நிலைப்பாடுகளும், நியாயங்களும்

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


கோயில்களில் மிருகங்களை வழிபாட்டின் ஒரு பகுதியாக பலி கொடுப்பதை பெரியார் எதிர்த்தார் என்பதற்கு ஞாநி ஆதாரம் கொடுத்திருக்கிறார்(1). பெரியார் இதை தொடர்ந்து ஒரு இயக்கமாக எடுத்துச் சென்றாரா அல்லது ஒரு காலகட்டத்தில் அதை பிரச்சினையாக்கி அத்துடன் அது குறித்து அக்கறை காட்டாமல்,சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன் திருப்தி அடைந்துவிட்டாரா ? – இது போன்ற பல கேள்விகளுக்கும் விடை தேவை.மிருக வதை கூடாது என்று வாதிடும் People For Ethical Treatement of Animals(PETA) போன்ற அமைப்புகள் மிருகங்களின் உரிமைகள், அவற்றின் மீது காட்டப்பட வேண்டிய காருண்யம் குறித்து பேசுகின்றன. பெரியாரியம் கோயில் பலியை மட்டுமே எதிர்க்கிறது, அது மிருகங்களை வதை செய்வது குறித்து கருத்து ஏதும் கொண்டிருந்ததாக தெரியவில்லை.எனவே பெரியாரியத்தைப் பொறுத்தவரை இது மதம் சம்பந்தப்படாத வரை அது சரி, ஒரு சடங்கின் பகுதி என்றால் அது தவறு, அல்லது அனுமதிக்க முடியாத, கூடாத ஒன்று. இங்கு பகுத்தறிவு என்பது ஒரு பிரச்சினையின் ஒரு பகுதியை மட்டும் கணக்கில் கொண்டு,அதில் மதம் சம்பந்தப்பட்ட ஒன்றாக உள்ள ஒரு அம்சத்தை மட்டுமே எதிர்க்கிறது.இதை கேள்விக்குட்படுத்தாமல் பெரியார் எதிர்த்தார் என்பதற்காக பலி கொடுப்பதை எதிர்க்க முடியாது. அரசு ஜீவகாருண்யமே தன் கொள்கை என்று அறிவிக்கவில்லை.factory farming முறையில் விலங்குகள் வளர்க்கப்படுவது போன்றவற்றையோ அல்லது இறைச்சி உற்பத்தி, வணிகத்தை தடைசெய்யவில்லை. எனவே இத் தடை விலங்குகள் நலன் அல்லது உரிமைகள் என்ற கண்ணோட்டத்தில் செய்யப்படவில்லை. இங்கு விவாதிக்கப்படவேண்டியது பெரியாரியம்/பெரியாரிய பகுத்தறிவு கண்ணோட்டத்தில் விலங்குகள், மனிதர்கள் விலங்குகள் குறித்த உறவு குறித்த புரிதல் என்ன.(2).

