‘நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ‘

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

அரவிந்தன் நீலகண்டன்


‘உண்மை ஒன்றே; ஞானிகள் அதனைப் பலவாறு விளிக்கின்றனர். ‘ – ரிக் வேதம்

ஒரு தீபாவளியன்றுதான் ஹிந்துக்களை ‘ஹிந்துமதத்தின் ஆன்மிக அடிமைத்தளையிலிருந்து ‘ காப்பாற்றத் தான் எடுத்துள்ள வைராக்கியத்தை அறிவிக்க அமெரிக்காவின் தெற்கு பாப்டிஸ்ட் திருச்சபை தேர்ந்தெடுத்த நாள் ஹிந்துக்கள் உலகெங்கும் தீபத்திருவிழாவெனக் கொண்டாடும் தீபாவளித் திருநாள்<1>. பாப்டிஸ்ட் திருச்சபையின் இந்த அறிவிப்பு மதச்சார்பற்ற மனிதநேய வாதிகள், யூத ஹிந்து தலைவர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பினை பெற்றது. இது பாப்ட்டிஸ்ட் திருச்சபையின் எதிர்வினையை இன்னமும் தெளிவும் கூர்மையுமும் உடையதாக்கியது. அத்திருச்சபையினர் ‘ஹிந்துமதத்தின் நம்பிக்கையற்ற இருளில் திக்கற்றிருக்கும் ஹிந்துக்களை ‘<1>விடுவிக்கும் தங்கள் சங்கல்பத்தை மீள்-உறுதிப்படுத்திக் கொண்டனர். பின்னர் ‘ஏசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்ப ‘ தமக்கிருக்கும் உரிமையை மீண்டும் எடுத்துக்கூறினர்<2>. மதப்பிரச்சாரகர்களின் பரிபாஷையில் மதமாற்றல் என்பது ‘நற்செய்தியைப் பரப்பல் ‘ என்றே கூறப்படுகிறது.

பல முக்கியமான கிறிஸ்தவ மதத்தலைவர்கள் மற்றும் இறையியலாளர்களின் பார்வையில் திருச்சபையின் வெகு இருப்பிற்கான நியாயப்படுத்தலே இந்த ‘நற்செய்தி பரப்பல் ‘தான். இப்பார்வையின்படி திருச்சபையின் முதன்மை நோக்கம் தன் உறுப்பினர்களின் ஆன்மத்தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்பதல்ல மாறாக ‘ஏசு கிறிஸ்துவின் நற்செய்தியையும் அன்பையையும் பாவிகளாக உண்மை ஆன்மிகம் இன்றி இருட்கடலில் மூழ்கும் ஆன்மாக்களுடன் ‘ பகிர்ந்து அவர்களையும் மந்தையில் சேர்ப்பதுதான். (இதற்கான ஆங்கில பதமான ‘Evangelization ‘ இல் இருக்கும் மதமாற்ற பொருள் தமிழ் பதமான ‘நற்செய்தி அறிவித்தல் ‘ என்பதில் நீர்த்துப்போய்விடுவதாலும் தட்டச்சுக்கு எளிதாக இருப்பதாலும் ‘எவாஞ்சலிசம் ‘ எனும் பதத்தை இனி கட்டுரை முழுக்க பயன்படுத்துகிறேன்) கத்தோலிக்க திருச்சபையின் மிக உயர்ந்த பீடத்தில் இருக்கும் ஒரு முக்கியமான பாதிரியார் அண்மையில் கூறினார், ‘ திருச்சபை எதற்கு இருக்கிறது ? அதன் இருப்பின் நியாயம் என்ன ? எவாஞ்சலைஸ் செய்வதுதான் அதன் இருப்பின் நியாயமே. எவ்வாறு நெருப்பின் இருப்பின் தன்மையே எரிப்பதுதானோ அது போல திருச்சபை இருப்பதே எவாஞ்சலைஸ் செய்யத்தான். ‘<3> இப்பொறுக்கியெடுத்து கவனமாக கோர்க்கப்பட்ட பதப்பிரயோகங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. திருச்சபை ஒரு தீபம் போன்றதல்ல. அதன் இருப்பு ஒளி கொடுப்பதற்கல்ல. எரிப்பதற்காக. எதை எரிக்க ? தன் திருச்சபையைச் சார்ந்த ஆத்ம சாதகனின் அகங்காரத்தை ? தீய குணங்களை ? ஒருவரின் அக மலங்களை ? கத்தோலிக்க திருச்சபையினுடையாதக மட்டுமல்லாமல், மேலும் பல கிறிஸ்தவ திருச்சபைகளின் பிரச்சார இலக்கியங்களையும் மற்றும் பிரச்சார திட்டங்களையும் ஒருவர் ஆராய்வரேனில் இதற்கான விடை கிடைக்கும். எவாஞ்சலிஸம் என்பது ஏதோ ஏசு கிறிஸ்துவுக்கு இருப்பதாக கூறப்படும் உலகளாவிய அன்பினை, அவர் அனைவரின் பாவங்களுக்காகவும் செய்ததாக கூறும் தியாகத்தை பகிர்வதல்ல மாறாக சமயப்பன்மையை அழிப்பதே என்பதுதான் அந்த விடை.

