பணம். பதவி. மற்றும் முதுகு சொறிதல்.

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

நரேந்திரன்


‘The Buying of the President 2004 ‘ என்பது தற்போது அமெரிக்காவில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் ஒரு புத்தகம். ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று ஏறக்குறைய ஐம்பத்து மூன்று பேர் சேர்ந்து ஆராய்ந்து எழுதி இருக்கும் அந்தப் புத்தகத்தின் சாராம்சம், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் செலவு செய்யும் ஏராளமான தேர்தல் நிதி எங்கிருந்து வருகிறது, எவ்வளவு வருகிறது என்பதை வெளிப்படுத்துவதுதான்.

அமெரிக்க அரசியல்வாதிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு career patron அல்லது பண உதவி செய்யும் sponsorகள் இருப்பார்கள். அது இதற்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்களாகட்டும் அல்லது தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு அமெரிக்க அரசியல்வாதியாகட்டும். அவர்களின் அரசியல் முன்னேற்றப் பாதையின் ஒவ்வொரு அடியிலும் இம்மாதிரியான sponsorகளின் பங்கு இருக்கும். அவ்வாறு பண உதவி செய்பவர்களில் பெரும்பாலோர், ஒன்று மிகப் பெரிய கம்பெனிகளை நடத்திவரும் தனி மனிதர்களாக இருப்பார்கள். அல்லது multi-national கம்பெனிகளின் சீஃப் எக்ஸிகியூட்டிவ்களாக இருப்பார்கள். இவர்களின் உதவி மற்றும் ஆசிர்வாதமில்லாமல் எந்த அமெரிக்க அரசியல்வாதியும் ஜனாதிபதி போன்ற உயர் பதவிகளை அடைவது என்பது இயலாத காரியம்.

இவ்வாறு பண உதவி செய்யக் காரணம் மிக நேரடியானது. You scratch my back; I scratch your back என்ற ‘முதுகு சொறிதல் ‘ தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ‘நீ உயர நான் உதவி செய்கிறேன். நீ வளர்ந்து பெரிய ஆளான பின்னால் எனக்கு உதவி செய்ய வேண்டும் ‘ என்ற சுயநலக் காரணத்தை உள்ளடக்கியது. இன்றுவரை அப்படித்தான் நடந்து வந்திருக்கிறது. இனியும் அப்படித்தான் நடக்கும். பொதுவுடமைவாதிகளின் பாணியில் சொல்வதானால், மிக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு ‘முதலாளித்துவ ‘ தத்துவம் அது எனலாம்.

இம்மாதிரியான corporateகளின் பண உதவி தவிர்த்து, பல வெளிநாடுகளும் அமெரிக்க அரசியல்வாதிகளுக்குப் பண உதவி செய்வது வழக்கமாக நடக்கக் கூடிய ஒன்று. தங்கள் கொள்கைகளுக்கு ஆதரவாக நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒவ்வொரு நாடும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பணத்தை அள்ளி இறைக்கின்றன. உதாரணமாக, அடுத்து வரும் அமெரிக்க ஜனாதிபதி, தைவான் பிரச்சினையில் தாங்கள் செய்வதைக் கண்டு கொள்ளக் கூடாது என சீனாவும், காஷ்மீர் பிரச்சினையில் தங்கள் பக்கமே இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தியாவும், பாகிஸ்தானும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை வாரி இறைப்பதுவும் நடக்கிறது.

இப்படியாக, ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டினால் பண உதவி அளிக்கப்பட்ட ஒரு வேட்பாளர் தோற்று, அவருக்கு எதிரான ஒருவர் வெற்றி பெற்றுவிட்டால் சிக்கல்தான். முதலாம் வளைகுடாப் போர் முடிந்த பிறகு, ஜார்ஜ் புஷ் சீனியர்தான் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாவார் என்ற எண்ணத்தில் இந்தியா அவருக்குத் தேர்தலில் வெற்றி பெறப் பண உதவி செய்ததாகவும், எதிர்பாராத விதமாக ஜார்ஜ் புஷ் சீனியரைத் தோற்கடித்துப் பதவிக்கு வந்த பில் கிளிண்டன், இரண்டு வருட காலம் வரை இந்தியாவிற்கான அமெரிக்க தூதுவராக எவரையும் அறிவிக்காமல் பழி வாங்கினார் என்பதும் பழைய செய்தி.

