உலகமயமாக்கத்திற்கு மனிதமுகம் பொருத்தும் முயற்சி

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

சி.மதிவாணன்


உலக சமூக மாமன்றம் என்று அறியப்படுகின்ற World Social Forum -WSF இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றுவருகின்றது. உலகமயமாக்கத்திற்கு எதிரான நடவடிக்கை என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நிகழ்வு முதன்முறையாக அது துவங்கப்பட்ட பிரேசிலுக்கு வெளுயே, இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வு பற்றி இடதுசாரி வட்டாரத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவிவருகின்றன.

‘….அது ஓர் அரங்கு, ஓர் சுதந்திரமான களம், அது ஒரு மேடை, கருத்துக்களின் இயக்கம். விவாதங்களுக்கும், முன்வைப்புகளை உருவாக்கிக்கொள்ளவும் மற்றொரு உலகம் சாத்தியம் என்ற நோக்கையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதற்கான வெளுயை அது உருவாக்கித் தருகிறது. உலகமயமாக்கத்தை ஆதரிக்கின்ற தலைமை தாங்கி நடத்திச் செல்கின்ற சக்திகளுக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக நடைபெற்றுவருகின்ற போராட்டங்களால் மேலும் உந்துதல் பெற்று, ஏகாதிபத்திய உலகமயமாக்கத்திற்கு எதிராக வளர்ந்து வரும் போராட்டத்தின் தொடர்ச்சி…. ‘, என சிஅய்டியூவின் இந்திய செயலாளர் தோழர் டபுள்யூ. ஆர். வரதராஜன் குறிப்பிடுகிறார்.

ஆனால், அவருக்கு பதிலளிப்பதுபோல் ஆலன் பெஞ்ஞமின் (Alan Benjamin, The International Liaison Committee of Workers and Peoples -ILC) மிகவும் முக்கியமானதொரு கேள்வியை எழுப்புகிறார். ‘WSF-ன் பிரதான ஆவணங்களில் வறையறுக்கப்பட்டுள்ள விவாதம் நடத்தும் முறை பற்றிய முழு இலக்கணமும் கேள்விக்குரியவை. ஏனென்றால், தொழிலாளர் அமைப்புகளின் வர்க்கச் சுதந்திரம், முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிரான பயன்தரும் போராட்டத்தின் அத்தியாவசியம் என்பவற்றோடு விவாதம் அனைத்திலும் சமரசமான ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்ற WSF-ன் வறையறுப்பு முரண்பட்டதாகும் என்பது எமது புரிதல். ‘

ஆலனின் கருத்தை வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்கு எதிரானது WSF. மாறுபட்ட இந்த கருத்துக்களின் பின்னணியில் உலக சமூக மாமன்றம் என்றால் என்ன என்பது பற்றி பேசுவது அவசியமாகிறது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சி உலகத்தை ஒரே வல்லரசைக்கொண்ட ஒரு துருவ உலகமாக்கிவிட்டது என்று 80களின் இறுதியில் சொன்னார்கள். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வல்லரசாக அமெரிக்கா ஆனது. மூலதனத்தின் ஆட்சிக்கான சவால் உலகத்தில் இல்லை என்றும், வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது என்றும் கூட முதலாளித்துவ அறிவாளிகள் சொல்லிக்கொண்டனர். மூலதனம் முழு உலகத்தையும் தன் ஆட்சிக்குள் கொண்டுவரத் துடித்தெழுந்தது. பண்டங்களை உலகமயமாக்குவது என்பதற்கு பதிலாக மூலதனத்தையே உலகமயமாக்கும் நடவடிக்கைகள் துவங்கின. லாபத்தைப் பெருக்கிக்கொள்ள உலகம் முழுவதற்கும் தங்கு தடையின்றி மூலதனம் நடைபோடுவதற்கான உலக அரசியல் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகள் துவங்கின. 90களில் துவங்கிய இந்த முயற்சிகளை உலகமயமாக்க நடவடிக்கைகள் என்று அழைத்தனர். அதற்கான உலக நிறுவனங்களின் வரிசையில் உலக வர்த்தக நிறுவனம் (WTO) பிறப்பெடுத்தது. உலகமயம் என்ற வார்த்தையை இன்று, ஜெயலலிதா போன்ற, ஆளும் வர்க்கத்தின் மூன்றாந்தர அரசியல்வாதிகள் கூட பயன்படுத்தும் அளவுக்கு பரந்துபட்ட தாக்கத்தை ஏற்படுத்துவதாக உலகமயம் இருக்கிறது.

ஆனால், உலகத்தின் அனைத்து கோடிகளையும் இணைத்து எழுந்துள்ள உலகமய நடவடிக்கைக்கு எதிர்ப்பேதும் இருக்காது என்ற நம்பிக்கை பொய்த்துப்போனது. அமெரிக்காவுக்கு இணையான வல்லரசாக இடதுசாரி முகாம் ஏதும் இல்லாத சூழலில் மற்றொரு வல்லரசாக உலக மக்கள் எழுந்தனர் 1999ல் நடைபெற்ற சியாட்டில் எழுச்சி ‘மக்கள் வல்லரசின் ‘ வருகைக்குக் கட்டியம் கூறியது. அமெரிக்காவின் சியாட்டிலில் நடைபெற்ற WTO மாநாட்டின் போது 50,000 பேர் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். அமெரிக்காவின் அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள், முலாளித்துவ எதிர்ப்பாளர்கள், அராஜகவாதிகள், சுற்றுச்சூழல்வாதிகள், மூனறாம் உலக நாடுகளின் கடன்களைஜ் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியவர்கள் என்று பலதரப்பட்ட கருத்து நிலைபாடுகொண்டவர்களும் அதில் அங்கம் வகித்தனர். அவர்கள் தெருக்களில் இறங்கி மாநாட்டு நிகழ்வுகளைஜ் தடுக்க முயன்றனர். ஏற்கனவே குடுமியைப் பிடித்துக்கொண்டிருந்த முதலாளித்துவ கோஷ்டிகள், இந்த எதிர்ப்பையும் மாநாட்டு நிகழ்வில் சந்திக்க வேண்டிவந்ததால் WTOவின் அந்த மாநாடு குழப்பத்தில் முடிவடைந்தது. உலகமயமாக்க நடடிவக்கையாளர்களைதுி பின்னுக்குத் தள்ள முடியும் என்ற நம்பிக்கையை சியாட்டில் போராட்டங்கள் ஏற்படுத்தின.

