வாரபலன் – அக்டோபர் 16,2003 – அமைதிக்குக் கத்தரி வாய்ப்பு

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

இரா முருகன்


அண்மையில் கடந்துபோன செப்டம்பர் பதினைந்து. பாரீஸ் மாநகரில் ஓர் அரங்கம்.

இருநூறு பார்வையாளர்கள் அமர வசதியான அந்த அரங்கம் நிறைந்திருக்கிறது.

மேடையில் ஒரு நாற்காலி. புகழ் பெற்ற பாடகி ஒருவர் அங்கே

உட்கார்ந்திருக்கிறார். உடலைத் தழுவி நீண்ட கருப்புப் பாவாடை. மேலே அதே

வண்ணத்தில் தழையத் தழைய உடுத்த மேலாடை.

அந்தப் பெண்மணி பார்வையாளர்களைப் பார்த்தபடி இருக்கிறார். பாடவில்லை.

எழுந்து கூட நிற்கவில்லை. நிற்கச் சிரமமாக இருக்கும்.

யோக்கோ ஓனோ என்ற அந்த இசை – கோட்பாட்டுக் கலைஞருக்கு எழுபது வயது.

பார்வையாளர்கள் மெல்ல எழுகிறார்கள். மேடையை நோக்கி அடியெடுத்து

வைக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு கத்தரிக்கோல்.

அவர்கள் மேடைக்கு வருவார்கள். வரிசையாக வருவார்கள். யோக்கோ ஓனோவின்

ஆடையில் இருந்து ஆளுக்கு ஒரு துண்டைக் கத்தரிப்பார்கள். தங்களின் அன்புக்கு

உரியவர்களுக்கு அதை அனுப்பி வைப்பார்கள்.

உலகின் சமாதானம் நிலவுவதற்காக இந்த நிகழ்வை அர்ப்பணித்த யோக்கோவின்

நினைவுகள் என்னவாக இருந்திருக்கும் ?

கிட்டத்தட்ட நாற்பது வருடம் முன்பு ஜப்பானிலும் அடுத்து அமெரிக்காவிலும் இதே

போல் ‘கட் பீஸ் ‘ என்ற இசை – கோட்பாட்டுக்கலை நிகழ்ச்சியை நடத்தியதை

நினைத்திருப்பாரா ?

இசைக்கலைஞராக, பியானோ வாசிப்பதிலும், இசை நாடகமான ஆபராவிலும்,

வாய்ப்பாட்டிலும் தகுந்த பயிற்சியோடு அமெரிக்காவில் தன் இளம் பிராயத்தில்

மேடையேறிய முதல் அனுபவம் அவர் நினைவுகளில் இழையிட்டிருக்குமா ?

ஜப்பானில் நாற்பதுகளின் தொடக்கத்தில் சின்னஞ் சிறுமியாக ஒரு பிரபுத்துவக்

குடும்பத்தில் பிறந்து, வேலைக்காரிகள் அறைக்கு வெளியே மண்டியிட்டபடி சின்ன

எஜமானியின் குரல் ஏவிய வேலையைச் செய்யக் காத்திருந்ததை நினைத்திருப்பாரா ?

வெறும் பாட்டு அலுத்துப் போய், கான்செப்ட் ஆர்ட் என்ற கலை வெளிப்பாடில்

நம்பிக்கை கொண்டு பாட்டோடு ஒரே நேரத்தில் நிகழும் கவிதை வாசிப்பு, நடனம்

எல்லாம் நிகழ, யோக்கோ உலர்ந்த பட்டாணிகளைப் பார்வையாளர்கள் மேல்

எறிந்தபடி அவர்களையும் மேடை நிகழ்வில் பங்கு கொள்ள அழைத்ததை

யோக்கோவின் மனம் அசை போட்டிருக்குமா ?

ஜப்பானில் பிறந்து ஒரு ஆண்டு கழித்துஅமெரிக்காவில் சான் பிரான்ஸ்கோவுக்கு

உத்தியோகம் மாற்றலாகி வந்த தந்தையோடு குடும்பம் சேர்ந்ததை, அங்கே ஆரம்பப்

பள்ளியில் படித்ததை நினைத்தபடி அமர்ந்திருந்தாரா ?

இரண்டு திருமணம். விவாகரத்து. புகழ் பெற்ற பீட்டில்ஸ் இசைக்குழுப் பாடகர் ஜான்

லென்னனைச் சந்தித்த முதல் நாளை நினைத்தாரா யோக்கோ ?

