நேர்காணல் – இர்ஷத் மஞ்ஜி

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

ஜான் க்ளாஸி (தமிழாக்கம் : ஆசாரகீனன்)


கனடாவில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கும் The trouble with Islam என்ற புத்தகத்தை எழுதியிருப்பவர் இர்ஷத் மஞ்ஜி (Irshad Manji). முஸ்லிம், பெண் எழுத்தாளாரான இவர் நியூயார்க் டைம்ஸ் மாகஸினுக்கு அளித்த சுருக்கமான நேர்காணலின் தமிழாக்கம் இது. கேள்விகளைக் கேட்டவர் ஜான் க்ளாஸி.

நீங்கள் எழுதியிருக்கும் ‘The trouble with Islam ‘, விற்பனையில் கனடாவைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஜனவரிமாதம் விற்பனைக்கு வருகிறது. இஸ்லாத்தோடு என்னதான் பிரச்சினை, சொல்லுங்களேன் ?

என்னுடைய பார்வையில், என் மதம் தோன்றிய காலத்திலிருந்தே, ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, தனி நபர் வாழ்வுகள் மிகவும் சிறுமைப்பட்டுப் போயின. மேலும் முஸ்லீம்கள் சொல்லும் பொய்களோ மிகவுமே பெரியதாகி விட்டன.

விளக்கமாகச் சொல்லுங்களேன் ?

அதாவது, இஸ்லாத்துள் உள்ள பெண்கள் இன்று எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறார்கள், பாருங்கள். யூதர்கள் தொடர்ந்து கரித்துக் கொட்டப் படுவதையும் பாருங்கள் – இதை நான் நன்றாக யோசித்த பிறகே சொல்கிறேன். இஸ்லாமியம் ஆள்கிற பிரதேசங்களில் இன்னமும் தொடர்கிற கொடிய நோயான அடிமை முறையைக் கவனியுங்கள். சி.ஐ.ஏ., இஸ்ரேலியர், எம்.டி.வி., அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை அல்லது சவுதி அரச குடும்பத்தினரே நமது பிரச்சினைகள் அனைத்துக்கும் காரணம் என்று சொல்வதுதான் இப் பொய்கள். முஸ்லீம்களாகிய நாமே பல நூற்றாண்டுகளாக நமது சுதந்திரங்களை மிதித்து நசுக்கிக் கொண்டு, நம்மைத் தொடர்ந்து ராணுவச் சட்டங்களே ஆட்சி செய்ய வழி செய்து கொண்டிருக்கிறோம். இஸ்லாமைப் பீடித்துள்ள நோய்களுக்கு, முஸ்லீம்களாகிய நாமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நான் சொல்ல விரும்புவது.

தற்போதைய நிலையிலிருந்து இஸ்லாமை விடுவிப்பதற்கு என்ன வழி காண்கிறீர்கள் ?

முஸ்லீம்களாகிய நாம், குரானை அணுகுவதில் நமக்கு உள்ள பாரம்பரியத்தை மீட்டு, உயிர்ப்பிக்க வேண்டும். 11-ஆம் நூற்றாண்டின் இறுதியில், பாக்தாத்திலிருந்த கலிஃபா அதிகரித்து வந்த உட்பூசலினால் தனது பேரரசு சிதையாமல் காப்பாற்ற அரசியல் வாய்ப்புகளை இறுக மூடினார். தொடர்ந்த சில தலைமுறைகளுக்குள்ளேயே, பாக்தாத் (கலிஃபாத்) அதுவரை சார்புகளற்று சுதந்திரமாகச் சிந்திப்பதற்கென இஸ்லாத்தில் இருந்த ‘இஜ்திஹாத் ‘ என்ற பாரம்பரியத்தை அணுகும் பாதைகளை எல்லாம் அடைத்தது. மாறாக இஸ்லாத்தின் துவக்க காலத்தில், இஜ்திஹாத்தின் வழியே கிட்டத்தட்ட 135 வேறு வேறான இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகள் மலர்ந்து வர வழிவகை இருந்தது. கொர்தோபா நகரத்தில் மட்டுமே 70 நூலகங்கள் இருந்தன. யோசியுங்கள், எழுபது!. போரில் உயிர்த் தியாகம் செய்யும் இன்றைய போராளிகளுக்கு மரணத்திற்குப் பிறகு கொடுக்கப்படப் போவதாக உறுதி தரப்படும் ஒவ்வொரு கன்னிப் பெண்ணிற்கும் நிகராக ஒரு நூலகம். அன்று புத்தகங்கள், இன்று கன்னியர். எது மேலான வழி என்று தீர்மானிப்பதில் ஏற்பட்டுப் போன பெரும் மாறுபாடுகளைப் பளிச்செனச் சுட்டுவதற்கு இது ஒன்று போதுமே.

