உதயமூர்த்தி சுவாமிகள்

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

பரிமளம்


சமையல் நூல்களுக்கடுத்தபடியாகத் தன்முன்னேற்ற நூல்கள் தமிழில் அதிகம் விற்பனையாவதாகத் தெரிகிறது. அப்துற்-றஹீம் நீண்ட காலமாக ஆங்கிலத் தன்முன்னேற்ற நூல்களைத் தமிழ்ப்படுத்தி வெளியிட்டு வந்தாலும் வெகுசனப்பத்திரிகை வழியாகப் பரந்துபட்ட வாசகர்களைப் பெற்றவர் என்னும் பெருமை உதயமூர்த்திக்கே உரியது. இவரது வெற்றிக்கு வெகுநாள் கழித்தே பலர் இவரது பார்முலாவைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இப்போது சந்தையில் இவர்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது.

தன்முன்னேற்ற, தன்முனைப்பு நூல்கள் மீது எனக்கு நல்லெண்ணம் இல்லை. ஆனால் உதயமூர்த்தி ஏராளமான இளைஞர்களுக்கு உந்துதலாகவும் வழிகாட்டியாகவும் இருப்பவர் என்பதிலும் இளைஞர்களை முன்னேற்ற வேண்டும் என்னும் உண்மையான அக்கறை உடையவர் என்பதிலும் எனக்கு ஏதும் முரண்பாடு இல்லை.

உதயமூர்த்தியின் வெற்றிக்கு முதல் காரணம் அவர் அமெரிக்காவில் வாழ்கிறார் (நான் அந்தக் காலத்தைப் பற்றிப் பேசுகிறேன்) என்னும் தகவலே ஆகும். இந்தக் காலம் போல அந்தக் காலத்தில் பெருந்தொகையினரான தமிழர்கள் அமெரிக்காவில் வாழவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இயல்பாக இந்தியர்களுக்கு உள்ள வெளிநாட்டு மோகமே அவரது எழுத்துகளுக்கு விரிவான வாசக வட்டத்தைப் பெற்றுத் தந்தது. இந்த வெற்றியால் அவர் நாவல்(கள் ?) எழுதுவதிலும் ஈடுபட்டார்.

வாழ்வில் முன்னேற விரும்புபவர்களுக்கு மனவலிமை வேண்டும் என்பதும் அமெரிக்காவில் குப்பையிலிருந்து குபேர நிலைக்குப் பலர் உயர்ந்தமைக்கு அவர்களது விடாமுயற்சியும் மனவலியுமே காரணங்கள் என்பதும் பல எடுத்துக் காட்டுகள் மூலம் திரும்பத் திரும்ப இவரது நூல்களில் வலியுறுத்தப்படுகின்றன. இதோடு விட்டாலும் பரவாயில்லை. ஒரு படி மேலே சென்று மனவலிமையை வளர்ப்பதற்கு மேல் நாட்டினர் கூறும் கருத்துகள் எல்லாமும் நம் முனிவர்களாலும் யோகிகளாலும் முன்னரே கூறப்பட்டுள்ளன என்பதை மிகக் கவனமாக உதயமூர்த்தி முன்வைப்பதுதான் எனக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இந்த வகையில் உதயமூர்த்தியின் நூல்கள் பட்டிமன்ற அல்லது மேடைச் சொற்பொழிவுகள் என்னும் எல்லையைத் தாண்டவில்லை என்றும் அமெரிக்காவில் வாழ்ந்து பெற்ற நுணுக்கங்கள் எவையும் அவரது நூலில் காணப்படவில்லை என்றும் நான் கருதுகிறேன். அதாவது, உதயமூர்த்தியின் நூல்களில் உள்ள செய்திகளை அமெரிக்காவில் வாழாத ஒருவராலும் தந்துவிட இயலும்.

அறிவியலைப் படித்தவர், அறிவியல் ஆராய்ச்சியாளர், அறிவியல் ஆய்வு நெறியில் நன்கு ஊறிய ஒருவர், ‘எல்லாக் கருத்துகளும் நம்மிடம் ஏற்கனவே உள்ளன’ என்று கூறுவதோடு நின்றுவிட இயலாது. ‘எல்லாக் கருத்துகளும் நம்மிடம் ஏற்கனவே இருந்தால், பிறகு நாம் ஏன் முன்னேறவில்லை ?’ என்னும் அடுத்த கேள்விக்குக் கண்டிப்பாக வந்து சேர்ந்திருக்க வேண்டும். அப்படி வந்து சேர்ந்திருந்தால் வெற்றிக்கு மனவலியும் விடாமுயற்சியும் துணைக் காரணங்களே தவிர அடிப்படைக் காரணங்கள் அல்ல என்னும் உண்மையும் தெளிவாகியிருக்கும். அவரது புத்தகங்களும் வேறுமாதிரி எழுதப்பட்டிருக்கும்.