நாற்பதுக்களின் நடுப்பகுதியில் அமெரிக்காவில் ஜப்பானியர்களுக்கு எதிரான

வெறுப்பு மிகுந்த காலத்தில், ஜப்பானுக்கே திரும்பக் குடும்பம் குடியேறியதைப் பற்றி

அவருடைய எண்ணங்கள் இழையோடிக் கொண்டிருந்தனவா ?

அறுபதுகளில் லெனனோடு சேர்ந்து வெளியிட்ட உலகப் புகழ் பெற்ற

‘சமாதானத்துக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் ‘ பாடலின் வரிகளை அவர் உதடுகள்

முணுமுணுத்துக் கொண்டிருந்தனவா ?

இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கால ஜப்பானில் அமெரிக்க விமானங்கள்

குண்டுமழை பொழிய நகரங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக கிராமப் பகுதியை

நோக்கி ஓடிய குடும்பங்களில் ஒன்றாகத் தன் குடும்பமும் ஓடிய நாட்கள்

யோக்கோவின் நினைவில் வந்திருக்குமா ? செல்வச் செருக்கின் எல்லா

அடையாளமும் இழந்து வீடு வீடாக யாசித்து உண்ட அந்த நாட்களில் அடிக்கடி

மேலே நிமிர்ந்து பார்த்து ஆசுவாசப்பட்ட எல்லையற்ற ஆகாயப் பரப்பின் நீலத்தை

மனக் கண்ணில் கண்டு கொண்டிருந்தாரா ?

‘படுக்கையில் லெனனும் நானும். பார்க்க வாருங்கள் ‘ என்று அழைப்பு அனுப்ப,

புதிதாகக் கல்யாணம் முடிந்து வந்த லெனனும் யோக்கோவும் உறவு கொள்வதைக்

காமராவில் அடக்க ஓடோடி வந்த பத்திரிகைக் காரர்களிடம், படுக்கையில்

அமர்ந்தபடியே அந்தப் புதுமணத் தம்பதி போர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த

அறுபதுகளின் பகல் நினைவு வந்திருக்குமா ?

1980ல் அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட லெனனை நினைத்தாரா யோக்கோ ?

இந்த மாதம் அமெரிக்காவில் நடைபெறும் தன்னுடைய புகைப்படக் கண்காட்சியான

‘ஒரு கரப்பான்பூச்சியின் பார்வையில் ‘ படங்களைப் பற்றி அவருடைய நினைவுகள்

இருந்தனவா ? மனிதனுக்கு அடுத்த அல்லது மனிதனை விட வலிமையான இன்னொரு

இனமான கரப்பான் பூச்சிகளின் பார்வையில் நகரத்தின் இண்டு இடுக்குகளையும்,

மிதித்து நகரும் கனமான காலணிகள் அணிந்த கால்களையும் பதிவு செய்த படங்கள்

அல்லவா அவை எல்லாம் ?

யோக்கோ என்ன நினைத்தாரோ. இருநூறு கத்தரிக்கோல்கள் அவரை நெருங்கி

வருவதில் அபாயத்தைப் பார்க்கவில்லை அவர். அந்த மனங்களில் அன்பையும் மனித

நேயத்தையும், நம்பிக்கையையும் கண்டார். இரண்டு ஆண்டுகள் முன் செப்டம்பர்

பதினொண்ணு காயப்படுத்திப் போன மானுடத்துக்கு ஆறுதல் அளிக்கும் நம்பிக்கை

அது.

அந்த எழுபது வயது மூதாட்டியின் உடலில் உள்ளாடைகள் தவிர வேறு ஓரங்குலத்

துணியும் இல்லாமல் எல்லாம் கத்தரித்து எடுக்கப்பட, ஒரு போர்வையால் உடல்

முழுக்கப் போர்த்தி, அரங்கில் ஆரவாரம் எழ மெல்ல எழுந்து உள்ளே போனார்

யோக்கோ.

திரை விழுந்தது.

**************************************************************************

ராத்திரி முழுக்க மெளனி கதைகளைத் திரும்பப் படித்துக் கொண்டிருந்ததால்

மனதில் அயர்வு.

வெளியே சுற்றிவிட்டு வரலாம் என்று கிளம்பினேன்.

தி.நகர் தீபாவளிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. சென்னையே தயாராகிக்

கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்.

