தொ. பரமசிவன்
மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவும் நீரும் உலகின் எல்லா நாகரிகங்களிலும் தனித்த இடத்தைப் பெறுகின்றன. தமிழர் பண்பாட்டிலும் உணவு பல்வகையான நம்பிக்கைகளுக்குக் களனாக அமைந்திருக்கிறது.
உணவு சார்ந்த நம்பிக்கைகள் பலவகையாகும். நேரம், கிழமை, பருவகாலம், சடங்குகள், பயணம், விழாக்கள் ஆகியவை சார்ந்து உணவுசார் நம்பிக்கைகள் அமைகின்றன. விலக்கப்பட்டவை, விதிக்கப் பட்டவை என்ற இரு பெரும் பகுப்பில் இவற்றை அடக்கலாம்.
புலால் உண்ணும் சாதியாரும் குறிப்பிட்ட சில நாள்களில் புலால் உணவை விலக்குகின்றனர். வெளிளி, செவ்வாய் ஆகிய நாள்களில் சிலர் புலால் உணவை விலக்குவர்; சிலர் சனிக்கிழமை களில் மட்டும் விலக்குவர்; ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளிலும், புரட்டாசி மாதச் சனிக்கிழமைகளிலும் சிலர் தவிர்த்துவிடுவர். புரட்டாசி அல்லது கார்த்திகை மாதங்களில் முழுமையாகப் புலால் மறுப்பது சிலரது வழக்கம். ஊர்த் திருவிழாவிற்குக் காப்புக் கட்டிய அல்லது கொடியேற்றிய நாள் தொடங்கி விழா முடியும் வரை சிலர் புலால் விலக்குவர்.
அமாவாசை, பெளர்ணமி (கார்உவா, வெளிஉவா) நாள்களில் பொதுவாகப் பெண்கள் புலால் உணவு விலக்கும் வழக்கம் உடை யவர்கள். இம்மரபுகளை அடியொற்றித் தமிழ் கிறித்தவர்களும் ‘லென்ட் ‘ (கக்ஙூஞ்) எனப்படும் நோன்புக் காலத்தில் புலால் உணவை அறவே விலக்குவது சில இடங்களில் வழக்கமாக உள்ளது. இந்த நோன்புக் காலம் என்பது இயேசுநாதர் சிறைப்பட்டது முதல் உயிர்த்தெழுந்தது வரையிலான 40 நாள்களாகும். கிறித்தவ முதியவர் சிலர், இயேசுநாதர் சிலுவையில் மரித்தது ஒரு வெளிளிக்கிழமை என்பதால் அந்த நாளில் புலால் விலக்கும் வழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். கத்தோலிக்க கிறித்தவர்களிடையேதான் பெரும் பாலும் இவ்வழக்கத்தைக் காண முடிகிறது.
இரவில், ‘உப்பு ‘ என்ற சொல்லைச் சொல்லக் கூடாது. இரவிலே அடுத்த வீட்டாருக்கு மோர் கொடுத்தல் கூடாது. தவிர்க்க முடியாத நேரத்தில் சிறிது வெளிளை உப்பினை அதற்கு மாற்றாக வாங்கிக் கொண்டு கொடுக்கலாம். புதுமனைக்கு உள்ளே மணமகள் முதலில் கொண்டு செல்ல வேண்டிய பொருள் உப்புதான். இவை உப்பு குறித்த சில நம்பிக்கைகள். உப்பு, உறவுக்கும் செழிப்புக்கும் அடையாள மாகக் கருதப்பட்டது. எனவே சில சாதியார் இறந்தார்க்குப் படைக் கும் உணவில் உப்புச் சேர்ப்பதில்லை.
விருந்தாளிகளுக்குப் படைக்கும் உணவில் பாகற்காய், பயறு வகைகள், அகத்திக்கீரை ஆகியவற்றைச் சேர்ப்பதில்லை. இறப்பு நிகழ்ந்த வீடுகளில் அன்றும், மறுநாளும் உணவில் அகத்திக்கீரை சேர்ப்பர். அகத்திக்கீரையும் பயறு வகைகளும் இறப்போடும் இறந்தவர் உணவோடும் தொடர்புபடுத்தப்படுகின்றன. எனவே அவற்றை விருந்தாளிகளுக்குப் படைப்பதில்லை. தென் மாவட்டங்களில் ‘பயறு அவித்தல் ‘ என்பது இறப்பைக் குறிக்கும். விழாக்காலங்களிலும் உணவில் பயறு வகைகள் (கடலை, தட்டை) பெரும்பாலும் தவிர்க்கப் படுகின்றன.
