ஞாநி
பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது பாரதியின் கவிதை. பாஞ்சாலி சபதம் காவியத்தில் பாஞ்சாலியை அரசவைக்கு இழுத்து வந்து துகிலுரிந்த கட்டத்தில், என்னை சூது வைத்து இழக்க என் கணவனுக்கேது உரிமை என்று அவள் கேட்கிறாள். அவையில் கூடியிருக்கும் ஆச்சாரியர்கள் எல்லாரும் நீ கேட்கிற நியாயம் எல்லாம் பழங்காலத்தில் இருந்தது. இப்போது இதுதான் நீதி; இதுதான் நியாயம்; இதுதான் சட்டம் என்று சொல்லிவிடுகிறார்கள். அந்த இடத்தில்தான் பாரதி இந்த சொற்றொடரைப் பிரயோகிக்கிறான். ‘பேய் அரசுசெய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள் ‘
அதிகாரம் உள்ளவர் சொல்கிறபடி அறிஞர்கள் நடப்பார்கள். அதிகாரம் உள்ளவர் விரும்புகிற மாதிரி அறிஞர்கள் நடப்பார்கள் . இதைத்தான் இன்று நாடு முழுவதும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பார்க்கிறோம்.
இன்றைய பேய் யார் ? ஜெயலலிதா என்பார் கருணாநிதி. நேற்று வரை இருந்த பேய் அவர்தான் என்பார் ஜெயலலிதா.
நிஜமான பேய் உலக வங்கி. அதன் சொல்படிதான் வாஜ்பேய் முதல் வட்டச் செயலாளர் வரை நடந்தாக வேண்டிய சூழ் நிலை இன்று நிலவுகிறது. ஜெயலலிதா அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என்றார். உச்ச நீதி மன்றம் அதை உறுதிப்படுத்தியதோடு நில்லாமல், தொழிற்சங்கங்களுக்கு வேலை நிறுத்தம் செய்ய்வே உரிமை கிடையாது என்று அறிவித்தது. வாஜ்பேய் அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய மனு போடப் போவதும் இல்லை. வேலை நிறுத்த உரிமையே கிடையாது என்று தனிச் சட்டம் கொண்டு வரப் போவதும் இல்லை என்று அறிவித்தது.
இன்று தேசத்தில் உள்ள தொழிற் தகராறு சட்டத்தின் படி வேலை நிறுத்தம் செய்யும் உரிமை உண்டு என்பது எல்லா தொழிற் சங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் வக்கீல்களுக்கும் தெரியும். ஆனால் அதற்கு விரோதமாக ஏன் உச்ச நீதி மன்றம் சொல்லியது என்று ஒருவரும் கேள்வி எழுப்பவில்லை.
காரணம் அந்த தொழிற் தகராறு சட்டத்தையே தூக்கி எறிய வேண்டும் என்று உலக வங்கி பத்தாண்டுகளாக சொல்லி வருகிறது. தொழிலாளர் நலச் சட்டங்களின்படி ஒருவருக்கு நிரந்தர வேலை , ஊதிய உயர்வு முதலியவற்றுக்கு உள்ள உரிமைகள் எல்லாம் நீக்கப்பட வேண்டும் என்பது உலக வங்கியும் பன்னாட்டு முதலாளிகளும் தொடர்ந்து சொல்லி வருபவை. ஆனால் ஓட்டு கிடைக்காமல் போய்விடுமே என்று பயந்து கொண்டு அதை வெளிப்படையாக செய்ய மத்திய மாநில அரசுகள் இன்னும் துணியவில்லை. ஆனால், மறைமுகமாக அரசுத்துறையில் அணுசக்தித்துறை முதல் தனியார் துறையில் கம்ப்யூட்டர் முதல் குப்பை வாரும் கம்பெனி வரை ஒப்பந்தக் கூலிமுறை பரவலாக்கப்பட்டு விட்டது.
