தனியார் ஊடகங்களுக்குத் தேவை – தணிக்கை!

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

தஞ்சாவூரான்


====

ஒரு சிறுவனும், ‘முள்ளம்பன்றித்தலை ‘ சிறுமியும் lift-ல் நுழைகிறார்கள். ஒரு வகை இனிப்புக்கட்டியை சாப்பிட்டவுடன், அவர்களுக்கு மற்றவர்கள் என்ன மனதில் நினைக்கிறார்கள் என்பது தெரிந்துவிடுகிறது. சிறுவன் lift-ஐ விட்டு வெளியில் வருகிறான். அப்போது உடன் வெளியில் வரும் ஒரு இளம்பெண்ணின் பின்புறத்தைப் பார்த்து விட்டு, ‘செமை கட்டை மச்சி ‘ என்று நினைப்பதாக வருகிறது. உடன் அந்தப் பெண் ‘என்ன ? ‘ என்பதுபோல் திரும்பிப் பார்ப்பதாக விளம்பரம்.

இன்னொரு விளம்பரத்தில், வயதான ஒரு கடைக்கார அண்ணாச்சிக்கு வாழ்க்கைப் பட்ட ஒரு இளம்பெண் தினமும் அல்லல் படுவதாகவும், அவ்வழியே மிதிவண்டியில் வரும் அவலட்சணமான ஒருவன் ஒரு வகையான மிட்டாயை சாப்பிட்டவுடன், அவனால் அந்தப் பெண் impress ஆகி அவனுடன் ஓடிவிட எண்ணி, அவன் மிதிவண்டியில் அமர்ந்து செல்வதாகவும், அண்ணாச்சி கத்திக்கொண்டே பின் ஓடுவதாகவும் காட்டப்படுகிறது.

மற்றுமொரு விளம்பரத்தில், சோப்புக்கட்டி வாங்க கடைக்குச் செல்லும் பெண்ணின் அம்மா, எந்த சோப்பு வாங்குவது என்று சொல்ல மறந்து விட்டதால், ஏதேதோ நினைத்து கலவரமடைந்து கடைசியில் ஏதோ சோப்பு வாங்கி வந்து உபயோகித்து விட்டு பருக்கள் வந்து அசிங்கமாக ஆகிவிட்டால் கல்யாணம் நடக்காதே என்று உச்சகட்ட கவலையடைகிறாள். நல்ல வேளையாக மகள் அம்மா சொல்ல நினைத்த சோப்பையே வாங்கி வருவதாக முடிகிறது.

இவை ஒரு சிறிய பகுதியே! இன்னும் மட்டரகமான, அருவருக்கத்தக்க, ஆபாசமான, தவறான செய்திகளை மக்களுக்கு அறிவிக்கும் நிறைய விளம்பரங்கள் இடையேதான் மற்ற

நிகழ்ச்சிகள் காட்டப் படுகின்றன. தொலைக்காட்சிகள் மட்டும்தான் என்றில்லை, தின, வாரமிருமுறை, வார, மாதமிருமுறை மற்றும் மாத செய்தித் தாள்களிலும், பத்திரிகைகள்

கிட்டத்தட்ட அனைத்திலுமே விரவிக் கிடப்பவை இந்த மாதிரி விளம்பரங்கள்தான். எப்படியாவது மக்களை ஏமாற்றி, பொய்யான தகவல்களை தந்து பணம் பார்ப்பதுதான் இப்போதைய சிறிய, நடுத்தர, பெரிய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் தலையாய நோக்கமாக இருக்கிறது. தங்கள் பொருளையும், எதிரி நிறுவனப் பொருளை ‘X ‘ என்று பெயரிட்டும்,

ஒப்பிடுவதுபோல் காட்டி, எப்படி தங்கள் பொருள் ‘X ‘ -ஐ விட சிறப்புடையது என்று ஏதோ ஒரு வெளிநாட்டு அமைப்பு அவர்கள் சொந்த காசை செலவு செய்து கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்து, அந்தப் பொருளையே வாங்க சிபாரிசு செய்வதாகவும் காட்டும் திறமையை என்னென்பது ?

சில வகையான ஊட்டச் சத்து மாவுகளை உண்டால் உடனே பனைமர உயரத்திற்கு வளர சக்தி கிடப்பதாகவும், மற்றுமொன்றை சாப்பிட்டால் அபார சக்தி கிடப்பதாக அதை உபயோகிப்பவர்களே (விளம்பரத்தில் வருபவர்கள்தான்!) கூறுவதாகவும் காட்டுகிறார்கள். மூளை வளர ஒரு மூலிகை, சர்க்கரை சட்டென்று குறைய ஒரு மூலிகை என்று ஆயுர்வேத attack செய்யவும் சில நிறுவனங்கள் தவறுவதில்லை.