இந்தத் தேர்தலில், டெமாக்ரட் ஜான் கெர்ரிக்கு (John Kerry) ஆதரவாக சீனா பண உதவி செய்ததாக ஒரு சத்தம் எழும்பி, எழும்பின வேகத்தில் அடங்கி இருக்கிறது. ‘புஷ்சுக்கும் புசிந்திருக்க ‘ வாய்ப்பிருக்கிறது என்பதனால் அந்தச் சத்தம் அடங்கிப் போயிருக்கலாம். இந்தத் தேர்தலில் இந்தியா யாரை ஆதரிக்கிறது என்பது தெரியவில்லை. அனேகமாக ஜார்ஜ் புஷ்சாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் அனுமானம். எதிர்வரும் இத் தேர்தலின் முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ள Out sourcing பிரச்சினையில், டெமாக்ரட் கட்சிக்காரர்களின் வெளிப்படையான எதிர்ப்பு ஜார்ஜ் புஷ்சை இந்தியா ஆதரிக்க ஒரு காரணமாகக் கூட இருக்கலாம்.

இந்தத் தேர்தலில் ஜார்ஜ் புஷ் தேறுவது கடினம் எனபது என் எண்ணம். ஒசாமா-பின்-லேடன் சிக்குவது போன்ற ஏதாவது miracle நடந்தாலொழிய. தீவிர ரிபப்ளிகன் கட்சிக்காரர்கள் மத்தியில் கூட ஜார்ஜ் புஷ் மீண்டும் ஜெயிப்பார் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது. CNN போன்ற செய்தித்தாபனங்கள் சமீபத்தில் எடுத்த சர்வேயின்படி, இன்றைய தேதியில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்தால், டெமாக்ரட் கட்சி வேட்பாளர்கள் மிக எளிதாக ஜார்ஜ் புஷ்சை தோற்கடிப்பார்கள் என்று தெரியவருகிறது. முன்பே கூறியபடி, ஒசாமாவை அமெரிக்க ராணுவம் பிடித்தால், புஷ்ஷின் பாப்புலாரிட்டி கூட வாய்ப்பு இருக்கிறது. அது அவ்வளவு எளிதாக நடக்கக் கூடியதில்லை.

அமெரிக்க ‘War on Terror ‘-இன், closest alley-ஆன(! ?) ஜெனரல் முஷாரஃப் அவ்வளவு எளிதாக ஒசாமாவை ஒப்படைத்துவிடுவார் என்ற நம்பிக்கை அமெரிக்காவிற்கே இல்லை. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசீர் புட்டோ சொன்னது போல, ‘பின்-லேடன் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவரும் தொடர் பண உதவிக்குத் தேவையான இன்சூரன்ஸ் ‘. எனவே, பாகிஸ்தான் பின்-லேடனை பிடித்து ஒப்படைத்துவிடும் என்பது பகல் கனவுதான். சொல்ல முடியாது. பகல் கனவுகள் கூட சில சமயங்களில் பலிப்பதுண்டு. ஜார்ஜ் புஷ்ஷின் பகல் கனவு பலித்ததா இல்லையா என்பது வரும் நவம்பரில் தெரிந்துவிடும்.

நல்லது. மீண்டும் மேற்கூறிய ‘Buying of President 2004 ‘ புத்தகத்திற்கு வருவோம்.

ஐம்பத்து மூன்று பேர் கொண்ட குழுவினர் அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கடந்த கால வரலாறு பற்றியும், அவர்களுக்கு பண உதவி செய்த அமெரிக்கக் கம்பெனிகளின் பூர்வாங்கத்தையும் ஆராய்ந்து இப் புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள் என்றேன். இல்லையில்லை. ‘அக்கு வேறு, ஆணி வேறாக அலசி இருக்கிறார்கள் ‘ என்பதுதான் சரியானது. Federal Election commission, State Campaign Finance Regulatory Bodies மற்றும் ஆயிரக்கணக்கான அராசாங்க ஆவணங்களை மிகத் தீவிரமாக ஆராய்ந்து எழுதப்பட்ட புத்தகம் இது.

