வாரபலன் – புத்தக யோகம்

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

மத்தளராயன்


காணும் பொங்கலன்று புத்தகக் கண்காட்சியில் ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஷ்னரியைப் போட்டால் ஆ.டி அடுத்தவர் தலையில் விழுந்து ரணகாயமாகி ஆம்புலன்ஸ் வருமளவு கூட்டம். புத்தகம் வெளியிடுகிறவர்கள் எல்லோரும் தற்போது சோனிப் புத்தகங்களையும் எலும்பும் தோலுமான எழுத்தாளர்களையும் கடாசி விட்டுத் தலையணைகளாகப் பதிப்பிக்கத் தொடங்கியிருப்பதால், இரண்டு வருடம் பார்த்ததற்கு இப்போது இரண்டு சுற்று பருத்திருக்கிறார்கள். தமிழில் நூல் வெளியீடு வெகு ஆரோக்கியமாக இருக்கிறது.

இதுதான் விற்கும் என்றில்லை. எல்லாமே பிய்த்துக் கொண்டு போகிறது. சாகித்ய அகாதமி ஸ்டாலில் நான் பழைய புத்தகங்களைத் தூசி தட்டி வாங்கிக் கொண்டிருந்தபோது பக்கத்தில் ஒருத்தர் ‘வாஸ்து சாஸ்திரம் ‘ இருக்கா என்று விசாரித்தார். யார் கண்டது, மத்திய அரசு இந்தியில் தொடங்கி சகல மொழியிலும் காவிக் கலர் அட்டையோடு அதையும் போடலாம்.

(அன்னம் கதிர்)

பொங்கலுக்கு நாலு நாள் பிரஸ் எல்லாம் லீவாயிடுச்சு. இல்லாட்ட இன்னும் நாலு புத்தகம் கொண்டு வந்திருப்பேன் என்று வருத்தப்பட்டுக் கொண்டார் தமிழினி வசந்தகுமார்.

காலச்சுவடு ஸ்டாலில் பளிச்சென்று கண்ணில் பட்டது ஜெயமோகனின் புது நாவல் ‘காடு ‘. ரெண்டு பக்கமாக நின்று முஷ்டி மடக்கியவர்கள், சத்தம் போடாமல் சட்டைப் பையில் கையை விட்டுப் புத்தகம் வாங்க, காசு எண்ணி வாங்கிப் போட்டுக் கொண்டிருக்கும் அரவிந்தன் முகத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி.

(அரவிந்தன் )

‘புலிநகக் கொன்றை ‘ பி.ஏ.கிருஷ்ணன் தூசிக்கு நடுவே உற்சாகமாக ஆங்கிலப் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். அடுத்த நாவலை முடித்த நிம்மதி மனதில். ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியாகிறதாம். கதைக் களன் அசாம் தேயிலைத் தோட்டமா ஆழ்வார்திருநகரியா என்று கேட்டேன். பொறுய்யா என்றார்.

(பி.ஏ.கிருஷ்ணன்)

(அழகிய சிங்கர்)

எஸ்.ராமகிருஷ்ணனைச் சிரிக்கச் சொல்லிப் படம் பிடித்து விட்டு ஒரு எட்டு வைத்தால், பா.ராகவன், பாரதிராமன், பாரதி (இலக்கியச் சிந்தனை), பால் நிலவன் என்று பா வரிசை எழுத்தாள – இலக்கிய அன்பர்கள்.

(எஸ்.ராமகிருஷ்ணன்)

கீகடமான இடத்தில் பீடாக்கடையிலும் பாதிக்கு இடம் பிடித்துப் புத்தகக் கடை போட்டிருக்க, ஒற்றையடிப் பாதையாகக் கண்காட்சி முழுக்க விரித்த சிவப்பு கயற்று விரிப்பு. அது அங்கங்கே வேகத் தடையாகக் குவிந்து எல்லோரையும் விழ வைக்க, நாங்கள் நின்று பேசிக் கொண்டிருந்தோம். தடுக்கி விழுந்தால் தமிழ் எழுத்தாளர் மேல்தான் விழ வேணும் என்பதை நிரூபிக்க இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை.

(இலக்கியச் சிந்தனை பாரதி)

*************************************************************

பிரியமானவர்களை எதிர்பாராமல் சந்திக்கும்போது கிடைக்கிற மகிழ்ச்சியே தனிதான்.

அதுக்கு ஈடானது, ‘பிசினஸ் வேர்ல்ட் ‘ பத்திரிகையின் சமீபத்திய இதழை (ஜனவரி 5, 2004) புரட்டிக் கொண்டிருந்தபோது கிட்டியது.

தி சவுத் இண்டியன் பேங்க் (TSIB) தலைவர் சேதுமாதவன் அவர்களோடு குறும் பேட்டி. இன்னும் ஐந்து ஆண்டுகளில் நிர்வாக இலக்குகளாக 23,000 கோடி ரூபாய் வரவு செலவையும், 140 கோடி ரூபாய் லாபத்தையும் அடைந்து 440 கிளைகள் நாடு முழுக்க விரிய வழிவகுத்திருப்பதை விவரிக்கிறார் சேதுமாதவன்.

அந்தப் பேட்டி இப்படி ஒரு குறிப்போடு முடிகிறது – ‘ மாதவன் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரும் கூட ‘.

அவசரமாகப் பக்கத்தைத் திருப்பி சவுத் இண்டியன் வங்கித் தலைவரின் புகைப்படத்தைப் பார்க்க – அட, சேது சார். லட்சக் கணக்கான மலையாளிகளின் அன்புக்குரிய சிறுகதையாளார், புதின எழுத்தாளர்.

