இவர்களைத் தெரிந்து கொள்வோம்.

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

பி எஸ் நரேந்திரன்


2004-ஆம் வருடத்திய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ‘சுற்று மூலையில் ‘ (around the corner என்பதின் தமிழ் முழி பெயர்ப்பு) இருக்கிறது. எதிர் வரும் காலங்களில் இந்தியப் பொருளாதாரம், அமெரிக்க வியாபாரக் கொள்கைகளின் மாற்ற, ஏற்ற, இறக்கங்களினைச் சார்ந்து இருக்கப் போவதால் இந்தத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என நினைக்கிறேன். எனவே, இத் தேர்தலில் போட்டியிட இருக்கும் முக்கிய வேட்பாளர்கள் சிலரைப் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துதலே என் நோக்கம்.

ரிபப்ளிகன் கட்சியைப் பொறுத்தவரை, தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ‘நியூக்குலர் புகழ் ‘ ஜார்ஜ் W. புஷ்-தான் அதன் வேட்பாளர் என்பது தீர்மானமான விஷயம். ஏதாவது அற்புதம் நடந்தாலொழிய, இன்னொரு புதிய ரிபப்ளிகன் வேட்பாளர் போட்டியில் கலந்து கொள்வது சாத்தியமில்லை. ஒரு முறை தேர்ந்தெடுக்கப் பட்ட அமெரிக்க ஜனாதிபதி அதிக பட்சம் இரண்டு முறை மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட முடியும். அதாவது எட்டு வருடங்கள் (இரண்டு நான்கு வருட பதவிக் காலம்). அமெரிக்க வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டும் இதற்கு விதிவிலக்கு அளிக்கப் பட்டிருக்கிறது.

1930களில் நடந்த, அமெரிக்காவின் ஆணிவேரை அசைத்துப் பார்த்த, great depression எனப்படும் பங்குச் சந்தைச் சரிவைச் சரி செய்து, அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முக்கிய காரணமாக இருந்த ஜனாதிபதி ‘ரூஸ்வெல்ட் ‘டிற்கு மட்டுமே அந்தச் சலுகை வழங்கப்பட்டது. அமெரிக்கச் சரித்திரத்தில் மூன்று முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரே அமெரிக்கர் அவர் மட்டும்தான்.

ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, நன்றாகச் செயல்படும் அல்லது செயல்படுவதாகத் தோற்றமளிக்கும் ஜனாதிபதிகள் இரண்டாவது முறையும் போட்டியிட அவர்களின் கட்சிகளினால் அனுமதிக்கப் படுவார்கள். தேர்ந்தெடுப்பதும், தூக்கி எறிவதும் அமெரிக்க பொதுஜனத்தைச் சார்ந்தது. ரொனால்ட் ரீகனும், ‘மோனிகா புகழ் ‘ பில் கிளிண்டனும் அவ்வாறு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப் பட்டவர்களே. ஜிம்மி கார்ட்டரும், ஜார்ஜ் புஷ் சீனியரும் இரண்டாவது முறை போட்டியிட்டுத் தோற்றவர்கள்.