பொதுவாக சாதாரண இந்தியர்கள் மிகக் கடுமையான இறையியல் வாத நுணுக்கங்களினுளெல்லாம் செல்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில், வெகு எளிதாகவே கிறிஸ்துவையும் அவர்கள் காலம் காலமாக வணங்கிவரும் ஸ்ரீ கிருஷணன், குரு நானக், பகவான் புத்தர் ஆகியோருடன் வைத்து வணங்கத் தயங்குவதில்லை. எந்த திருச்சபையின் பெயர்தாளையும் (லேபல்) ஒட்டாமலே அவர்கள் தங்கள் வாழ்வினை உலகளாவிய அன்புடனும், தியாகத்துடனும் வாழ்பவர்கள். மேலும் இந்த பாரத தேசத்தின் நவீன காலத்தின் ஆன்மிக அருளாளர்களும் சரி பாரத மக்களின் உயர் மாதிரியாக திகழ்பவர்களுமான ஸ்வாமி ரங்கனாதானந்தர், டாக்டர். அப்துல் கலாம், பரமஹம்ச யோகானந்தா, மகாத்மா காந்தி, குருதேவர் ரவீந்திர நாத் தாகூர் ஆகியோர் கிறிஸ்துவின் மீதான தம் அன்பினை தம் அழகிய வாழ்விற்கான ஆற்றலின் ஊற்றுகளில் ஒன்றாகக் கண்டுள்ளனர். கிறிஸ்துவையும் தம் செழுமையான பாரம்பரிய அருளாளர்களுள் ஒன்றாக இணைத்த பாரதப் பேரன்பு ‘ஏசுவின் நற்செய்தியை பரப்பும் ‘ மிஷினரிகளுக்கு ஆனந்தத்தைக் கொடுக்க வேண்டும் என்று நாம் இயல்பாகக் கருதுவோம். மாறாக பாரதத்திற்கே உரிய இந்த உலகம் தழுவிய ஏற்புத்தன்மை, எவாஞ்சலிஸ்ட்களின் பார்வையில் ‘சாத்தானிய தீமை ‘. கோக்-பெப்சி கம்பெனிகளின் உயர்மட்ட விற்பனை அதிகாரிகள் தீட்டும் திட்டங்கள் கூட ஒன்றாம் வகுப்பு மாணவனின் கிறுக்கல்கள் போல தோற்றமளிக்கும் அளவுக்கு தங்கள் மதப்பிரச்சாரத் திட்டங்களைத் திறமையாகத் தீட்டும் மிஷினரிகளின் பார்வையில், உண்மையில் இந்த உலகம் தழுவிய ஏற்புத்தன்மை, தங்கள் ஆத்ம அறுவடை வர்த்தகத்திற்கு படு இடையூறான விஷயம். இந்த மாதிரி எண்ணம் கொண்டவர்கள் ஏதோ ஒரு அற்ப சொற்ப அதி தீவிர மத வெறி பிடித்த விளிம்பு வட்டம் அல்ல மாறாக – அதிகார பீடத்தின் கூம்பில் இருக்கும் கார்டினல்கள், புகழ்பெற்ற இறையியலாளர்கள், தொழில் முறை எவாஞ்சலிஸ்ட்கள் என இந்தக் கூட்டம்தான் இன்று சர்வதேச திருச்சபைகளில் மையமாக விளங்குகிறது.

