புஷ்-ப்ளேர் நடத்தும் ஈராக் போரின் விளைவுகளும் இந்தியாவும்

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

சின்னக் கருப்பன்


******

போர் ஆரம்பித்து 16 நாட்களாகின்றன. நாங்கள் போய் நிற்போம், ஈராக்கியர்கள் எங்களுக்கு மாலை போட்டு வரவேற்பார்கள் என்று பேசிக்கொண்டிருந்த அமெரிக்க தலைவர்கள், ‘இப்போதுதான் போர் ஆரம்பித்திருக்கிறது ‘ என்று சால்ஜாப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். எதிர்ப்பு இல்லாமல் நீண்ட சாலையில் பாக்தாத் வரை சென்றபின்னர் திரும்பிப்பார்த்தால் சாலையில் சப்ளை இல்லை. திடார் தாக்குதல்கள். சாப்பாட்டு ரேஷன், சிகரெட் இல்லை. டாங்கிகளுக்கு வரவேண்டிய பெட்ரோல் வண்டிகள் தாக்கப்பட்டு சேதம். குவாய்த்துக்கு பக்கத்தில் இருக்கும் உம்-காஸர் நகரமே இன்னும் முழுமையாக அமெரிக்க-பிரிட்டிஷாரால் கைப்பற்றப்படவில்லை. உள்ளே எதிரி படைகளை வரவிட்டு அவர்களது மூச்சுக்காற்றை அடக்க ஈராக்கிய வியூகம் முயல்கிறது. மூச்சுக்காற்று அடங்குவதற்குள், விமானப்படையையும் துருப்புகளையும் வைத்து பாக்தாத்தை கைப்பற்றி ஈராக்கை முழுமையாக ஆக்கிரமித்து, ஈராக்கிய துருப்புகளை மன உறுதி இழக்கவைத்து சரணடைய வைப்பது அமெரிக்காவின் திட்டம் என கருதுகிறேன். அதனை நோக்கி பிபிஸி, சிஎன்என், நேஷனல் ஜியாகிராபிக் இன்ன இதர அமெரிக்க-ஆங்கிலேய பிரச்சார சாதனங்கள் தீவிரமாக இறங்கியிருக்கின்றன.

போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் நான் போர் வரக்கூடாது என்று விரும்பினேன். போர் நிச்சயம் வரும் என்று தெரிந்திருந்தாலும், அப்படி நான் விரும்பியதன் காரணம், போர் இஸ்லாமியத் தீவிரவாதத்தை மிகவும் அதிகரிக்கச் செய்துவிடும் என்பதுதான். எதிர்பார்த்தது போலவே, அமெரிக்காவின் காலடியில் ஈராக் படுக்கவில்லை என்று தெரிந்ததுமே, காஷ்மீரில் இஸ்லாமியத் தீவிரவாதம் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. ஈராக் மும்முரத்தில், பாகிஸ்தானையும் காஷ்மீரையும் அமெரிக்கா பார்க்காது என்று கருதி, பாகிஸ்தான் தன் பழைய வேலைகளை அதி வேகத்தில் பண்ணுவதன் விளைவு, அது காஷ்மீர் இந்துக்களை ‘காஷ்மீர விடுதலை வீரர்கள் ‘ கொல்வதில் தொடர்கிறது. பனி உருகியதும், இது இன்னும் அதிகரிக்கும். ஈராக்கிய புதைமணலில் அமெரிக்காவின் கால் இறங்க இறங்க, அது வெளிவரத் தவிக்க ஆரம்பித்துவிடும். அதன் காரணமாக, பாகிஸ்தானுக்கு தைரியம் அதிகரிக்கும். ஈராக்கில் அமெரிக்கப்படைகள் கஷ்டப்படுவது, அல்லாவின் கருணையாக பாகிஸ்தானில் அரசாங்கம் பிரச்சாரம் செய்யும். அது இன்னும் அதிகமாக பாகிஸ்தானிய பயங்கரவாதிகளுக்கு தூண்டுதலாக ஆகும்.

ஆகவே, கார்கில் போன்று, வெகு விரைவில் இன்னொரு காஷ்மீர் பிரச்னையை பார்க்கலாம் என்பது என் எதிர்பார்ப்பு.