இப்போதெல்லாம் மாதந்திர வருமானம் உள்ளவர்களை மொட்டையடிக்கும் தந்திரம் கொண்ட கடன் அட்டைகளுக்கும் கவர்ச்சியான விளம்பரங்கள் வருகின்றன. இன்னும் ஒருபடி மேலே சென்று, என்னவென்றே கணிக்க முடியாத வாசகங்களை விளம்பர முடிவில் புரிந்து கொள்ளவே முடியாத வேகத்தில் அறிவிக்கும் நிதி சம்பந்தப்பட்ட விளம்பரங்கள். மருந்துக்குக் கூட சத்துகளில்லாத உடம்பிற்கு கேடு விளைவிக்கும் பாணங்களின் விளம்பரங்கள் பகட்டான நடிகர்களின் உதவியோடும், வென்றாலும் தோற்றாலும் பணம் வெல்லும்

ஆங்கில அடிமைத்தனத்தின் ஒரு மிச்சமான ஒரு விளையாட்டின் வீரர்கள் உதவியோடும் பவனி வருகின்றன.

இவை அனைத்தும் எந்த அடிப்படையில் வெளியிட அனுமதிக்கப் படுகின்றன ? அவை சொல்லும் புள்ளி விவரங்கள் யார் செலவில் யார் சேகரித்துக் கொடுத்தது ? சிறு வயதினரும்

பார்க்கும்/படிக்கும் ஊடகங்கள் எதன் அடிப்படையில் ‘வயதுக்கு வந்தவர்கள் மட்டும் ‘ பேசும், பார்க்கும் விளம்பரங்களை வெளியிடுகிறார்கள் ? ஊடகங்களுக்கு உண்மையில் அவர்கள் வெளியிடும் விளம்பரங்கள் எந்த அளவுக்கு உண்மை பேசுகின்றன என்ற கவலை இருக்கிறதா ? அல்லது சமுதாயம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, கல்லா

நிறைந்தால் போதும் என்று நினைக்கிறார்களா ?

இவை இப்படி இருக்க, ஊடகங்கள் அளிக்கும் நிகழ்ச்சிகள் எந்த நிலையில் இருக்கின்றன ? மெகாத் தொடர்களாகட்டும், செய்திகளாகட்டும், எந்த அளவிற்கு அவை தணிக்கை செய்யப்படுகின்றன ? தணிக்கையே செய்யப்படுவது இல்லை என்பதுதான் வேதனையான உண்மையாக இருக்கும். அதுவும் இந்த சில மெகாத் தொடர்கள் இருக்கிறதே, அடக்கமுடியாத வெறுப்பைத் தருகின்றன. ஒரு ‘பாப்பா ‘ தொடரில் மனைவி, கணவனையோ அல்லது அவரின் உறவினரையோ பேசும் பேச்சு இருக்கிறதே, அது நல்ல குடும்பத்தில்

பிறந்த யாரும் பேசவோ அல்லது காது கொடுத்துக் கேட்கவோ மாட்டார்கள். அபத்தமாக பேசுவதும், உறவு முறை தவறி நடப்பதும், யாரை எப்படி குடிகெடுப்பது

என்று கற்றுக் கொடுப்பதும், சதா அழுதுகொண்டே பிற குடும்ப உறுப்பினர்களையும், வேறு வழியில்லாமல் அதைப் பார்த்துத் தொலைக்கும் நம்மையும் torture செய்வதும்

தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அதைவிட சிறுவர் தொடர்கள் மற்றும் ‘மர்மத்தொடர் ‘ என்ற பெயரில் அதி அபத்தமான சிரிப்பை விட எரிச்சலை ஏற்படுத்தும் graphics

விளையாட்டுகள் இன்னும் ஒரு கொடுமை!