இடதுசாரிகளும், பாரதிய ஜனதாக் கட்சியும் ஷாபானு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டபின் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்ததை எதிர்த்தன.அதற்கான காரணங்கள் வேறு. இடதுசாரிகள் இதை பெண்கள் உரிமையுடன் தொடர்பு படுத்தி பார்த்து எதிர்த்தன, பாரதிய ஜனதாவை ப் பொறுத்தவரை இது முஸ்லீம்களை திருப்திப்படுத்த செய்யப்படும் ஒரு முயற்சி. பொது சிவில் சட்டம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தியவை இடதுசாரிப் பெண்கள் அமைப்புகள். 1990 களில் பொது சிவில் சட்டக் கோரிக்கை சிறுபான்மையினருக்கு எதிராக முன்வைக்கப்படும் போது தங்கள் நிலைப்பாட்டினைன அவை தெளிவுபடுத்தின. அன்வேஷி அமைப்பு சார்பில் வெளியிடபட்ட கட்டுரை,இது குறித்த ஒரு விவாதத்தை துவக்கி வைத்தது. ஞாநிக்கு இந்த விவாதத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களை நினைவுபடுத்த விரும்புகிறேன்.பாரதிய ஜனதாவோ அல்லது ஹிந்த்துவ அமைப்புகளோ எடுக்கும் நிலைப்பாட்டிற்கு எதிராகவே நிலைப்பாடு எடுக்கவேண்டும் என்று கருதுவதை விட எடுக்கப்படும் நிலைப்பாடில் உள்ள வாதங்கள் என்ன, அவற்றில் உள்ள நியாயங்கள் என்ன என்பதை கவனிக்க வேண்டும்.ஷாபானு வழக்கில் காங்கிரஸ் எடுத்த நிலைப்பாட்டினை திமுக,அதிமுக உட்பட பல கட்சிகள் ஆதரித்தன, வி.பி.சிங்கும் ஆதரித்தார்.எதிர்த்தவர்களில் முக்கியமானவர் ஆரிப் முகமது கான்.பொது சிவில் சட்டம் குறித்து காங்கிரஸின் நிலைப்பாட்டினை காங்கிரசை தொடர்ந்து எதிர்க்கும் கட்சிகள் ஆதரிக்கக் காரணம் இதில் அவை ஒரே நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. குருமூர்த்தி எடுக்கும் நிலைப்பாடினை ராம கோபாலன் ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா என்று மட்டும் பார்க்காமல் குருமூர்த்தியின் கருத்துக்களை ஏற்காதவர்கள் வேறு காரணங்களுக்காக இத்தடையை எதிர்க்கலாம்,அதில் உள்ள நியாயங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.குருமூர்த்தி எதிர்க்கிறார், ராம கோபாலன் ஆதரிக்கிறார்,இத்தடையை ஞாநி ஆதரிக்கிறார், திராவிடர் கழகமும் ஆதரிக்கிறது. எனவே இந்த ஆதரவு ராம கோபாலனின் இந்த்துவ அரசியலுக்கே ஆதரவாக உள்ளது அல்லது வலுசேர்க்கும் என்று நான் கருத மாட்டேன்.மாறாக ஞாநி/திராவிடர் கழகம் முன்வைக்கும் வாதத்தின் அடிப்படை என்ன, அதில் உள்ள நியாயம் என்ன என்பதை புரிந்து கொள்ளவே முயற்சி செய்வேன்.

கிராமப்புற/ஊரக அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து நேரு, அம்பேத்கார் தெரிவித்த அச்சம் நியாயமானது.அதற்காக அதிகாரப் பரவலாக்த்தினை நிராகரிக்க முடியுமா ? பெண்களுக்கு இடம் ஒதுக்கினால் அது அவர்கள் கணவர்கள்/குடும்பத்தினரின் அதிகாரமாகவே முடியும் என்று சிலர் கருதுகிறார்கள் என்பதற்காக இந்த இட ஒதுக்கீட்டை மறுக்க முடியுமா ? நடைமுறையில் பிரச்சினைகள் இருந்தாலும் இதன் ஒட்டுமொத்த விளைவு வரவேற்கத்தவிததில் உள்ளது.கேரளாவில் E.M.S.நம்பூதிரிப்பாடு முன்வைத்த கருத்துக்களின் அடிப்படையில் democratic decentralisation என்ற திட்டத்தை இடதுசாரி அரசு செயல்படுத்தியது.இது போன்ற முயற்சிகள் முற்றிலுமாக ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை.மாறாக இவற்றின் தாக்கத்தினை ஆராய்ந்து குறைகளை நீக்கி அடுத்த கட்டத்திற்கு இவற்றை எடுத்துச் செல்லலாம்.நேரு, அம்பேத்தகர் கருத்துகள் முக்கியம், ஆனால் அதைவிட முக்கியம் அதிகாரப் பரவலாக்கம். இந்தியாவில் ஜாதிய ரீதியாக மக்கள் திரட்டப்பட்டு அரசியல் ரீதியாக ஜாதிகள் முக்கியத்துவம் பெறுவதை இந்திய ஜனநாயக்கத்தின் பெருங்குறையாகவும் பார்க்கலாம். அதில் உள்ள சாதக/பாதகங்களையும் பார்க்கலாம்.ஜாதிய ரீதியான அரசியல்,அரசியலை ஜனநாயகப்படுத்தவும் ஒரளவு உதவியது, அதே சமயம் ஜாதியரீதியான ஒட்டுவங்கி அரசியலுக்கும் அடி கோலியது. இதன் விளைவாக ஊழல் செய்தாலும், என்ன செய்தாலும் நம்ம ஜாதிக்காரனுக்கு ஒட்டு போடவேண்டும், யார்தான் ஊழல் செய்யவில்லை, மாயாவதி என்ன பிறர் செய்யாத ஒன்றையா செய்துவிட்டார் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன(3).

