பன்முகத் தன்மை (pluralism) பற்றி

This entry is part [part not set] of 28 in the series 20030323_Issue

ஐசையா பெர்லின்


நம்முடைய லட்சியங்கள் பலதரப் பட்டவை என்ற முடிவிற்கு நான் வந்தேன் – கலாசாரமும், மனித உணர்வுகளும் பலதரப்பட்டது போலவே தான் இதுவும். நான் ‘relativist ‘ அல்ல. அதாவது, ‘ எனக்கு பால் கொண்ட காப்பி பிடிக்கும், உனக்கு காப்பியில் பால் பிடிக்காது . எனக்கு அன்பு செய்வது பிடிக்கும் உனக்கு கொலைமுகாம்கள் பிடிக்கும் ‘ என்பது போல உன் மதிப்பீடுகள் வேறு , எந்த மதிப்பீட்டையும் மாற்றியமைக்கவோ , மற்ற மதிப்பீடுகளுடன் ஒருங்கிணைக்கவோ முடியாது என்று நான் கருதவில்லை. இப்படிச் சொல்வது மிகத்தவறு என்பதும் என் கருத்து. ஆனால் மனிதர்கள் தேடும் , மேற்கொள்ளும் மதிப்பீடுகளில் பலதரப்பட்ட விதமானவை உண்டு என்று நான் நம்புகிறேன். இதன் பொருள் எண்ணிக்கையற்ற முறையில் இந்த விழுமியங்கள் உள்ளன என்பதல்ல. இந்த விழுமியங்கள் நிச்சயமாக எண்ணிக்கையில் அடங்கக் கூடியவை தான் – 74 -122 -26 என்று ஏதோ ஒரு எண்ணிக்கை – மனிதத் தேடலில் ஈடுபடும், மனிதப் பண்புகள் கொண்டவர்களுக்கு இவற்றில் ஒரு விழுமியம் வாய்க்கக் கூடியதே. ஒரு விழுமியத்தில் நம்பிக்கை வைக்கும் ஒரு மனிதனின் விழுமியங்களை மற்றவர்கள் புரிந்து கொள்வதும், அந்த விழுமியத்தைக் கைக் கொள்ளாதவர்களும் , எந்தச் சந்தர்ப்பத்தில், எந்த அடிப்படையில் இந்த விழுமியங்கள் மேற்கொள்ளப் படுகின்றன என்று புரிந்து கொள்ள முடியும். தான் எப்படி அந்த விழுமியங்களை மேற்கொள்வது சாத்தியம் என்று சிந்தனையும் மேற்கொள்ள முடியும். மனிதப் புரிவின் அடிப்படையே இது தான்.

இந்த விழுமியங்கள் புறவயமானவை என்று தான் நான் எண்ணுகிறேன். அதாவது மனிதராய் உயிர்வாழ்வதும், இந்த விழுமியங்களைச் சிறப்புற மேற்கொண்டு அவற்றின்படி நடக்க முயல்வதும் புறவயமான செயல் என்றே நம்புகிறேன். மனிதரும் , மனுஷியும், நாய்களோ , பூனைகளோ அல்ல என்பது எப்படி புறவயமான நிரூபணம் தாங்கியதோ அது போன்றதே இது. இந்த புறவயமான உண்மையின் பாற்பட்டே – சில விழுமியங்களைத்தான் மனிதர்கள் – மனிதத் தன்மை கொண்டவர்கள் – கையாள முடியும். என்னுடைய விழுமியமாக இல்லாத ஒரு மதிப்பீட்டுக்குள் மனிதன் என்ற முறையில் நான் உட்புகுந்து , அந்த விழுமியங்களின் நியாயத்தைப் புரிந்து கொள்ளமுடியும். மனிதர்களாய் இருப்பதாலேயே நமக்கு எல்லாம் பொதுவான விழுமியங்கள் உண்டு- அந்தப் பொதுத்தன்மை இல்லாவிடில் நாம் மனிதராய் இருக்க மாட்டோம்.. அதே போல் விழுமியங்களில் வேறுபாடும் உண்டு – வேறுபடுவதே மனித இருப்பின் ஓர் அடையாளம்.

