அவமரியாதையாக தெரியாத கருணாநிதிக்கு திமுக பங்கு பெற்ற மத்திய அரசினை திமுகவே எதிர்ப்பதை கண்டித்த வெங்கையா நாயுடுவின் பேச்சு பெரிய அவமதிப்பாக போகிவிடவே அவர் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறினார். கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தை கண்டித்தார். ஹிந்து என்றால் திருடன் என்றார். திமுக அமைச்சர் பாலு ‘ஹிந்து என்பதற்காக அவமானப்படுகிறேன் ‘ என கிறிஸ்தவ மதமாற்றி ஒருவரின் கூட்டத்தில் பேசினார். அந்த கிறிஸ்தவ மதமாற்றி நாங்கள் கூடி ஜெபித்ததால்தான் பாஜக தோல்வியுற்றது என்றார். மேடையில் திமுக அமைச்சர் காத்த மவுனத்தில் பகுத்தறிவு பகலவன் பிரகாசித்தது. செல்வி ஜெயலலிதா கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை கொண்டுவந்த போதே அவரது அமைச்சர்கள் ஊர் ஊராக பாதிரிகளையும் இன்னபிற மதமாற்றிகளையும் சந்தித்து ‘ஒருவர் கூட இந்த சட்டத்தின் மூலம் கைது செய்யப்படவில்லை பார்த்தீர்களா ‘ என்று கூறிவந்தனர். பின்னர் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியின் பின்னர் இச்சட்டம் திரும்பப் பெறபட்டது. (கடந்த ஐந்தாண்டுகளில் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை முதன்முதலில் தமது மாநிலத்தின் அமுல்படுத்திய மாநில அரசு எது என்று உங்களுக்கு தெரியுமா ?) ஆக தமிழ்நாட்டு அரசியலில் நடந்துவருவது என்ன ? ஹிந்து விரோத சக்திகளால் வாக்கு வங்கிகளை ஏற்படுத்தமுடிந்த அளவுக்கு ஹிந்துத்வ சக்திகளால் ஏற்படுத்தமுடியவில்லை. இன்றைய தேதியில் கிறிஸ்தவ திருச்சபைகளும் வகாபி இயக்கங்களும் அவற்றின் கைப்பாவைகளாக/கைக்கூலிகளாக செயல்படும் இடதுசாரி இயக்கங்களும் தமிழ்நாட்டில் உருவாக்கியுள்ள வாக்குவங்கிகளின் பலம் அரசியல்வாதிகளுக்கு தேவைப்படுகிறது. அவையே தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சரை நிர்ணயிக்கின்றன. எனவே ஹிந்து வாக்குவங்கியின் வக்கற்றத்தன்மை அரசியல்வாதிகளுக்கு தெளிவாகவே தெரிந்த பின்னர் ஹிந்து உணர்வுகளை அவர்கள் கிஞ்சித்தும் மதிக்கவேண்டியதில்லை. புல்டோசர்கள் ஹிந்து கோவில்களை இடிக்கலாம்; ஹிந்து மதத்தலைவர்கள் மீது எந்த பழியையும் சுமத்தலாம்; ஹிந்து தெய்வங்களை புண்படுத்தலாம்; இன்னும் தெளிவாக சொன்னால், இப்படியெல்லாம் செயல்படாமல் இருந்தால் நிழல் எஜமானர்கள் தூக்கி எறியும் எலும்புத்துண்டுகள் கிடைக்காது. தனிப்பட்ட முறையில் இந்த அரசியல்தலைவர்கள் ‘யோகாவையோ ‘ ‘ஓஷோவையோ ‘ பாராட்டிவிட்டால், அல்லது திருமந்திரத்தை மேற்கோள் காட்டிவிட்டால் – ‘ஆகா நம்ம தலைவர் என்ன இருந்தாலும் உள்ளுக்குள்ள ஹிந்துதாம்பா ‘ என்று ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான். அரசியல் வாழ்க்கை என்று பார்த்தால் இந்த திராவிட பாரம்பரிய பச்சோந்திகளின் காவி வெறுப்பு ஒரு புத்திசாலித்தனமான அரசியல் மேதமைதான். இதுவேதான் இப்போது அகில உலக அளவில் நடந்துகொண்டிருக்கிறது.