வேலை நிறுத்த உரிமை பற்றி தீர்ப்பு வழங்குவதற்கு சுமார் பத்து நாட்கள் முன்பு உச்ச நீதி மன்றம் தெரிவித்த இன்னொரு தீர்ப்பு பரவலாக கவனிக்கப்படவில்லை. வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒரு தொழிலாளி வழக்கு தொடுத்தால், அந்த வேலை நீக்கம் தவறு என்று நீதி மன்றம் உத்தரவிடும்போது, மறுபடியும் அவரை சீனியாரிட்டி பாதிக்காமல் வேலையில் சேர்த்துக் கொண்டு, வேலை இழந்து இருந்த காலத்துக்கான ஊதியத்தையும் முதலாளி தர வேண்டும் என்று உத்தரவிட சட்டத்தில் விதிகள் உள்ளன. (இந்தக் கட்டுரையை எழுதுகிற என்னை இந்தியன் எக்ஸ்பிரஸ் 1980ல் வேலை நீக்கம் செய்தபோது வழக்கறிஞர் சந்துரு எனக்காக 4 ஆண்டுகள் வழக்காடி வென்று மறுபடியும் வேலை, சீனியாரிட்டி, இழப்புக் கால சம்பளம் ( back wages) பெற்றுத் தந்தார்.)
அண்மை உச்ச நீதி மன்ற தீர்ப்பு என்ன தெரியுமா ? வேலைநீக்கம் தவறாகவே இருந்தாலும், மறுபடி வேலை கொடுத்தாக வேண்டும் என்று இருந்தாலும், backwages தரவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை என்பதுதான். அதாவது நீதிமன்றம் முதலாளிகளுக்குப் பணம் மிச்சம் பிடித்துத்தருகிறது. சட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் நீதி மன்ற அணுகுமுறையில் மாற்றம் வந்துவிட்டது. பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
பெப்சி- கோலாவில் பூச்சி மருந்து எச்சங்கள் இருப்பது பற்றி centre for science and environment ஆய்வறிக்கை வெளியிட்டதும் ஏதோ தேசத்தையே உடனடியாக இந்த கோலாக்களிடமிருந்து காப்பாற்றிவிடப் போவது போல அரசு நடித்தது. பாராளுமன்ற கேண்டானிலிருந்து உடனடியாக பெப்சி கோலாக்களை அகற்றினார்கள். எல்லாம் பத்து நாள் நாடகம்தான். அரசு தானே சோதிக்கச் சொல்லிப் பெற்ற ஆய்வறிக்கை வந்ததும் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பெப்சி-கோலாக்களால் ஆபத்து இல்லை என்று அறிவிக்கிறார்.
எப்படி ஆபத்து இல்லை ? CSE அறிக்கைப்படி பூச்சி மருத்து எச்சங்களின் அளவு ஐரோப்பிய யூனியன் நிர்ணயித்துள்ள அளவை விட 11 முதல் 70 மடங்கு வரை அதிகமாக இருந்தது. அரசு அறிக்கைப்படி அவ்வளவு அதிகம் இல்லையாம். 1.6 லிருந்து ஐந்து மடங்குதான் அதிகமாம். அதனால் பாதுகாப்பானதுதானாம். ஐரோப்பிய யூனியன் நிர்ணயித்த பாதுகாப்பு அளவை விட குறைவாய் இருந்தால் சரி. அரசு கருத்துப்படியே சுமார் இரண்டு முதல் ஐந்து மடங்கு அதிகம்தானே. அப்புறம் எப்படி பாதுகாப்பானவை ? அது அப்படிதான். பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
பெப்சி கோலாவில் பூச்சி மருந்து எச்சம் பற்றி அறிக்கை வெளியிடுவதற்கு சில மாதங்கள் முன்பே பாட்டில் தண்ணீரின் அவல நிலை பற்றி இதே போல ஒரு அறிக்கையை CSE
வெளியிட்டிருந்தது. அதை அரசு கண்டு கொள்ளவே இல்லை. பெப்சி கோலா கம்பெனிகள் இரண்டும், பாட்டில் தண்ணீரும் விற்கின்றன. இப்போது அரசு சோதனைக்கு அனுப்பியபோது கூட அந்த தண்ணீர் பாட்டில்களை அனுப்பவில்லை.
டெல்லியில் வெடித்த பெப்சி கோலா சர்ச்சை பற்றி தமிழ் பத்திரிகைகள் எல்லாம் எழுதின. ஆனால் அவை எதுவும் தமிழ்நாட்டுக்குள் பெப்சி கோலா கம்பெனிகள் செய்துவரும் அக்கிரமங்கள் பற்றி விவரமாக எழுதவில்லை. அவுட்லுக் பத்திரிகை ஆங்கிலத்தில் விவரமாக எழுதியபிறகும் கூட தமிழ் பத்திரிகைகள் கண்டு கொள்ளவில்லை.
