காரேட் ஹார்டின்(1915-2003)

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

ரவி ஸ்ரீநிவாஸ்


செப்டம்பர் 2003ல் காரேட் ஹார்டினும், அவரது மனைவியும் சேர்ந்து உயிர் விட்டனர்.வாழ்வின் இறுதியை சுயதெரிவாக உயிர் நீத்தனர். ஹார்டின் என்ற பெயர் பலருக்குத் தெரியாமலிருக்கலாம்.The Tragedy of the Commons என்ற கட்டுரையை எழுதியவர் என்றால் ஒ அவரா என்று எளிதில் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு பிரபலமான, சர்ச்சைக்குரிய கட்டுரை அது. 1968ல் science ல் வெளிவந்த அந்தக் கட்டுரையை பல தொகுப்புகளில் காணலாம். ஒரு classic கட்டுரை என்று கருதப்படுகிறது.

ஒரு மேய்ச்சல் காட்டில் கால்நடைகளை மேய்ப்பவர் ஒவ்வொருவரும் தங்கள் கால்நடைகளின் எண்ணிக்கையைக் அதிகரித்தால் என்ன ஆகும் ?தனது நலத்திற்காக ஒருவர் கால்நடையின் எண்ணிக்கையினைக்

கூட்டுவது அவருக்கு பலன் தரலாம்.ஆனால் ஒட்டுமொத்தமாக இவ்வாறு செயல்படும்போது அது மேய்ச்சல் காட்டின் அழிவில்/வளம் குன்றுவதில் போய் முடியும்.இதை தடுக்க என்ன வழி ? மேயச்சல் காட்டை பகுதிகளாகப் பிரித்துக் கொடுக்கலாம் அல்லது அரசு ஒருவருக்கு எத்தனை கால்நடைகள்தான் மேய்ச்சலுக்கு அனுமதி என விதிகளை வகுத்து அதனை அமுல் செய்யலாம்.இந்த உதாரணத்தினை எடுத்துக் கொண்டு வாதிட்டார் ஹார்டின். ஹார்டினின் கருத்துப்படி இந்த பூமியும் அதைப் போன்றதே. மக்கள் தொகைப்பெருக்கம் காரணமாக மேய்ச்சல் காட்டின் நிலைதான் ஏற்படும்.தனிப்பட்ட நபர்களின் செயல்பாடு ஒட்டுமொத்த நலனுக்கு எதிரானால் அதை அனுமதிக்கலாமா ? தாக்குப்பிடிக்கும் அளவு (carrying capacity)என்பது பூமிக்கும் உண்டு . இந்த தாக்குப்பிடிக்கும் அளவு என்ன என்பது குறித்து பல கணிப்புகள் உள்ளன.

உலகின் மக்கள் தொகை 2 பில்லியனாக் இருக்க வேண்டும் அதுதான் தாக்குபிடிக்கும் அளவு என்று

கருதுவோரும் உள்ளர்.இது குறித்த ஒரு புரிதலுக்கு Cohen J.E. . How Many People Can the Earth Support ?,. New York: Norton என்ற நூலைக் காண்க.