எனவே தான் பன்முகத் தன்மை (Pluralism) என்பது relativism அல்ல. மாறுபட்ட விழுமியங்கள் மனிதத் தன்மையின் சாராம்சமாக உள்ள புறவய யதார்த்ததில் எழுந்த ஒன்று – அகவயக் கற்பனைகளில் உதித்த தன்னிச்சையான விஷயமல்ல. எனினும், ஒரு மதிப்பீட்டு மண்டலத்தில் இருந்து கொண்டு நான் இன்னொரு மதிப்பிட்டு மண்டலத்தை வெறுக்கவும், மற்ற மதிப்பீடுகள் , என் மதிப்பீடுகளை புண்படுத்துவதாகவும், என் மதிப்பீடுகளுக்கு முன்னால் வாழத் தகுதியில்லாதவை என்றும் நான் கருதலாம். தன்னால் சகிக்க முடியாத மதிப்பீட்டு மண்டலம் என்று நான் கருதும் மதிப்பீடுகளுக்கு எதிராக நான் தாக்கலாம் – இன்னும் தீவிரமாய்ப் போய் யுத்தமும் செய்யலாம். இருந்தும் அவை மானிடத் தேடலாய்த் தான் நான் புரிந்து கொள்வேன். நா ?ி விழுமியங்கள் வெறுக்கத் தக்கவை என்றாலும், தவறான தகவல்களினாலும், யதார்த்தம் பற்றி தவறான நம்பிக்கையாலும், எப்படி ஒருவர் நா ?ித் தத்துவமே உய்விற்கு வழி என்று தன் விழுமியமாக ஏற்றுக் கொள்ளமுடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நிச்சயம் இந்த நா ?ி மதிப்பிடுகள் எதிர்த்துப் போரிட வேண்டுபவையே, ஆனால், இதனாலேயே , சிலர் நம்புவது போல் நா ?ிகள் பைத்தியங்கள் என்றோ, உளவியல் பிறழ்வு கொண்டவர்கள் என்றோ நான் சொல்ல மாட்டேன். உதாரணமாக, சில உயிரினங்கள் தாழ்ந்தவர்கள், இனமே முக்கியம், வெள்ளை இனம் தான் படைப்பாற்றல் பெற்றது என்றெல்லாம் இவர்கள் நம்பலாம். தவறான கல்வியால், உருவாக்கப் பட்ட பிரமைகளால், பொய்ப் பிரசாரத்தால், மனிதர்கள் இதன் மீது நம்பிக்கை வைத்து , சொல்லொணாக் குற்றங்களை இழைக்கிறார்கள்.

பன்முகத்தன்மை ஒரு சரியான உலகப் பார்வை எனில், ஒன்றுக்கு ஒன்று எதிராக இராத மதிப்பீட்டு மண்டலங்கள் ஒன்றையொன்று மதித்து உடன் வாழ்வது சாத்தியமே. இதன் பின்விளைவு சகிப்புத் தன்மையும், தாராளவாதமும் ஆகும். ஆனால் ‘monism ‘ ஒற்றையுண்மைத் தத்துவம் (ஒரே ஒரு மதிப்பீட்டு மண்டலமே உண்மை, மற்ற மதிப்பீட்டு மண்டலங்கள் எல்லாம் தவறு என்ற பார்வை) இந்த சகிப்புத் தன்மையை ஏற்படுத்தாது. ‘relativism ‘ (உன் பாதை உனக்கு என் பாதை எனக்கு, ஒத்து வரவில்லையென்றால் ஒன்றும் செய்வதற்கில்லை,. யாரும் இது தான் சரி என்று எதையும் முன்னே நிறுத்த நிரூபிக்க முடியாது என்ற தத்துவம்.) கூட இந்தச் சகிப்புத் தன்மையை ஏற்படுத்த முடியாது. என் அரசியல் பன்முகத் தன்மை ‘விகோ ‘ ‘ஹெர்டர் ‘ மற்றும் ரோமாண்டிசிசம் இவற்றிலிருந்து பெற்றது. சகிப்புத் தன்மையை வலியுறுத்தி போர் செய்யும் அளவிற்கும் ரோமாண்டிசிசம் சென்றதுண்டு.