அதனைத் தொடர்ந்து வந்த அடுத்த ஒன்றறை வருட காலம் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்றன. எங்கெல்லாம் உலகமயமாக்கலுக்கான உலக ஆதிக்க சக்திகளின் மாநாடுகள் நடைபெற்றனவோ அங்கெல்லாம் போராட்டங்கள் கட்டமைக்கப்பட்டன. உலகின் முன்னோடி தொழில் நிறுவனங்கள் மற்றும் நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்த உலக பொருளாதார மாமன்றம் (World Economic Forum-WEF) 2002 ஜனவரியில் தாவோசில் கூடியபோதும், 2000 ஏப்ரலில் வாஷிங்டனில் நடைபெற்ற உலக வங்கி-சர்வதேச நிதிநிறுவன கூட்டத்தின் போதும், 2000 செப்டம்பரில் மெல்போர்னில் கூடிய WEF உச்சி மாநாட்டின்போதும், நைசில் (Nice) டிசம்பர் 2000த்தின் போது நடைபெற்ற அய்ரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டின் போதும், எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்தன. இந்த நிகழ்வுப்போக்கு ஜெனோவாவில் 2001 ஜூலையில் எட்டு வல்லரசு நாடுகளின் உச்சி மாநாட்டையும் தொட்டு நீண்டது.

போராட்டக்காரர்களின் தொந்தரவு உலக எஜமானர்களின் திட்டங்களுக்கு இடையூறுகளை விளைவித்தன. உச்சி மாநாடுகளின் தலைவர்களும், உலக தொழில் நிறுவனங்களும் போராட்டக்காரர்கள் அர்த்தமற்ற சேதாரத்தை ஏற்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டினர். போராட்டக்காரர்களின் நடவடிக்கைகள் மிகத் தெளுவாக இருந்தன. மாநாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டு அரங்கத்திற்குப் போகவிடாமல் தடுப்பதுதான் அவர்களின் நேரடி நடவடிக்கையாக இருந்தது. சியாட்டிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் காரணமாக WTOவின் தலைவரும், அய்க்கிய நாடுகளின் பொதுச் செயலாளரும், அமெரிக்காவின் அரசு செயலாளரும், அமெரிக்காவின் வியாபாரப் பிரதிநிதியும் அவர்கள் தங்கியிருந்து இடத்திலேயே முடக்கிப்போடப்பட்டனர். அதனால் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

உலக வங்கி-நிதிநிறுவன கூட்டத்தின் போது வாஷிங்டனில் பிரதான அலுவலகங்ளைஷ சுற்றியுள்ள பகுதிகளையே மூடிவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரான்சின் நிதியமைச்சர் உள்ளிட்டவர்கள் கூட்டத்திற்குச் செல்ல முடியாமல் போனது.

மெல்போர்னில் ஆஸ்திரேலிய பிரதம மந்திரியும், மென்பொருள் வணிக உலகச் சீமானாகிய பில் கேட்சும் மாநாடு நிகழ்விடத்திலேயே சிறைவைக்கப்பட்டனர். 30,000த்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் மறித்துவிட்ட காரணத்தால் மேற்சொன்ன சீமானையும், இதர பிரதிநிதிகளையும் ஹெலிகாப்டரில் தூக்கிச் செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது. இப்படியாக அனைத்து நிகழ்வுகளிலும் போராட்டக்காரர்களின் எதிர்ப்பு மிகவும் கடுமையானதாக இருந்தது.

ஜெனோவாவில் நடைபெற்ற எட்டு வல்லரசுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு அவர்களின் நடுக்கத்தைப் பறைசாற்றுவதாக அமைந்தது. நான்கு மீட்டர் உயரத்திற்கு இரும்பு வேலிகள் கட்டப்பட்டு, ஆள் நடமாட்டமற்ற ‘சிவப்புப் பகுதி ‘ மாநாட்டு நிகழ்விடத்தைச் சுற்றி உருவாக்கப்பட்டது. அந்நகரத்தின் குடிமக்களின் வீடுகளுக்கு விருந்தினர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மாடிகளிலும், பால்கனிகளிலும் குறிதவறாமல் சுடும் துப்பாக்கிக்காரர்கள் நிறுத்தப்பட்டனர். அப்படியும் அச்சம் நீங்காத ‘வல்லரசு ‘ தலைவர்கள் யூரோப்பியன் விஷன் என்ற போர்க்கப்பலில் தங்கினர். அந்தக் கப்பலை கண்ணிவெடி அகற்றும் கப்பல்களும், விசேஷ நீர்மூழ்கி வீரர்களும், விமான எதிர்ப்புக் பீரங்கிகளும் காவல் காத்தன. அந்நகரத்திற்கான வான், நீர், தரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இத்தாலியின் எல்லை மூடப்பட்டது. எல்லைகள் இல்லாத அய்ரோப்பா என்ற ஆதிக்கவாதிகள் அய்ரோப்பிய நாடுகளின் எல்லைகளை மூடி, போராட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்கப்பார்த்தனர். ஆனபோதும் 1,50,000 பேர் தடைகளைஸ்ரீ கடந்து கூடினர். இப்படியாக வல்லரசு தலைவர்கள் அச்சப்படும் வல்லரசாக உலக மக்களின் போராட்ட எழுச்சி இருந்தது.