எந்தச் செயலைச் செய்தாலும் அமெரிக்கர்களிடம் ஒரு ‘thoroughness ‘ இருக்கும். ‘நுனிப் புல் மேயும் ‘ சங்கதியெல்லாம் அவர்களிடம் இருக்கவே இருக்காது. குறிப்பாக எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும், கட்டுரையாளர்களும் தாங்கள் எழுதவரும் விஷயங்கள் பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து எழுதுவார்கள். வருடக் கணக்கில் ஆராய்ச்சி செய்து எழுதும் எழுத்தாளர்கள் மேலை நாடுகளில் மிக சகஜம். மேலும், அமெரிக்க பொதுஜனத்தினிடன் காணப்படும் ‘awareness ‘ ஒரு முக்கியமான காரணம். பொய்யான செய்திகள், தகவல்கள் உடனுக்குடன் நிராகரிக்கப்படும்.

இதில் கவனிக்கப் பட வேண்டிய இன்னொரு விஷயம், அமெரிக்காவில் பொதுவாகக் காணப்படும் ‘transparency ‘. அமெரிக்கக் குடிமக்கள் எவர் வேண்டுமானாலும், அரசாங்கம்

சம்பந்தப் பட்ட எந்தத் தகவலை வேண்டுமானாலும் கேட்டுப் பெற முடியும். Freedom of Information Act என்று ஒரு சட்டமே இதற்கு இருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தில் உயர்பதவி வகிக்கும் எந்தவொரு அரசியல்வாதியின் சொத்து பற்றிய விவரங்களை, அவர்களின் வருடாந்திர வருமானத்தை, கட்டிய வரி போன்ற தகவல்களை எந்தச் சிரமும் இல்லாமல் பெறலாம்.

இந்தியாவிலும் இதுபோன்ற ஒரு சட்டம் ராம் ஜெத்மலானி அமைச்சராக இருந்தபோது( ?) கொண்டுவரப்பட்டது என்பதாக நினைவு. கூடவே, சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஆட்டோவும், அடியாளும் நினைவுக்கு வருவதுதான் என்ன காரணம் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை பகல் கனவு காண்கிறேனோ ?!

இன்றைய தேதிக்கு, தேர்தல் நிதியாக ஜார்ஜ் புஷ் சேர்த்திருக்கும் பணம் நூறு மில்லியன் டாலர்கள்! இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதென்றால் 450,00,00,000 ரூபாய்கள்! போட்டியிலிருக்கும் மற்ற எந்த வேட்பாளரும் தேர்தல் நிதியாக இவ்வளவு பணம் சேர்க்கவில்லை இதுவரை. போட்டியிலிருந்து விலகிப் போன Howar Dean(D), ‘விழலுக்கிறைத்த நீராக ‘ செலவு செய்த பணம் 40 மில்லியன் டாலர்கள். அத்தனை பணமும் internet campaign மூலமாக சேர்த்தது(!) என்றால் நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஏன் Howard Dean-க்கே கூட!

இவ்வாறு பெறப்படும் பணம் ‘Soft Money ‘ என்று அழைக்கப் பட்டாலும், சட்டப் பூர்வமான முறையிலேயே பெறப்படுகிறது. யாரையும் மிரட்டியோ, வற்புறுத்தியோ தேர்தல் நிதிகள் சேர்க்கப்படுவதில்லை என்பது தமிழர்களை வயிறெரியச் செய்யும் ஒரு செய்தி. அமெரிக்காவின் மிகப் பெரிய சிகரெட் தயாரிக்கும் கம்பெனியான பிலிப் மோரிசிலிருந்து, சின்னஞ் சிறிய பயோ டெக்னாலஜி கம்பெனிவரை ஆளுக்கு ஒரு அரசியல்வாதிக்கு career patronகளாக இருக்கிறார்கள். தப்பித்தவறி ‘நம்ம ஆள் ‘ ஒரு நாளைக்கு அமெரிக்க ஜனாதிபதியானால் நம்மை எல்லாம் கைவிட்டு விடமாட்டார் என்பது அவர்களின் கணக்கு.