பனகல் பார்க் பக்கம் நல்லியிலும், குமரனிலும், போத்தீஸிலும் பத்துப் பத்துப்

பேராக உள்ளே விட்டுக் கொண்டிருக்க, எப்போது நம்ம டேர்ன் வரும் என்று வாசல்

முழுக்க, பனகல் பார்க், பாண்டி பஜார் வரை ஒரு ஜனக் கூட்டம் துணிப்பையும்,

பர்சில் பணமும், சட்டைப் பையில் கிரடிட் கார்டுமாக நிற்கிறது.

கொஞ்சம் தள்ளி சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை வாசலில் டோக்கன்

விநியோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘டோக்கன் ஆயிரத்து முப்பத்தொண்ணுலேருந்து முப்பத்தஞ்சு வரைக்கும் உள்ளே

போங்க ‘

மைக் இல்லாத குறையைப் போக்க ஒருத்தர் பெருங்குரலில் அறிவிக்க, கடைக்கு

வெளியே துரைசாமி சப்வே வரை நீண்ட கூட்டம்.

பக்கத்தில் கைத்தறிச் சங்கக் கடையில் யாராவது போணி பண்ணப்

படியேறுவார்களா என்று பார்த்தபடிக்கு மாலைமுரசு படித்துக் கொண்டிருக்கிற

ஊழியருக்கு இந்த மாதம் சம்பளம் பட்டுவாடா ஆனதா தெரியவில்லை.

ஜன சமுத்திரத்தில் நீந்திக் கொண்டு ரங்கநாதன் தெருப் பக்கம் நடக்கிறேன்.

தெருவுக்குள் புக முடியாமல் கட்டைத் தடுப்பு. தெருமுனைப் பழக்கடைப் பக்கம்

கூட்டம்.

அங்கேயும் டோக்கன் தான் விநியோகம். ரங்கநாதன் தெருவுக்குள் நுழைய

டோக்கன்.

‘டோக்கன் எட்நூத்து அறுபதுலேருந்து .. என்னங்க .. மஞ்சள் ப்ராக் அணிந்த ஒரு

ஐந்து வயதுப் பெண் குழந்தை சரவணாஸ் வாசலில் அழுது கொண்டு நின்றது.

பெற்றோர் போலீஸ் போஸ்ட்டுக்கு உடனே வரவும்.. எட்நூத்து அறுபதிலேருந்து

எழுபது வரை உள்ளே போகலாம். ‘

ரங்கநாதன் தெருவில் எனக்கு வாங்க ஒன்றும் இல்லை. மூத்த எழுத்தாளர்

ம.அரங்கநாதன் அங்கே வைத்திருந்த ‘முன்றில் ‘ புத்தகக் கடையையும் மூடி வருடக்

கணக்கில் ஆகிவிட்டது. அங்கே சந்தித்து உரையாடிய அரங்கநாதன் சாரை,

ஜெயந்தனை, கவிதாசரணை, வண்ணநிலவனை,

எஸ்.ராமகிருஷ்ணனை, சாரு நிவேதிதாவை, இளையபாரதியை, எப்போதாவது வரும்

கோணங்கியை, தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் ‘பொம்மை அறை ‘ கவிஞர்

ஷண்முகத்தைச் சந்தித்து நாளாகி விட்டது. இதமான சிரிப்பும் சிகரெட்டுமாக

‘வாங்க, டா குடிச்சுக்கிட்டே பேசலாம் ‘ என்று அழைக்கும் கோபிகிருஷ்ணனை

இனி எப்போதும் சந்திக்கப் போவதில்லை.

‘சார், உள்ளே போறதுன்னா டோக்கன் வாங்குங்க. இல்லேன்னா நடங்க. ‘

நான் மோதிலால் தெருவில் திரும்பி நடக்கிறேன்.

**************************************************************************

காலையிலே பேப்பரைத் திறந்தா விளம்பரம் தான் கண்ணுலே படுது.

வைரம் வாங்கச் சொல்லறாங்க அப்பூ. என்னமோ பிஞ்சுக் கத்திரிக்காய் போல

வைரத்தையும் வைடூரியத்தையும் வாரச் சந்தையிலே குவிச்சுக் கூறு கட்டி

வித்துக்கிட்டு இருக்கற மாதிரியும், வேட்டியை மடிச்சுக் கட்டிக்கிட்டு மஞ்சத்

துணிப்பையோட வெரசா வந்து சேருங்கய்யான்னு கூப்பிடற மாதிரியும்.

