வாழ்க புவனேஸ்வரி!! ஒழிக விஜயகாந்த் !!!

This entry is part [part not set] of 28 in the series 20030504_Issue

மோகன்


ஆனந்த விகடனில் தொலைக்காட்சி நடிகை புவனேஸ்வரி அவர்களின் பேட்டி வெளியாகியிருந்ததை படித்திருப்பீர்கள். நான் சமீபத்தில் வெகுஜன பத்திரிக்கைகளில் படித்த பேட்டிகளிலேயே தெளிவான சிந்தனை கொண்ட பேட்டி இஇதுதான்.

இதற்கு முன்னால் சில வாரங்களுக்கு முன்னர், நடிகர் விஜயகாந்த் பேசியபோது, தொலைக்காட்சி நடிகைகள் மட்டுமே விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்றும், சினிமா நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதில்லை என்றும் கூறியிருந்தார். நடிகர் விஜயகாந்த் இப்போது நடிகர் சங்கத் தலைவர். நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்காக , எல்லா நடிகர்களையும் கூட்டிக் கொண்டு போய் கலைவிழா நடத்தி சங்கத்தின் கடனை அடைத்தவர்.

எல்லா தொலைக்காட்சி நடிகைகளும் இப்படிப்பட்ட ஒரு மடத்தனமான பேச்சை கண்டித்து போர்க்கொடி தூக்கினார்கள். இப்படிப்பட்ட பேச்சைப் பேச வேண்டிய அவசியம் என்ன ? தொலைக்காட்சி நடிகைகள் எல்லோரும் இப்படிப்பட்ட விபச்சாரிகள் என்றபடி ஒரு குற்றச்சாட்டு பொதிந்திருக்கும் இந்த பேச்சுக்கு கடுமையான முறையிலே எல்லோரும் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் வழக்கம்போல, பாதிக்கப்பட்ட தொலைக்காட்சி நடிகைகள் மட்டுமே இதற்கு கண்டனம் தெரிவித்தார்கள். மற்றவர்கள் கம்மென்று இருந்தார்கள் .

புவனேஸ்வரி ஒரு அட்டகாசமாக முறையில் இந்த சினிமா நடிகரின் பேச்சைக் கட்டுடைத்து, அவருடைய உள்நோக்கத்தை புட்டு வைத்திருக்கிறார். விஜய்காந்தின் இந்தப் பேச்சில் விஜய்காந்த மட்டுமல்ல, எல்லா சினிமா நடிகர்களின் குரலும் அடங்கியுள்ளது.

சினிமாக்களில் இருப்பது நடிகர்களின் இயக்குனர்களின் முக்கியமாக ஆண்களின் ஆதிக்கம். ஹீரோக்களின் மீடியம் தான் இன்றைய சினிமா. கண்டமேனிக்கு பட்டங்களுடனும்- சூப்பர் ஹீரோ, நவரச நாயகன், ஆக்ஷ்ன் ஹீரோ, புரட்சிக் கலைஞர் இத்தியாதி – கும் கும்மென்று குத்துவிட்டுச் சண்டை போட்டு, ஹீரோயினைக் காப்பாற்றும் பாபாக்களும், நாட்டாமைகளும், தேவர் மகன்களும், சூரிய வம்சங்களும் நிறைந்த சினிமா உலகிற்கு கருத்தளவிலும் சரி, பண ரீதியிலும் சரி தொலைக்காட்சி தொடர்கள் ஒரு முக்கிய சவாலாய் எழுந்துள்ளன.

தொலைக்காட்சி இன்று முக்கியமாக பெண்களின் பொழுதுபோக்காகவும், அதில் வரும் சீரியல்கள் பெண்களின் பார்வையிலிருந்தும், பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஊடகமாக மாறிவருகிறது. ஏற்கெனவே சித்தி தொடங்கி அண்ணாமலை வரையில், பெண் மையப்படுத்தப் படும் ஊடகமாக தொலைக்காட்சி மாறிவிட்டது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இன்று, பெண்களின் அபிமானத்தை பெற்றவராக ஒரு சினிமா ஆண் நடிகர் வருவது அரிது. எம்ஜியார் போன்ற ஒரு தாய்க்குல ஆதரவோடு ஒரு ஆண் பிரபலம் அடைவது கடினம். ஒரு படத்தில் நடித்தவுடனேயே அடுத்த முதல்வர் என்று காசு கொடுத்து போஸ்டர் ஒட்ட ஏற்பாடு செய்யலாமே தவிர, பெண்களை தியேட்டருக்கு இழுத்துவர சினிமா நடிகர்களால் முடியவில்லை. கம நடித்த அன்பே சிவமும் சரி, ரஜனிகாந்த் நடித்த பாபாவும் சரி ஓடவில்லை. இனி சினிமா நடிகர்கள் பின்னால் போகப் பெண்கள் தயாரில்லை. அதன் காரணம் தொலைகாட்சியில் இருக்கும் பெண் மையம்.

இந்த சூழ்நிலையில் பெண்களை பெண்கள் பார்க்கும் சீரியல்களிலிருந்து பிரித்தெடுக்கச் செய்யும் உபாயமே, தொலைகாட்சிகளில் சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் விபச்சாரிகள் என்று சினிமா கலைஞர்கள் செய்யும் பிரச்சாரம். என்று புவனேஸ்வரி சொல்கிறார்.