மேலே செல்வதற்கு முன், அமெரிக்கத் தேர்தல் நடைமுறைகளைப் பற்றிக் கொஞ்சம் விளக்குகிறேன். இந்தியாவைப் போலவே வாரிசு அரசியல் இங்கும் உண்டு. இருப்பினும், நம் நாட்டைப் போலச் சம்பந்தா சம்பந்தமின்றிச் சின்ன வீடு, சீக்ரெட் வீடெல்லாம் உயர்பதவிக்கு வருவது மிகவும் கடினம். தேர்தலில் போட்டியிட விரும்பும் ஒவ்வொருவரும், தங்கள் சார்ந்த கட்சிகளின் உட்கட்சித் தேர்தலான Primaryக்களில் போட்டியிட்டே ஆக வேண்டும் (வாரிசுகளாக இருந்தாலும்). அவர்களின் எண்ணங்கள், கொள்கைகள், வெற்றி பெற்றால் செய்ய நினைக்கும் செயல்கள் பற்றிப் போட்டியிடும் அனைவருடனும் விவாதித்தே ஆக வேண்டும். அதுமட்டுமல்ல, அப் போட்டியாளர்களின் நேர்மை, பின்புலம், கல்வியறிவு, இருக்கும் சொத்து போன்றவை பற்றி அக்கு வேறு ஆணிவேறாகப் பத்திரிகைகள் வாயிலாக அலசப்படும் (இந்தியாவில் இது சாத்தியமே இல்லை!). எப்போதோ படித்த Elementary School-இன் Progress Report கூட வெளியே வரும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இப்படிப் பட்ட Primaryகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களே அந்தக் கட்சியின் சார்பாக ஜனாதிபதி தேர்தலுக்குப் போட்டியிடுவார்கள். மொத்தத்தில் முழு நேர அரசியல்வாதிகளாக, பொது சேவை செய்பவர்களாக, அதன் மூலம் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாக அந்த வேட்பாளர்கள் இருப்பார்கள். தங்களை ஆளுபவர்கள் திறமையானவர்களாக, தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதில் அமெரிக்கர்களின் வேட்கை மிகவும் அதீதமானது. (நமக்கு நேர் எதிர். தமிழர்களைப் பொறுத்தவரை, ‘சினிமா நடிகனே சீரிய தலைவன்! ‘).

தற்போது தேர்தல் களத்தில் இருக்கும் டெமாக்ரட் கட்சியினைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்களைப் பற்றிப் பார்க்கலாம் (ஜார்ஜ் W. பற்றிக் கடைசியில்). இவர்களைப் பற்றிய எல்லா விஷயங்களையும் இங்கு எழுதுவது சாத்தியமில்லை என்பதால், தற்போது அமெரிக்கர்களின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கும் IT outsourcing பற்றிம இப் போட்டியாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மட்டும் பார்க்கலாம். மற்ற விபரங்கள் இணையதளங்களில் நிறைந்து கிடக்கின்றன.

முதலில், ஐம்பத்து ஐந்து வயதான, முன்னாள் Vermont மாநில கவர்னரும், டெமாக்ரட் கட்சியின் உட் கட்சித் தேர்தலில் முதலிடத்தில் இருப்பவருமான Howard Dean,

பொதுவாக, Dean தன்னுடைய தேர்தல் கூட்டங்களில் high-tech வேலைகளைப் பற்றிப் பேசுவதில்லை. எனினும், அமெரிக்கக் கம்பெனிகள் உள் நாட்டில் கிடைக்கும் வேலையாட்களின் மூலமாகவே எல்லா வேலைகளையும் செய்து முடிக்க முடியும். அதற்கு வெளிநாட்டவர்களின் உதவி அவசியமில்லை என்கிற கருத்தினை உடையவர். கணிப்பொறி சம்பந்தமான அவரது அறிவு சொல்லும்படியாக இல்லை. Vermont மாநில கவர்னராக இருக்கையில், அரசு வேலைகளைக் கணிணி மயமாக்குதலை மிகவும் மெதுவாகச் செய்தவர் என்ற குற்றச் சாட்டு அவர் மீது உண்டு. எனினும் அவரது ஈராக் போருக்கு எதிரான ‘Bush Bashing ‘ அமெரிக்க டெமாக்ரட்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றவரும், முன்னாள் துணை ஜனாதிபதியாக இருந்தவருமான Al Gore-இன் ஆதரவு இவருக்குக் கிடைத்திருப்பது முக்கியமானது.

அடுத்ததாக, KOSOVOவில் நடந்த சண்டையைத் தடுக்கச் சென்ற NATO படைகளின் Supreme commanderஆகப் பணியாற்றிய, அறுபது வயதான General Wesley Clark.

இப்போது சிக்கலில் இருக்கும் ஈராக் ஆக்கிரமப்பைச் சரி செய்ய, ராணுவப் பின்புலம் உள்ள, நான்கு நட்சத்திர அந்தஸ்துள்ள ஜெனரலான தன்னால் மட்டுமே முடியும் என வாதிடுபவர் Clark. கணிப்பொறி சம்பந்தப் பட்ட வேலைகளைப் பற்றிய அறிவு உள்ளவர். Acxiom, Entrust, WaveCrest Laboratories போன்ற high-tech கம்பெனிகளில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு இருக்கிறது. அமெரிக்கக் கம்பெனிகள் செலவீனங்களை மிச்சப்படுத்த, வேலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் பற்றி நன்கு உணர்ந்திருக்கிறார். அவர் எழுதிய ‘The 100 Year Vision ‘ என்ற கட்டுரை இதற்கு நல்ல உதாரணம்.