கூப்பிட்டுப் போகட்டும். வைரம் வாங்கற மகாராசன் வாங்கி மகாராணிக்குப் போட்டு

அழகு பாக்கட்டும். சந்தோசம் தான்.

ஆனாப் பாருங்க – விளம்பரம் எழுதினவங்களுக்கு மண்டையிலே எதுனாச்சும்

இருக்கான்னு ஒரே முட்டா சந்தேகம் நமக்கு. இவங்களோட சேத்து வச்சுப் பாத்தா,

‘ஹமாம் நேர்மையான சோப்பு ‘ எழுதின புண்ணியவானுக்குக் கோயிலே கட்டலாம்.

சொல்றாங்க –

Gift her a diamond and she will give you a welcome fit for Ram returning

from exile. To choose an exquisite diamond jewellery for your wife visit …

அட, கம்பனைப் படிக்க வேணாம் அந்தக் காப்பி ரைட்டரு. வால்மீகி, பவபூதி,

எழுத்தச்சன் ஒருத்தரும் வேணாம். நம்ம வீரமணி சாரைக் கேட்டாக் கூட

ராமாயணக் கதை இதாண்டான்னு சொல்லியிருப்பார்.

வனவாசம் போய்ட்டு வந்த ராமனுக்கு வரவேற்பு கொடுத்த மாதிரி, வைரம்

வாங்கிட்டுப் போனா உங்க மனைவி உங்களுக்கு உற்சாக வரவேற்புக்

கொடுப்பாங்களாம்.

தெரியாமத்தான் கேக்கறேன். ராமரு திரும்பி வந்தபோது வரவேற்பு கொடுத்த

அவரோட பெஞ்சாதி யாருங்க ? ராமரோட வனவாசம் போனதாச் சொல்றாங்களே

சீதைன்னு ஒரு அம்மாவை, அவங்களுக்கு ராமர் என்ன சித்தப்பா உறவு

முறைங்களா ?

இந்த மாதிரி அபத்தமா விளம்பரம் எழுதறவங்க, அதை அப்படியே வாங்கிப்

பத்திரிகையிலே போடறவங்க – புள்ளிராஜாவுக்கு வருதோ என்னமோ

இவங்களுக்கு வரட்டும்.

**************************************************************************

**************************************************************************

ஆப்பிரிக்கத் தேசியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் கானா நாட்டுத் தலைவர்

க்வாமே என்க்ரூமா பற்றி இரண்டு முறை புலிஸ்டர் பரிசு பெற்ற ஒரு பத்திரிகை

ஆசிரியர் வசைபாடி இருப்பதை அமெரிக்கா வாழ் நண்பர் ஒருவர் இணையச்

சுட்டியாகச் சேதி அனுப்பியிருந்தார்.

அமெரிக்க அரசும், அரசு சார்ந்து கருத்து வெளியிட்டு இயங்கும் பத்திரிகைகளும்,

எந்த நாட்டில் ஜனநாயகம் மலர்ந்தாலும் பொருமித் தீர்க்கிற விஷயம் ஊரெல்லாம்

அறிந்ததே. அதுவும், ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்கா நாடுகள் முன்னேறினாலே

வயிற்றெறிச்சல்தான் சாம் மாமாவுக்கு. பான் ஆப்ரிக்கனிசம் பேசிய என்க்ரூமா

அமெரிக்கா கண்ணில் மக்கள் விரோதிதான்.

சிலியில் அலண்டெயின் சட்டபூர்வமான அரசாங்கத்தை நீக்குவதில் சி.ஐ.ஏ வகித்த

பங்கு பற்றி இணையத்திலேயே ஏகப்பட்ட வரலாற்று ஆவணங்களைக் காண

முடியும்.

புலிஸ்டர் பரிசு பெற்ற நிருபர் மேல் எனக்குக் கொஞ்சம் அனுதாபம்

வந்ததென்னவோ உண்மை. திருப்பத் திருப்ப இப்படியே எழுதி அப்புறம் சுயசிந்தனை

இல்லாமல் போன துர்பாக்கியசாலிகளில் அவரும் ஒருவராக இருக்கலாம்.