தேசியமும் இத்தகையதே : ஒரு தேசத்தின் குடிமகனாக ஒருவர் உணர்வது மிக இயல்பானதே, இந்த ஒரு காரணத்திற்காக மட்டும் ஒருவர் கண்டனம் செய்யப் படலாகாது, விமர்சிக்கப் படலாகாது. ஆனால் இதன் தீவிரமான ஒரு நிலையில் – என் தேசம் உன்னுடைய தேசத்தை விட உயர்ந்தது, உலகத்தை எப்படி மாற்றியமைப்பது என்று எனக்குத் தான் தெரியும், நீ என் சொல்படிக் கேட்டு நடக்க வேண்டும், ஏனென்றால் நீ கீழான தேசத்தவன், அதனால் உன் தேசம் என் தேசத்தின் கீழ் ஆளப் படவேண்டும், என் தேசமே உலகின் மிகச் சிறந்த நாட்டை அமைக்க வல்லது – என்று வக்கிரம் பெறும்போது நான் இங்கு குறிப்பிட்ட பன்முகத் தன்மைக்கு எதிர்த்திசையில் போகிறது. இதனால் பயங்கர அழிவே நிகழும்.

‘ரொமாண்டிசிச ‘ இயக்கத்தால் உருவாக்கப் பட்ட மதிப்பீடுகள் அதற்கு முன்னால் இருந்திராதவை என்பது சுவாரஸ்யமான விஷயம். உதாரணமாக பல்வேறுபட்ட பார்வைகள் நல்லதே, சமூகத்தில் வெவ்வேறு கருத்துகள் கொண்ட மனிதக் குழுக்கள் ஒருவரை இன்னொருவர் மதித்து சகவாழ்வு மேற்கொள்வது, ஒற்றைத் தன்மை கொண்ட சமூகத்தை விடச் சிறப்பான ஓர் இருப்பு என்ற தத்துவம் இப்போது தான் உருவாகியது. 18-ம் நூற்றாண்டிற்கு முன்பு , மாறுபட்ட கருத்துகள் நல்ல விஷயம் தான் என்பதை யாரும் ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்கள். அதே போல் லட்சியத்திற்கு விசுவாசமாய் இருப்பது (sincerity) என்பதும், ஒரு புதிய கருத்து. உண்மைக்காக உயிர் விடுவது போற்றத் தகுந்தது என்ற கருத்து: இஸ்லாமிற்காக உயிர் விட்ட மக்கள் ஏழைகளாய், வழிதவறியவர்களாய் இருக்கலாம், ஆனால் விசுவாசமானவர்கள் என்று போற்றப்பட்டனர். இதே போல் தான் கத்தோலிக்க மத, புரோட ?டண்ட், யூதர்கள், ‘பாகன் ‘கள் நடுவிலும் விசுவாசம் போற்றத்தக்கதாய் ஆயிற்று. ‘சரியான பாதை ‘ தான் முக்கியம். உண்மையைத் தேடுதலில் வெற்றியே முக்கியமாயிற்று. இரண்டும் இரண்டும் பதினேழு என்று ஒருவன் சொன்னால் , இன்னொருவர் இது பற்றி இப்படிச் சொல்வதாய் வைத்துக் கொள்வோம்: ‘ அவன் உன்னை எரிச்சல் படுத்தவோ, பெருமை கொள்ளவோ இப்படித் தவறாகச் சொல்லவில்லை. அவன் உண்மையாய் அதை நம்புகிறான் ‘ என்று சொன்னால், அது பற்றி என்ன சொல்வோம். இப்போதென்றால் ‘ அவன் விசுவாசம் பற்றி எனக்குக் கவலையில்லை. அவன் கணக்கு அபத்தம் ‘ என்று சொல்வோம். புரொடஸ்டண்டுகள் பற்றி கத்தோலிக்குகளும், கத்தோலிக்குகள் பற்றி புரொடஸ்டண்டுகளும் இப்படித் தான் சொன்னார்கள். விசுவாசம் அதிகம் ஆக ஆக ஆபத்தும் அதிகரிக்கிறது. பன்முகத் தன்மையின் அவசியம் பரவின பின்பு தான் விசுவாசம் – மாறுபட்ட நம்பிக்கைகள் – மதிக்கப் படலாயின. நோக்கம் முக்கியமாயிற்று, பின் விளைவுகள் பின்தள்ளப் பட்டன. வெற்றி முக்கியமல்லாததாய் ஆயிற்று.

