மத்தளராயன்
அமைச்சர் வீட்டுக் காவலுக்கோ, அண்ணாசாலையில் உச்சிவெய்யில் நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ போகத் தேவையில்லாமல் சென்னை விமானத்தளத்தில் காவலுக்கு நின்றிருந்த பொலீஸ் காவலர் என்னைப் புல்லே என்று பார்த்தார்.
சார், இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்குப் போங்க.
எதுக்கு அங்கே போகணும் ? நான் இந்தியன் ஏர்லைன்ஸ் ஃப்ளைட்டுலே கொச்சிக்கு இல்லே போகப் போறேன்.
சொன்னாக் கேளுங்க சார். இந்த ஏர்போர்ட் இல்லை. அங்கே போங்க.
அவர் அலுத்துக் கொள்ளாத குறையாகத் திரும்பவும் பொறுமையாகச் சொல்லப் பயணச் சீட்டைப் பார்த்தேன்.
‘டிப்பார்ச்சர் ஃப்ரம் இண்டர்நேஷனல் ஏர்போர்ட் ‘. பார்க்காதது என் குற்றம்தான்.
போர்டிங்க் கார்டோடு, முழ நீளத்துக்கு ஒரு படிவத்தையும் நீட்டினார் அதிகாரி. வழக்கம்போல் அதில் அரைமுழம் இந்தி.
எம்பார்க்மெண்ட் கார்ட் எல்லாம் எதுக்கு சார் ? இந்தோ இருக்கிற கொச்சிக்குத் தானே போறேன் ?
இங்கேயும் நினைவூட்டல்.
இதைக் கொடுத்துக் கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் வாங்கினால்தான் வண்டி ஏறலாம்.
போகிறபோக்கில், ஆண்றணி பூமியில் போய் இறங்கவும் பாஸ்போர்ட், விசா சகிதம் பயணம் ஆரம்பிக்க வேண்டுமோ என்னமோ – இதை எழுதும் வினாடி வரை கருணாகரனும் அவர் மகன் கேரளா காங்கிரஸ் தலைவர் முரளீதரனும், திருவனந்தபுரத்தில் ஆண்றணி ஆட்சியைக் கெல்லிக் கிளப்பி அப்புறத்தில் எறிய விடாது பாடுபாட்டுக் கொண்டிருப்பது பலன் தரவில்லை.
ஆண்றணியுமாச்சு, கருணாஸுமாச்சு என்று பாரத்தைப் பார்த்தால், அதில் ஏகப்பட்ட கேள்விகள். எல்லாம், ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்ல வேண்டியவை.
கையில் ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் வைத்திருக்கிறீரா ? முந்தாநாள் உமக்கு நீர்க்கடுப்பு ஏற்பட்டதா ? தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கிறீரா ? ஆணுறை அணிகிறீரா ? மூக்கு நீளம் ஒண்ணேகால் அங்குலத்துக்கு மேலா, குறைவா என்பது போல் கேள்விகளுக்குச் சத்தியப் பிரமாணம் செய்து பதில் தர முயற்சி செய்து கொண்டிருக்கும்போது, விமானம் கிளம்பத் தயாராக இருக்கு, போங்க ஏறிக்குங்க என்றார்கள் வெள்ளையும் சள்ளையுமான துரைகள்.
என்னைப் போல் பொறுமையாகப் பாரம் பூர்த்தி செய்துகொண்டிருந்த நாலைந்து பேர் அவசரமாக நீட்டிய காகிதங்களைப் பார்க்காமலேயே இடது கையால் வாங்கி, இங்க் இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை குத்தி ஓரமாக விட்டெறிந்து கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.
இந்தக் காகிதத்தை எல்லாம் அப்புறம் கழிப்பறையில் உபயோகப்படுத்துவார்களாக இருக்கும்.
********************************************************************
எரணாகுளம் நகரம் ராத்திரி எட்டு மணிக்கே சமர்த்தாகத் தூங்கப் போயிருந்தது.
சனிக்கிழமை இல்லியா, அதான் சீக்கிரமாக் கடையை எல்லாம் எடுத்து வச்சுட்டு வீட்டுக்குக் கிளம்பிட்டாங்க.
சகாவு டாக்சி டிரைவர் சொன்னார்.
