காங்கிரஸின் இன்னொரு கரிபி ஹடாவ் பட்ஜெட்

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

சின்னக்கருப்பன்


இந்தியப் பத்திரிக்கைகள் சிதம்பரத்தின் பட்ஜெட்டை ஏழைக்கான பட்ஜெட், காங்கிரசுக்கு ஓட்டுப்போட்ட ஏழைகளுக்கு காங்கிரஸ் அளிக்கும் நன் கொடை என்று வானளவாகப் புகழ்கின்றன. எனக்கு ஆச்சரியமாக இல்லை. அதே நேரத்தில் ஏழைகளிலிருந்துதான் காங்கிரசுக்கு ஓட்டு வருகின்றது என்றால் அந்த ஏழைகளை முன்னேற்றுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்று காங்கிரசுக்குத் தெரியாதா என்ன ? ஆகவே, ஏழைப்பங்காள பட்ஜெட் என்று வானளவாக புகழ்வது அதே நேரத்தில் இன்னும் ஏழைமையை அதிகரிப்பது. அதனை வெற்றிகரமாக மாஜிக் மூலம் சாதிக்கிறது இந்த பட்ஜெட்.

கிராமப்புற வேலை வாய்ப்புக்காக இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 9640 கோடிகள். இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 4590 கோடிதான். சென்ற வருடம் இயற்கை அழிவு காரணமாக அதிகமாக ஒதுக்கப்பட்டது என்று சொன்னார்கள். சரி அதனையும் கழித்துவிட்டுப் பார்த்தால், இடைக்கால பட்ஜட்டில் ஒதுக்கப்பட்ட தொகைஒ 4751 கோடி. அது இன்று 4310 கோடியாகக் குறைந்திருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை 3014 கோடி. அதே அளவுதான் இந்த சிதம்பர பட்ஜெட்டிலும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தே.ஜ.கூட்டணியின் அண்ட்யோதயா அன்ன யோஜனாவின் கீழ் ஆதரவளிப்பதாக அறிவிக்கப்பட்ட ஏழை மக்களின் எண்ணிக்கை 2 கோடி. அதுவும் இந்த பட்ஜெட்டில் 2 கோடி தான் சொல்கிறது. ஆனால் இடைக்கால பட்ஜெட்டுக்கு முந்திய பட்ஜெட்டோடு ஒப்பிட்டு 1.5 கோடியிலிருந்து 2 கோடியாக தான் உயர்த்துவதாக இவர் அறிவித்திருக்கிறார்.

ஆனால், பாதுகாப்புக்கு என்று தே. ஐ. கூட்டணி ஒதுக்கிய பணத்தை விட இந்த பட்ஜட் சுமார் 11000 கோடி அதிகம் ஒதுக்கியிருக்கிறது. காரணம் சென்ற அரசாங்கம் கொடுத்த ஆர்டர்களுக்கு பணம் கொடுக்க என்று சொல்கிறார்கள். அவர்களே கொடுத்த ஆர்டர்களுக்கு அவர்களே ஒதுக்கிய பணத்தை விட எப்படி இந்த பட்ஜெட் அதிகம் அதுவும் 11000 கோடி ஒதுக்குகிறது ? ஆனால், அடிப்படைக் கல்வி கொடுப்பதற்கு, வருமான வரி மீது அதிகப்படி 2 சதவீத அதிக வரி விதிக்கிறார் சிதம்பரம். இதன் மூலம் 4000 கோடியை பெற்று அடிப்படைக் கல்விக்கு செலவிட முயல்கிறார்.

ஒரே சந்தோஷமான விஷயம், சென்ற பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் சுமார் 30 கோடி ரூபாய் அதிகமாக நீர்நிலைகளை அதிகரிக்கவும் செப்பனிடவும் செலவிடப்படும் என்று தெரிவிக்கிறார். அதாவது ஜஸ்வந்த் சிங் கொடுத்த 70 கோடியிலிருந்து 100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எத்தனை நீர்நிலைகளை செப்பனிட முடியும் என்று யாராவது கணக்குப்போட்டு பார்க்கலாம்.

அதே போல பாரம்பரிய தொழில்கள், அறிவு, கைதொழில் ஆகியவற்றை மேம்படுத்த 100 கோடி செலவிடப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். குயவர்கள், மற்றும் இதர பாரம்பரிய கிராமப்புற கைத்தொழில் முனைவோர்களுக்கு இதன் மூலம் என்ன கிடைக்கும் என்றும் தெரிவித்திருக்கலாம்.

