ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

ஞாநி


சென்னை சபாக்களில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக நாடகம் நடத்தி வருபவர் மாலி. கடைசியாக அவர் நடத்திய நாடகம் ‘ ஞானபீடம் ‘ காஞ்சி சங்கர மடத்தலைவர் ஜயேந்திரருக்கு எரிச்சலை ஏற்படுத்தி நாடகத்தை மாலி நிறுத்த வேண்டியதாகிவிட்டது.

எரிச்சலுக்குக் காரணம் என்ன ? சங்கர மடம் போன்ற ஒரு மடத்துக்கு ஒரு தலித்தும் தலைவராக முடியும் என்று இந்த நாடகம் சொல்லியதுதான். மருத்துவம், பொறியியல் படிக்காமல் ஒருவர் டாக்டராகவோ எஞ்சினீயராகவோ ஆகக் கூடாது என்பது போல மடத்துக்குத் தேவையான வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் இத்யாதிகளைப் படிக்காமல் ஒருவர் அதன் தலைவராகக் கூடாது.

எப்படி மருத்துவம், பொறியியல் படித்த எவரும் டாக்டராகவோ எஞ்சினீயராகவோ கலாமோ அதே போல, வேத இத்யாதிகள் படித்த எவரும் மடத் தலைவராகலாம் என்பதுதான் மாலியின் வாதம். இந்த அடிப்படையில் அவர் தன் நாட்கத்தை எழுதியிருக்கிறார்.

ஒரு தலித்தின் குழந்தையும் ஒரு பார்ப்பனரின் குழந்தையும் இடம் மாறிவிடுகின்றன. பார்ப்பனக் குழந்தை தலித் வீட்டில் வளர்ந்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாகிவிடுகிறான். பார்ப்பனர் வீட்டில் வளர்ந்த தலித் குழந்தை வேதம் படித்து அதில் விற்பன்னராகிவிடுகிறான். இந்த வேத வித்தகனை ஒரு சுவாமிகள் ( சங்கராச்சாரியார் என்று நான் என் நாடகத்தில் எங்கும் சொல்லவில்லை என்கிறார் மாலி. எனினும் தோற்றம் அவ்வாறே இருக்கிறது.) தன் மடத்தின் வாரிசாகத் தேர்ந்தெடுக்கிறார்.

தலித் அப்பா அதிர்ச்சியடைந்து சுவாமிகளிடம் சென்று உண்மையைச் சொல்லுகிறார். ஆனால் அதனால் அதிர்ச்சியடையாத சுவாமிகள், பிறப்பு ஒருவனைத் தீர்மானிப்பதில்லை, நடத்தையே தீர்மானிக்கிறது. எனவே தன் முடிவில் மாற்றம் கிடையாது என்று சொல்லுவதுடன் நாடகம் முடிகிறது.

இந்த நாடகம் பல சபாக்களில் சென்னையில் நடத்தப்பட்டது. இன்னும் 19 முறை நடத்த புக்கிங் இருந்த நிலையில் சங்கர மடத்திலிருந்து மாலிக்கு அழைப்பு வந்தது. உடனடியாக நாடகத்தை நிறுத்தச் சொன்னார் ஜயேந்திரர். மாலி ஜயேந்திரரிடம் வாதிட்டார். தன் நாடகத்தை நேரில் பார்த்துவிட்டுப் பிறகு கருத்து சொல்லும்படி கேட்டார்.

‘ அந்தக் கண்ராவியை நான் எதுக்கு பாக்கணும் ? ‘ என்றார் ஜயேந்திரர். ‘ என் நாடகம் இந்து மதத்துக்கு விரோதமானது இல்லையே. அதை சீர்திருத்தத்தானே செய்கிறேன் ‘ என்று வாதிட்டார் மாலி. ‘ இந்து மதத்தைப் பாதுகாக்கறதுக்குதானே நான் இருக்கேன். அதெல்லாம் நான் பாத்துக்கறேன் நீ எதுக்கு ? ‘ என்றார் ஜயேந்திரர்.

‘உனக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம். எஸ்.வி.சேகர் மாதிரி சிரிப்பா நாடகம் போட்டுட்டுப் போயேன் ‘ என்று லோசனை அருளினார். தொடர்ந்து மாலி நாடகத்தை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டினார்.