உண்மையாக இருக்கலாம். உண்மையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நடந்திருக்கும், நடந்து கொண்டே இருக்கும் ‘விபச்சார தடுப்பு நடவடிக்கைகளை ‘ பார்க்கும்போது அவரது கருத்தில் உண்மை இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

இதுவரை கிசுகிசு வராத ஆண் நடிகர்கள் எத்தனை பேர் ? சிவக்குமாரை தவிர கிட்டத்தட்ட எல்லா நடிகர்களும் ஒரிரு முறையாவது மஞ்சள் பத்திரிக்கைகளில் இந்த நடிகையுடன் சகவாசம் அந்த நடிகையுடன் சகவாசம் என்று அசிங்கப்பட்டிருக்கிறது. கிசுகிசுக்கள் தொஇடங்கி, நாகரிகமான முறையில் இரண்டெழுத்து நடிகை நான்கெழுத்து நடிகருடன் சுற்றுகிறார் என்று ‘நாகரிகமான ‘ முறையில் பத்திரிகைகளில் செய்தி எழுதவென்றே ஒரு நிருபர் கும்பல் உண்டு. தொலைக்காட்சி நடிகை தன் ஆண் நண்பருடன் சென்றால் அது விபச்சாரம், சினிமா இயக்குனர் அல்லது நடிகர் பெண் நடிகையுடன் சென்றால் அது ‘சிருஷ்டிகரமான உறவுமுறை ‘யா ? ஆண் சினிமா நடிகர்கள் பெண்களுடன் சுற்றினால் அது ஆண்மையின் சின்னம், தொலைக்காட்சி நடிகைகள் தம் ஆண் நண்பர்களுடன் சுற்றினால் அது விபசாரமா ?

இதுவரை எத்தனை ஆண் சினிமா நடிகர்கள் இது போல விபச்சாரத்துக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் ? இதுவரை எத்தனை ஆண் அரசியல்வாதிகள் இதுபோல விபச்சாரத்துக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பகிரங்கமாகவே திருமணம் செய்யாமல் இரண்டு மூன்று மனைவியருடன் வாழும் அரசியல்வாதிகளும் சினிமா நடிகர்களும் நிறைந்த இந்த தமிழகத்தில், தொலைக்காட்சி நடிகைகளை விபச்சார வழக்கில் கைது செய்வது போன்ற வடிகட்டின பம்மாத்தை இன்னும் எத்தனை முறை நாம் பார்க்கப்போகிறோம் ?

தொலைக்காட்சித் தொடரின் நடிகைகளை தூற்றுவதற்காகவும், அவர்கள் மீது தவறான கருத்தினை ஏற்படுத்தி அதன் மூலமாக தொலைக் காட்சி பார்ப்பதிலிருந்து பெண்களைப் பிரித்து எடுகக்வும் , சினிமா நடிகர்கள் மேற்கொள்ளும் மறைமுக நடவடிக்கை இது என்பதில் உண்மை இருக்கக் கூடும் என்று தான் தோன்றுகிறது.

தொலைக்காட்சி நடிகைகள் மற்றும் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட அனைத்து பெண்களும் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும். அல்லது அவர்கள் போலீஸ் மீது மான நஷ்ட வழக்கு போட வேண்டும். ஆண்களை பிடிக்காமல் பெண்களை மட்டும் கைது செய்யும் அரசியல் சட்டம் மாற்றப்பட வேண்டும்.

விபச்சாரம் சட்டப்படியான தொழிலாக மாற்றப்பட்டால் கூட இப்படிப்பட பழிவாங்கும் நடவடிக்கைகளை சட்டப்படி தடுத்துவிட முடியாது. இதனைப்பற்றிய வெளிப்படையான பேச்சும், சினிமா நடிகர்களைப் பற்றிய விமர்சனமுமே இந்த நடவடிக்கைகளை குறைக்கும்.

வன்கொடுமைக்காளான பெண்களின் படத்தை வெளியிடுவதைத் தடுக்க வேண்டும் என்று ஒரு வழக்குத் தொடரப் பட்டுள்ளது. இதே போல் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்களின் படத்தையும் வெளியிடக் கூடாது என்று தடை உத்தரவு நீதிமன்றத்தில் பெறப்பட வேண்டும். விபச்சார வழக்கில் ஒரு பெண்ணுக்கு தண்டனை வழங்கினால், அத்துடன் அந்தப் பெண்ணுடன் தொடர்பு கொண்ட பத்து ஆண்களுக்காவது தண்டனை வழங்கினால் தான் பெண்ணுக்கு அளித்த தண்டனை செல்லும் என்று தீர்ப்புச் சொல்ல நீதிபதிகள் முன்வரவேண்டும்.

***

கொசுறு : இது போன்ற ஒரு பேட்டியை துணிச்சலாய் வெளியிட்டு, புவனேஸ்வரி போன்றவர்கள் ஒன்றும் தீண்டத்தகாதவர்கள் அல்ல என்று சொல்லும் விகடனுக்கு பாராட்டு.

தினகரனில் இந்த பேட்டிச் செய்தியை வெளியிட்டபோது அது இட்ட தலைப்பு ‘ விபச்சார வழக்கில் கைதான புவனேஸ்வரி அ தி மு க உறுப்பினர். ‘ என்ன திமிர் பாருங்கள்! திமுகவில் இருந்தவர்கள், இருக்கிறவர்கள் யாரும் விபசார வழக்கில் கைதானதில்லையா ?

Series Navigation

மோகன்

மோகன்