அமெரிக்கா மோடியின் விசாவினை இரத்து செய்தது. ஒருவிதத்தில் -முழுக்க முழுக்க அமெரிக்க பார்வையில் அதன் சர்வதேச உக்தி என்கிற முறையில் இது அட்டகாசமான ஒரு முடிவு. படு மேதமையானது. நான் ஒரு அமெரிக்கனாக மட்டுமே இதைப் பார்த்தால், புஷ் நிர்வாகத்தை பாராட்டுவேன். நியாய-அநியாயங்களை குறித்தல்ல; ராஜதந்திரத்தை குறித்து. மோடியினை எவ்வித ஆதாரமும் இன்றி ஹிட்லருடன் ஒப்பிட்டவர்கள் யார் ? போலி-மதச்சார்பற்ற அரசியல்வாதிகள்; மோடி அரசின் போலிசார் சுட்டதில் இறந்தவர்களில் 80 சதவிகிதம் ஹிந்துக்கள் என்பதனை ராஜீவ் அரசின் சீக்கிய படுகொலைகளில் நடந்த அரசு இயந்திர கையாலகாத்தனம் அல்லது கலவரக்காரர்களுடன் கூட்டுசேர்ந்த விதம் என்பதுடன் ஒப்பிட்டு பாருங்கள். குஜராத்தில் நடந்தது கலவரமே – ஓரளவு ஹிந்துக்களின் கை ஓங்கியிருந்த கலவரமே ஒழிய அது 1984 இல் மதச்சார்பற்ற இடதுசாரி சோஷலிஸ்ட் கட்சியான காங்கிரஸால் நடத்தப்பட்ட சீக்கியருக்கு எதிரான இனப்படுகொலை போன்றதில்லை என்பதை நினைவுபடுத்த வேண்டுமெனில் மீண்டும் ஒருமுறை பழைய தி ஹிண்டு போன்ற பத்திரிகைகளிலேயே 2002 பிப்ரவரியிலும் மார்ச்சிலும் வந்திருந்த செய்திகளை (செய்தி விமர்சனங்களை அல்ல) படித்து பாருங்கள். காலச்சுவடு போன்ற பத்திரிகைகளில் படுமோசமான நம்பகத்தன்மையற்ற வதந்திகளைக் கூட தகவல்களாக பிரசுரித்திருப்பதை பாருங்கள்; ஹிந்து குழந்தைகள் கூட இஸ்லாமிய வெறுப்புடன் இருப்பதாக வெளியிடப்பட்ட அம்பை என்கிறவரின் கதையை படித்து பாருங்கள். அதே நேரத்தில் பல இடங்களில் இஸ்லாமியர்களை காப்பாற்ற சென்ற பாஜக தலைவர்களே தாக்கப்பட்ட செய்திகளை (மிகச்சிறிய செய்திகளாக வெளிவந்த இவற்றை) முடிந்தால் கண்டுபிடித்து படியுங்கள். ஒதுக்கப்பட்ட காட்டுநிலங்களின் பங்களா தேவதை (Goddess of Reserved Forest illegal Bungalows ) குஜராத் குறித்து பச்சைபொய்யை எழுதி பின்னர் மன்னிப்பு கேட்டது ஊடகங்களில் மறைக்கப்பட்டதை பாருங்கள். இதன் பின்னர் குஜராத் மதக்கலவரமா அல்லது இனப்படுகொலையா அல்லது ஊடகப்போரா என்பதனை முடிவு செய்யுங்கள். இந்த ஊடகப் பானிபட் போரில் நிச்சயமாக ஹிந்துக்கள் தோல்வியடைந்தனர். 