சேது இரண்டு முறை சாகித்ய அகாதமி விருது வாங்கியிருப்பதாக எழுதியிருக்கிறார்கள். அவர்கள் மத்திய சாகித்திய அகாதமி விருதையும், கேரள சாகித்திய அகாதமி விருதையும் சேர்த்துச் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

****************************************************************

சனிக்கிழமை சாயந்திரம் வேம்பநாட்டுக் காயலையும், தகழி கிராமத்தையும், தகழியிலிருந்து எடத்வா போகும் வழியில் காரோடு பம்பை கடந்ததையும் காம்கார்டரிலிருந்து கம்ப்யூட்டருக்கு இறக்கிக் கொண்டிருந்தபோது நணபர் தினமணி சிவகுமார் வந்து சேர்ந்தார்.

எப்போதும் சங்கீதத்தோடு ஆரம்பிக்கிறவர் ஒரு மாறுதலுக்காக வெண்பாவில் தொடங்கினார். ஆணிக்கும் தொடுவானத்துக்கும் சிலேடையாக மதிவண்ணன் எழுதியது.

நாட்காட்டி தோன்றுதலால் நீர்தலையில் தட்டுவதால்

காட்டும் கருமை நிறத்தால் – கட்டாயம்

தொடுவானை ஆணியென்று சொல்லலாம் சிலேடைப்

படுமிங்கு நன்றாகப் பார்.

மதிவண்ணன் நன்றாகத் திருப்புகழ் பாடுவார் என்று தொடர்ந்து வள்ளிமலை சுவாமிகளுக்கு வந்தார். மைசூர் அரண்மனையில் சமையற்காரராகத் தொடங்கி, திருப்புகழை எப்போதோ அகஸ்மாத்தாகக் கேட்டு அதன் சந்தத்துக்கும், பக்திக்கும் அடிமையாகி வாழ்க்கை முழுவதையும் திருப்புகழாகவே சுவாசித்துப் போனவர் வள்ளிமலை சுவாமிகள்.

அந்தக் காலத்தில் ஜனவரி ஒன்றாம் தேதியென்றால், மேல் உத்தியோகஸ்தர்களைப் பார்க்க எலுமிச்சம் பழமும், பூமாலையுமாகப் போவதுதான் தமிழ்நாட்டு வழக்கமாம் (இது நாற்பதுகளில்). இந்தக் கூட்டத்தை அப்படியே மடை திருப்பி வள்ளிமலைக்கு அனுப்பிய ஒரு திருப்புகழ்மணி பற்றியும் சொன்னார் சிவகுமார். படி தோறும் திருப்புகழ் பாடும் அந்தப் படிப்பாட்டு நிகழ்ச்சி இன்னும் தொடருவதாகத் தெரிகிறது.

இசைமேதை மகா வைத்தியநாத ஐயர், அவர் சகோதரர் ராமசாமி சிவன் ஆகியோரைப் பற்றியும், இன்னொரு இசைமேதை வேணு நாயுடுவோடு இவர்கள் இசை மோதல் நடத்தி வெற்றி பெற்றதையும், மகா வைத்தியநாத ஐயர் வெர்சஸ் பட்டணம் சுப்பிரமணிய அய்யர், செம்பை வெர்சஸ் செம்மங்குடி, புல்லாங்குழல் மாலி வெர்சஸ் பாலக்காட்டு மணி ஐயர் என்று ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை அவர் பொழிந்தபடி போக, நான் கச்சேரி கேட்கிறது போல் கேட்டபடிக்கு உட்கார்ந்திருந்தேன்.

கிளம்பும்போது, ஏழு வயதில் அப்பா கையைப் பிடித்தபடி மல்லீஸ்வரர் கோவில் இசை விழாவுக்கும், ஜார்ஜ் டவுணில் அங்கங்கே நடந்த இசைக் கச்சேரிகளுக்கும் போய் நடுராத்திரியில் திரும்பிய அனுபவங்களை அசை போட்டார். ஜானகிராமனின் மோகமுள்ளில் வரும் பாபுவும் அப்பாவும், ராத்திரி கச்சேரி கேட்டு விட்டு வரும்போது தொடரும் நாய்களும் பற்றியெல்லாம் படிக்கப் படிக்க உண்டாகும் deja vu பற்றியெல்லாம் சொல்லியபடி அவர் படியிறங்க, மணியைப் பார்த்தேன். ராத்திரி பதினொன்று.

வந்த அழைப்பை எல்லாம் மறுக்காமல் மாலையில் பார்ட்டிக்குப் போயிருந்தால் ஞாயிறு காலை தெம்பாக உட்கார்ந்து இதை எழுதிக் கொண்டிருக்க மாட்டேன்.

**************************************************************

எக்ஸ்பிரஸ்ஸில் அரைப் பக்கம் கேரளா டூரிஸம் விளம்பரம். ஆன்றணி தொடங்கிப் பல புகைப்படங்கள். கேரள எழிலைப் பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதியிருக்கிறார்கள். என்ன பிரயோஜனம் ? முழுக்க முழுக்க மலையாளத்தில்.

திருவனந்தபுரம் செக்ரெட்டேரியட்டில் ஃபைல் நகர்த்தும் எந்த நாயரோ, குரூப்போ உச்சைக்கு ஊணு கழித்து, விஸ்தாரமாக முறுக்கி விட்டு ‘ஆள் இண்டியா விதரணம் ‘ என்று குறிப்பு எழுதி மேட்டரை ப்ளாக் செய்து கொடுக்க, எக்ஸ்பிரஸ்ஸில் அரைப்பக்கம் ஜிலேபி பிழிந்து வைத்திருப்பது என்ன என்று காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை தலைமுடியைப் பிய்த்துக் கொண்டிருப்பார்கள்.

**********************************************

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்