ஒரு படகில் அளவிற்கு மேல் ஆட்களை ஏற்றினால் படகு கவிழும், அனைவரும் மூழ்கும் நிலை ஏற்படும்.எனவே கருணை காட்டுகிறேன் என்ற பெயரில் அனைவரையும் ஏற அனுமதிக்ககூடாது. இதுதான் அவர் முன்வைத்த உயிர்ப்படகு அறம். அதாவது பூமியில் மக்கள் தொகை பெருகினால் அனைவருக்கும் ஆபத்து என்பதால் மக்கள் தொகைப் பெருக்கத்தினைக் கட்டுபடுத்துவது என்பது தவிர்க்க இயலாது, இதுவே பிரதானமான பிரச்சினை.இதனை தீர்க்க மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுபடுத்தும் முறைகள் அனைத்தையும் மேற்கொள்ளவேண்டும்- (உ-ம்)கருத்தடை மாத்திரைகள்,குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்ப்பதற்க்கு ஆதரவான கொள்கைள்.இதுதான் அவர் முன்வைத்த கருத்து.1968 ல் இந்தக் கட்டுரைக்குப் பின் அவர் தொடர்ந்து பல கட்டுரைகள், நூல்கள் எழுதினார். அவரது கட்டுரை கவனத்தைப் பெற்றது , அந்த உதாரணம் பொதுக்களின் துயரம் ஒரு முக்கியமான கருத்தாக கருதப்பட்டது. பொதுமூல வளங்களை நிர்வகிக்க சந்தையே சிறந்தது, சொத்துரிமை/உபயோக உரிமையை சந்தையோ அல்லது அரசோ தீர்மானிக்க வேண்டும், அதன் மூலமே இத்தகைய துயர்களை/அவலங்களை தவிர்க்க முடியும் என்று வாதிடப்பட்டது.

மக்கள் தொகைப் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என வாதிட்ட நவ மால்தூசியர்கள் அடிக்கடி

ஹார்டின் எழுத்துக்களை மேற்கோள் காட்டினர்.மூன்றாம் உலக நாடுகளில் குழந்தைகளின் மரணத்ை தவிர்க்க செய்யப்படும் முயற்சிகள் வருங்கால மக்கள் தொகைப் பெருக்கத்தை அதிகரிக்க உதவுகின்றன,

எனவே அவை நீண்ட காலப் போக்கில் மேலும் பிரசினைகளை உருவாக்குவதால் அவை தேவையற்ற

முயற்சிகள் என்று வாதிட்டார் ஒருவர். அமெரிக்க அறக்கட்டளைகள் உணவு,சுகாதாரம் போன்றவற்றில்

அக்கறைக் காட்டி மூன்றாம் உலக நாடுகளில் உணவுப் பெருக்கம்,சுகாதார மேம்பாட்டுத்திட்டங்களுக்கு

முன்னுரிமை கொடுத்ததை ஹார்டின் விமர்சித்தார்.இவை மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுபடுத்த

உதவாது, உலக மக்கள் தொகைப பெருக்கமே தலையாய பிரச்சினை என்றார். இதைக் கட்டுப்படுத்த

செய்யப்படும் முயற்சிகள் தனி நபர் உரிமைகளுக்கு எதிராக இருந்தாலும் அவை தேவை என்றார். இந்த

அடிப்படையில் அவர் அமெரிக்காவில் பிற நாட்டினர் குடி புகுவது, அவர்களுக்கு குடியுரிமை தருவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டியவை என்று வாதிட்டார். அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் மெக்சிகோவிலிருந்து தஞ்சம் புகுவோர், எல்லைதாண்டி வருவோர் உரிமை குறித்து எடுத்த நிலைப்பாட்டினை அவர்

எதிர்த்தார். கலிபோர்னியாவின் மக்கள்தொகை நிலைப்படுத்தப்படவேண்டும் என்று வாதிடும் அமைப்புகளை

அவர் ஆதரித்தார்.

ஹார்டின் முன்வைத்த கருத்துக்கள், பால் எஹ்லெரிச் போன்றோர் எழுதிய நூல்கள் 1960 களிலும், 70களிலும் பெரும் கவனிப்பைப் பெற்றன. மக்கள் தொகைப் பெருக்கம் காரணமாக 1980களில் பெரும் பஞ்சம் ஏற்படும் ,பலர் மரிக்க அது காரணமாகும் என்ற அச்சமும், மூலவளங்கள் தட்டுப்பாடும் ஏற்படும் என்ற எண்ணமும் தோன்ற அவை வழிவகுத்தன. 1972ல் ரோம் கிளப் வெளியிட்ட வளர்ச்சியின் எல்லைகள்

என்ற நூலும் இத்தகைய வாதங்கள் ஒரளவேனும் உண்மை என்று பலரை கருதவைத்தன. நவ மால்தூசியரகளின் கணிப்பு பொய்யானது. ஏனெனில் அவர்கள் பசுமைப் புரட்சி உட்பட பல தொழில் நுட்ப மாறுதல்களை, மக்கள் தொகையில் ஏற்படும் மாறுதல்களின் சாத்தியக்கூறுகளை கணக்கில் கொள்ளவில்லை.