மூன்றாவதாக, ஐம்பது வயதான, Sexiest Politician என்று People Magazine-ஆல் வர்ணிக்கப் பட்ட, செனட்டர் John Edwards.

Telecom மற்றும் high tech-இன் முக்கியத்துவம் மற்றும் வளர்ச்சி பற்றிய அறிவு John Edward-க்கு உண்டு. தன்னுடைய சொந்த North Carolina மாநிலப் பொருளாதார வளர்ச்சிக்கு இவ்விரு துறைகளினான பங்களிப்பும் மிக அவசியம் என உணர்ந்தவர். அதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மிக முக்கியமாக, இந்திய கணிப்பொறித் தொழில் வல்லுநர்கள் அமெரிக்கா செல்ல வழி வகுத்த H1-B Visa-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படுவதற்கு ஆதரவாக அமெரிக்க செனட்டில் (2000) வாக்களித்தவர். Out sourcing பற்றிய அவரது எண்ணங்கள் இன்னும் வெளி வரவில்லை.

அவருக்கு அடுத்தபடியாக, 1988 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவரும், அறுபத்து இரண்டு வயதானவருமான செனட்டர் Richard Gephardt.

செனட்டர் John Edwards-ஐப் போலவே, 1998 மற்றும் 2000 ஆண்டுகளில் H1-B விசாக்களின் அளவு உயர்த்தப்படுவதற்கு ஆதரவளித்தவர் Gephardt. ‘சீனா, இந்தியா மற்றும் இந்தோனேசிய நாடுகளில் பணிபுரியும் உயர் கல்வி கற்ற, தொழில் நுட்ப வல்லுநர்கள் அமெரிக்கர்களை விட மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள். அவர்களுக்கும் அமெரிக்கர்ளுக்கு வழங்கப்படுவது போன்ற சம்பளம் வழங்கப் பட வேண்டும் ‘ என்பது Gephardt-இன் வாதம்.

சில நாட்களுக்கு முன் Richard Gephardt, மற்ற போட்டியாளர்களுக்கு வழிவிடும் விதமாக, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறார். டெமாக்ரட் கட்சியின் IT Policyகளை ஒருங்கிணைத்ததில் முக்கியமானவர் என்பதால் அவரைப் பற்றிக் குறிப்பிட வேண்டியது இங்கு அவசியமாகிறது.

ஐந்தாவது போட்டியாளர், வியட்நாம் சண்டையில் கலந்து போரிட்ட முன்னாள் ராணுவ வீரரும், செனட்டருமான John Kerry.

Out sourcing எதிர்ப்பாளர். Call Center வேலைகள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு அமெரிக்காவில் காணப்படும் எதிர்ப்புக்கு ஆதரவாக, Call Center பணியாளர்கள் தாங்கள் எந்த நாடுகளில் இருந்து பேசுகிறோம் என்பதை அறிவிக்க வேண்டும் என்ற ஒரு சட்ட விவாதம் செனட்டர் John Kerryயால் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. கணிப் பொறித் தொழில் பற்றிய அறிவு உள்ளவர் Kerry. டெமாக்ரட் கட்சியின் Primaryகளில் முன்னனியில் இருந்த Howard Dean-ஐ Iowa Caucus-இல் தோற்கடித்ததின் மூலம் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக மாறி இருக்கிறார்.

ஆறாவது மற்றும் கடைசியாக, சென்ற தேர்தலில் Al Gore உடன் துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டவரும், செனட்டருமான Joseph Lieberman.

H1-B விசாக்கள் அதிகரிப்பதற்கு 1998 மற்றும் 2000 ஆண்டுகளில் ஆதரவளித்திருக்கிறார். E-Governance பற்றிய பாலிசிகளில் நல்ல திறமையும் செயல்பாடும் கொண்டவர். Out sourcing பற்றிய அவரது கருத்துகள் வெளிவரவில்லை.