***

ஈராக் போர் இதே போல இன்னும் 2 மாதங்கள் நடந்தாலே ஈராக்குக்கு வெற்றி என்றுதான் கருதவேண்டும். அப்படி ஈராக் வெற்றிபெறுவது இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாக முடியும். ஆனால் பிரச்னை என்னவென்றால், இதில் அமெரிக்கா வெற்றி பெற்றாலும் இந்தியாவுக்கு பிரச்னைதான். இந்த போர் தொடர்ந்து நடந்தாலும் இந்தியாவுக்கு பிரச்னைதான்.

இந்த போர் ஒரு வியத்நாம் போர் போல இழுத்தடித்து, அமெரிக்க போர்வீரர்கள் அதிக அளவில் உயிரிழப்பது என்பது நடக்கக்கூடியது. அப்படி நடந்தால், ஈராக் போருக்கு அமெரிக்காவில் இருக்கும் ஆதரவு கணிசமாக குறையும். அமெரிக்காவும் பிரிட்டனும் ஏதோ ஒரு காரணம் கண்டுபிடித்து ஈராக்கிலிருந்து வெளியேற நேரிடலாம். அது ஈராக்கின் வெற்றிதான். அது உலகெங்கும் இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுக்கும். முக்கியமாக பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு இது தேனென இனிக்கும். பாகிஸ்தானிய அரசாங்க ஆதரவுடன், காஷ்மீர வெற்றி அருகே இருக்கிறது எனக்கருதி பாகிஸ்தான் இந்தியாவோடு போரிட முடிவெடுக்கும். அதற்கு முன்னர், இந்து கோவில்களிலும், உள்நாட்டு கலவரத்துக்கென பல மசூதிகளிலும் சர்சுகளிலும், பெரும் பயங்கரவாத செயல்களை எதிர்பார்க்கலாம். இது ஏற்கெனவே பிளவு சக்திகள் இருக்கும் தேசத்தை இன்னும் தீவிரவாதத்தின் பக்கம் செலுத்தும். ஆசியாவின் ஒரே ஜனநாயக நாடான இந்தியாவில் இருக்கும் கொஞ்ச நஞ்ச சுதந்திரங்களும், ஜனநாயகமும் தேசப் பாதுகாப்பு பெயரில் போடோ மயமாக்கப்படும்.