அவுட்லுக் சொல்லியது என்ன ? தமிழ்நாட்டில் கோக், பெப்சி இரண்டுக்குமாக மொத்தம் மூன்று பாட்டிலிங் ஆலைகள் உள்ளன.இவை எல்லாம் நிலத்தடி நீரை எடுக்கின்றன. ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்து அதை பெப்சியாகவோ, கோலாவாகவோ மாற்றினால் எத்தனை லிட்டர் கிடைக்கும் என்று யோசியுங்கள். அதிகம் கிடைக்கலாம். அல்லது அதே ஒரு லிட்டர் கிடைக்கலாம் என்று கணக்கிட்டால் தவறு. 25 மில்லி கோலாதான் கிடைக்கும். மீதி 750 மில்லி ? வேஸ்ட். என்ன அக்கிரமம் இது ? அதே ஒரு லிட்டர் தண்ணீரை குடி நீராக்கினால், ஒரு லிட்டர் முழுதும் கிடைக்கும். பாசனத்துக்குப் பயன்படுத்தினால் கூட முழுவதும் பயன்படும். ஆனால் கோலாவுக்காக ஒரு லிட்டரில் 750 மில்லி வேஸ்ட்டாவதோடு நிற்கவில்லை. அந்த 750 மில்லியையும் நஞ்சாக்கி வெளியே கொட்டி சூழலையும் நஞ்சாக்குகிறார்கள். இப்படி தினசரி லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக்கப்பட்டு நஞ்சாக்கப்படுகிறது.
மதுரை அருகே பரவையில் ( ‘தூள் ‘புகழ் முனியம்மாவின் ஊர்தான்) பெப்சி தன் கழிவுகளை வைகையாற்றுக்கு செல்லும் கொண்டைமாரி கால்வாயில் கொட்டுகிறது. இந்தக் கழிவுகளில் ஈயமும் கேட்மியமும் கலந்திருப்பதாக அவுட்லுக் சோதனைக்கு அனுப்பியதில் தெரிந்தது. அவுட்லுக் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தகவல் தெரிவித்தபிறகு வாரியம் பெப்சிக்கு ஒரு நோட்டாஸ் அனுப்பியுள்ளது. இந்த ஆலை உலகத்தரம் வாய்ந்த ISO 9002 சான்றிதழ் பெற்ற ஆலையாம் !
சிவகங்கை மாவட்டம் பதமத்தூரில் கோக் ஆலைக்கு உள்ளூர் விவசாயிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு இருக்கிறது. சர்வதேச ஆலையின் உள்ளூர் சொந்தக்காரர் தமிழ்ப் பத்திரிகை உலகின் ஆன்மிகச் செல்வரான பொள்ளாச்சி மகாலிங்கம். இந்தப் பகுதியில் கரும்பு விவசாயிகளுக்கு சக்தி சுகர்ஸ் தரவேண்டிய பாக்கித் தொகை மட்டும் 40 கோடி ரூபாய். இன்னொரு பக்கம் இதே கம்பெனி கோக்கொ கோலாவுக்கு சர்க்கரை விற்று 60 கோடி ரூபாய் சம்பாதிக்கிறது.
இந்த கம்பெனிகள் வீணாக்கும் நிலத்தடி நீரை லிட்டருக்கு வெறும் 4 பைசா விலையில் வாங்கிக் கொண்டிருக்கின்றன. இவை விற்கும் பாட்டில் தண்ணீர் விலை லிட்டருக்கு பத்து ரூபாய். எனவே தடுக்கப்பட வேண்டியது பெப்சி கோலா விற்பனை அல்ல. உற்பத்தியே தடுக்கப்பட வேண்டும்.
ஓராண்டு முன்பு செங்கல்பட்டு மாமண்டூரில் இருக்கும் பெப்சி ஆலையை தரக்குறைவான பானம் விநியோகிப்பதாக காஞ்சிபுரம் கன்ஸ்யூமர் அமைப்பின் புகாரின் பேரில் சோதனையிட்டு, மூட உத்தரவு பிறப்பித்தார் ஒரு தாசில்தார். பிறகு ஆலை திறக்கப்பட்டது. இந்த செய்திகளையெல்லாம் தற்போது தமிழ் பத்திரிகைகள் நினைவு கூரவும் இல்லை ; தொடர்ந்து ஆராயவும் இல்லை.