இந்தப் போராட்டங்களை வன்முறைகொண்டு ஒடுக்குவது நடந்தது. 1999 சியாட்டிலில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீசப்பட்டது. பின்னர் ஏனைய இடங்களில் நடைபெற்ற போராட்டங்களிலும் கொடுமையான வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவது அதிகரித்துக்கொண்டே வந்தது. ஜெனோவாவில் நடைபெற்ற வன்முறை இதற்கு முன் காணப்படாததாக மாறியது. 23 வயதான குயிலானி என்ற போராட்டக்காரரின் மீது போலீஸ் வாகனம் ஏற்றப்பட்டது. போராட்டக்காரர்கள் கண் முன்பே அந்தக் கொடூரமான கொலை அரங்கேறியது. போராட்டக்காரர்கள் தங்கியிருந்த பள்ளிக் கட்டிடத்தின் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியது. இரும்புத் தடிகளாலும், உருட்டுக் கட்டைகளாலும் தாக்கினர். 72 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். பலரையும் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்ல வேண்டிய அளவுக்குத் தாக்குதல் கடுமையாக இருந்தது.

இந்நிகழ்வு பற்றி அறிக்கை கொடுத்த சர்வதேச பொது மன்னிப்புக் கழகம், ‘….அவர்களுக்கு அறை விழுந்தது, உதை விழுந்தது. அவர்கள் மூஞ்சில் காறித் துப்பினார்கள். பாலியல் கொச்சைத்தனமான வார்த்தைகளில் திட்டு விழுந்தது…. அவர்களுக்கு உணவு கொடுக்கப்படவில்லை. தண்ணீர் கூட கொடுக்காமல் தூங்கவிடாமல் வதைக்கப்பட்டனர். சுவற்றில் முகத்தைப் புதைத்துக்கொண்டு கை கால்களைதுி பரப்பிக்கொண்டு கழுகுபோல மணிக் கணக்கில் நிற்க வைக்கப்பட்டனர். அவ்வாறு நிற்க முடியாவிட்டால் உதை விழுந்தது. சிலருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. பெண் போராட்டக்காரர்கஆளையோ வன்புணர்ச்சி செய்வோம் என்று மிரட்டினர்…. ‘ ( ‘நாகரீகமான மேற்கு நாட்டு ‘ போலீசின் நடவடிக்கை, அப்படியே இந்திய போலீஸ் நடவடிக்கை போல இருக்கிறதில்லையா ?)

இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டவர்களின் கருத்தியல் நிலைபாடு என்ன ? உலகமய பொருளாதார நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினரும் இந்தப் போராட்டங்களில் இருந்தனர். தொழிலாளர்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல்வாதிகள், வீடிழந்தோர், நாடிழந்தோர், யுத்த எதிர்ப்பாளர்கள், அராஜகவாதிகள் என்று பல வண்ணச் சேர்க்கையாக அது இருந்தது. முற்றூடான மாற்றம் வேண்டுபவர்கள் முதல் சீர்திருத்தவாதிகள் வரை ஏன், பிற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் கூட இருந்தனர். ஆனால், அவர்களுக்கென கட்டுத்திட்டமான அமைப்பு ஏதும் இல்லை. உலகளவில் இடதுசாரி மையம் போன்ற அமைப்பு ஏதும் இந்தப் போராட்டங்களை வழிநடத்தவில்லை. இந்தப் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதோ, ஏதேனும் ஒரு வகையில் கையாளுவதோ சாத்தியமற்று இருந்தது.

அதற்கான முயற்சிகளை எடுக்க ஆரம்பித்தனர். மெல்போர்னில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின் போது உலக பொருளாதார மாமன்றத்தின் (WEF) ஸ்தாபகர் க்ளாஸ் ஸ்வாப் (Klaus Schwab) பின்வருமாறு சொன்னார். ‘இங்கிருந்து நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், தொழிலதிபர்களும், தெருக்களில் நின்று போராடுபவர்களும் கூடி கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள பாதுகாப்பான இடமொன்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதுதான். ‘

சியாட்டில் நிகழ்வுகளுக்கு முன்பே இந்த பேச்சு வார்த்தை மேடைக்கான முயற்சிகள் துவங்கிவிட்டன. சியாட்டிலில் 1999 டிசம்பரில் நடைபெற்ற WTO மாநாட்டுக்கு முன்னர் சமூக உச்சி மாநாடு (Social Summit) ஒன்றை WTO கட்டமைத்தது. அந்த மாநாட்டில் ILOவின் தலைமை இயக்குநர் நோக்கம் என்னவென்பதைத் தெளுவாகச் சொன்னார்: ‘ILO, WTO, IMF, உலக வங்கிக்கு இடையான பயன்தரும் ஒத்துழைப்புதான் இன்றைய தேவை. துவக்க நிலையில் இருக்கும் உலக ஆளுகைக்கு உட்பட்டதாக, சமூக அமைப்பொன்றை உருவாக்குவது அதன் நோக்கமாக இருக்க வேண்டும்…. சிவில் சமூகத்தின் அச்சங்களும் கவலைகளும் அந்த அமைப்பில் முழுமையாக வெளுப்படுத்தப்படவும், எதிர்கொள்ளதுிபடவும் வேண்டும். ‘

அதே கூட்டத்தில் WTOவின் தலைமை இயக்குநர் ரினடோ ருக்ரியோ, ‘அதிகரித்துவரும் வெகுஜன அபிப்பிராயங்களை எதிர்கொள்ளும் வகைக்கு உலகப் பொருீளதாரத்தின் அனைத்து தரப்பாரையும் உலகக் கட்டமைப்புக்குள் இணைத்துக்கொள்ளMல்லையென்றால்…… உலகப்பொருீளதாரத்தின் முழுக்கட்டமைப்பையும் நிலைகுலைத்துவிடும். மாற்றொன்றை நோக்கி அவர்கள் திரும்பலாம்… ‘ என எச்சரித்தார். ஆனால் போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தை மேடைக்குக்கொண்டுவரும் முயற்சி அப்பொழுது வெற்றிபெறவில்லை.