2004 தேர்தல் தோல்வி ஒரு உண்மையை உலகிற்கு கூறியது. அரசியல் ஹிந்துக்கள் (political Hindus) அவர்கள் சொந்த தேசத்திலேயே நிச்சயமாக ஒரு வலுவற்ற சக்தி. அருகாமையிலுள்ள பங்களாதேஷில் தங்கள் சொந்த சகோதரர்களின் இனப்படுகொலையை தடுக்கமுடியாத -ஏன் நடக்கும் மிகத்தெளிவான இனத்துடைத்தெடுப்பை உலக மக்களுக்கு எடுத்துச்சொல்லக்கூட வலுவற்ற – ஒரு கூட்டம். எனவே அவர்களை நம்புவதை விட பாகிஸ்தானை நம்புவது நல்லது என்கிற முடிவுக்கு புஷ் நிர்வாகம் வந்திருந்தால் அது தவறென நாம் எவ்வாறு கூறமுடியும். கடந்த இருபது வருடங்களில் மிகத்தெளிவான இனத்துடைத்தெடுப்பு நடந்த பிரதேசங்கள் காஷ்மீரும் பங்களாதேஷும் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும். ஆப்கானிஸ்தான் ஹிந்துக்களுக்கு எதிரான கொடுமை முதன்முறையாக ஆவணப்படுத்தப்பட்டது டாக்டர்.அம்பேத்கார் அவர்களால். ஆனால் ஹிந்துக்களுக்கோ ‘எல்லை காந்தி ‘ தலைமையிலான ‘குழந்தைத்தனமான பத்தான்கள் ‘ என்கிற ஒரு சித்திரம் வழங்கப்பட்டது. அவர்கள்தான் பின்னர் குடும்பங்களையும் வர்த்தக நிலையங்களையும் சூறையாடினார்கள். தலிபான்களுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான் ஹிந்துக்களை அடையாள அட்டை அணியக்கூறினார்கள். அதனைக்கூட நியாயப்படுத்த ஒருகூட்டம் இந்தியாவில் இருந்தது. ஏன் அடுத்தவாரம் கூட திண்ணையில் யாராவது ஒரு வகாபி அதனை நியாயப்படுத்தலாம். அதற்கு ஒரு இடதுசாரி முற்போக்கு ஒத்தூதலாம். ஆனால் இதற்காகவெல்லாம் யாரும் முகைதீன்களையோ அல்லது முஷாரப்பையோ அல்லது பங்களாதேஷின் இனப்படுகொலையில் பாகிஸ்தானி இராணுவத்துடன் ஈடுபட்ட ஜாமியா இஸ்லாமியாகாரர்களையோ -அவர்களில் சிலர் தற்போது அமெரிக்காவிலேயே வசிக்கின்றனர்; ஆப்கானிஸ்தானிய முகைதீன்களை சிஐஏ வளர்த்த போது சில வசதிகளுக்காக இவர்களுக்கு அமெரிக்காவில் வாழ வசதி செய்துதரப்பட்டது- யாரும் விசா மறுக்கவில்லை. ஆனால் மோடி ? இந்திய மதச்சார்பின்மைகளின் புரட்டுகளை தென்-ஆசியாவில் தனது ராஜதந்திர செயல்பாட்டுக்காக அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்காவில் வாழும் ஹிந்து அமைப்புகள் சில தளங்களில் செயலின்மையுடன் விளங்கியுள்ளதையும் இது காட்டுகிறது. தமது அரசியல் இலாபங்களுக்குச் செய்யப்படும் பொய் பிரச்சாரங்கள் எவ்வாறு அந்நிய நாட்டினால் பாரதத்தின் உள்விவகாரங்களை ஒருசார்புத்தன்மையுடன் சர்வதேசமயமாக்கப் படமுடியும் என்பதயும் இது காட்டுகிறது. இதில் அமெரிக்காவையையோ அல்லது ஹிந்து-விரோத, பாரதத்துரோக இடதுசாரிகளையோ அல்லது தோலால் மட்டுமே இந்தியர்களையோ குறைச்சொல்லி பிரயோஜனமில்லை. ஒருவிதத்தில் இது பாரதத்தின் உண்மைச் சிறுபான்மையினரான அரசியல் விழிப்புணர்வு கொண்ட ஹிந்துக்களுக்கு சேவலின் ‘கொக்கரக்கோ ‘ தான்.