சமயங்களில் இந்தக் கணக்கு தவறி விடுவதும் உண்டு. 2003-இல் இந்தியாவையும், அமெரிக்காவையும் கலக்கிய ‘என்ரான் எனர்ஜி கார்ப்பரேஷனை ‘ (Enron Energy Corp.) யாரும் மறந்திருக்க முடியாது. சென்ற வருடம் திவாலாகி, பல அமெரிக்கர்களின் சேமிப்பைத் தொலைக்க வைத்து அவர்களை நடுத் தெருவில் நிற்கவைத்த பெருமையுடையது Enron. அதே Enron சென்ற வருடத்தின் ஆரம்பத்தில், அமெரிக்காவின் சரித்திரத்திலேயே இதுவரை யாரும் அளிக்காத விதத்தில் $600,000 டாலர்களை ஜார்ஜ் புஷ்ஷின் தேர்தல் நிதிக்கு அள்ளிக் கொடுத்தது. அந்தக் கம்பெனியின் வண்டவாளம் தண்டவாளம் ஏறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னால். ஆனால், நடந்தது என்ன ?

நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த Enron-இன் கணக்குகளை மாற்றி எழுதி மிக லாபத்தில் இயங்குவதாகக் காட்டினார்கள். அதனை உண்மையென்று நம்பி, அக் கம்பெனியின் பங்குகளை வாங்கிய அப்பாவிகளுக்கு பட்டை நாமம் சாத்தப்பட்டது. அதற்குக் காரணமாக இருந்த Enron-இன் CEO, CFOக்களில் பலர் இன்று சிறையில் இருக்கிறார்கள். டெக்ஸாஸ் மாநில கவர்னராவதில் இருந்து, அவர் அமெரிக்க ஜனாதிபதி ஆகும் வரை அவரின் career patron ஆக இருந்த Enron Corporation-இன் முக்கியஸ்தர்களை ஜார்ஜ் புஷ்ஷால் காப்பாற்ற முடியவில்லை. அமெரிக்கக் கார்ப்பரேட் சட்டங்களை வெளிப்படையாக மீறுவது என்பது எந்த ஜனாதிபதியாலும் முடியாத காரியம் என்பது அவருக்குத் தெரியும். அதற்கும் மேலாக இன்னொரு ‘நிக்ஸனை ‘ அமெரிக்கா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்பதுவும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

****

செனட்டர் ஜான் கெர்ரி இந்தமுறை அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்றால், கடந்த நூறு ஆண்டுகளில் அமெரிக்காவை ஆண்ட ஜனாதிபதிகளில் மிகப் பெரும் பணக்காரர் அவராகத்தான் இருப்பார். அவரிடம் இருக்கும் சொத்தின் மதிப்பு ஏறக்குறைய 165 மில்லியன் டாலர்கள். இதனுடன் அவரின் மனைவியும், உலகப் புகழ் பெற்ற ‘Heinz கெட்சப் ‘ தயாரிக்கும் கம்பெனியின் வாரிசுமான தெரிஸா கெர்ரியின் சொத்துக்களையும் சேர்த்தால், செனட்டர் ஜான் கெர்ரியின் மொத்த சொத்து மதிப்பு ஏறக்குறைய 688 மில்லியன் டாலர்கள். இது இன்றைய அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ்ஷின் சொத்துக்களைப் போல 20 மடங்கு.

துணை ஜனாதிபதியான Dick Cheneyயிடன் இருக்கும் சொத்து ஏறக்குறைய 22 மில்லியன் எனத் தெரியவருகிறது. இது போலவே இந்த முறை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் மில்லியனர்களாகவே இருக்கிறார்கள். சாமானியர்கள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று போலத்தான் தெரிகிறது. இதைப் பார்க்கையில் இந்தியத் தேர்தல் முறை பரவாயில்லையோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. சாமானியன் தேர்தலில் நின்று சடுதியில் மில்லியனராவது இந்திய ‘மேஜிக் ‘. பணக்காரன் தேர்தலில் நின்று ஜெயித்து, மேலும் மேலும் பணக்காரணாவது அமெரிக்க ‘லாஜிக் ‘.

வாழ்க ஜனநாயகம்.

****

narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்