***

ஆனால் அமெரிக்கா ஜெயித்தாலும், அது பிரச்னை தான். அமெரிக்கா ஜெயித்தால் குரங்கு பூனைகளுக்கு பங்கு போட்ட கதையாய் காஷ்மீர் பிரச்னையை நான் தீர்த்து வைக்கிறேன் என்று அடாவடியாக முன்னுக்கு வரும். அப்படித்தான் என்று ஏற்கெனவே காலின் பவல் அவர்கள் பேசியிருக்கிறார். ஆகவே நிச்சயம். அமெரிக்கா-பிரிட்டன் ஆதரவில் இது நாள் வரை உயிர்வாழ்ந்து வரும் பாகிஸ்தானும், அது ஆதரவு கொடுத்து வளர்த்துவரும் இந்தியாவின் தீவிரவாத இயக்கங்களும் இன்னும் பலம் பெறும். நேரடியாக பெரிய அண்ணாச்சியிடம் நாங்கள் பேசிக்கொள்கிறோம் என்று ஹரியத் ஆட்கள் பேச ஆரம்பிப்பார்கள். காஷ்மீர்ப் பிரசினையில் இருக்கும் அணுகுண்டு ஆபத்தைத் தடுக்க தாங்கள் நிச்சயம் காஷ்மீர் பிரச்னையை தீர்த்தாக வேண்டும் என்று விதண்டாவாதம் செய்து காஷ்மீர் இந்தியாவுக்கும் வேண்டாம் பாகிஸ்தானுக்கும் வேண்டாம், நான் வைத்துக்கொள்கிறேன் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் உள்ளே வந்து உட்கார்ந்து கொள்வார்கள். அதற்கு ஐக்கிய நாடுகள் முகமூடி இருந்தாலும் இருக்கும். சீனா தனக்கு இந்தப்பக்கம் அருகாமையில் அமெரிக்கா உட்கார்ந்து கொள்வதை எதிர்த்து ஏதேனும் முகம் சுளித்தாலும், அமெரிக்காவின் மூலதனத்தை வேண்டி வாய்மூடியே இருக்கும். ஒருவேளை, சீனாவின் பிராக்ஸிகள் சென்னையில் உட்கார்ந்து அமெரிக்கா செய்வது தவறு, பாஜக செய்தது தேச துரோகம் என்று கல்லெறிந்து கொண்டிருக்கலாம். காஷ்மீருக்கு சுதந்திரம் கேட்டு போராடும் ஞானவான்கள் மிக்க சந்தோஷம் அடைந்து அமெரிக்காவே உலகத்தில் இருக்கும் சுயநிர்ணய உரிமை பிரச்னைகளை எல்லாம் தீர்த்துவைக்க வேண்டும் என்று ஓலை எழுதலாம். (அதெல்லாம் அமெரிக்கா புதிய நவகாலனியத்தை ஏற்படுத்த விடும் அறைகூவல். நவகாலனியம் வந்தாலும் சுய நிர்ணய உரிமைப் போரின் பாதுகாவலன் தான் அமெரிக்கா என்றும் சில நாக்குகள் பேசக் கூடும். )கிழக்கு டிமோரில் இருக்கும் பெட்ரோல் வளத்தை அடாவடியாக அடிமாட்டுவிலைக்கு ஆஸ்திரேலியா குத்தகைக்கு எடுத்திருக்கிறது. டிமோர் சுதந்திரம் பற்றிப் பேசிய யாரும் இப்போது வாய் திறக்கவில்லை என்பதைக் கவனியுங்கள்.

***

ஈராக் போர் வெகுகாலம் நடந்தாலும் பிரச்னைதான். இது உலகெங்கும் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு ஒரு உடனடி குறிக்கோளை ஏற்படுத்தும். ஈராக் போர் போன்ற ஒரு அற்புதமான வாய்ப்பை பின் லாடன்கள் நழுவ விடுவார்களா என்ன ? இது அதிகம் இஸ்லாமிய தீவிரவாதம் இல்லாத இந்தியாவுக்கும் பரவும். காந்தி கிலாபத் இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்தது போல, ஈராக் விடுதலைக்கு ஆதரவு கொடுத்து இஸ்லாமியர்களது ஓட்டுக்கு காங்கிரஸ் அலையும். இது இன்னும் ஒரு தீவிரவாத இயக்கத்துக்கு அடித்தளமாக ஆகி, இந்திய சமூகம் பாதுகாப்பற்ற சமூகமாக ஆகும்.

***

இந்தியர்கள் செய்யக்கூடியது என்ன ? இந்தியர்கள் நலன் கருதும் அறிவுஜீவிகள் பேசக்கூடியது என்ன ?

முதலில் இந்தப்போருக்கும் இந்தியாவுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவு படுத்த வேண்டும். போர் என்றால் எதிர்ப்பது சமாதான விரும்பிகளான மக்களின் உணர்வுதான். ஆனால், விளம்பரப்படம் போல காட்டப்படும் இந்தப் போருக்கு, அதன் இசைக்கேற்ப தாளம் போட வேண்டிய அவசியமில்லை. இதுவரை ஈராக் போரில் சுமார் 1000 பேர்கள் தான் இறந்துள்ளனர். சமீபத்தில், ர்வாண்டாவில் சுமார் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டபோது இந்திய பத்திரிக்கைகளோ, இந்திய வானொலியோ, இந்திய அறிவுஜீவிகளோ, இந்திய தொலைக்காட்சியோ , இந்து போன்ற பத்திரிகைகளோ இது போலக் கதறவில்லை. சொல்லப்போனால், அப்படி நடந்தது கூட யாருக்கும் தெரியாது. அப்படி இருக்கும்போது ஏன் நாம் இதனைப் பற்றி கவலைப்படவேண்டும் ? முட்டாள் சதாமும் முட்டாள் புஷ்-உம் மோதிக்கொள்ளும்போது, உள்ளே நுழைந்து கருத்துச் சொல்லி அடிபட்டுக்கொள்ள முட்டாள்களா நாம் ? ஆப்பிரிக்கர்கள் இறந்தால், அது செய்தி இல்லை; வளைகுடாவிலும் அமெரிக்காவிலும் மேற்குலகிலும் மக்கள் இறந்தால் மட்டுமே அது செய்தி என்று எண்ணும் நம் சிந்தனையை, நம்மை அப்படி சிந்திக்கவைக்கும் ஊடகங்களை நாம் கேள்வி கேட்க வேண்டும்.ஏகாதிபத்தியம் கொன்றால் தவறு, கம்யூனிசம் கொன்றால் தவறில்லை, இனப் போரில் மக்கள் கொல்லப் பட்டால் தவறில்லை, ஆப்பிரிக்க ஆசிய உயிர்களுக்கு விலை இல்லை என்ற நம் சிந்தனைப் போக்கு கேள்விக்குள்ளாக்கப் படவேண்டும்.