உதாரணமாக உலோகங்களை பயன்படுத்துவது தவிர பிளாஸ்டிக்கின் உபயோகம் அதிகரித்தது. பிளாஸ்டிக்,

மற்றும் பெட்ரோலியத்திலிருந்து பெறப்பட்ட ரசாயணங்கள், புதிய தொழில்நுட்பங்கள் காரணமாக மூலவளப் பற்றாக்குறை ஏற்படவில்லை. மேலும் கனிம வளங்களை பயன்படுத்தி உலோகங்களைப் பெறும் தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சி பெற்றதால் முன்பு பொருளாதார ரீதியாக பயனற்றவை என்று கருத்தப்பட்ட கனிம வளங்கள் கூட பயன்படுத்தப்பட்டன. பசுமைப்புரட்சி உணவு உற்பத்தியில் ஒரு சாதனையை நிகழ்த்தியது.

இந்தியாவில் பஞ்சம் என்ற கணிப்புகள் பொய்யாயின. மாறாக இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு

பெற்றது.அதே சமயம் மக்கள் தொகைப் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு பரவலான ஆதரவும் இருந்தது. அது சர்வதேசப் பிரச்சினையாக கருத்தப்பட்டு அதற்கென ஒரு சர்வதேச நிதியம்

உருவாக்கப்பட்டது.குடும்பக் கட்டுப்பாடு பல நாடுகளில் அரசின் கொள்கைகளில் ஒன்றாக ஏற்கப்பட்டது.

கட்டாய கருத்தடை, குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த கட்டுப்பாடுகள் பல நாடுகளில் அமுல் செய்யப்பட்டன. இந்தியாவில் அவசர நிலை அமுலில் இருந்த போது மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்

இதற்கோர் உதாரணம்.சீனாவும் குழந்தை பெற்று கொள்வதில் கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது.

இத்தகைய முயற்சிகள் பரவலான எதிர்ப்பிற்குள்ளாயின.இவற்றால் குடும்பகட்டுப்பாட்டிற்கு கெட்ட பெயர்

ஏற்பட்டது.1994 ல் கெய்ரோவில் நடைபெற்ற மக்கள் தொகையும் வளர்ச்சியும் குறித்த சர்வதேச

மாநாட்டில் குடும்பகட்டுப்பாடு திட்டங்களில் கட்டாயத்தன்மை இருக்க கூடாது, குடும்பக் கட்டுப்பாடு

செய்து கொள்ளாவிட்டால் சலுகைகள் கிடைக்காது என்பது போன்ற கொள்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது ஏற்கப்பட்டது.Reproductive Rights குறித்த அக்கறை தவிர்க்க முடியாது என்பதை அரசுகளும்,

மக்கள் தொகை பிரச்சினையில் அக்கறை காட்டும் அறக்கட்டளைகள்,உலக வங்கி, UNFPA போன்றவை

ஏற்றன.பெண்ணிய கண்ணோட்டத்தில் மக்கள் தொகைப்பெருக்கம், அது குறித்த கொள்கைகள் குறித்து

பல நூல்கள் வெளிவந்துள்ளன. Bandarage A. (1997). Women, Population and Global Crisis, 398 pp. London: Zed Books, Hartmann,B (1996) Reproductive Rights and Wrongs – இந்த இரண்டு நூல்கள் கவனத்திற்குரியவை.

