நந்தன் கதை – மு ராமசுவாமியின் இயக்கத்தில்

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

கோபால் ராஜாராம்


நந்தன் கதை ஏற்கனவே ராஜ்உவின் இயக்கத்தில் மேடையேற்றப் பட்டிருக்கிறது. அதிலும் மு ராமசுவாமி நடித்திருக்கிறார். இப்போது மு ராமசுவாமியின் இயக்கத்தில் வட அமெரிக்கச் சங்க்கங்களின் பேரவையின் மாநாட்டில் சூலை 5-ம் தேதி தஞ்சை நாடகக் குழுவினர் ‘நந்தன் கதை ‘யை அரங்கேற்றியுள்ளனர். இந்த வகையிலான நாடகத்தை அமெரிக்க மண்ணில் பார்ப்பது அரிது. இப்படிப் பட்ட நாடகங்களை மக்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற அச்சம் தேவையில்லை என்பதைச் சொல்லும் விதமாக நாடக நிகழ்ச்சி முடிந்த பின்பு அவையினர் அனைவரும் ஒட்டு மொத்தமாக எழுந்து கரவொலி எழுப்பி தம்முடைய ஈடுபாட்டைக் காண்பித்தனர். தங்கள் வாழ்நாளிலேயே இது போன்ற நாடகம் ஒன்றைத் தாங்கள் கண்டதில்ைடேன்று பலரும் குறிப்பிட்டனர். இனி என்றெண்றும் மறக்கமுடியாதபடி இந்த நாடகம் எங்கள் பிரக்ஞையில் தோய்ந்திருக்கும் என்று பலரும் தெரிவித்தனர். நிஜமான நாடகத்தை மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்ற பொய்ப்பிரசாரங்களை முறியடிக்கும் விதத்தில் இதற்கு வரவேற்பு இருந்தது.

ஒரு நாடகம் என்பது இயக்குனர் கையில் மலர்கிற ஒரு புதிய ஆக்கம். இந்த நாடகம் இ பாவின் சிறந்த நாடகங்களில் ஒன்று. இதை வெறும் பார்ப்பன எதிர்ப்பு நாடகமாய்ச் சுருக்கிவிடுவது சுலபம். ஆனால் இந்திரா பார்த்த சாரதி இதற்குள் இரு வேறு மரபுகள், இருவேறு அழகியல்கள் என்று சமூகப் போராட்டத்தை விரிக்கிறார். மேற்கில் என்றால் ஒரு மரபு அழிந்து இன்னொரு மரபு வெற்றி பெறுவதாய் இருப்பது வரலாறு. இந்திய கலாசாரத்தின் மேலாண்மை சக்திகள் மிகவும் சாதுர்யமாக, மற்ற மரபுகளை அனுமதித்த அதே நேரத்தில் , அந்த மரபுகளையும் சாதிய வரம்பிற்குள் கொண்டு வந்தது. இ பா வின் கவிதை-வசனங்களின் நாடகீயத் தன்மையும் இந்த போராட்டத்தின் ஓர் அங்கமாய் வெளிப்படுகிறது. இ பா வின் மற்ற நாடகங்களைக் காட்டிலும் இந்த நாடகம் , நடிக்கவும் , பார்வையாளர்களுக்கு முன் அளிக்கவும் சிரமமானது. பல சவால்களை உள்ளடக்கியது. இந்தச் சவால்களை முழுமையாய் ஏற்று ராமாசாமி படைத்திருக்கும் இந்த நாடகம் ஒரு புதிய ஆக்கமே.

மூல நாடகத்திலிருந்து சில விலகல்களும், சேர்க்கைகளும் உள்ளன. அவை நாடகத்தைத் தற்காலச் சூழலுக்குள் கொண்டு வருகின்றன. ஒரு கண்பார்வையற்ற பிச்சைக்காரி தொட்டிலில் கிடக்கும் தன் குழந்தைக்குக் கதை சொல்வது போல் அமைந்துள்ளது முதற் காட்சியும் கடைசிக் காட்சியும். கிராமியக் கலை மரபின் அனைத்து வண்ணங்களையும் நம் முன்னால் விரிக்கிறது, இந்த நாடகம். செவ்வியல் மரபுக் கலைக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல கிராமிய நாடகக் கலை என்பதை உதாரண பூர்வமாய் நம் முன்னால் இது வைக்கிறது. கிராமியக் கலை என்பது வெறும் வித்தியாசமான விசித்திரக் கலையல்ல, தன்னுள் முழுமை கொண்ட ஒரு வெளிப்பாடு என்றும் அழுத்திச் சொல்கிறது.

நந்தனும் , அபிராமியும் ‘ஜோதியில் ‘ கலப்பதும் , மற்றவர்களையும் வேதியர் ஜோதியில் கலக்க அழைப்பதும் மிக அருமையாய், இந்த நிகழ்வின் தீவிரம் மனதில் உறைக்கும் விதத்தில் choreograph செய்யப் பட்டுள்ளது. நடிப்பில் அனைவருமே மிகச் சிறப்பாக செய்திருக்கின்றனர். இந்திய சாதிய மேலாண்மை , வெளிப்படையான வன்முறையைக் கையாளாதா போதும் எப்படி உள்ளார்ந்த ஒரு வன்முறை புழங்கி வந்திருக்கிறது என்பதும் மிக நுணுக்கமாய் வெளிப்படுகிறது.

***

gorajaram@yahoo.com

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்