ஆனால், 2000ல் அந்த முயற்சி வேறு ஒரு முனையில் ஆரம்பித்து வெற்றிபெற்றது. 2000 பிப்ரவரி மாதத்தில் ATTAC என்ற பிரான்சு நாட்டு தொண்டு நிறுவனத் தலைவர் பெர்னார்டு கஸ்ஸனும், பிரேசில் நாட்டு ஊழியர்கள் அமைப்பின் தலைவரான ஒட்டட் க்ரஜுவும், பிரேசிலின் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சங்கமொன்றின் தலைவரான பிரான்ஸ்கோ வெயிட்கரும் கூடிப் பேசி உலக சமூக அமைப்புகளின் நிகழ்வொன்றை நடத்த 2000 மார்ச்சில் தீர்மானித்தனர். அப்பொழுது பிரேசிலின் ரியோ கிராண்ட் சுல் மாநில அரசையும், போர்ட்டோ அல்கேர் நகராட்சியையும் ஆண்டு கொண்டிருந்த பிரேசில் தொழிலாளர் கட்சியின் ஆதரவையும் பெற்றனர். ஜெனிவாவில் 2000 ஜூனில் நடைபெற்ற அய்க்கிய நாடுகள் சபையின் மாற்றுக் கூட்டமொன்றில் ரியோ கிராண்டின் துணை ஆளுநர் இதுபோன்ற நிகழ்வொன்றுக்கான முன்மொழிவைக் கூறினார். இதனைக் குறிப்பிடுகின்ற உலக வங்கியின் வலைதளஹ் ‘பிரதான சிவில் சொசைட்டி அமைப்புகளால் ஜூன் 2000ல் புதிய அமைப்பு வடிவத்திற்கான துவக்கம் ‘ நிகழ்ந்திருப்பதாகக் கூறி WSFன் துவக்கத்தைக் குறிப்பிடுகிறது. இவ்வாறான ஒரு சர்வதேச அமைப்பு அய்ந்தே மாதங்களில் வடிவமெடுத்தது.

ஆனால், WSF-க் கட்டமைத்து வழிநடத்தும் சக்திகள் யார் ? அவர்களின் அரசியல் நிலைபாடுதான் என்ன ? விவாத மேடையொன்று வேண்டும் என்ற உலக ஆதிக்க சக்திகளின் முயற்சி வெற்றிபெற்றதா இல்லையா ? அந்த விபரத்தையும் சற்று பார்ப்போம்.

நைசில் நடைபெறவிருந்த அய்ரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டின்போது எதிர்ப்புப் போராட்டம் நடத்துவதற்காக திட்டமிடல் கூட்டமொன்று நடந்தது. அதில் ATTAC உள்ளிட்ட பிரான்சின் தொண்டு நிறுவனங்கள் கலந்துகொண்டன. அக்கூட்டத்தில் பேசப்பட்டதைப் பார்ப்போம்.

‘…உலகமயமாக்கத்தைக் கீழிருந்துக் கட்டமைக்கும் வகையில்… WTO, IMF, உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களை மறு திசைவழிபடுத்த வேண்டும்.. ‘

‘…IMFயை அழிப்பதற்காக அல்ல மாீறாக, அதனை மறுதிசை வழிப்படுத்துவதற்காக சர்வதேச மக்கள் இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டும்.. ‘

இந்த வார்த்தைகளின் பொருளென்ன ? அடுத்து வரும் கூற்றைப் படித்துப் பாருங்கள்:

‘(சர்வதேச மூலதனச் சந்தையில் போட்டியிடும்) ஆற்றலுள்ள அய்க்கியப்பட்ட அய்ரோப்பா வேண்டும்தான் ஆனால், (சோசலிமும், முதலாளித்துவமும் அல்லாத -கட்டுரையாளர்) மூன்றாவது வழிமுறையின் மூலம் வேலைவாய்ப்பின்மை, பாதுகாப்பின்மை, தொழிலாளர்களின் உரிமையைப் பறிப்பது ஆகியவற்றுக்கு எதிரான கொள்கையை அமுல்படுத்தும் அய்க்கிய அய்ரோப்பா வேண்டும். ‘

முதலாளித்துவம் தோன்றிய நாள்தொட்டு நாம் இந்த குரலைக் கேட்டுவருகிறோம். வர்க்கப் போராட்டத்தை மறுத்தளித்து விட்டு மோதும் வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட மூன்றாவது வழியில் பிரச்சனையைத் தீர்க்க முயலும் சமூக ஜனநாயகக் கருத்தியலே மேலே சொல்லப்பட்ட குரலின் அரசியல் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

WSFன் அமைப்பாளர்களின் முக்கியமான இரண்டு அமைப்புகளைப்ி பற்றி பரிசீலிப்பது நமது புரிதலை மேலும் சரிபார்த்துக்கொள்ள உதவும். ஆனால், இடவசதி கருதி அடிப்படையான சில செய்திகளை மட்டும் பார்க்கப்போகிறோம்.