மாலி தொடர்ந்து நாடகத்தை நடத்துவதாகவே இருக்கிறார். ஆனால் அவரது குழுவில் உள்ள பல அமெச்சூர் நடிகர்கள் சங்கராச்சாரி மீது ‘பய ‘பக்தி உள்ளவர்கள். அவர்கள் தயங்குகிறார்கள். ஆள் கிடைக்காவிட்டால் நானும் பரீக்ஷா நண்பர்களும் வந்து நடிக்கத் தயார் என்று மாலியிடம் நான் தெரிவித்தேன். எப்படியும் மறுபடியும் நாடகத்தை தொடர்ந்து நடத்துவதில் மாலி உறுதியாக இருக்கிறார்.

அந்த உறுதியும் நம்பிக்கையும் அவருக்கு வருவதற்குக் காரணமாக இருந்த பலவற்றில் ஒன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய பொதுக் கூட்டம். அதில் ந.முத்துசாமி, பிரசன்னா ராமசாமி, அ.மங்கை, பிரளயன், நான், அகஸ்டோ என்று பல நாடகக்காரர்களும், கந்தர்வன், செந்தில்நாதன், அ.மார்க்ஸ், இன்குலாப் என்று பல இடதுசாரி சிந்தனையாளர்களும் பங்கேற்று சங்கராச்சாரியை கண்டித்தும் மாலியை ஆதரித்தும் பேசினார்கள்.

இதில் பங்கேற்ற பலரைப் போல எனக்கும், ஒரு தலித் சங்கர மடத் தலைவராவது இறுதி லட்சியம் அல்ல. சங்கர மடங்கள் போன்ற அமைப்புகளே இல்லாத ஒரு சமூகம்தான் நாம் அவாவுவது. கோயில் கருவறையில் தலித் நுழைவதோ, அர்ச்சகராக தலித் நியமிக்கப்படுவதோ, சங்கராச்சாரியாவதோ, தலித் சமூக விடுதலைக்கான தீர்வுகள் அல்ல.

ஆனால் அந்த விடுதலை நோக்கிச் செல்வதற்கான திறவுகோல்கள். ஏனென்றால் இவை ஒரு மனிதனாக பிற மனிதர்களுக்கு சமமாக எல்லா இடங்களிலும் தலித்துகளும் எல்லா சாதியினரும் நடத்தப்பட்டாக வேண்டும் என்ற மனித உரிமை அடிப்படையில் வைக்கப்படும் கோரிக்கைகள்.

மனித சமத்துவத்தை ஏற்காத கொள்கைகளை ஆன்மீகம் என்ற பெயரில் தொடர்ந்து பரப்பி வரும் ஜயேந்திரர் போன்றவர்கள் மாலியின் நாடகங்களுக்கு பயப்படுவதில் ச்சரியமில்லை. அவை தன்னுடைய ஆதரவாளர்களான நடுத்தர மேல் சாதியினர் மத்தியில் நடத்தப்படுவதால் அவர்கள் மனது மாறிவிடும் ஆபத்து இருக்கிறதே என்ற கவலையில் எரிச்சலும் வருகிறது.

அதனால்தான் மாலியை அழைத்து மிரட்டுகிறார். இதை மீறி மாலி நாடகம் போட்டால் நேரில் போய் வன்முறை நடத்துவதற்கு இந்து முன்னணி, குரங்குப்படைகள் இருக்கின்றன.

ஏற்கனவே நாடகத் துறைக்கு போலீஸ் தணிக்கை இருக்கிறது. சங்கராச்சாரிகள் அடிஷனல் போலீசாகிக் கொண்டிருக்கிறார்கள்.

நிஜ நாடக இயக்கத்தின் ‘கலகக்கார தோழர் பெரியார் ‘ நாடகத்துக்கு சென்னையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அனுமதி பெறுவதற்குப் போலீசிடம் அலைய வேண்டியிருந்தது. கலகக்காரர் என்பது ஆட்சேபத்துக்குரியது என்றார்களாம்.

நாடகத் தடைச்சட்டம் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் இல்லை. எண்பதுகளின் தொடக்கத்தில் இது பற்றி நான் ஆய்வு செய்தபோது, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிர மாநிலங்களில் மட்டுமே உள்ளதாக அறிந்தேன்.