வார நாள்லே எப்படியோ ?
விடாமல் பிடித்தேன்.
எட்டரை ஆயிடும் சேட்டா.
சென்னை அண்ணாசாலையை அகலத்தைக் குறைத்து தெற்கு வடக்காக இழுத்து வைத்து நீட்டினாற்போல் எம்.ஜி.ரோட் என்ற மகாத்மா காந்தி வீதி. நாலு கடைக்கு ஒரு கடை ஆலப்பாட் ஜுவல்லரி. ரெடிமேட் துணிக்கடை. பேக்கரி. அழுக்குக் கட்டடமாக ஒரு தியேட்டர். பானரில் மோகன்லால் சிரிக்கிறார் – படம் ‘ஹரிஹரன் பிள்ள ஹாப்பியாணு ‘.
லாலேட்டன் ஹாப்பியல்லா. துக்கத்திலாணு.
டிரைவர் சகாவு சொன்னார். படம் ஊத்திக்கிச்சாம்.
ஹோட்டலில் டி.வியைப் போட்டதும், கிரேனின் உச்சியில் உட்கார்ந்து காமரா கீழே பார்க்க, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சண்டை போடத் தயாராக மம்முட்டி. சரசரவென்று கீழே வந்து கிரேனை விட்டிறங்கி, காமிராவைத் தூக்கிக் கொண்டு பச்சையிலைக் காட்டுப் பிரதேசத்தில் வளைந்து வளைந்து கேமிராமேனும் உதவிகளும் ஓட, முன்னால் மம்முட்டி யாரையோ புரட்டி எடுத்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறார். மூணு நிமிஷத்துக்கு மேலே நீளும் ஒற்றை ஷாட் மம்முட்டி நடித்து வெளிவர இருக்கும் புதுப்படத்துக்காம்.
மம்முட்டி காட்டிலும் சென்னைப் பருவ மழைதான் என்று சாரதி சொன்னது நினைவு வர, சானலை மாற்றியதில் கைரளி டிவி. மார்க்சிஸ்ட்கள் பெரும் பங்கு வகிக்கும் நிறுவனம் என்று கேள்வி.
கைரளியில், அவர்களின் தற்போதைய சூப்பர் ஸ்டார் காங்கிரஸ்காரர் கருணாகரன் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ்காரரான ஏ.கே.ஆண்றணியை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கினால் கேரளத்தின் கஷ்டம் எல்லாம் விடியும் என்பதே அவருடைய உக்ரன் பிரசங்கத்தின் சாராம்சம்.
அயர்ந்து தூங்கிவிட்டுப் பாதி ராத்திரியில் எழுந்து பார்க்க, அணைக்காமல் விட்ட டி.வியில் திரும்பக் கருணாகரன். ஆண்றணியை இறக்கி வீட்டுக்கு அனுப்பாமல் இவர் கண் துஞ்சுவார் என்று தோன்றவில்லை.
பாத்ரூம் போய் வந்து பார்த்தபோது கருணாகரனைக் காணவில்லை. மார்க்சிஸ்ட் தினப்பத்திரிகை தேசாபிமானிக்காக ஸ்டைலாயிட்டு ஒரு விளம்பரம்.
தமிழ் எழுத்துக்காரன் அசோக் மித்ரா.
செய்தி வாசிக்கும் புஷ்டியான பெண்ணின் சோனியான குரல்.
தெருவில் தீயணைப்பு வண்டிகள் மணிச்சத்தத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறதாகத் தோன்றுகிறது.
இந்தியன் ஏர்லைன்ஸில் கொடுத்த சைவ சாசேஜ் போன்ற நூதன வஸ்துக்களைச் சாப்பிட்டு, பிளாஸ்டிக் போத்தலில் வழங்கப்பட்ட மூணேகால் டா ஸ்ஃபூன் மினரல் வாட்டர் குடித்தால் அஜீர்ணத்தால் இப்படி அபத்தக் கனவு வரும் போல.
டிவியை அணைத்துவிட்டுப் படுக்கையில் விழுந்தேன்.
******************************************************************
அப்பமும் ஸ்ட்யூவுமாகக் காலையில் பசியாறினேன். ப்ரேக்ஃபாஸ்டை மலையாளத்தில் ப்ராதல் என்கிறதற்கான காரணம் இன்னும் விளங்கவில்லை – தகரம் மிகாமல் படிக்கவும்.