இந்தியா அரசின் நேரடி வேலையாட்களுக்கு சம்பளம் பென்ஷன் என்று கொடுக்க சுமார் 54000 கோடி செலவளிக்கப்படுகிறது. இது பற்றி மூச்சே விடவில்லை திரு சிதம்பரம். இந்த ஆட்களை குறைக்கப்போகிறார்களா ? அல்லது இவர்களை இன்னும் திறம்பட வேலை செய்ய என்ன பிரேரணைகளை இந்த அரசு முன்வைக்கிறது என்பது பற்றி ஒரு வார்த்தை இல்லை. இந்த செலவை குறைக்கும் திட்டமும் இல்லை.

கன்னா பின்னா என்று வாரியிறைத்திருக்கும் பட்ஜெட்டுக்கு எங்கிருந்து பணம் வரும் என்று கேட்டால், வினோதமான பதில் வருகிறது. சென்ற வருடத்தை விட இந்த வருடம் 26.5 சதவீதம் வருமான வரி அதிகம் வசூலிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் திரு சிதம்பரம். சென்ற வருடத்தைவிட நிறுவனங்கள் இந்த வருடம் 40.4 சதவீதம் அதிகம் வரி கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் திரு சிதம்பரம். வரவில்லை என்றால் என்ன செய்யப்போகிறார் ? இந்த வருடத்தின் பணவீக்கம் 5-6 சதவீதம் என்று எடுத்துக் கொண்டால், உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதம் என்று எடுத்துக்கொண்டால், நாமினல் பொருளாதார வளர்ச்சி 13 சதவீதம்தான். எங்கிருந்து 26 சதவீத வருமான வரி அதிகரிப்பும் 40 சதவீத நிறுவன வரியும் வரும் ? சென்றவருடம் பாரதிய ஜனதா கட்சி 17 சதவீத அதிகமாக வரி வசூலிப்பு நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தபோது இதே பத்திரிக்கைகள் அதனை ஆப்டிமிஸ்டிக் அவுட்லுக் என்றன.

இதே போல ஒவ்வொரு ஏழை வீட்டிலும் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கிறார். இதற்கான பண ஒதுக்கீடு இல்லை. இருக்கும் திட்டங்களிலேயே ஒரு திட்டத்துக்கு இவ்வாறு பெயர் மாற்றி அறிவிக்கப்போகிறார்கள் போலிருக்கிறது.

இவர் எதிர்பார்க்கும் அளவுக்கு வரி வசூலிக்கப்படவில்லை என்றால், பணவீக்கம் அதிகரிக்கும். நிச்சயம் பழைய காங்கிரஸ் ஆட்சிக்கால பணவீக்கங்களையும், மோசமான பொருளாதார வளர்ச்சியும் நம் கண் முன்னே பார்க்கப்போகிறோம் என்பதனை நினைத்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதில், இடதுசாரிகள் கவலைப்படும் ஒரே விஷயம், வெளிநாட்டு முதலீடு பல தொழில்களுக்கு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது இப்போது என்ன அவசியமான தேவை என்று தெரியவில்லை. விவசாயத்தை மீட்டெடுப்பதும், அதன் சக்தியை பொருளாதாரத்தில் அதிகரிப்பதும், விவசாயத்தில் ஈடுபடுபவர்களை விவசாயத்திலிருந்து தொழில்துறைக்கு அனுப்புவதும் அல்லவா இந்த நாட்டின் பட்ஜட்டின் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும். அது இல்லை இங்கு. இடதுசாரிகளையும் பகைத்துக்கொண்டு வெளிநாட்டு முதலீடு விகிதத்தை அதிகரிப்பதன் அவசியம் இப்போது என்ன ?

அமெரிக்க இம்பீரியலிஸத்தின் வால் என்று பாஜகவை இவ்வளவு நாள் திட்டி வந்த கம்யூனிஸ்டுகள் இப்போது இந்த பட்ஜெட்டுக்கு ஆதரவு அளிப்பார்களா என்று காத்திருந்து பார்க்கவேண்டும். உள்ளேயிருந்து ஆதரவு தருவதற்காக பிகாருக்கு 3200 கோடி ரூபாய் அளித்திருக்கிறார்கள். வட கிழக்கு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு தவிர மேல் நிதி அளிப்பது சரி, பாகிஸ்தானின் பயங்கரவாதத்தால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட காஷ்மீருக்குக் கூட சரி என்று வாதிடலாம். ஆனால் பீகாருக்கு ஏன் ?