நவ மால்தூசியர்கள் மால்தூஸ் போன்று மாறுதல்களை கணிக்கத்தவறினர். மால்தூஸ் காலத்திலேயே அவரது கருத்துக்கள் சர்சிக்கப்ப்ட்டன. மார்க்ஸ் உட்பட பலர் அவர் கருத்துக்களை விமர்சித்தனர்.

மக்கள் தொகைப் பெருக்கம் குறித்த அவரது கருத்துக்கள் பொய் என்று வரலாறு காட்டியது. உதாரணமாக

மக்கள் தொகை ஜியோமிகித விகிதத்தில் , 2,4,8 என்று அதிகரிக்கும் என்ற அவரது கருத்து தவறு என்று

நிரூபிக்கப்பட்டது.ஆனால் இன்றும் பலர் அதை நம்புவது ஒரு கால முரண்.படித்தவர்கள் என்று கருதப்படும் பலரும் மால்தூசிய கண்ணோட்டத்தை கொண்டுள்ளனர்.மக்கள் தொகையில் மாற்றம் என்பது பல காரணிகளால் ஏற்படும் என்பதும், 40/50 ஆண்டுகளில் மக்கள் தொகைப் பெருக்கம் என்பது நிலையான மக்கள் தொகையாக மாறும் என்பதும் வரலாறு காட்டும் உண்மைகள். இந்தியாவின் கேரள மாநிலம், இலங்கை இதற்கு சிறந்த உதாரணங்கள். ஆனால் நவ மால்தூசியர்களின் கருத்துக்கள் பெரும் செல்வாக்குடன் இருக்க மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றம் குறித்த விளக்கங்கள் பரவலாக அறியப்படாதும் ஒரு காரணம். எனவே ஹார்ட்டினின் கருத்துக்கள் தொடர்ந்து கவனம் பெற்றன.

ஒரு கட்டத்தில் இக்கருத்துக்களை சுற்றுச்சூழல் இயக்கங்களில் உள்ள சிலர் ஆதரித்தனர்.இது சில இயக்கங்களில் சர்ச்சைக்குரிய நிலைபாடாக மாறுமோ என்ற நிலை ஏற்பட்டது.பசுமையாகும் வெறுப்பு

(greening of hate) என்று இது அழைக்கப்பட்டது. சையரா கிளப், நேஷனல் வைல்ட்லைப் பெடரேஷன்

ஆகிய அமைப்புகளில் இது குறித்து விவாதம் ஏற்பட்டது. வாக்கெடுப்பில் இந்த சர்ச்சைக்குரிய கருத்துகள்

நிராகரிக்கப்பட்டன.Committee on Women,Population and Environment சார்பில் வெளியிடப்பட்ட

Political Environments என்ற சஞ்சிகை மக்கள் தொகைப் பெருக்கமே சுற்றுச்சுழலக்கு பெரும் ஆபத்து

என்ற வாதத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தது. இது போன்ற பல காரணங்களால் நவ மால்தூசிய கருத்துக்கள் பசுமை இயக்கங்களில் பெரும் செல்வாக்குப் பெருவது சாத்தியமற்றுப் போனது.

ஹார்டின் முன்வைத்த பொதுக்களின் துயரம் கருத்தும் சர்ச்சிக்கப்பட்டது. அவர் எழுதியவை சூழல்,

எண்ணிக்கை-சூழல் குறித்த புத்தகங்களில் விவாதிக்கப்பட்டன.நடைமுறையில் பொது வளங்கள் எப்படி நிர்வகிக்க்படுகின்றன என்பதை ஆராய்ந்தவர்கள் சமூகங்கள் இந்த துயரை தவிர்த்து செயல்ப்டுகின்றன,

பொதுவளத்தினை பயன்படுத்துவது குறித்த விதிமுறைகள், கூட்டு நிர்வாகம் குறித்து பல ஆய்வுகளை செய்து அவர் கருத்து தவறு, நடைமுறையில் உள்ள வேறுபாடுகளை அதால் விளக்க இயலாது என்றனர்.