இந்துவும், எக்ஸ்பிரஸ்ஸும் இல்லாதபோது மலையாள மனோரம ஈயப்படும் என்பதால் அந்தப் பத்திரிகையை எடுத்துப் பிரிக்க முதல் பக்கத்தில் நேற்று ராத்திரி எரணாகுளம் நேப்பாளி மார்க்கெட்டில் தீப்பிடித்தம். கடைகள் கத்திச்சு சாம்பலாயி.
எம்.ஜி.ரோட் நடைபாதைக் கடைகளை ஒழித்துக்கட்டி, கொஞ்சம் ஓரமாக அங்காடி ஏற்படுத்தி அங்கே நிறைய நேப்பாளிகளை, தமிழன்மாரைக் குடியேற்றிவிட்ட இடத்தில் தீவிபத்து.
நேப்பாளிகள் இல்லாத எரணாகுளம் மகாத்மா காந்தி வீதி ஏற்ற இறக்கங்களும், சிமிண்ட் பலகை அங்கங்கே நடுவில் காணாமல் போய்க்கொண்டிருக்கும் நடைபாதையுமாக உயரந் தாண்டலும் நீளந்தாண்டலும் பழகத் தோதாக விரிந்து கிடந்தது.
பலகை இருக்கும் இடத்தில் புதுசாகத் துணிக்கடை பரத்திக் கொண்டிருக்க, டவுண்பஸ்ஸில் எடுபிடியாள் கூவியழைத்துக் கூட்டம் சேர்க்கிற சத்தம். மலை கயறி வந்த அய்யப்ப சாமிகள் எல்லா மொழிகளிலுமாக தாண்டிக் குதித்து நடந்து கொண்டிருந்தார்கள்.
கடைகளைக் காரியம் ஒன்றுமில்லாமல் பார்த்தேன். அதெல்லாம் மாக்சி விற்கிறவை. சேச்சிகளுக்கு மாக்சியில் வல்ய இஷ்டம் வரக் காரணம் என்ற யோசனையோடு திரும்ப ஓட்டல் படியேறியபோது ‘வை(கி)ட்டு ஆறு மணிக்கு டாக்சி எத்தும் ‘ என்றார் வரவேற்பாளர். ஆலப்புழை போகத்தான்.
அவ்வளவு தாமதமானால் வேண்டாம். நாளைக்கே போயிக்கறேன்.
மலையாள மனோரமாவின் மற்ற பக்கங்களை மேய்ந்தபோது, தொண்ணூற்று மூன்று வயதான மூத்த மலையாளக் கவிஞர் பாலா நாராயணன் நாயருக்கு மாத்ருபூமி விருதாக இரண்டு லட்சம் ரூபாயும், தந்தப் பேழையும் வழங்கிச் சிறப்புரையாற்றினார் பிரசித்த தமிழ் எழுத்தாளர் அசோக் மித்ரன்.
சுந்தர ராமசாமியைச் சேர்த்து சுந்தரராமசாமி என்று எழுதுவது எவ்வளவு தப்போ அதைவிடத் தப்பு அசோகமித்திரனைப் இரண்டாக்கிப் பொட்டும் வைத்தது. ஆனாலும் இது அசோக் மித்ராவைவிட எவ்வளவோ பரவாயில்லை.
மலையாள எழுத்தாளரைக் கவுரவிக்கப் பிறமொழி எழுத்தாளரை நீங்கள் அழைப்பது போல் எங்கள் ஊரில் நடக்காது என்று அ.மி சேட்டன்மாரைப் புகழ்ந்து சொன்னதாகப் பத்திரிகைக் குறிப்பு.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் இலவச இணைப்பும் உண்டு. மகா சோனியான அந்தப் பதினாலு பக்க இணைப்பில் பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு தொழிற்சாலையில் வாட்ச்மேனான கோபி மேனோனோடு பேட்டி. என்ன விசேஷம் என்று கேட்டால், புள்ளி ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். 1970களின் இறுதியில் வன்விஜயம் நேடிய தெலுங்குப் படமான ‘டைகர் ராணி ‘ மூலம் வெற்றியைக் குவித்து, அடுத்து மலையாளத்தில் ‘இனி அவன் உறங்கட்டே ‘ என்று இளைஞர்களைத் தூங்கவிடாமல் அனுராதாவை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து கமலஹாசனை நாயகனாக்கி ‘மற்றொரு சீத ‘ எடுத்து, அப்புறம் அடுத்த படங்களில் கைக்காசு எல்லாம் இழந்து இப்போது காக்கி யூனிபாரத்தோடு காவல் காரனாக நிற்கிறார், பாவம்.