நிருபர்கள் பல நேரம் ஒரே மாதிரி சூழ்நிலையில் வேலை செய்து மரத்துப்

போய்விடுவது உண்டு. ஆப்பிரிக்க நாடோ ஸ்லோவேக்கியா – செர்ப் பிரதேசமோ

நினைவில்லை – அங்கே ஏற்பட்ட கலவரத்தில் பெண்கள் நிறையப் பேர் பாலியல்

வன்முறைக்கு உள்ளானார்கள். கிராமம் கிராமமாகப் போன நிருபர்களுக்கு

ஒவ்வொரு இடத்திலும் கண்ணீர்க் கதைகள் தான் கிடைத்தன. இந்த சோகத்தைப்

பார்த்துப் பார்த்து இயந்திர கதியாகி, மாலை நேரம் களைப்போடு ஒரு கிராமத்தில்

புகுந்து சட்டென்று விஷயத்துக்கு வந்தார்களாம் – ‘ Anyone Here Been Raped and

Speaks English ? ‘. இந்தத் தலைப்பில் ஒரு புத்தகமே வந்திருக்கிறது.

இந்த வன்முறைக்குப் பெண் செய்தியாளர்களே ஆட்படுவதுண்டு. பத்திரிகையாளர்

என்று அடையாளப்படுத்திக் கொண்டு போனால் தான் ஒரு கலவரப் பிரதேசத்தில்

நுழைந்து செய்தி சேகரித்து உயிரோடு திரும்ப முடியும். PRESS என்று பெரிய

எழுத்தில் பொறித்த பேட்ஜை எல்லா நிருபர்களும் சட்டையில் நெஞ்சுக்கு மேல்

அணிந்து போக வேண்டிய கட்டாயம். அழகான ஓர் இளம்பெண் நிருபரும் அப்படியே

போக ..

**************************************************************************

**************************************************************************

‘ஆர்பத்நாட் ‘ கம்பெனியின் சிதறுதல்

இந்த வாரம் திங்கட்கிழமை யன்று சென்னை நகரமெல்லாம் திகில் கொண்டு

கலங்கிப் போகும்படியான வர்த்தமானம் மூலைக்கு மூலை, தெருவுக்குத் தெரு,

வீட்டிற்கு வீடு பரவி, அதைப் பற்றி ஜனங்களெல்லாம் நின்று பேசத்தொடங்கினர்.

‘ஆர்பத்நாட் கம்பெனி விழுந்து போய்விட்டது! ஆர்பத்நாட் கம்பெனி விழுந்து போய்

விட்டது! ‘ என்ற பிரஸ்தாபம் ஒரு மணி நேரத்திற்குள் நகர முழுவதும் பரவி விட்டது.

இந்தச் சமாசாரம் கேட்ட நிமிஷத்திலேயே எத்தனையோ ஜனங்கள் ஏழு நாடியும்

அயர்ந்து போய்விட்டார்கள். எத்தனையோ வீடுகளில் அழுகைக் குரல்கள்

தொடங்கிவிட்டன.

பணங்களை யெல்லாம் சேர்த்து ‘ஆர்பத்நாட் கம்பெனி ‘யாரிடம் கொடுத்து விட்டு,

வட்டி வாங்கியுண்டு சுக ஜீவனம் செய்து வந்தோர்களில் எத்தனையோ பேர் அரை

க்ஷணத்திற்குள்ளே யாதொரு கதியுமற்ற பரம ஏழைகளாய்ப் போய்விட்டார்கள்.

இரண்டு நிமிஷத்துக்கு முன்பு தம்மைச் செல்வந்தர்களாக நினைத்தவர்களெல்லாம்

திடாரென்று ஆகாரத்திற்குக்கூட வழியற்றுப் போய்விடுவார்களானால், அவர்கள் மனம்

எப்படித் துடிக்க மாட்டாது ?

இந்த சமாசாரம் கேட்டவுடனே அனேக ஜனங்கள் (நீரில் முழுகிச் சாகப்

போகிறவர்கள் துரும்பைக் கைப்பற்றிப் பிழைத்துவிட முயல்வது போல) ஆர்பத்நாட்

கம்பெனி சேதமடைந்து விட்டதென்று கேள்விப் பட்டதற்கப்பால் தத்தம் பணம்

ஒருவேளை கிடைக்கலாமென்ற ஆசையுடன் கடற்கரையோரத்திலிருக்கும்

‘ஆர்பத்நாட் கம்பெனி ‘ வாசலுக்கு ஓடிச் சென்றார்கள். கம்பெனி கட்டிட வாசலிலே

பெரிய பெரிய எழுத்துக்களில் பின்வருமாறு எழுதி ஒட்டப்பட்டிருந்தது :