ஞாநி கருதுவது போல் பார்பனியத்திற்கு வலுச் சேர்ப்பவை ஜாதிய அமைப்பிற்கும் வலுச் சேர்க்கும் என்பதை முழுமையாக ஏற்க முடியாது. ஜாதியம் என்பது பார்பனீயம் என்பது சரியல்ல. ஜாதிய அமைப்பு இன்று இட ஒதுக்கீடு, வோட்டு வங்கி அரசியல், பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் அரசியல் ரீதியான எழுச்சி போன்ற பல காரணங்களால் ‘மதச் சார்பற்ற ‘ ஒன்றாகவும் மாறிவிட்டது.இட ஒதுக்கீடு ஜாதியத்தை பாதுகாக்கிறதா இல்லை பலவீனப்படுத்துகிறதா ?. மண்டலை மந்திருக்கு எதிராக கருதமுடியாது.மந்திர் அரசியல் மண்டலை உள்வாங்கி விட்டது.இதன் விளைவாக இட ஒதுக்கீட்டினால் பலன் பெறும் பிற்படுத்த்பட்ட ஜாதிகள் ஹிந்த்துவ அரசியலையும் ஆதரிக்கும் நிலை இன்று உள்ளது.ஒட்டு வங்கி அரசியலில் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் ஆதரவு தங்களுக்கு தேவை என்பதை புரிந்து கொண்ட பாரதிய ஜனதா மண்டல் எதிர்ப்பினை கைவிட்டது.தமிழ் நாட்டில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக ஆதரிக்கிறது

பார்பனர் மேலாண்மை முற்றிலுமாக இல்லாமல் போனாலும்,பார்பனர்கள் என்ற பிரிவே மறைந்து போனாலும் இந்தியாவில் ஜாதியம் தொடரும்.தமிழ் நாட்டில் பார்பனர்கள் செல்வாக்கிழந்துவிட்டனர், ஆனால் ஜாதிய

உணர்வும், ஜாதிய ரீதியான அரசியலும் வலுப்பெற்றுள்ளன.ஏனெனில் ஜாதியம் இன்று ஒரு ‘நவீன ‘ சக்தியாக மாறிவிட்டது. ஜாதியம் = பார்ப்பனீயம் என்ற சமன்பாடு இன்று பொருந்தாது.அன்று கூட அது எந்தளவுக்கு பொருத்தமாக இருந்தது என்பது கேள்விக்குறி. ஜாதியம் குறித்த, ஞாநி முன்வைக்கும் பெரியாரியப் புரிதலின் போதாமை அது ஜாதியம் இன்று ‘மதச்சார்பற்ற ‘, ‘நவீன ‘ சக்தியாக உள்ளது, அது பொதுக்களத்தில்(public sphere) மத ரீதியான காரணங்கள் இன்றி செயல்பட முடியும் என்பதை கருத்தில் கொள்ளாதது.பெரியாரிய இயக்கமும் இந்த மாற்றத்திற்கு ஒரு வகையில் காரணம்.இதை புரிந்து கொள்ளாமல் ஜாதியம் பற்றிய பழைய பல்லவியைப்பாடுவதில் பயனில்லை.

இந்த பிரச்சினையில் multi culturalism, cultural rights போன்றவை குறித்த விவாதங்களிலிருந்து சில பார்வைகளை நாம் பெறமுடியும். பெரியாரிய பகுத்தறிவின் பலவீனங்களையும் இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

(1)http://www.thinnai.com/pl1106032.html

(2) பெண்ணிய வாதிகளின் நூல்கள்/கட்டுரைகளில், மார்க்சிய/இடதுசாரி சஞ்சிகைகளில் இது குறித்த விவாதங்களைக் காணலாம்.எனவே இதை வெறும் தத்துவம்/அறம் சார்ந்தவர்கள் மட்டும் கருத்தில் கொள்ளும் ஒன்றாகக்காணமுடியாது.நானறிந்த வரையில் திராவிடர் இயக்கம் இதில் அறம் சார்ந்த கேள்விகளை எழுப்பவில்லை, மாறாக மதம் குறித்த விமர்சனத்தின் ஒரு பகுதியாகவே இதை முன்வைக்கிறது.

(3)சில வாரங்கள் முன்பு சுமந்தா பானர்ஜி economic&political weekly ல் எழுதிய கட்டுரை இது

குறித்து விவாதிக்கிறது. Myopia of Parochialism EPW Commentary October 4, 2003

http://www.epw.org.in/showArticles.php ?root=2003&leaf=10&filename=6333&filetype=html

ravisrinivas@rediffmail.com

Series Navigation