ஜூன் 15, 1989. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா டுடே பத்திரிகை வெளியிட்ட ஒரு விரிவான கட்டுரையில் இந்தியா முழுவதும் எப்படி காய்கறிகள், பழங்கள், பால், தண்ணீர், தானியங்கள் எல்லாவற்றிலும் பூச்சிமருந்துகளின் எச்சங்களின் அளவு மிக அதிகமாக இருக்கிறது என்பது தெரிவிக்கப்பட்டது.
சராசரி அமெரிக்கரோ, ஆங்கிலேயரோ தன் உணவில் உட்கொள்ளும் பூச்சிமருந்து எச்சத்தை விட 40 மடங்கு அதிகம் இந்திய உணவில். முக்கியமான விஷமிகள் D.D.T எனப்படும் டிக்ளோரோ டிபைனைல் ட்ரைக்ளொரோதேன் , பென்சீன் ஹெக்சாக்ளோரைட், மாலதியான், எண்டோசல்ஃபீன். அறுபதுகளிலேயே டி.டி.டியை அமெரிக்காவும் ஐரோப்பாவும் தடை செய்து விட்டன.
இப்போதும் இதே பெயர்கள்தான் அடிபடுகின்றன. ஏன் 14 வருடங்களாக ஒரு நடவடிக்கையும் இல்லை ? அப்போதுதான் உலக வங்கியின் பரிவான வழி காட்டுதலில் நாம் தாராளமய, உலகமயப் பொருளாதார கிணற்றுக்குள் குதிக்கத் தொடங்கினோம். படு ஆழமான கிணறு. இன்னும் குதித்துக் கொண்டேயிருக்கிறோம். பேய் தொடர்ந்து அரசு செய்தால் தொடர்ந்து பிணம் தின்னும் சாத்திரங்கள்.
ராஜீவ் காந்தி, மன்மோகன்சிங், நரசிம்மராவ், சிதம்பரம் வாஜ்பேய்,கருணாநிதி, மாறன், ஜெயலலிதா, என்று எல்லாருமே உலக வங்கிப் பேயின் ஆஸ்தானப் பூசாரிகளாக மட்டுமே இருக்க முடியும். இருந்தால்தான் ஆட்சியில் நிலைக்க முடியும். முக வெளிப்பாடுகள் மட்டும்தான் வேறுபடலாம். ராஜீவ் சிரிப்பார். நரசிம்மராவ் சிரிக்க மாட்டார். மாறன் கடுகடு என்று இருப்பார். சிதம்பரம் சிரிப்பார். கருணாநிதி ஊசி போட்டால் வலிக்காது. சங்கத் தமிழ்த்தேனில் குழைத்த மருந்து. ஜெயலலிதா ஊசி போடப் போகிறேன் என்று அறிவிக்கும்போதே வலிக்க ஆரம்பித்துவிடும். முக வேறுபாடுகள்தான். அகத்தில் ஒரே சித்தாந்தம். உலக வங்கியாய நமஹ.
1947ல் பெற்ற சுதந்திரம் முழுமையானது அல்லதான். ஆனால் அதைக் கொண்டே பல முன்னேற்றங்களைக் காண முடிந்தது. அந்த முன்னேற்றங்களை எல்லாம் மறுபடியும் இழந்து கொண்டிருக்கிறோம். அந்த விடுதலைப் போராட்டத்துக்கு வலு கிடைத்து போராடி வெற்றி பெற சுமார் ஐம்பது ஆண்டுகள் பிடித்தன. இன்று தொடங்க வேண்டிய போராட்டம் அதை விடக் கடுமையானது. முதல் காரணம் ஆங்கிலேய ஆட்சி எனும் பேய் அரசு செய்தபோது இந்த அளவு பிணம் தின்னவில்லை சாத்திரங்கள். இரண்டாவது காரணம் படித்த வர்க்கத்தின் தலைக்குள் உலக வங்கி தீட்டும் பொன்னுலகக் கனவுகள் திணிக்கப்பட்டிருக்கின்றன. மூன்றாவது காரணம் வரலாற்றில் வேறெப்போதும் இருந்திராத அளவுக்கு இன்று தனி மனித சுய நலம் எந்தக் குற்ற உணர்ச்சிக்கும் அப்பாற்பட்ட வாழ்க்கை சித்தாந்தமாக படித்த வர்க்கத்தால் ஏற்கப்பட்டிருக்கிறது.