ATTAC:

இது விசாயிகள், தொழிற்சங்கங்கள், அறிவாளிகளின் பல்வேறுபட்ட குழுக்களின் கூட்டமைப்பாகும். இதன் பிரென்ஞ் பெயரில் பொருள் பின்வருமாறு: Association for the Taxation of Financial Transactions for the Aid of Citizen. அதாவது நிதி பட்டுவாடா நிகழ்வின் போது அதில் ஒரு பகுதியை வரியாக வசூலித்து குடிமக்களின் நல்வாழ்க்கை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது என்பது இவர்களின் மையமான கோரிக்கையாகும். டோபின் என்ற அமெரிக்க பொருளாதார அறிஞர் முன்வைத்த கோட்பாடு இது. இதன்படி ஊக நிதி வணிகத்தின் பணப் பட்டுவாடா நடவடிக்கையின் போது அதில் 0.1% வரியாக வசூலிக்கப்பட்டு அது சமூக மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு பெறப்படும் நிதியை IMF நிர்வகிக்க வேண்டும் என்று டோபின் கருதினார். நாடுகளையே கொள்ளையடிக்கும் வெறியோடு சர்வதேச நிதி ஊக வணிக நிறுவனங்கள் அலைந்து கொண்டிருக்கும் போது இதுபோன்ற ஒரு கோட்பாட்டை அவர்களின் கைப்பாவை அரசுகள் அமுல்படுத்தும் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல. இதுபோன்ற வரியை அறிவிக்கும் நாட்டிலிருந்து தமது மூலதனத்தை சர்வதேச நிதி முதலைகள் வாபஸ் பெற்றுக்கொள்ள சற்றும் தயங்கமாட்டார்கள். எனவே, இதுவரை அது கோட்பாடாகவே இருந்து வருகின்றது.

ஆனபோதும் ATTAC அதனைக் கைவிட்டுவிடவில்லை. அத்தோடும் கூட இன்னும் சில முன்வைப்புகளை WSFல் ATTAC முன்வைத்துள்ளது.

1) பன்னாட்டு நிறுவனங்களை மட்டுப்படுத்தி, போட்டியினை ஊக்கப்படுத்துவது,

2) மூன்றாம் உலகக் கடன் பிரச்சனையைப் பேசித் தீர்ப்பதற்காக கடன்கொடுத்தவர்களும், வாங்கியவர்களும் பஞ்சாயத்து ஒன்றில் உட்காருவதற்கு ஏற்பாடு செய்வது.

3) முதலாளித்துவ சொத்துடைமையில் வேலைக்கு வைத்துக்கொள்வதும், வீட்டுக்கு அனுப்புவதும் அடங்கும்தான். ஆனால், வீட்டுக்கனுப்புவது கட்டக் கடைசி நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறாக, உலகமயத்துக்கு எதிரான ஆனால், ‘பாசிடாவான ‘ முன்வைப்புகளை ATTAC முன்வைக்கிறது. இவ்வாறாக, ஓநாய்களுக்கு புத்திமதி சொல்லும், கேப்பையில் நெய்வடிக்கும் ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் கொண்டு அவர்கள் உலகமயத்தை எதிர்த்து வருகிறார்கள். அவர்களின் இந்த எதிர்ப்பு வலுவாக நடைபெறுவதற்காக அய்ரோப்பிய கமிஷனும், பிரான்சின் அரசாங்கமும் தொழில் முனைவோரும் நிதியுதவி செய்துவருகிறார்கள்.

பிரேசிலின் தொழிலாளர் கட்சி (PT):

WSFன் முதல் மாநாட்டின்போது தொழிலாளர் கட்சி பொர்டோ அல்கேர் உள்ளிட்ட ரியோ கிரேண்ட டி சுல் என்ற மகாணத்தை ஆட்சி செய்து வந்தது. அது அப்பொழுது ‘பங்கேற்பு பட்ஜெட் ‘ (participatory Budget) முறையை அமுல்படுத்தியது. சமூகத்தின் பல்வேறு பிரிவினர் -தொழிற்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், ஊழியர் சங்கங்கள்- பட்ஜெட் தயாரிப்பில் பங்கெடுத்தனர். பிரேசிலின் வெளுநாட்டுக் கடனை அடைப்பதற்காக மகாணத்தின் பங்கு முதலில் பிரித்தளிக்கப்பட்டு, பின்னர் இருக்கும் தொகையை சமூகத்தின் பல்வேறு பிரிவினர் தங்களுக்குள் பிரித்துக்கொள்வதே இந்த பங்கேற்பு பட்ஜெட்டின் நிகழ்முறையாகும். தங்களின் நிதியும் வட்டியும் தடையின்றி, ‘மக்கள் ஒத்துழைப்புடன் ‘ கிடைக்கச் செய்யும் இந்த பங்கேற்பு பட்ஜெட்டின் ஜனநாயகத்தை உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதியமைப்புகள் வியந்தேற்றிப் பாராட்டினார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ‘இந்த முறை பொருீளதார நடவடிக்கையிலும், சமூக இயக்கத்திலும் உள்ள நிர்வாக, சமூகத் தடைகளை (அதாவது, எதிர்ப்புப் போராட்டங்களை- கட்டுரையாளர்) சுருக்குகிறது ‘ என்று உலக வங்கியின் தலைமை பொருளாதார அறிஞர் பாராட்டினார்.

இப்பொழுது தொழிலாளர் கட்சி பிரேசிலை ஆளும் கட்சியாக இருக்கிறது. அதன் தலைவரான லூலா (Luis Ignacio Silva-LULA) தேர்தல் நடக்கும்போதே பிரேசில் மற்றும் வெளுநாட்டு முதலீட்டாளர்களின் அச்சத்தைப் போக்குவதற்கு மிகவும் முயற்சி செய்தார். IMF சொல்கின்ற அளவுக்கு பட்ஜெட் உபரி காட்டுவேன் என்று அவர் உறுதியளித்தார். ஜெயித்தவுடன் சொன்னதைக் காட்டிலும் கூடுதலாகச் செய்தார். பட்ஜெட் உபரியை 3.5% என்பதிலிருந்து 4.6%மாக ஆக்கினார். இந்த சாதனையைப் பார்த்து வால் ஸ்ட்ரீட்டே வாயைப் பிளஷ்தது. வறுமையில் சிக்கித் தவிக்கும் பிரேசில் மக்கள் இன்னும் கூடுதல் வாழ்க்கை நெருக்கடிக்கு ஆளானார்கள் என்பது வேறு செய்தி.

இதுதான் உலகமயத்திற்கு எதிராக WSF-க் கட்டமைத்த பிரேசிலின் ‘இடதுசாரி ‘ கட்சியின் உண்மையான முகம்.