குளங்கள், ஏரிகளில் உள்ள நீர் பங்கிடும் முறைகள், மேய்ச்சல் காடுகள், காடுகளை பயன்படுத்துவது குறித்து

செய்யப்பட்ட ஆய்வுகள், மீன்பிடிப்பது செய்யப்பட்ட ஆய்வுகள், கால்நடை மேய்ப்பவர்கள்-விவசாய சமூகத்திற்கிடையே உள்ள உறவு குறித்த ஆய்வுகள் – இவை பல உண்மைகளை முன்வைத்தன.பல நூறு ஆண்டு காலமாக சமூகங்கள் பொதுவள நிர்வாகத்தில் வியக்கத்தக்க வகையில் அரசு,சந்தை தலையீடு இன்றி செயல்பட்டுவந்துள்ளதை தெளிவாக்கின.எனவே காலப்போக்கில் அவர் கருத்தின் போதாமை தெள்ளத்

தெளிவானது.(Privatizing Nature என்ற நூலில் உள்ள Michael Goldman எழுதிய கட்டுரையில் இது குறித்த விவாதத் தொகுப்பினைக் காணலாம்).இந்தியாவில் இது குறித்து பல ஆய்வுகள் செய்யப்பட்டன.

எலினோர் ஆஸ்ட்ரோம், வின்செண்ட் ஆஸ்ட்ரோம் பொதுவளங்கள் குறித்து முக்கியமான ஆய்வுகளை செய்தனர்.

இவ்வாறு அவர் முன்வைத்த கருத்துக்கள் செல்வாக்கு குன்றியது.எனினும் அவை முற்றிலும் செல்வாக்கிழந்துவிடவில்லை. இறுதி வரை தன் கருத்துகளில் உறுதியாக இருந்தார் அவர்.அவரது கருத்துக்களை நான் ஏற்கவில்லை.அவரது கட்டுரைகள்,நூல்கள் படிக்கப்பட வேண்டியவை, விவாதிக்கப்பட வேண்டியவை என்பதே என் கருத்து.இந்தக் கட்டுரையில் பேசப்பட்டுள்ள பல விஷயங்கள் குறித்து நான் எழுதியுள்ள

கட்டுரைகள், மதிப்புரைகள், மதிப்புரைக் கட்டுரைகளில் கருத்துத் தெரிவித்திருக்கிறேன்/விவாதித்துள்ளேன்.இவை நவ மால்தூசியத்திற்கு எதிராக நான் எழுதியவை என்றால் அது மிகையாகாது.

என் புரிதலை வளப்படுத்தியவர்கள் பெண்ணியவாதிகள்.அறிவுலகில் நவமால்தூசியத்தின் செல்வாக்கு எத்தகையதாக இருந்தது என்பதை நானறிவேன். அதன் கோட்பாடுகளை உருவாக்குவதில் ஹார்டினின் கட்டுரை பெரும்பங்காற்றியது. எனவே அதைப் படிப்பதும்,புரிந்து கொள்வதும், அதைத் தாண்டிச் செல்வதும் அவசியம் என்று கருதுகிறேன்.

Selected Publications:

The Ostrich Factor: Our Population Myopia, 1999.

The Immigration Dilemma: Avoiding the Tragedy of the Commons, 1995.

‘The Tragedy of the Unmanaged Commons, Trends in Ecology and Evolution, ‘ BioScience, 2 (5), 1994

Living Within Limits: Ecology, Economics, and Population Taboos, Oxford University Press, 1993.

Filters Against Folly: How to Survive Despite Economists, Ecologists, and the Merely Eloquent, 1985.

‘Living on a Lifeboat, ‘ BioScience, 24 (10), 1974

‘The Tragedy of the Commons, ‘ Science, 162 (1243-1248), 1968

ravisrinivas@rediffmail.com

Series Navigation

ரவி ஸ்ரீநிவாஸ்

ரவி ஸ்ரீநிவாஸ்