அடுத்து, செய்திகள். ஒரு குடும்பத் தொலைக் காட்சியில் செய்திகள் என்று போடுவதை விடுத்து, ‘தலைவரின் இன்றைய கருத்து ‘ என்று போடும் அளவிற்கு சுய தம்பட்டம். பின்பு

நடக்க இருக்கும் பங்காளி சண்டையை நினைத்து, ஒரு அரசியல் தலைவரின் எந்த செய்திகளுக்கும் இடமில்லை என்ற இருட்டடிப்பு. தீயின் வெம்மை தாங்காமல் கருகிய அந்த இளம் தளிர்களின் உடல்களை ஏதோ அடுக்கி வைத்த மூட்டைகளை video எடுப்பது போல், பல நிமிடங்களுக்குக் காட்டிய கொடுமை அனேகமாக நமது நாட்டில்தான்

நடந்திருக்கும். ஒரு பத்திரிகையில், எதோ புதுப்பட புகைப்படங்களைக் காட்டுவதுபோல் ‘New! ‘ என்று ஒளிர விட்டுக் காட்டிய கொடுமையும் நடந்தது. சம்பவத்தின் தாக்கத்தைக்

காட்ட அதனை வெளியிட்டதாக ஒரு நொண்டி சாக்கு வேறு. அட, அந்த செய்தி மற்றும் போதாதா அதன் வீரியத்தை வெளியுலகுக்கு சொல்ல ? மனிதத் தன்மையுள்ள எந்த ஒரு

மனிதனும் இந்த மாதிரி படங்களை விரும்ப மாட்டான். அமெரிக்காவில் கூட இறந்தவர்களின்/கொல்லப் பட்டவர்களின் புகைப் படங்களை ஊடகங்களில் வெளியிடுவதில்லை. இறந்தவர்களுக்கு செய்யும் மரியாதைக்காக அவ்வாறு செய்கிறார்கள். சமீபகாலமாக ஆடு/கோழி அறுப்பதுபோல் மனித தலைகளை அறுப்பதைக்கூட அமெரிக்காவில் காணமுடியவில்லை. ஆனால் நமது தொலைக்காட்சி ஒன்று, உலகத்திலேயே முதன்முறையாக அந்த தலை அறுப்பை வெளியிட்டு புண்ணியம் தேடிக்கொண்டது.

அமெரிக்காவில் தொலைக்காட்சியாகட்டும், திரைப்படங்களாகட்டும், தணிக்கை முறை கடுமையாக பின்பற்றப்படுகிறது. G (அனைவரும் பார்க்க உகந்தது), Y7, PG-13 மற்றும் R என்று வயதுக்கேற்றவாறு வகைப்படுத்தப்படுகிறது. (சில பல கலாச்சார சீரழிவுகளை கண்மூடித்தனமாக இறக்குமதி செய்வதுபோல் நிறைய நல்ல விஷயங்களையும் அமெரிக்காவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது) நம் நாட்டில் திரைப்படங்களுக்கு மட்டும்தான் அதுவும் A, U (அது என்ன U/A ?) என்று இரண்டு புரியாத வகைகள். தொலைக்காட்சிகளுக்கு அதுவும் கிடையாது. என்ன வேண்டுமானாலும் வெளியிடலாம், திரையிடலாம். அவிழ்த்து விடப்பட்ட மாடு போலதான். தொலைக்காட்சிகளுக்கு, அவர்களுக்கு

சமுதாயத்தின் மேல் தானாக அக்கறை தோன்றினால் ஒழிய அவர்களின் நிகழ்ச்சிகளை தணிக்கை செய்ய வாய்ப்பில்லை. இந்த நிலையில் சமுதாயத்தைக் காக்க ஒரே ஒரு ஆபத்பாந்தவனால்தான் முடியும். அது, அரசாங்கம்! ஏதாவது ஒன்று கட்டுக்கு மீறி நடந்தால் மட்டும் அதிரடியாக (உ.ம்: கும்பகோண துயரத்தை அடுத்து, குருட்டுத்தனமாக கூரைகளை பிரித்து எறிய சொன்னது. ஒரு இளம்பெண் சாவை அடுத்து, மதுக்ககடைகளில் 21 வயதுக்குக் குறைவான வயது உடையவர்களுக்கு மது விற்க தடை போன்று) நடவடிக்கை எடுப்பதை விடுத்து, இந்த தணிக்கை விஷயத்தில் நமது அரசாங்கம் இப்போதே ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் மீதும் அரசாங்கத்தின் மீதும் இன்னும் சிறிது

நம்பிக்கை வைத்திருக்கும் மக்களின் எண்ணமாக இருக்கும்.

அன்புடன்,

தஞ்சாவூரான்

thanjai_raja2004@yahoo.com

Series Navigation

தஞ்சாவூரான்

தஞ்சாவூரான்