தொன்மையான பயிர் வகைகளில் ஒன்றான சுரையின் காயினைப் புலால் போன்றது எனக் கருதித் தமிழ்நாட்டு பிராமணர் முற்றிலுமாக விலக்கி விடுகின்றனர். புலால், மீன் ஆகியவற்றோடு சேர்க்கப்படும் காய்கறி இது. ஆதலால் இதனை விலக்குகின்றனர் போலும்.
போக்குவரத்து வசதி பெருகாத காலங்களில் பயணத்தின் போது இரண்டு அல்லது மூன்று பொழுதுக்குக் கட்டுச்சோறு கட்டிக் கொண்டு செல்லும் வழக்கம் இருந்தது. காட்டுவழியில் உள்ள தெய்வங்களும் ஆவிகளும் கட்டுச்சோற்று உணவைத் தீண்டாமல் பாதுகாக்க, சோற்றின்மீது ஒரு அடுப்புக் கரித்துண்டினை உடன் வைத்துக் கட்டுவர்.
பெரும்பாலான சாதியார் விருந்தாளிகளுக்கு உணவு பரிமாறும் போது முதலில் உப்பினை வைப்பர். ஒன்றிரண்டு சாதிகளில் முதலில் சோற்றினை வைக்கும் வழக்கமுண்டு.
இவையேயன்றித் தெய்வங்களும் விழா நாள்களும் நோன்பு நாள்களும் வெவ்வேறு வகையான உணவுகளோடு தொடர்பு படுத்தப்படுகின்றன. மார்கழி மாதத்தின் திருவாதிரை நாள் சிவ பெருமானுக்கு உரியதாகக் கருதப்படுகிறது. அந்நாளில் உளுந்து மாவினால் செய்த களி வீட்டு உணவில் சிறப்பிடம் பெறுகிறது. ‘திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ‘ என்பது தென் மாவட்டங்களில் பெருக வழங்கும் சொல்லடை. கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நாள் முருகனுக்கு உரிய திருநாள். அந்நாளில் கார்த்திகைப் பொரியும் இடித்த மாவினால் ஆன பிடிகொழுக்கட்டையும் விளக்கு முன் படைக்கப்படுகின்றன. பிள்ளையார் வழிபாட்டிற்கு உரிய கொழுக் கட்டை மோதகம் எனப்படும். அது அரைத்த மாவில் உள்ளே இனிப்பிட்டுச் செய்யப்படுவது.
மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியில் அரிசியை இடித்துச் செய்யும் உலர்ந்த அவல் சிறப்பான உணவாகக் கருதப்படுகிறது. தென் மாவட்டங்களிலும் கேரளத்திலும் சித்திரை முதல் நாள் திருநாளாகக் கருதப்படுகிறது. அந்த நாளுக்கு உரிய உணவு, ஊற வைத்து இனிப்பிட்ட அரிசி அவல். ஆடிமாதப் பதினெட்டாம் பெருக்கன்று உளுந்து முதலான பல புஞ்சைத் தானியங்களையும் திரித்து இனிப்புக் கூட்டிச் செய்த ஒரு வகைப் பாயாசம் சிறப்புச் சிற்றுணவாகக் கருதப்படுகின்றது. இதனைக் ‘கும்மாணம் ‘ என்பர். (இதுவே இலக்கியத்தில் ‘கும்மாயம் ‘ எனப்படும்.) நயினார் நோன்பு எனப்படும் சித்திரகுப்த நயினார் நோன்பு அன்று (சித்திரை முழு நிலவுக்கு மறுநாள்) காலை உணவில் எள் அல்லது எள்ளுப் பிண் ணாக்கு, கருப்புக் கட்டி ஆகியவை உணவோடு சேர்த்துப் பரிமாறப் படுகின்றன. அகத்திக்கீரையினையும் பயறு வகைகளையும் போல எள்ளும் இறப்போடும் இறப்புச் சடங்குகளோடும் தொடர்பு படுத்தப் பட்ட ஒரு தானியமாகும். இறந்த மனிதனின் பாவ புண்ணியக் கணக்குகளைப் பதிவு செய்து கடவுளிடம் ஒப்படைக்கும் பொறுப்பு டையவர் சித்திரகுப்தன். எனவே இறப்போடு தொடர்புடைய எள்ளுப் பிண்ணாக்கு அவருக்கு உரிய நாளில் படைக்கப்படுகிறது.