இந்த இரண்டு உதாரணங்களும் WSF அமைப்பின் கர்த்தாக்களின் கருத்தியல் நிலைபாடு என்னவென்பதை புரிந்தகொள்ள உதவும் என்று நம்புகிறேன். முதலாளியத்தின், அதாவது உலகமயத்தின் இன்றைய வரையறைக்குள் நின்றுகொண்ட அதனை எதிர்ப்பதுதான் அவர்கள் செய்துகொண்டுவரும் பணி. அகில இந்திய அளவில் புதிய நவ தாராளவதாக் கொள்கையை எதிர்க்கும் சமூக ஜனநாயகக் கட்சியான சிபிஎம் தான் ஆளும் மாநிலங்களில், குறிப்பபாக நீண்ட காலம் ஆட்சிசெய்துவரும் மேற்கு வங்கத்தில், எந்தவொரு ஆளும் வர்க்கக் கட்சிபோலவே உலகமயக் கொள்கைகளை அமுல்படுத்துவதைப் பார்க்கிறோம். அதுபோன்றதொரு சமூக ஜனநாயக கருத்தியல் கொண்ட கட்சியே பிரேசிலின் தொழிலாளர் கட்சி.

இவற்றோடும் கூட WSF அமைப்பின் மையக் கட்டமைப்பின் ஜனநாயகமற்ற செயல்பாடுகள் பற்றி நிறைய செய்திகள் இருக்கின்றன. ஆனால், சாரம் என்னவென்றால், உலமயமாக்கம் குறித்த ‘பாசிடாவான ‘ எதிர்ப்பு என்பதே WSF அமைப்பின் ஜனநாயகத்திற்கான மைய அளவீடு என்பதே நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தி.

WSF அரசில் கட்சிகளை தன்னுடைய முறையான அமர்வுகளில் அனுமதிப்பதில்லை. ஆனால், அவர்கள் தனிப்பட்ட மனிதர்கள் என்ற அளவில் கலந்துகொள்ளலாம் என்று விதி செய்திருக்கிறார்கள். இந்த விதியைப் பயன்படுத்திக்கொண்டு உலகமயத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதல் அரசியல்வாதிகள் வரை WSF நிகழ்வுகளில் பங்கெடுக்கின்றனர். ஆனால், உலகமயத்துக்கு எதிராக போராடும் அமைப்புகளை வன்முறையாளர்கள் என்ற வரையறையின் கீழ் அனுமதிக்க WSF மறுக்கிறது.

WSF ன் பிரகடனத்தின் சில அம்சங்களைப்ி பார்ப்போம்.

‘ஏகாதிபத்தியத்தின் அனைத்து வடிவங்கள், மூலதனத்தின் ஆதிக்கத்தினை எதிர்க்கும் குழுக்கள், சமூக இயக்கங்களுக்கான திறந்த அரங்கு இது… ‘

‘பன்மை தன்மை வாய்ந்த, வேறுபாடுகள் கொண்ட, … அரசு சாரா, அரசியல் கட்சி சாரா மேடை ‘

‘WSF ல் நடைபெறும் கூட்டங்கள் WSF ஓர் அமைப்பு என்ற கோதாவில் நடைபெறாது. அமைப்பு என்ற முறையில் WSF செயல்பாட்டுக்கான எந்த முடிவையும் எடுக்காது. எனவே, இது அதிகாரத்திற்கான ஓர் மையம் அல்ல… ‘

ஆனபோதும், ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பான WSF, ஈராக்கின் மீதான அமெரிக்க யுத்தத்திற்கு எதிராக நிலைபாடு எடுக்க முடியாமல் அதன் அமைப்பாளர்கள் தடுத்துவிட்டார்கள் என்பது கவனிக்க வேண்டிய மற்றொரு செய்தி. அப்படியானால் WSF யாரின் அதிகாரத்திற்கு ஆதரவான மையம் ?

சர்வதேச அமைப்புக் குழுவே, WSF தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது. ஆனால், அந்த முடிவுகளின் மீது மாற்றுக் கருத்துகொண்டவர்கள் அதனை வெளுப்படுத்தவும், சரியென்று போராடி ஜெயிக்கவும் என்ன அமைப்பு வடிவம் ?

தொலைந்து போனவர்களின் தாய்மார்கள் என்ற அர்ஜெண்டைன அமைப்பின் தலைவர் ஹீபே டா போனாபினியின் வார்த்தைகளில் இக்கேள்விக்கான பதில் இருக்கிறது. இரண்டாவது WSF நிகழ்வின்போது நடைபெற்ற பேரணியொன்றில் அவர் உரையாற்றினார். ‘நாங்கள் இங்கே நடப்பதைக் கவனிக்க வேண்டும் என்றுதான் WSF அமைப்பாளர்கள் எங்களை அழைத்து வந்திருக்கிறார்கள். எங்களின் அணிகள் பங்கெடுப்பதற்காக அல்ல… உலகமயமாக்கத்திற்கு ‘மனித முகத்தை அணிவிப்பது ‘ குறித்து விவாதிக்க வேண்டும் என்பதற்காகவென்றே இதன் அமைப்பாளர்கள் நிகழ்ச்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள் ‘.

கட்டற்ற ஜனநாயகம் பேசும் WSF ஜனநாயகத்திற்கு ஒரு வரையறை இருக்கிறது. அது அதன் உச்சபட்ச அமைப்பு என்ன நினைக்கிறதோ அதுதான் அந்த வரையறை. அதன் உச்சபட்ச அமைப்பான சர்வதேச அமைப்புக் கமிட்டியில் உள்ளவர்களில் பிரதானமான இரண்டு அமைப்புகளின் கருத்தியல் என்ன என்பதைச் சற்று முன்னர்தான் பார்த்தோம். சமூக ஜனநாயகக் கருத்தியலைத் தலைமையில் கொண்ட ஒரு வானவில் கூட்டணி என்று நாம் WSF யைப் புரிந்துகொள்ளலாம்.

