பாகிஸ்தானில் விற்கப்படும் இரானியப் பெண்கள்

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

ஆசாரகீனன்


ஒவ்வொரு நாளும் குறைந்தது 54 சிறுமியரும், இளம் பெண்களும் அடிமைகளாக விற்கப்படுகின்றனர். இரானைச் சேர்ந்த இந்தப் பெண்கள் பாகிஸ்தானுக்குக் கடத்திச் செல்லப்பட்டு, கராச்சி நகரத் தெருக்களில் விற்கப்படுவதாக சமீபத்தில் கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

இதுவரை குறைந்தது மூன்று லட்சம் இரானிய இளம் பெண்களாவது காணாமல் போயுள்ளதாகவும் இந்தப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இரானில் சுமார் 80 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் வறுமையில் வாடுவதாகவும் தெரிகிறது.

‘இரானின் நிர்வாகப் பணிகளில் இரண்டு சதவீதத்துக்கும் குறைவான பெண்களே இடம் பெற்றிருப்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன ‘ என்கிறார் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய மூத்த ஆய்வாளர் மெஹபூபே மொக்ஹதம் (Mahboubeh Moghadam).

’16 முதல் 25 வயது வரையுள்ள இரானியப் பெண்களில் 54 பேராவது அன்றாடம் பாகிஸ்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகின்றனர். இதன் மூல காரணம் அரசாங்கத்தின் கொள்கைகளால் சமூகத்தின் பெரும்பாலானவர்களுக்கு ஏற்பட்டுள்ள வறுமையும், அவர்களுடைய அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதும்தான் ‘ என்கிறார் அவர்.

அமெரிக்காவின் ரோட் ஐலண்ட் பல்கலைக்கழக பேராசிரியரும், பெண்கள் தொடர்பான ஆய்வுகளில் நிபுணருமான டோனா என். ஹ்யூஸ், பெண்கள் கடத்தப்படுவது பற்றி விவரித்தார். ‘தம் வலையில் பெண்களும் குழந்தைகளும் விழக்கூடிய எந்த ஒரு வாய்ப்பையும் அடிமை வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ளத் தவறுவதே இல்லை ‘ என்கிறார் அவர்.

‘இந்த அடிமை வியாபாரத்தில் விற்கப்படும் பெண்கள் பெரும்பாலும் பாரசீக வளைகுடாவிலுள்ள அரபு நாடுகளுக்கே கொண்டு செல்லப்படுகின்றனர். பெரும்பாலும் 13 முதல் 17 வயது வரையுள்ள பெண்களே கடத்தல்காரர்களின் இலக்காகி அரபு நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர் என்று டெஹ்ரான் மாகாண நீதியமைப்பின் தலைவர் தெரிவிக்கிறார். எனினும், 8 முதல் 10 வயது வரையுள்ள சிறுமியரும் கடத்தப்படுவதுண்டு. தப்பி ஓடிவந்த 18-வயது பெண் ஒருவர் கொடுத்த தகவல் காரணமாக வீடு ஒன்றின் அடித்தளத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். இவர்கள் கட்டார், குவைத், மற்றும் அமீரகம் (UAE) போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட இருந்தனர். பாரசீக வளைகுடா நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட இளம் பெண்களின் எண்ணிக்கையிலிருந்தே இந்த அடிமை வியாபாரத்தின் அளவைத் தெரிந்து கொள்ளலாம் ‘ என்றும் சொல்கிறார் பேராசிரியர் டோனா ஹ்யூஸ்.

மேலும் அவர், ‘பிரான்ஸ், பிரிட்டன், துருக்கி போன்ற நாடுகளுக்கு இளம் பெண்களை விற்கும் பல விபச்சார மற்றும் அடிமை வியாபார கும்பல்கள் டெஹ்ரானில் செயல்பட்டு வருகின்றன. துருக்கியில் உள்ள இத்தகைய ஒரு கும்பல் இரானின் இளம் பெண்களையும், சிறுமியரையும் விலைக்கு வாங்கி அவர்களை போலியான பாஸ்போர்டுகள் மூலம் ஐரோப்பாவுக்கும், பாரசீக வளைகுடா நாடுகளுக்கும் அனுப்பி வருகின்றனர். 16-வயது இளம் பெண் ஒருவர் இரானிலிருந்து துருக்கிக்கு கடத்தப்பட்டு, அங்கு ஐரோப்பிய குடியுரிமை பெற்ற ஒருவரிடம் இருபதாயிரம் டாலர்களுக்கு விற்கப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது ‘ என்றும் தெரிவிக்கிறார்.

இந்த கும்பல்கள் பெண்களை விமானம் மூலம் தெற்கு வளைகுடா நாடுகளுக்கு கடத்தி வருவதாகவும், அரசாங்கத்தின் ஆதரவு இல்லாமல் இப்படிச் செய்வது நடக்க முடியாத செயல் என்று மொக்ஹதம் சொல்கிறார்.

வறுமை மற்றும் பிற காரணங்களால் வீட்டை விட்டு ஓடிப் பிழைக்க முயலும் இளம் பெண்களின் எண்ணிக்கை குறைந்தது மூன்று லட்சம். இப்படி வீட்டை விட்டு ஓடும் பெண்களில் சுமார் 86 சதவீதத்தினர் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர் ‘ என்றும், ‘வறுமையால் வாடும் சுமார் 80 லட்சம் இரானியப் பெண்களில் பலரும் தீவிரமான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் ‘ என்றும் அவர் தெரிவிக்கிறார்.

மேலும், உலக அளவில் அதிகம் தற்கொலை செய்து கொள்வது இரானியர்களே என்றும், ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்து கொள்ளும் ஏழாயிரம் இரானியர்களுள் பெண்களே அதிகமானவர்கள் என்று மொக்ஹதம் சொல்கிறார்.

இரானின் இஸ்லாமிய அரசாங்கம் பெண்களை நடத்தும் விதத்தை வன்மையாகக் கண்டிக்கிறார் மொக்ஹதம். தம் விருப்பப்படி உடை அணிவது போன்ற அடிப்படையான உரிமைகளையும், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளில் பங்கு பெறும் உரிமைகளையும் பெண்களுக்கு வழங்காமல் இரானிய இஸ்லாமிய அரசாங்கம் மறுப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

(href= ‘http://www.iranfocus.com ‘>இரான் ஃபோகஸ் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.)

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்