‘ஆர்பத்நாட் கம்பெனியார் கடனாளிகளுக்குப் பணம் கொடுப்பதை நிறுத்தி

வைத்திருப்பதாக விசனத்துடன் அறிவித்துக் கொள்கிறார்கள். ‘

இதைப் பார்த்த உடனே ஜனங்க ளெல்லாம் இன்னது செய்வதென்று தெரியாமல்

திகைத்தார்கள். ஒரு க்ஷணத்திற்குள்ளே கதியற்றுப் போய்விட்ட விதவைகளும்,

கிழவர்களும் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அழுதார்கள். அதற்குள்

கம்பெனி வாசலிலே நிறுத்தப்பட்டிருந்த குதிரைப் போலீஸார் ஜனங்களைச்

சவுக்காலடித்துத் துரத்தத் தொடங்கினார்கள். ‘ஐயோ! வெள்ளைக்காரன் கையிலே

பணத்தைக் கொட்டிக் கொடுத்துவிட்டுச் சவுக்கடியும் படவேண்டுமோ! தெய்வமே! ‘ என்று ஜனங்கள் அலறிக்கொண்டு திரும்பினார்கள்.

‘இந்தியா ‘ – 27.10.1906 – சுப்பிரமணிய பாரதியார்

மத்தளராயன் தொடர்வது

———————————–

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஆர்பத்நாட் கம்பெனியாரின் வங்கி

மூழ்கியது. இந்தியாவில் நிகழ்ந்த மிகப் பெரிய நிதிநிறுவனச் செயலிழப்பு

அதுவாகத்தான் இருக்கும்.

அந்த மூழ்கிய நிதி நிறுவனக் கப்பலிலிருந்து எழுந்து வந்த புதிய கப்பல் தான்

இந்தியன் வங்கி. நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தின் பெருமுயற்சியால்

ஏற்பட்ட இந்த வங்கி ‘செட்டியார் பேங்க் ‘ என்றே அப்போது அழைக்கப்பட்டது.

இந்தியன் வங்கியும் இடையில் ஆட்டம் கண்டு இப்போது சிரமப்படாமல் இயங்கிக்

கொண்டிருக்கிறது.

பேங்க் ஃஓப் இங்கிலாந்து போன்ற நாட்டுத் தலைமை வங்கி இணையத் தளங்களில்

அந்நாட்டு வங்கி வரலாற்றைப் போட்டு வைத்திருப்பார்கள். ஆனால் இந்திய ரிசர்வ்

வங்கியின் தளத்தில் (http://www.rbi.org.in) இந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த

செய்திப் பதிவைக் காணோம்.

இந்தியன் வங்கியின் இணையத் தளத்திலும் (http://www.indian-bank.com)

அவர்களுடைய வரலாற்றுச் சங்கிலியில் முதல் கண்ணியாகிய ஆர்பத்நாட் கம்பெனி

பற்றி மூச்சுக்கூட விடவில்லை.

ஆனால் என்ன ? இங்கிலாந்தில் இருக்கும் ஆர்பத்நாட் குடும்பம் தன் வலைத்

தளத்தில் (http://www.arbuthnot.org/) இச்செய்தியை விரிவாகப் பதிவு

செய்திருக்கிறது. http://www.arbuthnot.org/crash_of_arbuthnot.htm

வரலாற்றை வரலாறாகப் பார்ப்பதற்கு இன்னும் நாம் பிரிட்டாஷ்காரர்களிடம் பாடம்

படிக்க வேண்டியிருக்கிறது.

**************************************************************************

Breasts you ‘ll die for !!

Thunder thights is now in town !

The sweetest pair of legs you ever saw !

இதெல்லாம் என்ன ?

அக்டோபர் 10, 2003 ‘தி ஹிந்து ‘ பத்திரிகை இரண்டாம் பக்கத்தில் கிட்டத்தட்ட

பாதியளவுக்கு வெளியிட்டிருக்கும் விளம்பரம்.

கோழி மாமிசம் விற்கும் கடைக்கு விளம்பரமாம்.

ராம் எப்படி இதை வெளியிட்டார் என்று தெரியவில்லை. ‘பாய்ஸ் ‘ படம் பற்றிய

எதிர்ப்புணர்வுக்குக் களம் அமைத்துக் கொடுத்திருக்கும் இந்துப் பத்திரிகை இப்படி

ஒரு விளம்பரத்தை ஏன் அனுமதித்தது ?

**************************************************************************

eramurukan@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்