.அதன் செயல்பாடுகளைதுி புரிந்துகொள்ள WSF-ன் செயல்பாடுகளுக்கான நிதி உதவி யார் செய்கிறார்கள் என்ற கேள்வியையும் நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது. WSF-ன் பங்காளிகளில் மிகப்பெரும்பான்மையினர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களே. இந்தத் தொண்டு நிறுவனங்களுக்கான நிதி உதவியை உலகமயத்தை வலிந்து அமுல்படுத்தும், அரசுகள் மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளே அளித்து வருகின்றன. பன்னாட்டுக் கம்பெனிகளின் பவுண்டேஷன்கள், அரசு மற்றும் அரசு சாரா அறக்கட்டளைகள், உலக வங்கி போன்ற நிதியமைப்புகள் தொண்டு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய அளவுக்கு நிதி வழங்குகின்றன. இத்தொண்டு நிறுவனங்கள் அரசியல் சாரா சமூக அமைப்புகளைஸ்ரீ கட்டியெழுப்புவதில் ஈடுபட்டுள்ளன. இந்தியா போன்ற நாடுகளில் ‘நாயின் வாலை வெட்டி நாய்க்ிகு சூப்பு வைக்கும் பாணியிலான ‘ சுயஉதவிக் குழுக்களைஸ்ரீ கட்டமைத்து அவற்றின் கூட்டமைப்புகளை சமூக அமைப்புகள் ஆக்கும் வேலையைப் பெருமளவு செய்துவருகின்றன. இவ்வாறு கீழிருந்து கட்டப்பட்ட சமூக இயக்கங்களை WSF-மேலிருந்து ஒருங்கிணைத்து உலகமய எதிர்ப்பை நிகழ்த்துகிறது. மும்பை WSF-நிகழ்வுக்குச் சென்று வருவதெற்கென்றே தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியளிக்கப்படுகிறது.

மேலும், WSF-ன் செயல்பாடுகளுக்கென நேரடியாக நிதியளிப்பவர்கள் பட்டியலில் அய்ரோப்பாவையும், அமெரிக்காவையும் சேர்ந்த நிதியமைப்புகள் இருக்கின்றன. அமெரிக்காவின் போர்டு பவுண்டேஷன் WSF-ன் முக்கியமான நிதி பங்காளிகளில் ஒன்றாகும். தன்னார்வ வட்டாரங்கள் போர்டு பவுண்டேஷன் நிதி உதவி இல்லை என்ற வாதத்தை முன்வைக்கின்றன. ஆனால் 27/12/2003 தேதியில் அப்டேட் செய்யப்பட்ட போர்டு பவுண்டேஷன் வலைத்தளஹ் நிதியுதவி பற்றிய செய்தியை உறுதிசெய்கிறது. அமெரிக்க நிதியில்லை மாறாக அமெரிக்காவை எதிர்க்கும் அய்ரோப்பிய நிதியைத்தான் பயன்படுத்துகிறோம் என்றும் தன்னார்வ வட்டாரங்களில் குரல் எழும்புகிறது. அய்ரோப்பிய அரசுகள் மற்றும் மூலதன சார்பு அமைப்புகளின் நோக்கம் அனைத்து வகை மூலதனச் சுரண்டலையும் எதிர்ப்பது என்பதாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆக, உலகமயத்துக்கு எதிரான வலுவான போராட்டங்களைஸ்ரீ கட்டியெழுப்புவது, அதனை அரசியல் பிரச்சனையாக்குவது என்பதற்குப் பதிலாக எதிர்ப்பை வெளுப்படுத்துவது மாறுதலைக் கோருவது, அதுவும் வர்க்கம் கடந்த எதிர்ப்புக் குரலில் என்பதே WSF முன்வைக்கும் பாதையாக இருக்கிறது. இது உலகமய எதிர்ப்புப் பணிக்கு உதவுவதை விடவும், உலகமயமாக்கலுக்கு மனித முகத்தைப் பொருத்தும் முயற்சிக்கே உதவும்.

இவ்விஷங்களைஸ்ரீ கூட்டிக் கழித்துப் பார்த்தோமானல், பல வண்ணச் சேர்க்கையாக எழுந்த உலக மய எதிர்ப்புப் போராட்டத்தின் சீர்திருத்தப் பிரிவு WSF அமைப்புக்குத் தலைமைதாங்கிறது என்பதும், உலக மூலதன அதிகார மையங்கள் அதனைத் தாங்கிப்பிடிக்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

சுருக்கல்வாதம் (Reductionism) செய்யாமலிருத்தல். அதாவது தொழிலாளர் வர்க்க அரசியல் செய்யாமலிருத்தல் என்பதையும், நிலவும் மூலதனக் கட்டமைப்பு நிலைமைக்குள் மூலதன ஆதரவு கருத்தியல் மட்டத்திற்குள் நின்றுகொண்டு உலகமய எதிர்ப்புக் குரலை எழுப்புவது என்பதையும் அமுலாக்கும் மேடையே WSF அமைப்பு முன்வைக்கும் விவாத மேடை. இதனைத்தான் நாம் முன்பு குறிப்பிட்ட பென்ஞமின் கேள்வியாக எழுப்புகிறார்.