ஆப்பிரிக்க மக்கள் இறக்கும் போது பல் குத்திக்கொண்டிருந்த நாம் ஏன் அரபு தேச மக்கள் இறக்கும்போது உணர்ச்சி வசப்படவேண்டும் ? உண்மைதான். போர் என்பது அவலமானது. சொல்லப்போனால், ர்வாண்டாவில் பொது மக்கள் இறந்ததைவிட மிகவும் மிகவும் குறைவாகவே பொதுமக்கள் இந்த போரில் இறந்திருக்கிறார்கள். பொது மக்கள் இறப்பு என்பது அமெரிக்காவுக்கு எதிராக உலக மக்கள் கொண்டிருக்கும் கருத்தை வலுப்படுத்திவிடும் என்ற உணர்வோடு அதனை குறைக்க விழிப்புணர்வுடன் அமெரிக்க படைகள் முயல்கிறார்கள். அப்படிப்பட்ட எதுவும் இல்லாமல், பல லட்சக்கணக்கான பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள் ர்வாண்டாவில். ர்வாண்டாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அரபு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்கவேண்டும் ? உண்மைதான். ஏராளமான இந்தியர்கள் அங்கு வேலை செய்கிறார்கள். அவர்களது நலன் நமக்கு முக்கியம். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும், பிரச்னை என்றால் உடனே இந்தியாவுக்கு கொண்டுவரவும் இந்தியா உதவ வேண்டும். அப்படி இந்திய அரசாங்கம் உதவாமல் இருக்காது. உதவாவிட்டால் போராடவேண்டியது சாதாரண இந்தியர்களான நம் கடமை. அதனைத்தாண்டி நமக்கு இந்த வளைகுடா போரில் எந்த பங்கும் கிடையாது. வேலை பிச்சை கேட்கும்போது மட்டும் வளைகுடா வேண்டும், பிரச்னை என்றால் ஓடிவிடுகிறாய் என்று இந்தியர்களை குற்றம் சொன்னாலும் சொல்லட்டும். நாம் ஒன்றும் சும்மா உட்கார்ந்து கொண்டு சாப்பிடவில்லை. உழைக்கிறோம். உழைத்த உழைப்புக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தில் ஒரு பகுதிதான் பிச்சை போல விழுகிறது. ஒரே வேலை செய்யும் அமெரிக்கனுக்கும் இந்தியனுக்கும் உள்ள ஊதிய வித்தியாசம் நாம் அறியாததல்ல.

***

வளைகுடாப் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றால் அமெரிக்க டாலரின் அரசாட்சி தொடரும் என்பது உண்மை. அது இன்னும் அதிகமாக வீங்கிய கடன் தொகையை இந்திய அரசாங்கத்தின் மடியில் வைக்கும். இந்திய அரசாங்கம் வேறு வழியின்றி சாதாரண மக்களான நம் மீது அதிக வரியாக கொண்டுவரும். அல்லது செலாவணி மதிப்புக் குறைப்பு என்ற பெயரில் மக்களின் விலைவாசியும் , பண வீக்கமும் அதிகரிக்க வழி வகுக்கும். ஆனால், இந்தப் போரில் ஈராக் வெற்றி பெற்றால், யூரோவின் அரசாட்சி ஆரம்பிக்கும். டாலருக்கு பதிலாக நாம் யூரோவில் பெட்ரோலை வாங்க வேண்டி வருமே தவிர இதில் யார் ஜெயித்தாலும் நாம் பெட்ரோலை வாங்க விலை கொடுக்கத்தான் வேண்டும்.