சென்றவருடம் 8.2 சதவீத பொருளாதார வளர்ச்சி இருந்தது என்று இன்று ஒப்புக்கொள்ளும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், தேர்தல் வரைக்கும் இந்தியா ஒளிரவில்லை என்று பேசி வந்தன. இன்று அந்த நிதி மந்திரி பதவியில் உட்கார்ந்திருக்கும் சிதம்பரம் இந்த வருடம் 5.4 சதவீத வளர்ச்சி இருந்தால் நல்லது என்று கூறுகிறார். மீண்டும் ‘இந்து வேக பொருளாதார வளர்ச்சி ‘க்கு கொண்டு செல்லாமல் பதவியிலிருந்து இறங்கமாட்டார்கள் என்று கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸினரும் நம்பிக்கை வைக்கலாம்.

**

ஆனால் நான் எழுத முனைந்தது வேறு.

ஒவ்வொரு ஆட்சியும் ஒரு முக்கிய நோக்கை முன்னிருத்தியிருக்கின்றன. அது ராஜீவ் காந்தியிடமிருந்து ஆரம்பித்தது. இந்தியாவை தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பில் முன்னேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவர் பல தொழில்நுட்ப வல்லுனர்கள் உதவியோடு கம்யூட்டர், தொலைத்தொடர்பு மற்றும் இதர தொழில்நுட்ப விஷயங்களை இந்தியாவில் ஆரம்பித்து வைத்தார். அவரே இந்தியாவின் சோசலிஸ அமைப்பின் மீது வீசப்பட்ட முதல் கல்.

அடுத்து நரசிம்மராவ், தாராளவாத பொருளாதார அமைப்பை அமைப்பு ரீதியில் இந்தியாவில் நுழைக்க மன்மோகன் சிங் துணையோடு இந்திய அரசியல் அமைப்பையே மாற்ற உதவினார். அவரே இந்தியாவின் இன்றைய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்குக் காரணம்

அடுத்து பாரதிய ஜனதா கட்சி அரசு இந்தியாவின் பெரு நகரங்களை அதிவேக தரை பாதை மூலம் இணைக்கும் திட்டத்தை முன்னுக்குக் கொண்டு வந்து மாநிலங்களிடையே அதிக வியாபாரம் மற்றும் தொடர்பை முன்னிறுத்தியது. அது வெற்றிகரமாக அந்த திட்டத்தை ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் முடித்தும் காட்டியிருக்கிறது.

இப்போதிருக்கும் காங்கிரஸ் அரசுக்கு அப்படி எந்த வித நோக்கமும் இல்லை. எந்த வித தொலை நோக்கும் இல்லை. தன்னுடைய வழக்கமான இந்திரா காந்தி காங்கிரஸ் அரசை கொண்டு வந்திருக்கிறது. கோஷங்களிலும் கவர்ச்சி அரசியலிலும் ஓட்டு வாங்கி அதனை இது போன்ற ஏழைப்பங்காள பட்ஜெட் போட்டுக் காப்பாற்றிக்கொண்டு நீடித்த ஆட்சி தருவதே அதன் நோக்கம்.

**

இன்றைய பட்ஜெட் எடுத்திருக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்ன ? நமது நாட்டின் வெகுவேகமாக வளரும் தொழில்துறையின் காரணமாக நமக்கு மின்சாரம் எளிதில் தரும் எரிபொருள் வேண்டும். பெட்ரோலியத்துக்காக இன்று அமெரிக்கா போருக்குச் செல்லவும் தயாராக இருக்கிறது. அதே நேரத்தில் சென்ற பட்ஜெட்டில் புஷ் பேசியது போல எதிர்கால எரிபொருளாக ஹைட்ரஜனை தீர்வாகக் கூறி அதன் மேல் ஆராய்ச்சிக்காக 2 பில்லியன் டாலரை ஒதுக்கியிருக்கிறது.

வளரும் சீனாவும் வளரும் ஐரோப்பாவும் வளரும் அமெரிக்காவும் பெட்ரோலியத்துக்காக ஏற்கெனவே அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டன. அந்த நிலையில் இந்தியாவின் எதிர்காலத் திட்டம் என்ன ? முழு பட்ஜட்டிலும் எனர்ஜி என்று ஒருவார்த்தை இல்லை.

இது போன்ற பட்ஜெட்டுகள் இருக்கும் வரை இந்திய ஏழைகளுக்கும், இந்தியாவின் இது போன்ற ஏழைப்பங்காள அரசியல்வாதிகளுக்கும் பஞ்சமேது ?

***

karuppanchinna@yahoo.com

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்