பன்முகத் தன்மையின் எதிரி ‘ஒற்றை உண்மை வாதம் ‘ (monism) ஆகும். உண்மை ஒன்றே அதன் கீழ் எல்லாமும் திரள வேண்டியது அவசியம் என்ற அந்தப் பழைய கருத்து. இந்த நம்பிக்கையின் பின் விளைவு தான் அந்த ஓர் உண்மையை அறிந்தவர்கள், அறியாதவர்கள் மீது ஆட்சி செலுத்த வேண்டும் என்ற கோட்பாடு. (இந்த் ஓருண்மை வாதம் கார்ல் பொப்பர் ‘சாராம்சவாதம் ‘ -essentialism- என்று அழைக்கும் கருத்தை ஒத்தது என்றாலும் வேறுபட்டதே. இந்தச் சாராம்சவாதம் தான் உலகின் எல்லா தீய சக்திகளின் காரணம் என்று பொப்பர் நம்பினார்.) மனித சமூகத்தின் பிரசினைகளுக்கு எல்லாம் கையில் தயாராய் பதில்களை வைத்துள்ள ஓருண்மைவாதிகளுக்குக் கீழ்ப்படிந்து உலகம் அணி திரள வேண்டும் , ஏனென்றால் அவர்களுக்கே சமூகம் எப்படி அமைக்கப் படவேண்டும், தனிமனிதர்கள் எப்படி வாழ வேண்டும், கலாசாரம் எப்படி அமைய வேண்டும் என்பது தெரியும், என்பது இந்த ஓருண்மை வாதிகளின் கருத்தாக இருந்தது. பிளேட்டோவின் ‘தத்துவஞானி-அரசன் ‘ என்ற கருத்துக்கு ஒத்தது இது. பிளேட்டொ இப்படியான ‘தத்துவ ஞானி ‘ அரசர்களே மற்றவர்கள் மீது அதிகாரம் செய்ய தகுதியானவர்கள் என்று கருதினார். விஞ்ஞானிகள் ஆட்சிக்கு வந்தால் தான் உலகம் உருப்படும் என்று கருதிய சிந்தனையாளர்களும் உண்டு. வரம்பற்ற அதிகாரம் தாங்கிய படித்த வர்க்கம் தான் பெரும் அநீதிகளைப் புரிந்திருக்கிறது, அடிப்படை சுதந்திரங்களை மறுத்திருக்கிறது என்பதே இந்தக் கருத்துக்கு என் பதில்.

பழங்காலத்தில் கடவுளர்களுக்குப் பலியாக மக்கள் கொல்லப் பட்டதுண்டு. இந்தக் கடளர்களுக்குப் பதிலாக நவீன உலகம் இப்போது ‘இசங்களை ‘ உருவாக்கியுள்ளது. சித்திரவதை செய்வதும் கொல்வது கண்டிக்கப் படும் . ஆனால் தனிப்பட்ட நலனிற்காக அல்ல ஒரு இசத்திற்காக – சோஷலிசம், ஃபாசிசம், தேசியம், கம்யூனிசம், வெறித்தனமான மத ஈடுபாடு, முன்னேற்றம், வரலாற்று விதிகளை நிறைவேற்றுதல் – இந்த லட்சியங்களுக்காகச் செய்யப் படும் சித்திரவதை, கொலைகள் சரியானவையே என்ற பார்வை கிளம்பி வருகிறது. புரட்சியாளர்களில் பலர், வெளிப்படையாகவோ, அல்லது மனதிற்குள்ளோ – இப்படிக் கருதுகிறார்கள் , முட்டையை உடைக்காமல் – அதுவும் மிகுந்த வன்முறையோடு சிதறடிக்காமல்- உணவு தயாரிக்க முடியாது. முட்டைகள் உடைபடுகின்றன என்பது உண்மைதான், ஆனால் அந்த லட்சிய ‘உணவு ‘ வெகு தொலைவில் கூட இல்லை. கட்டுப்பாடற்ற ‘ஓருண்மைவாதத்தின் ‘ பெறப்படுவது இந்த வன்முறையும் கொலைகளும் தான் – இதை வெறி என்று பலர் அழைக்கலாம், ஆனால் இந்த வெறியின் வேரும் அடிப்படையும் , ஓருண்மை வாதமே.

Series Navigation

ஐசையா பெர்லின்

ஐசையா பெர்லின்