வாரபலன் – 5 (மே இறுதி வாரம்) பாளம் பாளமாய்…

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

மத்தளராயன்


‘ஈராக்கில் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சதாம் உசைன் அவற்றை நாங்கள்

வருவதற்கு முன்பே அழித்து விட்டார் ‘/

திருவாய் மலர்ந்து அருளியிருக்கும் கிழட்டு நரியனுக்குப் பெயர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட்.

‘வெப்பன்ஸ் ஓஃப் மாஸ் டிஸ்றெக்ஷன் நிறைய வைத்திருக்கிறார் சதாம் உசைன். உலக அமைதிக்கே பேரபாயம் நிகழ வாய்ப்பு இருக்கிறது ‘ என்று பேட்டை ரவுடி போல் அங்க அசைவுகளோடு புஷ் நீட்டி முழங்க, டோனி பி

ளேர் அடியாளாக ஆமா போட, ஈராக்கின் எண்ணைய் வளத்தைக் குறி வைத்து ஒரு பெரும்படை எடுப்பு.

யுத்தம். ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்கள் இழப்பு.

எண்ணெய்க் கிணறுகளைக் காக்க வேண்டியதே குறியாக இருந்த அயோக்கியர்கள் மானுட நாகரிகத்தின் நாலாயிர வருட வரலாற்றைக் காலம் காலமாகப் பாதுகாத்து வந்த பாக்தாத் அருங்காட்சியகம் சூறையாடப் பட்டபோதோ, அடிப்படை மருத்துவ வசதி, தண்ணீர், மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்தபோதோ இதெல்லாம்

சகஜம், சுத்ந்திரம் என்றால் சும்மாவா என்று உருட்டி விழித்தார்கள்.

அத்து மீறி அடுத்த நாட்டில் புகுந்த இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்காமல் ஐநா சபை பேடித்தனமாக

நெட்டை மரமாக நிற்கிறது.

எங்கேய்யா வெப்பன்ஸ் ஓஃப் மாஸ் டிஸ்றக்ஷன் என்றால் ரம்ஸ்பெல்ட் சரடு விடுகிறார் – சதாம் உசைன்

அதையெல்லாம் அழித்து விட்டாராம்.

உலகத்துக்கே இப்போது நிரூபணமாகி விட்டது. இவர்களின் படையோட்டம் இராக்கியர்களை ‘விடுதலை ‘

செய்யவா, அமெரிக்க பெருமுதலைகளை இன்னும் கொழுக்க வைக்கவா என்று.

சீச்சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு.

———————

கம்ப்யூட்டரை இயக்கினால், ‘Primary Slave Hard Disk Failure ‘ என்று திரையில் வருகிறது.

துணைத் தகடான ‘டி கோலன் ‘ பழுதடைந்ததை விட வேதனையளிப்பது மைக்ரோசாஃப்டின் இந்த slave என்ற

சொல்லாடல்.

ஆதிக்கமும் அடிமைப் படுத்துதலும் மரபணுக்களிலேயே கலந்திருக்கும் போலிருக்கிறது.

—————————————————-

ஏய் இவளே. இந்த நெக்லஸ் உன் கழுத்துக்குக் கச்சிதமா ரொம்ப நல்லா இருக்குடி. சும்மா உன்னைக் கலாய்க்கலேடி. விஷயத்தைக் கேளு.

நேத்து ராத்திரி ஒரு கூத்து நடந்தது பார். இது வெளியே தெரிஞ்சா ஊரோட வழிச்சுக்கிட்டுச் சிரிப்பாங்க. நீ என் சிநேகிதி .. பகிரங்க சிநேகிதியாச்சேன்னு உனக்கு மட்டும் சொல்றேன்.

வீட்டுலே எல்லாம் தூங்கியாச்சா .. வீடு என்ன, ஊர் உலகம் முழுக்கக் கொறட்டை சத்தம்தான். நான் நைசா வெளியே வந்தேன். எதுக்கா ? என்னோட டியர் பிரண்டா இருந்துட்டு இதுகூட தெரியாதாடா மடச்சி ? சும்மா நடிக்காதே. ஏய் .. ஆமாடி, என்னோட அவன் சரி அவர் வந்து நாலு வார்த்தை பேசிட்டுப் போறதாச் சொல்லியிருந்தார். அதான்.