உங்கள் விமர்சகர்கள் சிலர் உங்களுக்குக் குரான் புரியவே இல்லை என்று குறை சொல்கிறார்களே. 14-ஆவது வயதில் மதப் பள்ளியிலிருந்து(மதரஸா) வெளியேற்றப் பட்டவராயிற்றே நீங்கள் ?

கேள்விகள் கேட்பது தான் அறிவை உயர்த்த முயல்பவர்களுக்கு ஏற்ற செயல். நானோ கேள்விகள் கேட்டதற்காக வெளியேற்றப்பட்டேன். அதன்பின், நானாகவே இருபது வருடங்கள் இஸ்லாம் பற்றிப் படித்தேன். குரான் கடினமானது, சிக்கலானது என்பதை நான் தெளிவாகவே ஒப்புக் கொள்கிறேன். குரான் அப்படி இருப்பதை நான் கொண்டாடவே செய்கிறேன். அதனுள் இருக்கும் முரண்பாடுகள் மற்றும் மறைவான பொருட்கள் காரணமாகவே குரான் சிக்கலான ஒன்றாகிறது. கவர்ச்சியான பட்டங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு நான் விடும் சவால் இதுதான், குரான் எவ்வளவு சிக்கலானது என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். வெறும் மண்ணாந்தையாக இருப்பவர்களுக்கு, இத்தகைய பட்டங்கள் எதற்கு ?

தற்பால் புணர்ச்சியை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. வெளிப்படையாகவே தற்பால் புணர்ச்சியாளராக உள்ள நீங்கள் இதை எப்படி உங்கள் மத நம்பிக்கையுடன் பொருத்திப் பார்க்கிறீர்கள் ?

என்னுடைய பாலுறவுத் தேர்வு ஒரு பாவமாகவே இருக்கக் கூடும் என்பதை நான் அறிவேன். ஆனால், என்னைப் படைத்தவர் மட்டுமே அதைப் பற்றிய தீர்ப்பு சொல்ல முடியும். என் கேள்வி என்னவென்றால் குரான், ‘கடவுள் படைத்த அனைத்தும் ‘உயரியதே ‘, கடவுள் படைத்த எதுவும் ‘சோடையல்ல ‘ ‘ என்று தெளிவாகக் கூறுகிறது. கடவுள், தற்பால் புணர்வை விரும்புபவளாக என்னைப் படைக்க விரும்பாத பட்சத்தில், எனக்குப் பதிலாக வேறு ஒருவரைப் படைத்திருக்கலாமே ? தெரிந்தே ஏராளமான அதிசயங்களுடன் இந்த உலகைத் படைத்திருக்கும் கடவுளைப் பற்றி குரான் விரிவாகப் பேசுகையில், என் விமர்சகர்கள் எப்படி தற்பால் புணர்ச்சியைக் கண்டிக்கிறார்கள் என்றுதான் நான் வியக்கிறேன்.

நீங்கள் ஏன் முக்காடு அல்லது முகத்திரை போட்டுக் கொள்வதில்லை ?

முக்காடு, முகத்திரை எல்லாம் போட்டுக் கொள்வது முகமது நபியின் மனைவியருக்கு மட்டுமே விதிக்கப்பட்டது. நான் அவர்களுள் ஒருத்தி இல்லை. குரான் சொல்வதற்கு ஏற்ப உடை அணிந்து கொள்ள வேண்டுமானால், கழுத்தைக் கவ்வும் மேல்சட்டையையும் (turtleneck), பேஸ்பால் தொப்பியையும் அணிவதே போதுமானது. அண்மையில், காஸா (Gaza) பகுதியில் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் அரசியல் தலைவர்களைப் பேட்டி கண்டபோது, குறிப்பாகச் சொல்வதானால் தவறாமல் நான் அணிந்து கொண்டது பேஸ்பால் தொப்பியையே.

சீர்திருத்தங்கள் ஏற்படுவதற்காக ஒரு பன்னாட்டு இடி தாங்கியாக(lightning rod) இருக்க நீங்கள் தயாரா ?

இந்தப் புத்தகத்தினால் ஏற்படக் கூடிய பின் விளைவுகளைப் பற்றி நான் சற்றும் கவலைப்படவில்லை. தடித்த தோலையும், பெரிய மூளையையும், ஏன் ஓட்டை வாயையும் கூட கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார். இந்தக் கலவை, இப்படி ஒரு பெரும் செயலில் இறங்க அவசியமானதுதான்.

நீங்கள் ஒரு லட்சியவாதியாகவும், தலைக்கனம் பிடித்தவராகவும் கருதப்படுகிறீர்கள். நீங்கள் தலைக்கனம் பிடித்தவரா ?

மக்களாட்சியின் இயல்புப்படி, இதைப் பற்றி முடிவு செய்யும் பொறுப்பை மற்றவர்களிடமே விட்டுவிடுகிறேன். இதைத் தீர்மானிப்பதிலும், இஜ்திகாத்தைப் பயன்படுத்துவது அவசியம்.

—————————-

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்