மேற்கூறிய டெமாக்ரட்களில் யாராவது ஒருவர், (அனேகமாக Howard Dean அல்லது John Kerry) தற்போதைய ஜனாதிபதியும், ‘Compassionate Conservative ‘ என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஜார்ஜ் W. புஷ்-க்கு எதிராக இந்த வருடக் கடைசியில் நடை பெற இருக்கும் தேர்தலில் போட்டி இடுவார்கள். இன்றைய நிலவரப்படி ஜார்ஜ் W.வை அசைத்துக் கொள்ள ஆளில்லை. ஈராக் ஆக்கிரமிப்புச் சிக்கல் மேலும் அதிகமானாலோ அல்லது அமெரிக்க ராணுவ உயிர்ச் சேதம் அதிகமானாலோ அல்லது இன்றிருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் அப்படியே தொடர்ந்தாலோ, இந்நிலமை மாற வாய்ப்பிருக்கிறது.

ரிபப்ளிகன் கட்சிக்கும், டெமாக்ரட் கட்சிக்கும் பல அடிப்படை வேறுபாடுகள் இருக்கின்றன. பொதுவாக டெமாக்ரட்களின் கொள்கைகள் உள் நாட்டு வேலைவாய்ப்பு, உள்நாட்டுத் தொழில் பெருக்கம் என உள்நாட்டை நோக்கியே இருக்கும். வெளிநாட்டுக் கொள்கைகளிலும் ஒருவிதமான மென்மையான அணுகுமுறை இருக்கும். ரிபப்ளிகன் கட்சியின் ஆதரவாளர்கள் பெரும்பாலோர் பணக்காரர்கள்; multinational companyகளின் சொந்தக்காரர்கள்; வியாபாரச் சந்தையைப் பெருக்குவதில் ஆர்வமுள்ளவர்கள். உலகின் மூலை முடுக்குகளிலும், சந்து பொந்துகளிலும், இண்டு இடுக்குகளிலும் தங்களின் வியாபாரத்தைப் பெருக்கிப் பணம் சம்பாதிப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள். தற்போதைய ஈராக் ஆக்கிரமிப்பும் அதனடிப்படையிலேதான் நடக்கிறது என்பது உலகறிந்த விஷயம். வெளிநாட்டுக் கொள்கையாவது! மண்ணாவது! Gung Ho!

இந்தத் தேர்தலில் ஜார்ஜ் W.வை எதிர்க்கும் அளவிற்கு வலிமையுள்ள டெமாக்ரட் கட்சி வேட்பாளர்கள் யாரும் இல்லை என்றே சொல்வேன். வேளை கெட்ட வேளையில் டெமாக்ரட் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஹிலாரி கிளிண்டன் சமீபத்தில் அடித்த ‘காந்தி ஜோக் ‘ இந்தியர்கள் மத்தியில், குறிப்பாக influential குஜராத்திகளிடையே உஷ்ணத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. அனேகமாக இந்த ஜனாதிபதி தேர்தலில், இந்தியர்களின் ஓட்டு டெமாக்ரட்களுக்கு ‘நஹி ‘. ஆனானப்பட்ட பில் கிளிண்டனே சொன்னாலும் நஹி நஹிதான்.

Out sourcing செய்வதால் மிச்சப்படும் ஏகப்பட்ட பணம் பற்றி பணக்கார ரிபப்ளிகன்களுக்குத் தெரியும். அதனால் பயனடைந்து வருபவர்களில் பெரும்பாலோர் அவர்கள்தான். எனவே high-tech வேலைகளை இந்தியா போன்ற நாடுகளுக்கு out sourcing செய்வது பற்றிய அவர்கள் கொள்கைகளில் அதிக மாற்றம் இருக்காது. ஜார்ஜ் W.வின் கொள்கையும் அதுவே. தேர்தல் சமயத்தில் ஏற்படும் எதிர்ப்புக்கு ஏற்ப ஏதாவது சிறிய கொள்கை மாற்றங்கள் இருக்கலாம். உடனடிக் கொள்கை மாற்றங்கள் அமெரிக்க பொருளாதாரத்திற்கே பாதகமாக முடியலாம் என்பது அவருக்குத் தெரியும்.

எனவே, அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ஜார்ஜ் W.வே வெல்ல வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்போமாக!

Amen.

——————–

narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்