***

இந்திய வளமை கருதி என்ன செய்தாலும் அதனை எதிர்ப்பதற்கு இந்தியாவில் ஒரு பெருங்க்கூட்டமே இருக்கிறது. அணு மின் நிலையங்களைத் தொடக்கினாலும் எதிர்ப்பு. அணைக்கட்டுகள் கட்டி மின்சாரம் எடுக்க முயன்றாலும் எதிர்ப்பு, பெட்ரோலில் மின்சார நிலையங்கள் கட்டினாலும் எதிர்ப்பு, வேதி உரத்துக்கு ஒரு பக்கம் மான்யம் கேட்டுக்கொண்டே மறுபுறம் வேதி உரத்துக்கு எதிர்ப்பு, பயங்கரவாதிகளைக் கைது செய்தால் எதிர்ப்பு, துணைக்கோள்களை உருவாக்கினால் எதிர்ப்பு, சாலைகளை விரிவு படுத்தினால் எதிர்ப்பு, நதிகளை இணைக்க எதிர்ப்பு, அணுகுண்டு பரிசோதனை செய்தால் எதிர்ப்பு, ஏவுகணைகள் உருவாக்கினால் எதிர்ப்பு என்று எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு நம் ஊரில். அணுகுண்டு பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதே ஆட்கள்தாம் இன்று ஈராக் போரை எதிர்த்து இந்தியா பெருங்குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்பவர்கள். (பிரபுல் பித்வாய், அருந்ததிராய் இன்ன வகையறா). அணுகுண்டு இருப்பதால்தான் என்ன தூண்டினாலும் வட கொரியாவை விட்டுவிட்டு ஈராக்கை அடிக்கிறது அமெரிக்கா என்ற பாலபாடம் கூட தெரியாமல் இப்படி ஒரு அறிவுஜீவிக் கூட்டம் வெறெங்கு மதிப்பு பெறும் ? இந்தியாவில்தான்.