ஜூகே ராம், பிர்மிங்காம் எம்மானுவேல் சர்ச்சின் மதபோதகர் (Pastor). பிரிட்டிஷ் ஹிந்துக்களிடம் எவாஞ்சலிஸம் செய்வதிலுள்ள பிரச்சனைகளை அவர் அக்குவேறு ஆணிவேறாக அலசுகிறார். முதலில் தன் ஊழியர்களுக்கு ஹிந்துமதம் ஏன் ஆபத்தானது என விளக்குகிறார், ‘ ஹிந்துமதம் கொண்டிருக்கும் சித்தாந்த நெகிழ்வுத்தன்மைதான் அதனை மேற்கில் கவர்ச்சிகரமானதாகவும் ஆபத்தானதாகவும் ஆக்கியுள்ளது. ‘ பின் தன் போர்வீரர்களுக்கு (மத போதகர்களுக்கு) அறிவுரை வழங்குகிறார், ‘ ஹிந்துக்கள் மிகவும் அமைதியாக உங்களுக்கு செவி மடுப்பார்கள். ஏமாந்து போய்விடாதீர்கள். நீங்கள் கூறுபவற்றில் அவர்கள் மிகவும் ஆர்வத்தோடு இருப்பதாக நீங்கள் நினைக்கக் கூடும். அவர்கள் நீங்கள் கூறுபவற்றை எதிர்க்க மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் கடவுளுக்கு பல பாதைகள் உண்டென நம்புபவர்கள். அவர்களில் பலர் தாங்கள் கிறிஸ்துவை கடவுளாக நம்புவதாகவே கூறுவார்கள். ‘ இந்த இடத்தில் எவாஞ்சலிஸ்ட் மகிழ்ந்துவிடக்கூடாது என ஜூகே எச்சரிக்கிறார். இங்கேதான் வருகிறது எவாஞ்சலிஸத்தின் உண்மை முகம். ஏசுவின் அன்பினைப் பகிர்வதல்ல மாறாக ஜூகே ராமின் வார்த்தைகளிலேயே கூறுவோம், ‘…ஹிந்துமதத்தை அவர்கள் முழுமையாக கைகழுவி விட வேண்டும். ‘ இனி இந்த தங்குதடையல்லாத அன்பின் பகிர்வாளர் ஹிந்துக்கள் குறித்து தன் தீர்ப்பினை கூறுகிறார், ‘ஹிந்துக்கள் தொலைந்துபோன ஆன்மாக்கள். அவர்கள் ஆன்மிக குருடர்கள். இந்த உலகில் மட்டுமின்றி அடுத்த உலகிலும் அவர்களுக்கு கதிமோட்சமே கிடையாது. ‘ <4>

திரு.எம்.ஏ.தாமஸ் ‘மெடிக்கல் மிஷனை ‘ (Medical Mission to India) நடத்துகிறார். ஒரு எவாஞ்சலிக்கல் அமைப்பிற்கு நல்ல போர்வையாக விளங்கும் மதநோக்கமற்ற பெயர் அது. இவர் ‘கடவுளின் அநாதை படை ‘ (God ‘s Orphan Army) எனும் நூலின் ஆசிரியர். ஹிந்து மத நம்பிக்கைகளைப்பற்றி அவர் கூறுவதை கேளுங்கள்:

‘[ஹிந்துக்கள்] அனைத்து உயிரும் புனிதமானது என நம்புகின்றனர். எனவே அனைத்து உயிர்களும் அன்பு செய்யப்பட வேண்டியவை மற்றும் மதிக்கப்பட வேண்டியவை என நம்புகின்றனர். எனவே அவர்கள் அகிம்சையைக் கடைபிடிக்கிறார்கள். அவர்கள் எந்த ஒரு மதமும் மற்ற மதத்தைக் காட்டிலும் உயர்ந்ததில்லை என நினைக்கிறார்கள். மாறாக அனைத்து மதங்களும் இறைவனின் தூய அன்பு மற்றும் ஒளியின் ஒரு அங்கமே என அவர்கள் கருதுகிறார்கள். எனவே அனைத்து மதங்களும் சகிக்கப்படவும் அறிந்துணரப்படவும் வேண்டியதென கருதுகிறார்கள் ‘ இத்தனையும் படித்தால் மனிதர் ஏதடா ஹிந்துமதத்தை ரொம்ப புகழ்ந்து தள்ளுகிறாரே என்று தோன்றுகிறதல்லவா ? ஆனால் திருவாளர்.தாமஸை பொறுத்தவரையில் இதெல்லாம் நல்லகுணங்களோ பெருமைப்பட தக்கவையோ அல்ல. ஏனெனில் மேலே கூறியவையெல்லாம் சாத்தானால் உருவாக்கப்பட்ட ஏமாற்றாம். இதோ அவரது வார்த்தைகளிலேயே பார்க்கலாம், ‘இந்த மக்கள் அந்த பெரும் ஏமாற்றுக்காரனான சாத்தானால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். அவனது இருளிலே அவர்கள் ஆன்மிகரீதியாகவும் உடலாலும் பெரும் உபாதைப்படுகிறார்கள். நாங்கள் மெடிக்கல் மிஷனில் அவர்களின் உடல் உபாதைகளுக்கு மருந்தளிப்பதுடன், அவர்கள் உடைந்து போன ஆன்மா குணமடைய கடவுளின் அன்பையும் உண்மையையும் அளிக்கிறோம்.” ஆக இந்தியர்கள் எல்லாம் ஏன் நோய்வாய்ப்படுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டார்களல்லவா ?<5>