—-

இந்த உலகின் இறுதி ஆபிரகாமிய மார்க்கம் ஏற்கா பெரும் மக்கள் ஹிந்துக்கள் – the last pagans. அவர்களது அரசியல் தலைவர்களின் நெடுநோக்கு பார்வையின்மையால் இன்று அவர்கள் அனைத்துவித சக்திகளாலும் பிரித்தழிக்கப்பட்டுவருகின்றனர். இந்த அழிவு முதலில் மெதுவாகவும் பார்வைக்கு தெரியாததாகவும் இருக்கும். ஆனால் இறுதியில் அதன் பிடி நெருக்கி நாம் அழிபடும் போது – பாகிஸ்தானிய சிந்திகளை போல, திரிபுராவின் ஜமாத்தியாக்களை போல, திபெத்தியர்களை போல, காஷ்மீரின் பண்டிட்களை போல பங்களாதேஷின் சக்மாக்களையும் தலித் ஹிந்துக்களையும் போல- உலகம் நமக்காக பேசப்போவதில்லை. மிசோரமில் ஏசுவின் அன்பால் அடித்து விரட்டப்பட்டு திரிபுராவில் மிருகங்கள் கூட வாழக்கூசும் அகதி முகாம்களில் தினமும் இறக்கும் இரண்டு ரியாங்கு குழந்தைகளைப் போல,நம் குழந்தைகள் அகதிமுகாம்களில் வயிற்றிழிவு நோயால் அழியும் போது எவரும் நமக்காக கண்ணீர் சிந்த போவதில்லை. ஒருவேளை கிறிஸ்தவராக நீங்கள் முற்பட்டால் உங்கள் குழந்தை காப்பாற்றபடலாம். அல்லது தெருவோரமாக துணிவிற்கும் திபெத்திய பெண்ணைப்போல உங்கள் குழந்தை அனைத்துவித தொந்தரவுகளுக்கும் ஆளாகி அவதிப்படும் போது ஏசி அறையில் குந்தி பெண்விடுதலை கதையளந்து பின்னர் ஜாமியா இஸ்லாமின் கண்காட்சியில் அகமகிழ்ந்து சமரசம் பத்திரிகையில் புகைப்படமாக வருவதில் மனம் மகிழும் மகளிர் மாதரசிகளும் கண்ணீர் என்ன மூக்கைக்கூட சிந்த போவதில்லை. இன்னமும் நேரம் கடந்துவிடவில்லை. விசா மறுப்பினால் மோடி கோடி குஜராத்திகளின் மனதிற்குள் சென்றுவிட முடிந்ததென்கிறது இந்தியா டுடே. என்று 100 கோடி ஹிந்துக்களின் உள்ளங்களுக்குள்ளும் ஹிந்துத்வம் குடியேறுமோ அன்றுதான் உலகமெங்கும் நாம் மதிக்கப்படுவோம். சில்லறை அரசியல் விளையாட்டுகளில் நமது தேசிய உணர்வுகளும் நம் சந்ததியினரின் வருங்காலமும் பகடைக்காய்களாகாது.

[பின்குறிப்பு: இக்கட்டுரையில் இனம் எனும் பதம் race எனும் பொருளில் பயன்படுத்தப்படவில்லை. மக்கள் கூட்டம் எனும் பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.]

—-

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்