போருக்கு எதிராகக் குரல் கொடுப்பது மனிதாபிமானம். ஆனால், அந்த மனிதாபிமானம் மற்றவன் கேட்டுப் பெறுவதல்ல. என்னுடைய கண்ணீர் இன்னும் ர்வாண்டா மக்களுக்கும் போல்பாட்டின் கீழ் மடிந்த ஏராளமான கம்போடியர்களுக்கும்தான். அருகே தங்கள் வீடுகளிலிருந்து துரத்தப்பட்டு தெருவில் வாழ்கின்ற லட்சக்கணக்கான காஷ்மீர் இந்துக்களுக்கும், இஸ்லாமிய காஷ்மீரை உருவாக்க தடையாக இருக்கும் காஷ்மீரிகள் தங்கள் வீடுகளிலேயே கொல்லப்படுவதற்கும், குஜராத்தில் கொல்லப்பட்ட இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தான் என் கண்ணீர். சதாம் உசேனின் ஈராக்கில் வளமையாக வாழ்ந்துவந்த ஈராக்கியர்களுக்கும், கொழுப்பெடுத்து போய் குவாய்த்தை ஆக்கிரமித்து அடிவாங்கிய சதான் உசேனுக்கும், இன்று கொழுப்பெடுத்து போய் ஈராக்கை தாக்குவதால் இறக்கும் சில அமெரிக்க துருப்புக்களுக்கும், சதாம் உசேனுக்காக உயிர்விடும் ஈராக்கியர்களுக்கும் அல்ல. இந்த போர் விளம்பரத்தை நான் மறுதலிக்கிறேன். இந்த போர் மூலம் செய்யப்படும் அமெரிக்கா ஒரு சூப்பர் பவர் என்ற விளம்பரத்தை மறுதலிக்கிறேன். அதே போல, ஈராக்கியர்கள் பாவப்பட்ட ஏழைகள் என்ற மறு விளம்பரத்தையும் மறுக்கிறேன். ஒரு சராசரி ஈராக்கியன், ஒரு சராசரி அரபியன், ஒரு சராசரி இந்தியனை விட பல பல மடங்கு பணக்காரன். இத்தனை வருடம் அமெரிக்காவால் பொருளாதாரத் தடைவிதிக்கப்பட்டும், ஒரு சராசரி ஈராக்கியன் ஒரு சராசரி இந்தியனைவிட பணக்காரனாகத்தான் இருக்கிறான். அதனால்தான், நாம் அங்கு சென்று வேலை செய்து காசு பண்ண அலைகிறோம். பண்ணாடைகளான நாம் இவர்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று பேசுவது வேடிக்கையானது. ஏழை சொல் என்றும் அம்பலம் ஏறாது. அந்த உண்மை புரியாமல், ஏதோ நாம் பெரும் தர்மவான்கள் போலவோ நீதிமான்கள் போலவோ அராபியர்களுக்கு வக்காலத்து வாங்குவது அபத்தம். இதே அராபியர்கள் கொடுக்கும் பணத்தின் மூலம்தான் காஷ்மீரிலும் மற்றும் இந்திய மாநிலங்களிலும் தீவிரவாதம் வளர்கிறது. சமீபத்தில் கொல்லப்பட்ட காஷ்மீர் தீவிரவாதியின் வீட்டில் ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் இருந்தது. இந்தியர்களைக் கொல்ல கொடுக்கப்பட்ட இந்த பணம் எங்கிருந்து வந்தது ? அப்படிப்பட்ட அராபிய தேசத்தவருக்கு இந்தியர்கள் ஆதரவு தர வேண்டும் என்று சொல்லுவதில் என்ன அறம் இருக்கிறது ? உண்மைதான். ஈராக்கியர்கள் கொடுத்த பணமாக இருக்காது. ஆனால், ஈராக்கின் முக்கியத்துவம் அது முஸ்லீம் அரபு தேசம் என்பதால்தானே ? ஈராக்கியர்களின் வெற்றி முஸ்லீம்களின் வெற்றியாகத்தானே பேசப்படும் ? அரபு ஒற்றுமை, முஸ்லீம்கள் ஒற்றுமை என்ற பேச்சில் தானே இங்கே ஈராக் ஆதரவு – குவைத் ஆக்கிரமிப்பை மறந்து, குர்து மக்கள் உசேனால் கொல்லப்பட்டதை மறந்து – உருவாகியுள்ளது ?

ஈராக் போரில் ஒரு சார்புள்ள நிலைமையை எடுப்பது, இந்திய முஸ்லீம் தலைவர்களுக்கு தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனால் இஸ்லாமிய ஒற்றுமை என்ற உளுத்துப் போன கருத்தில் செயல்படும் இஸ்லாமிய மதவாதிகளின் நலனையல்ல, இந்திய முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்கள் நலனையும் கருதித்தான் இந்திய அரசு செயல்படவேண்டும், செயல் பட முடியும். இது அமெரிக்க அரசாங்கத்துக்கும், ஈராக்கிய அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெறும் போர். ஈராக்கில் தொடர்ந்து சதாம் உசேன் இருப்பதாலோ, அமெரிக்க கைக்கூலியான ஒரு ஈராக்கியர், ஈராக்கில் ஜனாதிபதியாக இருப்பதாலோ இந்திய முஸ்லீம் மக்களுக்கு நன்மையும் இல்லை; தீமையும் இல்லை. சொல்லப்போனால், அரபு நாடுகளெங்கும் இருக்கும் எல்லா சர்வாதிகாரிகளும் அமெரிக்க கைக்கூலிகள்தாம். அப்படி இருந்தும், இத்தனை காலம் நடக்காத ஒரு தீமை, இன்று ஈராக்கில் ஒரு சர்வாதிகாரி போய் இன்னொரு சர்வாதிகாரி வருவதால் வந்துவிடப்போவதில்லை. இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய மார்க்கத்துக்கு எந்த ஆபத்தும் நேர்ந்துவிடப்போவதில்லை.