WSF அமைப்பைக் கருத்தியல்களுக்கு அப்பாற்பட்ட அமைப்பு என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், பின்நவீனத்துவக் கருத்துப்போக்குள்ளவர்கள் இவ்வமைப்புக்குள் இருப்பதைப் பார்க்கமுடியும். பின்நவீனத்துவம் இருப்பதைக் கட்டுடைத்துப் பார்க்கச் சொல்கிறது. எதிர்க்கச் சொல்கிறது. ஆனால், மாற்றொன்றைக் கட்டமைக்க வேண்டாம் என்றும் கோருகிறது. ஏனென்றால் மாற்றைக்கட்டமைக்கும் போக்கு மறுபடியும் ஒரு கட்டமைப்பைக் கொண்டு வந்துவிடும். எனவே, கட்டுடைப்பதும் எதிர்ப்பதும் என்பதே மிகச் சிறந்த செயல்கள் என்று வாதிடுகிறது. எளிமையாகச் சொல்லப்போனால், உரக்க, கடுமையாக விமர்சனம் செய்துகொண்டு சும்மா இருக்கச் சொல்கிறது. உலகமயமாக்கத்தின் காரண கர்த்தாக்கள் தமக்கென அரசியல், நிதி, நிர்வாகக் கட்டமைப்புகளை வைத்துக்கொண்டிருக்கும்போது, எதிர்ப்புக் குரல்களுக்கு இடமளித்து நீர்த்துப்போக வைக்க சமூக அமைப்புகளைஸ்ரீ கட்டிக்கொண்டிருக்கும்போது, எதிர்ப்பாளர்களை ஒடுக்க துப்பாக்கிகளையும் குண்டாந்தடிகளையும் வைத்துக்கொண்டிருக்கும்போது, வெறும் உரத்த விமர்சனமென்பது, மூலதன ஆட்சிக்கு கொடுக்கும் மறைமுக ஆதரவே. எனவே, பின் நவீனத்துவக் கருத்தியலை ஆளும் வர்க்க ஆதரவுக் கருத்தியல் என்றே வகைப்படுத்த வேண்டும்.

சுதந்திரமான இடதுசாரி அரசியலைக் கைவிட்டுவிட்ட சிபிஎம் கட்சியும் பிற அவ்வகைப்பட்ட உலக இடதுகளும், பின் நவீனத்துவம் போன்ற போலி இடது அரசியல் கருத்தாளர்களும், சமூக அமைப்புகள் என்ற பெயரிலான தொண்டு நிறுவனங்களும் கைகோர்த்து நிற்பதை உலக மூலதனம் பெரும் அபாயமாகக் கருத எந்த வாய்ப்பும் இல்லை.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை நாம் ஆலைகளிலும், வயல்வெளுகளிலும், தெருக்களிலும் நடத்த வேண்டியிருக்கிறது. அதற்கு வலுவான வர்க்க அரசியலும், அமைப்பும் மிகவும் அடிப்படையானவை. அவ்வாறு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இடை வெட்டு வெட்டுவதும், அதனைத் தன் பிடியில் நிறுத்திக்கொள்வதுமே WSF முயற்சிகளுக்கு உதவி வழங்கும் உலக நிதி நிறுவனங்கள், அவற்றுக்கு நிதி வழங்கும் முதலாளித்துவ நாடுகள், பன்னாட்டு கம்பெனிகளின் நோக்கமாகும். எப்படியானலும் பல லட்சம் பேர் திரளும் இடத்தை வர்க்கப் போராட்ட, ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தலாமே என்ற கேள்வியை ஒருவர் எழுப்பலாம்.

WSF உலக நிகழ்வின்போது அதில் கலந்துகொள்பவர்ள் அனைவரையும் ஒரே வகையினத்திற்குள் அடைத்துவிட முடியாது என்பது உண்மைதான். அந்த ஜனத்திரளில் மிகப்பெரும்பகுதி ஏகாதிபத்திய எதிர்ப்பை உ.ண்மையாக வெளுப்படுத்துபவர்களாக இருப்பார்கள் என்பதும் உண்மைதான். அவர்களை இடதுசாரி அரசியலின் செல்வாக்கின் கீழ் கொண்டுவரவேண்டியது மிகவும் அவசியம்தான். ஆனால் அதற்கு சுதந்திரமான இடதுசாரி வர்க்க அரசியலும், அமைப்பும் மிக அடிப்படையானது.

ஆயிரம் சக்கரங்களில் பயணப்படும் ஏகாதிபத்திய அசுரனை வீழ்த்த ஒவ்வொரு சக்கரத்தை வெட்டவும், அதே சமயம் அந்த தேரை வீழ்த்தவும் என்ற போராட்டம் கட்டமைக்கப்பட வேண்டும். அதில் எட்டப்படும் முன்னேற்றமே உலகமய எதிர்ப்புப் போரின் முன்னேற்றமாக அமையும். இடதுசாரிக் கட்சிகள் இந்தப் பாதையில் வெற்றிபெறுவதற்கு சமூக மாமன்றங்கள் பெரிதும் உதவப்போவதில்லை அவர்களின் கருத்தொன்றிய களதுிபணியும், சுதந்திரமான அரசியல் போராட்டமும்தான் அந்தப் பாஆதையில் அவர்களை முன்னெடுத்துச்செல்லும். அதில் வெற்றிபெறுவதுதான் உலக சமூக மாமன்றம் போன்ற வானவில் கூட்டணியின் தலைமைக்கு அவர்களை எடுத்துச்செல்லும். அதுவரை, அனைத்து வானவில் கூட்டணியையும் தனது தலைமையின் கீழ் கொண்டுவர உலக மூலதனம் மேற்கொள்ளும் முயற்சிகளை யாரும் தோற்கடிக்க முடியாது.

எனில் உலக சமூக மாமன்றத்தினை எவ்வாறு மதிப்பிடுவது ?

உலக சமூக மாமன்றத்தின் மும்பை நிகழ்வுகள் குறித்த கட்டுரைக்கு Times of India [ FRIDAY, JANUARY 16, 2004] அளித்த முன்னுரையின் சாரம் ஏறக்குறைய சரியென்று கருதுகிறேன். அது இவ்வாறு சொல்கிறது: In the contest of ideas, civil society is the battleground. It is this space that states attempt to capture, political parties seek to influence and business corporations try to control.

——————————————————————

(mathivanan_c@yahoo.com)

Series Navigation

சி.மதிவாணன்

சி.மதிவாணன்