தமிழ்நாட்டு சட்டம் 1954ல் ( நான் பிறந்த ஆண்டு !) போடப்பட்டது. குறிப்பாக எம்.ஆர்.ராதாவை ஒடுக்குவதற்காக காங்கிரஸ் ட்சி கொண்டு வந்த சட்டம் அது. பின்னால் 1967 முதல் 37 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியே இருந்தபோதும் அந்த சட்டம் அகற்றப்படாமல் தொடர்ந்து நடைமுறையில் இருக்கிறது.

அந்த சட்டத்தின்படி, ஒரு நாடகம் மக்களிடையே கொந்தளிப்பையோ, சட்டம் ஒழுங்கு பிரசினையையோ ஏற்படுத்தக் கூடும் என்று தெரியவந்தால், அப்போது அதன் பிரதியை தணிக்கைக்கு அனுப்பும்படி மாவட்டங்களில் கலெக்டரும், சென்னை மாநகரில் போலீஸ் கமிஷனரும் கேட்கலாம் என்பதே விதி. தங்கள் நடைமுறை வசதிக்காக, எந்த நாடகமானாலும் முன்கூட்டியே அனுப்பிவிடும்படி விதிகளை விரிவுபடுத்திக் கொண்டுவிட்டார்கள்.

போலீஸ் அனுமதி இல்லாமல் நாடகத்தை அரங்கேற்ற அரங்கின் நிர்வாகி அனுமதிக்கக் கூடாது. இது நாடகத் தடைச் சட்டத்தில் இல்லை. ஆனால் பப்ளிக் ரிசார்ட்ஸ் ஆக்ட் என்ற பொது இடங்கள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் இந்தப் பிரிவு செயல்படுகிறது. எண்பதுகளில் கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் நாடகமும் பரீக்ஷாவின் கமலா நாடகமும் போலீசிடம் சிக்கிப் பட்ட பாடு தனியே எழுதவேண்டிய விஷயம். அப்போது இந்தச் சட்டத்துக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்ய நான் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

இந்த டிசம்பரில் ஸ்ரீராம் நிறுவனம் தனது உலகத் தமிழ் இணைய இதழின் ஆண்டு விழாவையொட்டி ழ் நடத்திய நாடக விழாவின்போது அதில் பங்கேற்ற எல்லா நாடகங்களுக்கும் போலீஸ் அனுமதி பெற அமைப்பாளர்கள் அலைய வேண்டியதாயிற்றூ. தெருக்கூத்துக்குக் கூட ஸ்க்ரிப்ட் கேட்கப்பட்டது.

ஸ்ரீராம் நிறுவனத்தின் சுபமங்களா இதழ் கோமல் சுவாமிநாதனின் ஆசிரியப் பொறுப்பில் நடந்து கொண்டிருந்தபோது நாடக விழாக்களை அவர் நடத்தினார். கடைசி நாடக விழா 1994ல். அதன் பிறகு அதே நிறுவனம் இப்போது இந்த விழாவை நடத்தியது. அவர்கள் நடத்தியிராவிட்டால், எங்கள் பரீக்ஷா குழு தன் பிறந்த வீடான மியூசியம் தியேட்டருக்குள் மறுபடியும் நுழைவதைப் பற்றி யோசித்திருக்கக் கூட முடியாது. காரணம் தற்போது வாடகை மட்டும் சுமார் பத்தாயிரம் ரூபாய்கள்.

விழாவில் பங்கேற்ற நாடகங்களில் பார்வையாளர்களுக்கு நன்றாகப் புரிந்த நாடகங்கள் சென்னை கலைக்குழு நடத்திய பிரளயனின் உபகதையும் எங்கள் குழுவின் பாதல் சர்க்கார் நாடகமான ‘தேடுங்கள் ‘ மட்டுமே. மேடை நாடகத்தில் தங்களாலும் காஸ்ட்டியூம், செட்ஸ்,பாட்டு, நடனம் எல்லாம் செய்யமுடியும் என்று நிறுவும் முயற்சியாக உபகதை இருக்கிறது. சென்னைக் கலைக் குழுவின் அசல் பலம் நகைச்சுவை நையாண்டி கலந்த தெரு நாடக வடிவம்தான். உபகதையின் பலம் அதன் கருத்தாக்கம்.