இந்தப் போர் நமக்கு சம்பந்தமில்லாத போர். இதில் யார் வெற்றி பெற்றாலும் இந்தியர்களான நமக்கு பிரச்னைதான். அமெரிக்காவுக்கு வெற்றி, ஈராக்குக்கு வெற்றி, தொடர்ந்து இழுபறி என்ற மூன்று முடிவுகளில் இந்தியர்களான நமக்கு ஓரளவு சாதகமானது தொடர்ந்து இழுபறிதான். பாலஸ்தீனம் போல தொடர்ந்து அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து போரிடும் ஈராக் என்பது வருத்தத்துக்குரியது , மனிதாபிமானமற்றது என்றாலும், அதுவே மிகக்குறைந்த இந்திய உயிர் சேதத்தை விளைவிக்கும்.

போர் ஆரம்பிக்கும் முன் அதனை எதிர்த்தேன். போர் ஆரம்பித்துவிட்டது. இனி இது முடிவடையாதிருக்கவேண்டும். இந்தியாவை தன்னுடைய பழைய ஏகாதிபத்திய அச்சுறுத்தலுக்கு கீழ் கொண்டுவர முடியாத அளவுக்கு, அமெரிக்காவின் சக்தியும் ஈராக்கின் சக்தியும் விரயம் செய்யப்பட வேண்டும். எவ்வாறு பாகிஸ்தானையும், கூடவே காஷ்மீர் பிரச்னையையும், பாகிஸ்தான் மூலமாக இந்தியாவெங்கும் இனவெறி குழுக்களை உருவாக்கி இந்தியாவை கடந்த 50 வருடங்கள் சக்தியை விரயம் செய்த வைத்தார்களோ அதே போல, அமெரிக்க பிரிட்டன் ஏகாதிபத்தியங்கள் தங்கள் சக்தியை விரயம் செய்ய வேண்டும். அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு தூரத்தில் நடுநிலையாக நிற்பதுதான் நாம் செய்யக்கூடியது. அவ்வப்போது காசு வாங்கிக்கொண்டு மனிதாபிமான முயற்சியாக பாரபட்சமின்றி இருவருக்கும் உணவு கொடுக்கலாம். அதைத்தவிர வேறு ஏதும் செய்யக்கூடாது.

நம்மால் முடிந்தது, ஆசியாவின் ஒரே சுதந்திர ஜனநாயக நாடான இந்தியாவில், அதன் கொஞ்ச நஞ்சம் இருக்கும் சுதந்திரத்தையும், அதன் கொஞ்ச நஞ்சம் இருக்கும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற முனைவது மட்டுமே. அந்த குறிக்கோள் இல்லாமல், ஈராக்குக்கோ, அமெரிக்காவுக்கோ வக்காலத்து வாங்குவதாக இந்த போர்களின் உள்ளே நுழைவது, நம்மை நாமே கழுத்தறுத்துக்கொள்வது போன்றதுதான்.

ஈராக் தனியாக நிற்கும் வரைக்கும் இது அமெரிக்காவின் பிராந்திய புண்ணாகத்தான் இருக்கும். ஆனால் இன்னும் 2 மாதங்கள் போர் தொடர்ந்து நடந்தால், இதன் விளைவுகள் இன்னும் பரந்து சிரியா, ஈரான், லெபனான், சவூதி அரேபியா, லிபியா என்று பரவும்போது, பாகிஸ்தான் நம்மையும் இந்த சண்டைக்குள் இழுத்துவிட முயற்சிக்கும். அப்போது காஷ்மீர்ப் பிரசினையில் விட்டுக் கொடுத்தாவது, இந்தியா பாகிஸ்தானுடன் சமாதானம் பண்ணிக்கொள்ள வேண்டும். எந்த தூண்டுதல் காரணமாகவும், எப்படியும் இந்த உலகப்போருக்குள் தேவையின்றி இந்தியா நுழைந்துவிடக்கூடாது.

***

karuppanchinna@yahoo.com

**

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்