ஆடி அறுதி எனப்படும் ஆடிமாதக் கடைசி நாளிலும் தைப்பொங் கலுக்கு மறுநாளான கரி நாளிலும் விருப்பத்துடன் புலால் உண்ணு வது தமிழர் வழக்கமாகும்.
மகப்பேற்றுத் தீட்டுக் கழிக்கும் நாளில் விளக்கு முன்னர்ப் படைக்கப்படும் உணவினை ஆண்கள் பார்ப்பதும் உண்பதும் கூடாது. இது சடங்கு சார்ந்த உணவாகும். இதனைப் போலவே ‘ஒளவையார் நோன்பு ‘ எனப் பெண்கள் மட்டும் கூடி நடத்தும் வழிபாட்டில் படைக்கும் அவித்த உணவு வகைகளும் ஆண்களின் பார்வையில் படக்கூடாது என்னும் நம்பிக்கை பெண்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.
‘பண்பாட்டு அசைவுகள் ‘ நூலிலிருந்து சில கட்டுரைகள்
பண்பாட்டு அசைவுகள்
ஆசிரியர் : தொ. பரமசிவன்
பக்கம் : 200; விலை ரூ.80
காலச்சுவடு பதிப்பகம்
669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629 001
தமிழ்நாடு, இந்தியா
தொலைபேசி: 91-4652-222525, 223159
தொலைநகல் : 91-4652-231160
இ-மெயில்: kalachuvadu@vsnl.com
- உணவும் நம்பிக்கையும்
- பேசாதிரு மனமே
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 1
- செந்தில்
- அறிவுத்திறத்தின் பரிணாமம்- செடி SETI மற்றும் விண்வெளி உயிரியலின் இன்றியமையா பகுதி
- வியாழனைச் சுற்றிய காலிலியோ விண்வெளிக் கப்பல் [Galileo Spaceship that orbited Jupiter (1989-2003)]
- யார் எழுதலாம் எவ்வளவு எழுதலாம் ?
- கு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி
- முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் கட்டுரையும், சில கேள்விகளும்
- அறிவியல் புனைவுகள் – ஓர் எளிய அறிமுக வரலாறு
- ஆவேசமும் குழந்தைமையும் -வில்லியம் பாக்னரின் ‘இரு சிப்பாய்கள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 74 )
- சிவகாசி சித்திரங்கள்
- கோபிகிருஷ்ணனை முன்வைத்து எழுத்தாளர்களுக்கான இயக்கம்
- குறிப்புகள் சில – 28 ஆகஸ்ட் 2003 தி ஹிந்து-குளிர் பானங்கள்-வணிக முத்திரை,பதிப்புரிமையும் கருத்துச்சுதந்திரமும்
- உயிர்மை
- பேய் அரசுசெய்தால்
- தெய்வமனம் அமைந்திடுமோ!
- பிக்பாக்கெட்
- நந்தா விளக்கு !
- பச்சோந்த்ி வாழ்வு
- யேன் செய்ததில்லை ?
- பண்பெனப்படுவது யாதெனக் கேட்பின்….
- …காற்று தீரும் வரை
- யாதுமாகி நின்றாய் பராசக்தி…….
- விடியும்! நாவல் – (11)
- ஜாதிகள் ஜாக்கிரதை
- பிறகு….
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தொன்று
- கடிதங்கள்
- வாரபலன் ஆகஸ்ட் 22 (பெல்ஜிய அதிகாரிகள், விபச்சார வர்த்தகம், காந்தர்வம்)
- 40 சீனில் என்ன செய்யமுடியும் ?
- மறைந்த எழுத்தாளருக்கான மரியாதையும் மதிப்பீடுகளும்
- குயவன் (குறுநாவல்)
- ஆன்மீக இந்தியாவில் பெண்ணின் நிலை, மணப்பெண் சொத்துரிமை, மணப்பெண் வயது, வரதட்சணைக்கு அஞ்சி பெண்சிசுக்கள் கருஅழிப்பு!
- ஜேனஸின் முகங்கள் : 20 ஆம் நூற்றாண்டில் மார்க்சியமும் பாசிஸமும்
- எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குடும்ப நிதி
- புதுமைப்பித்தனின் சமூகப்பார்வை
- வானம் காலடியில்
- இறுதி
- தாரகை
- அசல் வரிகள்
- சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கிறேன்