கூத்துப் பட்டறையின் படுகளம் திறமையான நடிகர்களுடன், குழப்பமான ஸ்க்ரிப்ட்டில் அளவு கடந்த நீளத்தில் அமைந்திருந்தது. பிரசன்னா ராமஸ்வாமியின் கவிதை நாடகத்தில் காட்சிப்படுத்தல் நன்றாக இருந்தபோதும் நடிகர்களின் குறைபாடுகள் அதை நீர்க்கச் செய்துவிட்டன. முருகபூபதியின் உதிர முகமூடி எனக்கு எப்போதும் போலப் புரியவில்லை. எனக்குப் புரிந்ததெல்லாம் நடிகர்களின் கடுமையான உழைப்பு வீணாக்கப்படுகிறது என்பது மட்டுமே. எனினும் ந.முத்துசாமி போன்றவர்களுக்கு நாடகம் புரிந்த காரணத்தால், நாடகம் முடிந்த உடனே உரக்க சபாஷ் போட்டு பாராட்டினார்.

பாண்டிச்சேரி குழுவினரின் பாலித்தீன் நகரம் சுற்றுச் சூழல் அபாயம் பற்றிய எளிமையான கருத்தை கடினமானதாக்க முயற்சி செய்து கொண்டே இருந்தது. இந்த நாடகம் எளிமையாக்கப்பட்டால், பரவலாக எடுத்துச் செல்ல வேண்டிய தெரு நாடகமாக அமைய முடியும்.

மெளனக்குரல் அமைப்பின் அ.மங்கை இயக்கிய மணிமேகலை பலவீனமான ஸ்க்ரிப்ட் என்ற போதும் நடித்த முழு நேர நாடகக் கலைஞர்களின் திறமையால் தொடர்ந்து காப்பாற்றப் படுகிறது. அவ்வை நாடகப் பிரதியில் இன்குலாப் காட்டியிருக்கும் ழமும் இறுக்கமும் இதில் இல்லை. பகுத்தறிவாளராக இருந்து கொண்டு கடவுள், பூதப் பாத்திரங்களைக் கையாளும் சங்கடத்தை அவரால் வெற்றிகரமாகத் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. மணிமேகலையின் சிறைச்சாலைப் பகுதி மட்டுமே பிரதியின் சிறப்பான அம்சம்.

உலகத் தமிழ் இணையம் இப்படி ஒரு நாடக விழாவை நடத்தியது நல்ல விஷயம் என்றாலும், போதுமான விளம்பரம் இல்லாததால் நாடகங்கள் இன்னும் அதிகம் பேரை சேர முடியவில்லை. குறிப்பாக இன்று கல்லூரி மாணவர்களிடையே நாடகத்தில் ஆர்வமும் வரவேற்பும் அதிகரித்து வரும் நிலையில் இந்த விழாவுக்கு மாணவர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

பார்வையாளர்களை மேலும் ஈர்க்க அதிக விளம்பரம் இல்லாமலே நடந்து முடிந்து விடும் நல்ல நிகழ்ச்சிகளில் ஒன்று புகழேந்தியின் ஓவியக் கண்காட்சி. தொடக்க விழா, நிறைவு விழாவுக்கு அவர் பலதரப்பட்ட பிரமுகர்களை அழைப்பதால், அந்த தினங்களில் ஓரளவு கூட்டம் கூடி அவருடைய சிறந்த படைப்புகளைப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

புகழேந்தியின் அண்மை வருடக் கண்காட்சிகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தவை இரண்டு. ஒன்று குஜராத் நில நடுக்கத்தின் பாதிப்புகளை சித்திரிக்கும் கண்காட்சி. இரண்டாவது பெரியாரின் பல தோற்றங்களின் கோட்டோவியக் கண்காட்சி.

தற்போது நடந்தது புகை மூட்டம் என்ற தலைப்பிலானது. உள்ளூர் அரசியல், உலக அரசியல், பண்பாடு, சமூகம், வர்த்தகம் என்று பல துறைகளிலும் புகை மூட்டமாகக் கவிந்திருக்கும் இருளிலிருந்து விடுபட்டு ஒளியைக் காண்போம் என்ற நம்பிக்கையுடன், இருளின் பல முகங்களை சித்திரித்த ஓவியங்களின் தொகுப்பு இது. கறுப்பு வெள்ளைக் கோட்டோவியங்களில் புகழேந்திக்கு இருக்கும் வலிமை, வண்ணங்களில் சிதறி விடுவதாக எனக்குத் தோன்றுகிறது. அவருடைய கருத்து வெளிப்பாட்டை வண்ணங்கள் மட்டுப்படுத்திவிடுகின்றன.