இன்றைய படித்த படைப்பாளிக்கு வசதியான வழி இதையெல்லாம் எழுதுவதற்கு பதில் செளக்கியமாக கவிதையும் கதையும் மட்டும் எழுதிவிட்டு அரசு விருதுகள், வள்ளல்களின் மான்யங்கள், சினிமாக்காரர்களின் சில்லறைகள் பெற்றுக் கொண்டு பிள்ளைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, ‘பொடான்னு சொல்றாங்களே என்ன அது ? ஹைக்கூ மாதிரியா ? ‘ என்று விசாரித்துக் கொண்டு கொட்டாவி விடலாம். கொட்டாவியை தொடராகப் பிரசுரிக்க, சீரியலாக ஒளிபரப்ப நிறைய பேர் காத்துக் கிடக்கிறார்கள்.
படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான் என்று பாரதி இட்ட சாபம் இன்னும் என் ஆழ்மனதில் கல்வெட்டாகப் பதிந்திருக்கிறது. இல்லாவிட்டால் அடுத்த இதழிலிருந்து தீம்தரிகிடவில் அரசியல் இடம் பெறாது என்று அறிவித்துவிடலாம் என்று நினைக்கும் அளவுக்கு விரக்தியான வறட்சியான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிணம் தின்ன மறுக்கும் சாத்திரங்களும் பிணம் போல வாழ்ந்தாக வேண்டுமா ? .
( தீம்தரிகிட ஆகஸ்ட் 2003)
dheemtharikida@hotmail.com
- உணவும் நம்பிக்கையும்
- பேசாதிரு மனமே
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 1
- செந்தில்
- அறிவுத்திறத்தின் பரிணாமம்- செடி SETI மற்றும் விண்வெளி உயிரியலின் இன்றியமையா பகுதி
- வியாழனைச் சுற்றிய காலிலியோ விண்வெளிக் கப்பல் [Galileo Spaceship that orbited Jupiter (1989-2003)]
- யார் எழுதலாம் எவ்வளவு எழுதலாம் ?
- கு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி
- முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் கட்டுரையும், சில கேள்விகளும்
- அறிவியல் புனைவுகள் – ஓர் எளிய அறிமுக வரலாறு
- ஆவேசமும் குழந்தைமையும் -வில்லியம் பாக்னரின் ‘இரு சிப்பாய்கள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 74 )
- சிவகாசி சித்திரங்கள்
- கோபிகிருஷ்ணனை முன்வைத்து எழுத்தாளர்களுக்கான இயக்கம்
- குறிப்புகள் சில – 28 ஆகஸ்ட் 2003 தி ஹிந்து-குளிர் பானங்கள்-வணிக முத்திரை,பதிப்புரிமையும் கருத்துச்சுதந்திரமும்
- உயிர்மை
- பேய் அரசுசெய்தால்
- தெய்வமனம் அமைந்திடுமோ!
- பிக்பாக்கெட்
- நந்தா விளக்கு !
- பச்சோந்த்ி வாழ்வு
- யேன் செய்ததில்லை ?
- பண்பெனப்படுவது யாதெனக் கேட்பின்….
- …காற்று தீரும் வரை
- யாதுமாகி நின்றாய் பராசக்தி…….
- விடியும்! நாவல் – (11)
- ஜாதிகள் ஜாக்கிரதை
- பிறகு….
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தொன்று
- கடிதங்கள்
- வாரபலன் ஆகஸ்ட் 22 (பெல்ஜிய அதிகாரிகள், விபச்சார வர்த்தகம், காந்தர்வம்)
- 40 சீனில் என்ன செய்யமுடியும் ?
- மறைந்த எழுத்தாளருக்கான மரியாதையும் மதிப்பீடுகளும்
- குயவன் (குறுநாவல்)
- ஆன்மீக இந்தியாவில் பெண்ணின் நிலை, மணப்பெண் சொத்துரிமை, மணப்பெண் வயது, வரதட்சணைக்கு அஞ்சி பெண்சிசுக்கள் கருஅழிப்பு!
- ஜேனஸின் முகங்கள் : 20 ஆம் நூற்றாண்டில் மார்க்சியமும் பாசிஸமும்
- எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குடும்ப நிதி
- புதுமைப்பித்தனின் சமூகப்பார்வை
- வானம் காலடியில்
- இறுதி
- தாரகை
- அசல் வரிகள்
- சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கிறேன்