***

இவரது நூலில் காணப்படும் ‘எடுத்துக்காட்டான மனிதர்களை’ப் பற்றிய விவரங்களையும் சம்பவங்களையும் இவர் எங்கிருந்து பெற்றிருக்கக் கூடும் என்பதை இப்போது நம்மால் எளிதாக யூகித்துவிட முடிகிறது. இப்படிப்பட்ட கதைகளைக் கூறிப் பொருளீட்டும் ஒரு மாபெரும் கூட்டமே அமெரிக்காவில் உள்ளது. இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நுழைந்து பயிற்சி அளிக்காத துறைகளோ, தொழிற்கூடங்களோ, நிறுவனங்களோ, அமைப்புகளோ இல்லையென்று உறுதியாகக் கூறலாம். இவர்களுடைய சொற்பொழிவுகளும், நூல்களும், ஒலி, ஒளி வட்டுகளும், பயிற்சிகளும், விளையாட்டுகளும், தேர்வு வினா நிரல்களும், உளச் சோதனைகளும் இவர்களுக்குப் பெரும் பொருளை ஈட்டித் தருகின்றன. உலகம் முழுவதும் சென்று ஊழியம் புரியும் இவர்கள் முதலாளித்துவ பொருளாதாரத்தின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகத் திகழ்கின்றனர். (இவர்களது சேவை இன்றியமையாததா இல்லையா என்னும் விவாதத்துக்குள் செல்வது என் நோக்கமல்ல)

ஆனால் மேற்கத்திய பொருளாதாரம் இவர்களால் உருவானதல்ல. இவர்கள் அந்த மேற்கத்திய பொருளாதாரத்தின் விளைவுகள். உதயமூர்த்தி போன்றவர்களோ இந்த விளைவுகளை அடிப்படைகளாக நம்மிடம் கொண்டு வந்து இறக்குமதி செய்கின்றனர். தும்பை விட்டு வாலைப் பிடித்து அழகு பார்ப்பது போன்றது இது.

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை அவ்வளவு எளிதில் பட்டியல் போட்டுவிடமுடியாது என்பதும் உண்மையே. ஆனால் எளிதான பணி இல்லையென்பதற்காக அந்தத் திசையில் அறவே காலடி எடுத்து வைக்காமல் இருப்பது ஒரு ஏமாற்று வேலை என்பதில் ஐயமில்லை.

அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகள் உயர்ந்த நிலையை அடைய ஒரு சில நூற்றாண்டுகள் ஆயின. இவற்றின் வளர்ச்சிக்கு அரசியல், பொருளாதாரம், மதம், அறிவியல் தொழில்நுட்பம், கல்வி, மருத்துவம், நீதித்துறை, ஆட்சியதிகாரத்தின் மீது தொழில் துறைகளுக்குள்ள செல்வாக்கு, தனி மனித முயற்சிக்குச் சாதகமான சூழ்நிலை என்று எத்தனையோ காரணங்களை அடுக்க முடியும். சுரண்டல், காலனித்துவம், தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்பட்டது போன்றவற்றைச் சேர்த்துக் குறிப்பிடுவதிலும் தவறு இல்லை.

மேனாடுகள் முன்னேற்றம் காண ஒரு சில நூற்றாண்டுகள் ஆயின என்றால் இவற்றின் மூலதனங்களையும், அறிவியல் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வேறுசில நாடுகள் ஒரு சில பத்தாண்டுகளில் மகத்தான வளர்ச்சி கண்டன. இப்படி வளர்ந்தமைக்கு இந்த நாடுகளின் சாதகமான அரசியல் சூழ்நிலைகள் முக்கியக் காரணங்களாகும்.

அரசியல் மாற்றங்களைக் கவனத்தில் கொள்ளாமல் மக்களின் மனவலிமையும் விடாமுயற்சியும் இருந்தால் வளர்ச்சி வந்துவிடும் என்று கூறுவது நகைப்புக்கு இடமானது. ஒரு நாட்டின் முன்னேற்றத்தை ஒட்டியே மக்களின் முன்னேற்றம் அமையும். அதற்கேற்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஆனால் அரசின் கடமைகளைப் பற்றியோ மேற்கொள்ளவேண்டிய பொருளாதாரச் சீர்திருத்தங்களைப் பற்றியோ உதயமூர்த்தியின் நூல்கள் மூலமாக நாம் அறிவது ஏதுமில்லை.

இது அடுத்த முக்கியமான கேள்விக்கு நம்மை இட்டுச் செல்கிறது. இவர் ஆட்சியைப் பிடித்து என்ன செய்யப் போகிறார் ? ரமண மகரிஷியிடம் ஆலோசனை கேட்பார் என்றால் இவருக்குப் பதிலாக பாபா பக்தர் ரஜினியைத் தேர்ந்தெடுத்து விடலாமே!

***

‘தோல்வியைக் கண்டு தளர்ந்துவிடாமல் தன் மன வலிமையாலும் விடாமுயற்சியாலும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்’ என்று திரு. உதயமூர்த்தி அவர்களுக்கு என் உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

(தேர்தலில் போட்டியிடும் தன் முடிவை திரு. உதயமூர்த்தி இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை என்னும் யூகத்திலேயே இறுதி இரண்டு பத்திகளும் எழுதப்பட்டன)

janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்