அரவமே இல்லாத தெரு ஓரத்திலே நான் தனியா நிக்கறேன். குளிர் வேறே. பஷ்மினா சால்வையை இன்னும் நல்லாப் போத்திக்கறேன். இந்தக் கடன்காரன் சரி கடங்காரர் வரலியே சீக்கிரம் வந்து தொலைக்கக் கூடாதான்னு மனசுக்குள்ளே திட்டிக்கிட்டே இருட்டிலே நிக்கறேன்.

அப்பப் பாரு எங்கே இருந்தோ ஒரு கிழவன் வந்து சேர்ந்தான். உனக்குத் தெரியுமே அவனை.

மொட்டத்தலை. கை விரல் இருக்க வேண்டிய இடத்துலே ரத்தக் கண்ணீர் எம்.ஆர்.ராதா மாதிரி துணி சுத்திக்கிட்டு .. ஒரு கால் வேறே ஊனம் .. விந்தி விந்தி நடந்துக்கிட்டு ஒளிஞ்சு ஒளிஞ்சு ஓடுவானே. நீ கூட என்கிட்டெ சொன்னியே ‘டா பாவம்டா தாத்தன் .. அவனுக்கு சோறு போடுடா .. காசு கொடு.. ‘ . நான் முடியாதுன்னேன் நினைவிருக்கா ? என்னமோ தெரியலே ஆரம்பம் முதல்லே அவனைப் பார்த்தா எனக்கு என்னவோ பாவமாத் தெரியலே.

நேத்து ராத்திரி .. பாடாதேடி கழுதை .. ஓங்கி முதுகிலே போடுவேன் .. யம்மாவும் ஆச்சு சும்மாவும் ஆச்சு .. தூக்கம் போச்சுதான்.. தூங்காம என் வுட்-பி வரான்னு நிக்கறபோது இந்தக் கிழவன் வந்து சேர்ந்தான் பக்தி உள்ள மிருகம் மாதிரி – அதாண்டி கரடி .. அதுதானே பூஜை வேளையிலே வரும்…

கிழவன் அங்கேயும் இங்கேயும் பார்த்துட்டு என் பக்கத்துலே வந்தான்.

‘இன்னாம்மே .. டாஜண்டான பொண்ணுங்க எல்லாம் வூட்டுலே தூங்கற நேரம் .. நீ இங்கே இன்னா பண்றே ? ‘

நான் கண்டுக்கலே.

வைக்கோலைப் பார்த்த கிழட்டு எருமை மாடு போல் பக்கத்துலேயே சுத்திச் சுத்தி வந்தான்.

‘வெத்திலை போடறியாடி பொண்ணே ? ‘

இடுப்புலே இருந்து சுருக்குப் பையை எடுத்து காஞ்சு போன வெத்திலையையையும், பாக்கையும் எடுத்துக் கொடுக்கறான். ‘வெத்திலை போட்டா உன் வாய் சிவக்கும். கன்னம் வெக்கத்துனாலே சிவந்திருக்கும் ‘ அப்படான்னு பழைய பாட்டை வேறே எடுத்து விடறான்.

‘பாரு உன்னைக் கப்புனு புடிச்சுக்கப் போறேன் ‘

இவன் .. பிடிச்சுக்கக் கையே காணோம் .. இந்தக் கிழம் என்னை என்ன பண்ணிடும்னு நான் பாட்டுக்கு நின்னேன்.

‘ஓஹோ நீ மோகினிப் பிசாசா .. புரிஞ்சு போச்சு ‘

அவன் கொஞ்சம் மிரண்டுதான் போயிருந்தான் போலே இருக்கு. இருந்தாலும் உதார் விடறதை மட்டும் நிறுத்தலை.

‘ஏ பொண்ணு நீ மோகினிப் பிசாசுன்னா நானு யாரு தெரியுமா ? கொள்ளிவாய்ப் பிசாசு. பிசாசும் பிசாசுமா நாம கொஞ்சம் பேசிட்டு இருப்போமே .. வாயேன் .. ‘

இன்னும் பேச விட்டா இவன் மேலேயே வந்து விழுந்துடுவான் .. ராஸ்கல்.