போதாக்குறைக்கு இவர் தற்போது வேலை பார்க்கும் ஃபாக்டரியில் ஏதோ படப்பிடிப்பு என்று அண்மையில் ஒரு கோஷ்டி வந்திறங்கியபோது, ‘சேட்டா, வாட்ச்மேன் வர்றதுபோல ஒரு சீன் இருக்கு. நடிக்கிறியா ? ‘ என்று கேட்டு இவருடைய பூர்வகதை தெரியாதவர்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்களாம்.
‘முப்பத்தஞ்சு எம்.எம் பாக்யம், எழுபது எம்.எம் நிர்பாக்யம் ‘ என்று சாதுவாகத் தலைப்புப் போட்டு மனோரமா பிரசுரித்திருந்த செய்தி, தமிழ்ப் பத்திரிகைக்குக் கிட்டியிருந்தால் தலைப்பு என்னவாக இருக்கும் ?
‘கமலஹாசன் படத் தயாரிப்பாளர் காவல்காரனானார் ‘.
*************************************************************************
‘கனவான்களே, சீமாட்டிகளே, அவரை(அவனை)ப் பிடித்து விட்டோம். ‘
சாயந்திரம் எல்லாச் சானலிலும் சதாம் ஹுசைன். மாட்டுத் தரகன் போல அவர் பல்லைப் பிடித்துப் பார்த்து, தலையில் பேன், பொடுகு இருக்கா என்று தடவினதை விடாமல் லூப்பில் போட்டுக் காட்டி மகிழ்ந்து கொண்டிருந்த கூட்டத்தில் யாருமே ‘சதாம் கிடைச்சாச்சு, சரி. வெப்பன்ஸ் ஓஃப் மாஸ் டெஸ்ட்ரக்ஷன் எங்கேப்பா ? ‘ என்று கேட்காதது ஆச்சரியம் தான்.
பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை சதாம் வைத்திருப்பதால் அதைக் கண்டுபிடிக்கப் போவதாகச் சொல்லி ஈராக்கில் நுழைந்து, இப்போது சதாமைப் பிடிக்கத்தான் அங்கே போனதாக பி.பி.சி, சி.என்.என் தொடங்கி உள்ளூர் சானல் வரை நீளும்படியான ரீல் விடுவதைப் பத்து நிமிடத்துக்கு மேல் பார்க்கப் பொறுமையில்லாமல், வெளியே வந்தேன்.
அந்த மனுஷர் தான் ஆகட்டும். இப்படிப் பசுமாடு போலவா தேமேன்னு நிப்பார் ? கைத்துப்பாக்கியை எடுத்துப் பொட்டில் வைத்துச் சுட்டுக்கொண்டு பரலோகம் போகவேண்டாமோ ? அதுதானே வீரத்தின் லட்சணம் ?
ஓட்டல் ரிசப்ஷனில் டி.வி பார்த்துக்கொண்டிருந்தவர்களில் யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதானே.
திரும்பத் தெருவில் இறங்க, ஒரு புத்தகக்கடை கண்ணில் பட்டது. கூட்டமும் இருந்தது. கிறிஸ்துமஸ், புதுவருட வாழ்த்து வாங்க நிற்கும் கூட்டம். டி.சி புக்ஸ், கோட்டயம் பிரசுரித்த ஏகப்பட்ட புத்தகங்கள் வைத்திருந்த அலமாரிகளின் பக்கம் தப்பித் தவறிக்கூட எந்த மலையாளியும் போகவில்லை.
மலையாளம் அகராதி புதுசா வந்திருக்கு சார்.
கடைச் சிப்பந்தி காட்டிய இடத்தில் 2003 செப்டம்பரில் புதுப்பதிப்பு வெளியான மலையாளம் – ஆங்கிலம் அகராதி.