கேரென் க்ளைடன் மற்றும் அவரது கணவர் ரோன் தங்கள் 19-ஆவது எவாஞ்சலிக்கல் சேவையை இந்தியாவில் நடத்தினார்கள். ஹிந்துமதத்தைக் குறித்து தங்கள் மேற்கத்திய இளைஞர்களுக்கு அன்னார்கள் அளிக்கும் அழகிய சித்திரத்தைப் பார்க்கலாம். இந்த அறிவுப்பூர்வமான பேருரையின் தலைப்பே படுவெளிச்சமாக உள்ளது, ‘ஹிந்துமதத்தின் காரிருள் ‘ (Darkness of Hinduism)

‘ஹிந்துமதத்தின் காரிருள் பாரதத்தின் மீது எப்போதும் படர்ந்து நிற்கிறது. 985 மில்லியன் ஆன்மாக்களில் 75% சதவிகிதம் ஹிந்துமதத்தின் பிடியில் உள்ளன….ஹிந்துமதம் என்பது எவரையும் தன்னுள் அணைத்துக் கொள்ளும் இயல்புடையது. ஹிந்துமதம் ஒவ்வொரு ஹிந்துவின் வாழ்க்கை முழுவதும் அவன் பிறப்பு முதல் நிறைந்து விளங்குகிறது. ஆனால் ஹிந்துமதம் என்பது அதன் உறுப்பினர் அனைவருக்கும் ஒன்றுபோல இல்லை. மாறாக ஒவ்வொரு தனிமனிதனும் படித்தவரா இல்லையா, ஆஸ்திகனா, நாஸ்திகனா என்பதையெல்லாம் பொறுத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி வழியை வழங்குகிறது. ஒவ்வொரு மனிதனையும் அவனது ஆன்மிக அனுபவங்களிற்கு ஏற்ப தத்தம் பாதையை தேர்ந்தெடுக்கச் செய்யும் பரிபூரண சுதந்திரத்தை ஹிந்துமதம் வழங்குவது அதன் தனிச்சிறப்பாகும். ஒருவனது ஆன்மிக வாழ்வில் ஹிந்துமதம் சர்வாதிகாரத்தை அனுமதிப்பதில்லை. ஹிந்துமதத்தின் மற்றொரு தனித்தன்மை அதன் அதீத சகிப்புத்தன்மை. ஹிந்து ஒருவன் கிறிஸ்தவ தேவாலயத்திலோ அல்லது தர்க்காவிலோ அல்லது குருத்துவாராவிலோ சென்று தொழுவதை அவன் ஹிந்து கோவில் தொழுவதைப்போலவே ஹிந்து மதம் ஏற்றுக்கொள்கிறது. ‘ ஏதோ ஹிந்துமதத்தை வாயார புகழ்வதாக தோன்றுகிற நபர்கள் இந்த உரையின் தலைப்பை ஞாபகப்படுத்திக் கொள்ளவும் – ஹிந்துமதத்தின் காரிருள்! பின்னர் வழக்கம் போல இந்தியாவில் நடக்கும் அத்தனை தவறுகளுக்கும் ஹிந்துமதத்தை காரணமாக்கிய பின்னர் அம்மையார் முடிக்கிறார், ‘இந்த மக்களை கிறிஸ்தவப்படுத்த வேண்டியது நம்முடைய கடமை மற்றும் இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பு. நூற்றாண்டுகளாக இருளில் மூழ்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த தேசத்தை ஒளிக்கு கொண்டுசெல்வது நம் கடமை. ‘<6>

எது ஒளி ? எது இருள் ?

பலமுறை கிறிஸ்தவ பாதிரியார்களால் ‘உரையாடலுக்கு ‘ அழைக்கப்படும் வாய்ப்புகள் நம்மில் சிலருக்கு கிடைப்பதுண்டு.

சில அப்பாவி ஹிந்துக்களும் ‘ஆகா இரண்டு சமயத்தவர்களும் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்கு உரையாடல்களெல்லாம் நடத்துகிறார்களே இவர்களுக்குத்தான் என்ன நல்ல மனசு! ‘ என்று வாயைப் பிளப்பார்கள். ஆனால் வாயைப் பிளப்பவர்களுக்கு தெரியாத விஷயம் ஒன்று உண்டு.திருச்சபைகளைப் பொறுத்தவரையில் ‘உரையாடல் ‘ என்பது எவாஞ்சலைசிங் எனும் மதமாற்றத்திற்கு ஒரு வழி அவ்வளவுதான். இன்னமும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஹிந்துக்கள் கிறிஸ்துவை மதிப்பதும் வணங்குவதும் தான் ‘உரையாடலுக்கு ‘ பிரச்சனையாக இருக்கிறதென்கிறது திருச்சபை. இதோ சங்கைக்குரிய அருட்திரு பெலிக்ஸ் மாசோடா இந்தியாவின் ‘Undersecretary of the Pontifical Council for Inter-religious Dialogue of the Catholic Church ‘ ஹிந்துக்களுடனான உரையாடலில் உள்ள பிரச்சனையாக கூறியிருக்கிற விஷயத்தை கேளுங்கள்:

‘ ஏசு கிறிஸ்துவின் இரகசியத்தை தம் வாழ்வில் இணைக்கும் ஹிந்துக்கள் உள்ளார்கள். அவரைப் போன்றே வாழ முயலும் ஹிந்துக்கள் உள்ளனர். அவரை ஞானமாக காணும் ஹிந்துக்கள் உள்ளனர்; அவருக்கு சேவை செய்வோர் உள்ளனர்; அவரை துறவியாக மறைஞானியாக பெரும் அறவியல் குருவாக காணும் ஹிந்துக்கள் உள்ளனர்; இவ்விதத்திலெல்லாம் பல ஹிந்துக்கள் ஏசு கிறிஸ்துவை தத்தம் வழிகளில் அன்பு செய்கின்றனர் மதிக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு கிறிஸ்தவ நம்பிக்கையின் முக்கியமானவைகள் பெரிதாகப் படவில்லை. இதுதான் ஹிந்து-கிறிஸ்தவ உரையாடல்களில் பெரும் தடையாக உள்ளது. ‘<7>

ஆக ஏசு கிறிஸ்துவின் இரகசியத்தை தம் வாழ்வில் இணைப்பதைக் காட்டிலும், அவரை ஞானமாக கண்டு அவருக்கு சேவை அளிப்பதைக் காட்டிலும், அவரை துறவியாக மறைஞானியாக பெரும் அறவியல் குருவாக காண்பதைக் காட்டிலும், முக்கியமான கிறிஸ்தவ நம்பிக்கைகளை பற்றி ஹிந்துக்கள் கவலை கொள்ள மாட்டேன் என்கிறார்கள். அதென்ன ஏசுவிடம் அன்பும் மதிப்பும் கொள்வதற்கப்பால், அவரைப்போல அறவொழுக்கத்தில் வாழ, முயற்சிப்பதற்கு அப்பால் முக்கியமான கிறிஸ்தவ நம்பிக்கை ? தங்கள் பாரம்பரியத்தை இழந்து, ஹிந்துமதத்தை முற்றும் துறந்து திருச்சபையை கடவுளின் ஒரே பாதையாக ஏற்று, மற்றவர்களெல்லாம் அஞ்ஞானிகள், சாத்தானின் இருளில் வாழ்பவர்கள் என பிரகடனப்படுத்துவதை குறித்து இந்த மண்டு ஹிந்துக்கள் ‘உரையாட ‘ மாட்டேன் என்கிறார்கள் என்பதுதான். பாருங்கள் விநோதத்தை ஏசு கிறிஸ்துவின் இரகசியத்தை தம் வாழ்வில் இணைப்பதால் ‘கிறிஸ்தவத்தின் மற்ற முக்கிய விஷயங்கள் ‘ முக்கியமாக ஹிந்துவுக்குப் படாதது ஹிந்துவின் குற்றம் என்று கிறிஸ்தவர் கூறுகிறார். அதுவும் கூறுகிறவர் யார் ? ‘கர்த்தரின் பூலோகப் பிரதிநிதியாக ‘ மணவாட்டியாக தன்னை காணும் திருச்சபையின் அதி-உயர அதிகார பீடத்தில் இருக்கிற நபர்.

கிறிஸ்தவர்களுக்கும் ஹிந்துக்களுக்குமிடையேயான சமய வட்டத்திற்கு அப்பாற்பட்ட மானுட உறவுகளைக் கூட எவாஞ்சலிசத்திற்கான கருவியாக பயன்படுத்த திட்டங்கள் உலகளாவிய எவாஞ்சலிச ஆய்வு மாநாடுகளில் நடத்தப்படுகின்றன.<8>

ஆக இந்த ‘உரையாடலிலும் ‘ மசியாத ஹிந்துக்களுக்கு இருக்கவே இருக்கிறது AK-47க்கள். திரிபுராவைப் பாருங்கள். கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட பாப்டிஸ்ட் சர்ச்சின் திரிபுரா கிளை பாலுட்டி வளர்த்த NLFT எத்தனை அழகாக கிறிஸ்துவின் நற்செய்தியை பரப்பி வருகிறதென தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் நமக்கு வருத்தமளிப்பது இந்த மிஷினரிகளின் பிரச்சாரமோ அல்லது ஹிந்துமதத்தை அதன் நல்லம்சங்களுக்காகவே அழிக்கத்துடிக்கும் வெறியோ அல்ல. மாறாக குறைந்தது கடந்த 150 ஆண்டுகளாக வெகுதீவிரமாக வளர்க்கப்பட இந்தியத் திருச்சபைகளைச் சார்ந்தவர்களிடமிருந்து, தங்கள் சொந்த சகோதரர்களான ஹிந்துக்களையும் நம் தேச மாண்புகளையும், இத்தகைய அதி-தீவிர இழிவு-வெறுப்பு பிரச்சாரத்திற்கு உட்படுத்துவது குறித்து குறிப்பிடத்தக்க எதிர்ப்பு ஏதும் உருவாகாததுதான். அண்மையில் ‘கத்தோலிக்கத் திருச்சபையின் வாயிலாக மட்டுமே மீட்பு சாத்தியப்படும் ‘ எனும் புனித ஆணியை போப் பிரகடனப்படுத்திய போது பல மேற்கத்திய கத்தோலிக்க திருச்சபைகளில், ஏன் இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையில் அதற்கு எதிர்ப்பு எழுந்தது. ஆனால் ‘யாரும் வணங்கிடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று ‘ எனும் மதிப்பீடுகள் ஊறிய கலாச்சாரத்துடன் பல பத்தாண்டுகளாக ‘உரையாடல்களை ‘ நிகழ்த்தி வருவதாகவும், ‘கலாச்சார உள்வாங்குதலை ‘ நிகழ்த்தி வருவதாகவும் தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் இந்திய கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து எவ்வித எதிர்ப்பும் (வெளிப்படையாகவேனும்) வெளிவரவில்லை. ஆக ‘இந்தியமயப் படுத்தப்பட்ட ‘ கோக் விளம்பரங்களுக்கும், திருச்சபை விளம்பரப்படுத்தும் ‘கலாச்சார உள்வாங்குதலுக்கும் ‘ வேறுபாடுகள் ஏதுமில்லை என்றுதான் கூறவேண்டும். அது மட்டுமல்ல, பன்னாட்டு கம்பெனிகள் காலாவதியான சரக்கை வளரும் நாட்டு சந்தைகளில் தள்ளுவது போலவே, திருச்சபையும் வளர்ந்த நாடுகளில் முன்வைக்கும் இறையியலை போலல்லாது, பாரதம் போன்ற வளரும் நாடுகளில் முன்வைக்கும் இறையியல், முன்னதுடன் ஒப்பிடுகைகளில் காலனியத்தன்மை கொண்ட பழம் சரக்கு என்பதை தெரிந்து கொள்ளலாம். வளரும் நாடுகளில் விற்கப்படும் பொருட்களில் அது குளிர்பானமானாலும், சிகரெட்டானாலும், கிறிஸ்தவ இறையியலானாகும், நச்சுத்தன்மை அளவிற்கதிகமாகவேதான் உள்ளது. உச்சகட்ட ஆன்மிக காலனியப்பார்வையான போப்பின் இந்த சமீபத்திய பிரகடனம் இந்திய திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, இன்னமும் இந்திய கத்தோலிக்கத் திருச்சபை தன் காலனிய தளைகளிலிருந்து விடுபடாததை காட்டுகிறது. பாரதம் போன்றதொரு இறையியல் பன்மையைப் போற்றும் நாட்டில், இணைந்து வாழ இந்திய கிறிஸ்தவத்திற்கு இன்றைய பெரும் தேவை – மேற்கத்திய பார்வை கொண்ட காலனிய கிறிஸ்தவ திருச்சபையின் சிலுவையில் அறையுண்டு மரிக்கும் ஏசு, வேதாந்த கிறிஸ்துவாக உயிர்த்தெழல்.

Baptist Press (10/99) & Baptist Press (11/99)

Christian Daily News -Jan 10, 2000.

கார்டினல். ஜோஸப் தாம்கோ வழங்கிய ஏற்புரை, National Assembly Of The Catholic Church In India, (Bangalore, 20-24 September 2000).

Juge Ram, ‘Hinduism ‘, Nucleus July 2000, Copyright of the article- Christian Medical Fellowship.

What is Hinduism – M. A. Thomas. The complete article available at the URL: http://www.mminet.org/hinduism.htm

Karen Clayton, ‘Darkness of Hinduism ‘. The complete article is available at the URL: http://www.btcoc.com/98kclayton.htm

Felix Machado, ‘How do Hindus view Jesus Christ ? ‘, The Examiner (October 10,1998).

‘Christian Witness to Hindus ‘ (இந்த ஆய்வறிக்கையின் பிரபல பெயர் ‘The Thailand Report on Hindus ‘), Report of the Consultation on World Evangelization Sponsored by the Lausanne Committee for World Evangelization, (1980). இவ்வறிக்கையின் 5- ஆம் பிரிவு (Section 5) வெளிப்படையாகவே ‘Strategic Planning For Evangelization of Hindus ‘ என தலைப்பிடப் பட்டுள்ளது. இப்பிரிவிலேயே தனிப்பட்ட மானுட உறவுகளை மதமாற்றத்திற்கு பயன்படுத்துவது குறித்த வழிமுறைகள் கூறப்படுகின்றன.

இக்கட்டுரை 2001-இல் எழுதப்பட்டது. பின்னர் சில காரணங்களால் வெளியிடப்படவில்லை. இக்கட்டுரைக்கான இணயச்செய்திகள் ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் பழமையானவை. எனவே சில இணைய தளத் தொடர்புகள் மாறியிருக்கலாம். இக்கட்டுரையில் காணப்படும் கருத்துகளுக்கு உடன்பட்டு, இக்கட்டுரைக்காக எனக்கு உதவிய பெயர் குறிப்பிட முடியாத சில கிறிஸ்தவ இறையியலாள நண்பர்களுக்கு என் நன்றிகளும் வணக்கங்களும்.

————————————–

திண்ணை பக்கங்களில்

  • பழங்குடியினர் வரலாறு-கிருஸ்துவம்-1
  • பழங்குடியினர் வரலாறு-கிருஸ்துவம்-2
  • பழங்குடியினர் வரலாறு-கிருஸ்துவம்-3
  • பழங்குடியினர் வரலாறு-கிருஸ்துவம்-4
  • மதமாற்றம் பற்றி காந்தி
  • கிருஸ்துவ மன்னிப்புக் கோரல்
  • புத்தர் பற்றி போப் ஜான் பால்
  • ரிச்சர்ட் டாகின்ஸ்

  • இந்திய பத்திரிகைகளில் கிருஸ்துவச் செய்திகள்<
  • ரிச்சர்ட் டாகின்ஸ்
  • கேரன் ஆம்ஸ்ட்ராங்
  • சார்லஸ் டபிள்யூ வெப்

    அரவிந்தன் நீலகண்டன்

  • ஃப்ராங்க் காப்ரா
  • தி ஹிண்டு, அன்னை தெரசா

    Series Navigation

  • அரவிந்தன் நீலகண்டன்

    அரவிந்தன் நீலகண்டன்