கீழே குனிஞ்சு ஒரு பிடி மண்ணை அள்ளி அவன் மூஞ்சிலே எறிஞ்சேன் பாரு.. லபோ திபோன்னு கத்திக்கிட்டு துண்டக் காணோம் துணியைக் காணோம்னு ஒரே ஓட்டம்…

அப்புறம் என்ன அங்கே நிக்கறேன் .. சே .. சரியான நேரத்துலே வந்து காரியத்தையே கெடுத்துட்டாண்டி. என்னோட அவர் பாவம் ஏமாந்தே போயிருப்பார்.

புலி வரும்னு பார்த்தா கிழட்டு நரி வந்து சேர்ந்து .. சிரிக்கறியாடி .. நல்லாச் சிரி .. அதுக்குத்தானே உங்கிட்டே சொன்னேன். யார் கிட்டேயாவது போட்டுக் கொடுத்தியோ .. அவ்வளவுதான் ..

இது என்ன ? போன வாரம் நான் படித்த பத்திரிகைக் கதை என்று நினைத்தால் உங்களுக்கு சைஃபர் மார்க் தான்.

இந்த ஈவ் டாசிங்க் ரிப்போர்ட்டுக்கு வயது ஆயிரத்து ஐநூற்றுச் சொச்சம்.

சங்க இலக்கியமான கலித்தொகையில் வரும் கவிதை தான் இது.

முழுக் கவிதை இதோ (பதம் பிரித்து)

திருந்திழாய் கேளாய். நம் ஊர்க்கு எல்லாம் சாலும்

பெருநகை. அல்கல் நிகழ்ந்தது ஒரு நிலையே.

மன்பதை எல்லாம் மடிந்த இருள் கங்குல்

அம்துகில் போர்வை அணி பெறத் தைஇ, நம்

இன்சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக.

தீரத் தறைத்த தலையும் தன் கம்பலும்

காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து, நம்

சேரியில் போகா முட முதிர் பார்ப்பானை

தோழி, நீ போற்றுதி என்றி. அவன் ஆங்கே

பாரா, குறழா, பணியா, ‘பொழுது அன்றி

யார், இவண் நின்றீர் ? ‘ எனக் கூறி, பையென

வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது

‘தையால்! தம்பலம் தின்றியோ ? ‘ என்று தன்

பக்கு அழித்து, ‘கொண்டா ‘ எனத் தரலும் யாது ஒன்றும்

வாய்வாளேன் நிற்ப – கடிது அகன்று கைமாறி

‘கைப்படுக்கப் பட்டாய். சிறுமி நீ! ‘ ‘மற்று யான்

ஏனைப் பிசாசு; அருள்; என்னை நலிதரின்

இவ்வூர்ப் பலி நீ பெறாஅமல் கொள்வேன் ‘

எனப் பலவும் தாங்காது வாய்பாடி நிற்ப

முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து, யான் எஞ்சாது

ஒருகை மணல் கொண்டு, மேல் தூவக் கண்டே

கடிது அரற்றிப் பூசல் தொடங்கினான் ஆங்கே.

ஒடுங்கா வயத்தின் கொடுங்கேழ் கடுங்கண்

இரும்புலி கொண்மார் நிறுத்த வலையுள் ஓர்

ஏதில் குறுநரி பட்டற்றால். காதலன்

காட்சி அழுங்க, நம் ஊர்க்கு எலாஅம்

ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன்

வாழ்க்கை அதுவாகக் கொண்ட முதுபார்ப்பான்

வீழ்க்கைப் பெருங் கருங் கூத்து.

(கலித்தொகை – குறிஞ்சிக்கலி – கபிலர் பாடியது)

பாட்டன், அவனுக்குப் பாட்டன், முப்பாட்டன் காலத்து மூட்டையைத் தரையில் போட்டுக் கொண்டு குந்தி இருக்கிறோம்.

‘கண்றாவிடா .. வீட்டிலே உக்கார ஒரு நாற்காலி கூட இல்லாம இப்படிப் பழைய பவானி ஜமுக்காளத்துலே கட்டின மூட்டை .. உள்ளே என்ன எழவோ கல்லுக் கல்லா .. உறுத்துது ‘

உள்ளே பாளம் பாளமாகத் தங்கம் இருக்கிறது.

***

eramurug@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்