இதே அகராதியின் 2001 பதிப்பு என்னிடம் இருக்கிறது. இதில் ‘முத்தமிழ் ‘ என்பதற்கு ‘தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் என்ற மூன்றும் சேர்ந்த மொழி ‘ என்று அபத்தமாக விளக்கம் எழுதியிருந்ததைப் படித்துக் கடுப்பாகி, முத்தமிழ் என்றால் என்ன என்று டி.சி புக்ஸ், கோட்டயத்துக்கு விவரமாக எழுதிப் போட்டேன். அது போன வருடத் தொடக்கத்தில். அவர்களும் ஏகத்துக்கு வருந்தி, அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்கிறோம் என்று வாக்களித்திருந்தார்கள்.
புதிய பதிப்பிலும் முத்தமிழ் அப்படியே தான் இருக்கிறது.
******************************************************************
மத்தளராயன்
- வாசக அனுபவம்: உமா மகேஸ்வரியின் ‘வெறும் பொழுது ‘
- தேவகுமாரன் வருகை
- கலைக்கண் பார்வை
- அணு ஆயுதத் தகர்ப்புக்கு முற்பட்ட அமெரிக்க அணுவியல் விஞ்ஞான மேதை ஹான்ஸ் பெத்தே (பிறப்பு:1906)
- அறிவியலில் மொழியின் தேவை – நாகூர் ரூமியின் ‘தமிழ்ப்படுத்தலும் தமிழ் மனமும் ‘ முன்வைத்து.
- வேறு புடவிகள் இருப்பதற்கான சாத்தியமும், அறிதல்வெளுயின் விளிம்பும்
- அன்பும் மரணமும் – வானப்பிரஸ்தம்
- எனக்குப் பிடித்த கதைகள் – 91-நெருக்கடிகளைச் சுமக்கும் தோள்கள்-என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக்கொழுந்து ‘
- யமுனா ராஜேந்திரன் கட்டுரை குறித்து சில குறிப்புகள்
- உத்தரவிடு பணிகிறேன்
- அந்தரங்கம் கடினமானது
- விளக்கு பரிசு பெற்ற கவிஞர் சி மணிக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்
- கடிதங்கள் (ஆங்கிலம்) டிசம்பர் 25 , 2003
- வாரபலன் – பயணத் தடங்கல் – ‘கமல்ஹாசன் படத்தயாரிப்பாளர் காவல்காரர் ஆனார் ‘ – முத்தமிழ் என்றால் ? (25-டிசம்பர் , 2003)
- ஆரியம் இருக்குமிடம்… ? ? ? ?
- மேரி மாக்தலேன் அருளிய பரிசுத்த நற்செய்தி
- பண்பட்ட நீலகண்டன், மதிப்பிற்குரிய நரேந்திரன்- இவர்களிடம் அதிகபிரசங்கி அநாகரிகமாய் சொல்லிகொள்வது.
- திருமாவளவனின் அறைகூவலும், ‘ஜாதி இந்துக்களின் ‘ சப்பைக்கட்டுகளும்
- அர்த்தமுள்ள நத்தார்
- படிகளின் சுபாவம்
- நவீன மதவாதத்தின் முகங்கள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தெட்டு
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -4)
- பலகை
- அம்மாயி
- ‘எது நியாயம் ? ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)
- மறுபக்கம்
- கடிதங்கள் – டிசம்பர் 25 -2003
- பிரிவினைவாதத்துக்கு எதிரான போராட்டம்
- வாரபலன் – பயணத் தடங்கல் – ‘கமல்ஹாசன் படத்தயாரிப்பாளர் காவல்காரர் ஆனார் ‘ – முத்தமிழ் என்றால் ? (25-டிசம்பர் , 2003)
- விடியும்!-நாவல் – (28)
- ரவி சீனிவாசின் பார்வையைப்பற்றி
- சில அபத்த எதிர்வினைகளும், உண்மைகளும்
- நேர்காணல் – இர்ஷத் மஞ்ஜி
- பின் நவீனத்துவ டெஹெல்கா, மைலாஞ்சி, அம்பிச்சு வொயிட் மெயில்கள் குறித்து.
- போன்சாய் குழந்தைகள்
- கவிதைகள்
- தாம்பத்யம்
- முற்றுப் பெறாத ஒரு கவிதை
- கோபம்