தீர்வை நோக்கி விரையும் காவிரிப் பிரச்சனை

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

கோ. ஜோதி


பல்லாண்டுகளாகவே தீர்க்கப்படாமல், கவனிப்பாரின்றி கிடந்த காவிரிப் பிரச்சனை தற்போது புதிய வடிவம் பெற்றுள்ளது. தமிழக கர்நாடக மாநிலங்களுக்கிடையே இருந்து வரும் இப்பிரச்சனையில் போதிய தண்ணீர் தமிழகத்திற்குக் கிடைக்காதபோது, மேலும் இப்பிரச்சனையை பெரிதாக்கி அதில் அரசியல் லாபங்களும் தேடிக்கொள்வதுண்டு. இந்த பிரச்சனையை ஒரு சுமுக முடிவுக்குக் கொண்டுவர சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் (Madras Institute of Development Studies) சேர்ந்த நீர்வள ஆய்வுகள் செய்து வரும் பேராசிரியர் ஜனகராஜன் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, தமிழகம் மற்றும் கர்நாடகத்திலுள்ள காவிரிப் பிரச்சனையில் உண்மையான அக்கறையுள்ள விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஓய்வுபெற்ற பொறியாளர்கள், அரசுத் துறையில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் நீர்வள நிபுணர்கள் ஆகியோரைச் சந்தித்து, அவர்களிடம் விளக்கங்களைக் கூறி, இப்பிரச்சனைக்கு ஒரு சுமுக தீர்வு வேண்டுமென்பதை வலியுறுத்தினார்.

இதன் முதல்கட்டமாக 2003 ஏப்ரல் 4, 5 தேதிகளில் சென்னையில் தமிழக கர்நாடக விவசாயிகள், முக்கிய விவசாயத் தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள், ஓய்வுபெற்ற பொறியாளர்கள் மற்றும் அரசுத்துறை உயரதிகாரிகள், வழக்கறிஞர்கள், வெகு ஜன ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் நீர்வள நிபுணர்கள் ஒன்று கூடினார்கள். இரண்டு நாட்களிலும் காவிரி நீர் சம்மந்தமான 20 ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இவைகளுக்கிடையே விவாதங்களும் கருத்து பரிமாற்றங்களும் தொடர்ந்தன. கர்நாடக தமிழக விவசாயிகள் தங்கள் வேற்றுமைகளை மறந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தும் பல்வேறு கோணங்களில், காவிரிப் பிரச்சனையை அணுகியிருந்தன. இதில் அரசியல்வாதிகளின் அணுகுமுறைகளும், நீதித் துறையின் தலையீடும் இப்பிரச்சனையை நீண்டகாலத்திற்குக் கொண்டு செல்லும் என்பதையும் இவர்கள் உணர்ந்தனர். இறுதியில் இக்கருத்தரங்கின் விவாதங்களை மேலும் இரண்டு நாட்கள் மைசூரில் தொடர்ந்து நடத்துவது என்பது தீர்மானிக்கப்பட்டது. இரு மாநிலங்களைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் கொண்ட ஒரு தற்காலிக குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் கர்நாடகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.என். நாகராஜ், எஸ். பிஸ்லய்யா, பவானிசங்கர், விவசாய சங்கத் தலைவர் கே.எஸ். புட்டண்ணய்யா, பேராசிரியர் கே.சி. பசவராஜ், பிரபல பத்திரிக்கையாளர் பார்வதி மேனன், புஷ்பா சுரேந்தர், சுனந்தா ஜெயராமன், வி.எஸ். பிரகாஷ், தேவராஜ் அர்ஸ், கங்கப்பா ஐ.ஏ.எஸ் (ஓய்வு), ஹெச். சிவராமன், என்.என். சாஸ்திரி, போரைய்யா போன்றவர்களும், தமிழ்நாட்டிலிருந்து விவசாயிகளின் சார்பில் மன்னார்குடி ரெங்கநாதன், ஆறுபாதி கல்யாணம், லால்குடி கனகசபை, திருச்சி வெங்கடேஸ்வர தீட்சிதர், சுவாமிமலை விமலநாதன், காரைக்கால் கல்யாணசுந்தரம், மகாதானபுரம் ராஜாராமன், ரெங்கசாமி, கோபால தேசிகன், வி. கண்ணன் ஆகியோரும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் வி.கே. நட்ராஜ், டாக்டர் கிருபா, இந்நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் நீலகண்டன், ஓய்வு பெற்ற பொறியாளர் வி.எஸ். நடராஷன், டாக்டர் ஏ. ராஜகோபால், டாக்டர் பால் அப்பாசாமி, டாக்டர் ஹேமா, டாக்டர் ஜே. ஜெயரஞ்சன் ஆகியோரும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளான கே. பாலகிருஷ்ணன், டாக்டர் துரை மாணிக்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. செழியன் துவக்கவுரை ஆற்றினார். டெல்லியைச் சேர்ந்த ராமஸ்வாமி ஐயர் அவர்கள் இரண்டு நாட்களும் கலந்து கொண்டு உரையாற்றினார். இவருடைய உரை இரு மாநில விவசாய பிரதிநிதிகளுக்கும் ஊக்கம் தருவதாக இருந்தது.

இக்கருத்தரங்கத்திற்கான நிதி உதவியை சர்வதேச நீர்வள மேலாண்மை நிறுவனம் (IWMI) அளித்துள்ளது.

jothi_mids@yahoo.co.uk

Series Navigation

கோ. ஜோதி, ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்.

கோ. ஜோதி, ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்.