புகழேந்தியின் முயற்சியில் பாராட்டத்தக்க ஒரு அம்சம், அவர் சம்பிரதாயமான ர்ட் கேலரிகளில் தன் கண்காட்சியை நடத்தாமல், தொடர்ந்து தியாகராய நகர் பள்ளியின் சாதாரண ஓட்டுக் கூரைக் கட்டிடத்தில் நடத்திவருவதாகும். ஆர்ட் எக்சிபிஷன்களில் மட்டுமே காணப்படும் ரசிகர்களுக்கு என்று இல்லாமல், பலவிதமான பொது மக்களும் வரக்கூடிய ஓர் இடத்தில் நவீன ஓவியங்களை அறிமுகப்படுத்துவது முக்கியமான பணி. எந்த நல்ல விஷயமும் அதிகம் பேரைச் சென்றடைய வேண்டும். அதற்கான பார்வை படைப்பாளிகளுக்கும் வேண்டும்.

நிறைய பார்வையாளர்களை சென்றடையக் கூடிய சாதனங்களில் இன்று முக்கியமானது டெலிவிஷன். திரைப்படத்தை விட அதிகமானவர்களிடம் செல்வது தொலைக்காட்சிதான். அதில் நல்ல இலக்கியப் படைப்புகளுக்கும் சமூக அக்கறையுள்ள படைப்புகளுக்கும் இடம் தர வேண்டும் என்ற முனைப்பு தனியார் தொலைக்காட்சிகளுக்குக் கிடையாது. அப்படிப்பட்ட முனைப்பு பொதுத்துறையில் இருக்கும் தூர்தர்ஷனுக்கு மட்டுமே இருந்து வருகிறது.

அண்மையில் என் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நான் சுட்டிக் காட்டியது போல, சென்னையைப் பொறுத்த மட்டில் எழுத்தாளர் அ.நடராஜன் நிலைய இயக்குநராக இருந்தபோது ஏராளமான எழுத்தாளர்களின் பல படைப்புகளுக்கு வாய்ப்பு அளித்தார். அப்போது தனியார் தொலைக்காட்சிகளுடன் போட்டி போட்டு விளம்பர வருவாயை கணிசமாக சம்பாதிக்கும் வலிமையோடும் நிலையத்தை வைத்திருந்தார். இப்போது நிலைமை மாறிவிட்டது. தூர்தர்ஷன் நோயுற்ற யானை போலிருக்கிறது.

எனினும் அதன் சமூக அக்கறையும் நல்ல படைப்புகளுக்கு இடம் அளிப்பதற்கான முனைப்பும் இன்னும் தொடர்கின்றன. சன், ஜெயா போல திராவிடப் பாரம்பரியத்தில் வந்த சேனல்கள் பெரியார் பற்றி ஒரு பத்து நிமிடப் படம் கூடத் தயாரித்ததில்லை. ஆனால் தூர்தர்ஷன் என்னுடைய ‘அய்யா ‘ தொடரை ஐந்து பகுதிகளில் சுமார் இரண்டரை மணி நேர நீளத்தில் தயாரித்திருக்கிறது. ( அதற்கான முழுத் தொகை டெல்லியிலிருந்து அளிக்கப்பட்ட பிறகே அதை ஒளிபரப்ப முடியும் என்பதால் ஒளிபரப்பு தாமதமாகிக் கொண்டிருக்கிறது.)

பல நல்ல சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை படமாக்கித் தரும்படி பிரபல திரைப்பட இயக்குநர்களை சென்னை தூர்தர்ஷன் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று சா.கந்தசாமியின் சிறந்த சிறுகதையான ‘ தக்கையின் மீது நான்கு கண்கள் ‘ . ஒரே சமயத்தில் தலைமுறைகளிடையில் நிலவும் இடைவெளியையும் நெருக்கத்தையும் கந்தசாமியின் கதை அழகாகச் சொல்லுகிறது.

இயக்குநர் வஸந்த் உருவாக்கியுள்ள இந்தக் குறும்படத்தை ஒரு தனித் திரையிடலில் அண்மையில் பார்த்தேன். வஸந்த்தின் நல்ல ஸ்க்ரிப்ட்டுக்கு அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒளிப்பதிவு முறை பொருத்தமாக எனக்குப் படவில்லை. கதையின் போக்கையும், நல்ல நடிப்பையும் ஒளிப்பதிவு பலவீனப்படுத்துகிறது.

சேவா ஸ்டேஜ் நடிகரான மூத்த கலைஞர் வீராச்சாமியும் புதிய சிறுவனும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். வீராச்சாமிதான் 40 ஆண்டுகளுக்கு முன்பு மாற்று சினிமா முயற்சியான ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன் ‘ படத்தில் ஐஸ் கம்பெனி ஓனராக சிறப்பாக நடித்தவர் என்பது நினைவு கூரத்தக்கது.

அண்மையில் இன்னொரு குறும்படம் கவனத்துக்குரியது. இடதுசாரி தொழிற்சங்க நண்பர் ஏ.பி.விஸ்வநாதன் வங்கி, நிதித்தொழில் சார்ந்து பிழைப்பைக் கொண்டிருந்தாலும், முழு நேர சினிமா படைப்பாளியாக மாறும் தருணத்துக்கான நெருப்பை

ஆழ்மனதில் அணையாமல் பொத்திப் பாதுகாத்து வருபவர்.

அவருடைய இரண்டாவது படம் – வாட்டர் பாய் . ( முதல் படம் எலிபதி ராஜ் டிவியில் சில ண்டுகள் முன்பு ஒளிபரப்பானது. மனைவியை கனவன் சமமான மனுஷியாக மதிக்கக் கற்றுக் கொள்வதை நகைச்சுவையுடன் சொல்லிய குறும்படம் இது.)

இந்த இரண்டு படங்களுக்கும் நான் இசை கோர்த்திருக்கிறேன். எலிபதியில் சாமியாராகவும் பாத்திர வியாபாரியாகவும் டபிள் ரோலில் நடித்தேன். வாட்டர்பாயில் விஸ்வநாதன் எனக்கு நடிக்க வாய்ப்பு தரவில்லை. ( அதனாலோ என்னவோ) படம் நன்றாக வந்திருக்கிறது. தினசரி பல அலுவலகங்களுக்கு தண்ணீர் கேன்கள் எடுத்துச் செல்லும் டெலிவரி பையன் தன் வீட்டுக் குடி நீருக்காக தண்ணி லாரி பின்னே முண்டியடித்து தோற்கும் சமூக அவலம்தான் கதை.

சூளைமேடு மாநகராட்சிப் பள்ளி மாணவன் வினோத் அந்தப் பாத்திரத்தில் தத்ரூபமாக நடித்திருப்பதை மகேந்திரனின் கேமரா அழகாக பதிவு செய்திருக்கிறது. இந்தப் படம் வரும் பிப்ரவரி 2004 மும்பை குறும்பட விழாவுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

னால் இத்தகைய பல படங்கள் மக்களைச் சென்றடையவே முடியாமல் முடங்கி விடுகின்றன. காரணம் இவற்றை தியேட்டர்களிலும் காட்ட முடியாது. சேனல்களில் மட்டுமே காட்டமுடியும். ஆனால் நம்முடைய சேனல்கள் இந்த மாதிரிப் படங்களுக்கு நேரம் ஒதுக்குவதில்லை. குறைந்தபட்சம் வாரம் ஒரு முறையேனும் ஒரு மணி நேரம் ஒதுக்கலாம்.

பள்ளிக் கூடங்கள், கல்லூரிகளில் நல்ல நாடகங்களையும் குறும்படங்களையும் அறிமுகம் செய்வதை இப்போதே தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் எஸ்.வி.சேகர்களும் ஜயேந்திரர்களும் நம்முடைய மொத்த கலாசாரத்தையும் ஒற்றைப் பரிமாணத்தில் குறுக்கி காமெடியாக்கி விடுவார்கள்.

தீம்தரிகிட ஜனவரி 2004

dheemtharikida@hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி