போர் நாட்குறிப்பு

This entry is part [part not set] of 28 in the series 20030323_Issue

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்


வரும் வராது வரும் என்று ஆடுபுலியாட்டம் ஆடிக் கொண்டிருந்த மீடியா பண்டிதர்கள் மகிழவும் காமிராவுக்கு முன்னால் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு வருந்தவும் போர் வந்தே விட்டது.

ஐக்கிய நாடுகள் சபை ஈராக்கில் ஆயுதப் பரிசோதனைக்கு அனுப்பிய வெப்பன் இன்ஸ்பெக்டர் டாக்டர் அயான் பிளிக்ஸுக்கு அமெரிக்கா கொடுத்த மரியாதையை விடக் கிராமத்தில் மலேரியா தடுப்பூசி போடப்போகும் சானிட்டரி இன்ஸ்பெக்டருக்கு ஆயிரம் மடங்கு மரியாதை கிடைக்கும்.

கோஃபி அண்ணனைச் சும்மாக்கிட சவமே என்று திண்ணையில் கிடத்தி விட்டு, எதிர்த்துக் குரல் விட்ட பிரஞ்சு அதிபர் ஷிராக்கைப் பேடி என்று வசைபாடிவிட்டுப் பிரம்மராட்சசன் புஷ்ஷும் குட்டி ராட்சசன் டோனி பிளேரும் இன்னும் பரிவார சைத்தான்களான காலின் பவ்வல், ரம்ஸ்ஃபெல்ட்,கேண்டிலியா ரைசம்மாள் போன்றோரும் உலகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கிளம்பி விட்டார்கள்.

கம்பீரமான அந்தக் கட்டை மீசைக் கிழவர் சதாம் உசைன் எத்தனை கூறு கெட்ட கூகையாக வேணுமானாலும் இருக்கட்டும் ..இந்தப் பிசாசுகளுக்கு அவரை அவருடைய நாட்டை விட்டு இருபத்து நாலு மணி நேரத்தில் இருந்து வெளியே போ என்று ஆணையிட எத்தனை நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்!

இங்கே இங்கிலாந்தில் எல்லாப் பேச்சும் போரில் தான் வந்து நிற்கிறது. யாரைக் கேட்டாலும் இந்தப் போர் நியாயம் இல்லாதது என்று சொல்கிறார்கள். டெஸ்கோ சூப்பர்மார்க்கெட் வாசலில் மேஜை போட்டு, ‘இராக்கைத் தாக்காதே ‘ என்று நோட்டாஸ் கொடுக்கிறார்கள் சூட் அணிந்த வயசான கனவான்கள். தாடி வைத்த உயரமான அரேபிய இளைஞர்கள் பிளாஸ்டிக் பக்கெட்டில் ஒரு பவுண்ட் போடச்சொல்லிப் போகிற வருகிறவர்களை எல்லாம் நிறுத்தி நிதி வசூலித்துக் கொண்டு, ‘ஈராக்கைத் தாக்காதே ‘ என்று எழுதிய பேட்ஜ் குத்தி விடுகிறார்கள். வசூலிக்கும் பணத்தை என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.

லண்டனில் பிக்கடலியிலும், பார்லிமெண்ட் சதுக்கத்திலும் நாள் முழுக்கப் போர் எதிர்ப்புப் போராட்டங்கள். டி.வி காமிராவுக்கு முன் புஷ், பிளேருடைய கார்ட்டூன் பொம்மைகளை நீட்டுகிற போராட்டக் காரர்கள் எல்லோரும் இளைஞர்கள். ‘The only bush I love is mine ‘ என்று ஒரு யுவதி உயர்த்திப் பிடித்த பேனர் சொல்கிறது.

தொலைக்காட்சியில் எந்த வாய்க்காலைத் திறந்தாலும் பாக்தாத்திலும் பாஸ்ராவிலும் குண்டு விழுகிற காட்சி. சர்வநாசத்தை உருவாக்கும் போர் என்ற மனிதகுல அவமானம் டெலிவிஷன் திரையில் வெடித்துச் சிதறும் சிவப்பு, ஆரஞ்சு, கருப்பு வெளிச்சங்களின் சுவாரசியமான தொகுதியாகப் பரிமாறப்படும்போது அதன் கொடூர விளைவுகளை மறந்துவிட்டு, ராச்சாப்பாட்டோடு சேர்த்து அதையும் அசைபோட்டுக் கொண்டிருக்கிறோம் எல்லோரும். சுரணை மரத்துப் போகச் செய்வதில் மீடியாவின் பங்கு புலனாகிக் கொண்டிருக்கிறது.

ஐ.டிவியில் அறிவிப்பாளிப் பெண்மணி லண்டன் படப்பிடிப்புத் தளத்தில் உட்கார்ந்தபடி அழகிய சிரிப்போடு சொல்கிறார் – ‘இந்தப் போர் நடக்கும்போதே உங்களுக்கு அருகில் இருந்து பார்ப்பதுபோல் காட்சிகளையும் வர்ணனைகளையும் தருவதற்காக, நாள் முழுக்க மற்ற நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்து விட்டோம் ‘. அவருக்கு முன் பெரிய திரையில் உலகத்தில் எங்கெங்கோ இருந்து ‘லைவ் ‘ ஆக வர்ணனையாளர்கள் மாறி மாறித் தோன்றிப் பேசிக் கொண்டேஏஏஏ இருக்கிறார்கள்.

‘டாம், நேற்று இரவு பாக்தாத் நகரில் அரைமணி நேரம் தொடர்ந்து அமெரிக்கத் துருப்புக்கள் குண்டு மழை பொழிந்து ஏகப்பட்ட சேதம் என்று தெரியும். ஆனால் நீ நிற்கும் இடத்துக்குப் பின்னால் தெரியும் வீதியில் எப்போதும் போல நிறைய வாகனப் போக்குவரத்து இருக்கிற மாதிரித் தெரிகிறதே ? ‘

லண்டன் அறிவிப்பாளிப் பெண்மணி விசாரிக்க, அவருக்கு முன்னால் திரையில் தெரிந்த வேற்றூர் வர்ணனையாளர் சங்கடமாகச் சிரிக்கிறார்.

‘ஆமா அலீஸ், நீ சொல்றது உண்மைதான். பாக்தாத்தில் ராத்திரி முழுக்க குண்டுமழை. ஆனால் நான் பாரீஸில் இருந்து பேசறேன் .. ‘

பிரிட்டாஷ் டாப்லாய்ட் பத்திரிகைகள் கூட டயானாவின் பட்லரைத் துரத்துவதையும், பாப் பாடகன் எவனோ அவனுடைய சிநேகிதி பற்றி ‘She made me grow all night ‘ என்று வாக்கு உதிர்த்ததை முதல் பக்கம் – நாலு காலத்தில் அலறுவதையும் ஒத்தி வைத்துவிட்டு, சதாம் செத்துப் போய்விட்டாரா இல்லையா என்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கின்றன.

பாக்கிஸ்தானி நண்பர்கள் முகத்தில் சங்கடம் தெரிகிறது. இந்தியா இந்த அநீதியான யுத்தத்தை எதிர்ப்பதைப் பற்றி மறக்காமல் சொல்கிறார்கள் (நம்ம எதிர்ப்பு பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லையென்றாலும்). பாக்கிஸ்தான் அரசாங்கம் அமெரிக்காவுக்கு வால் பிடிப்பது அவர்களுக்கே ஜீரணிக்கக் கஷ்டமான விஷயமாக இருக்கிறது.

‘சொல்லுங்க .. நீங்க என்ன நினைக்கறீங்க ? ‘

சென்னைக்குத் தொலைபேசும்போது கேட்டேன்.

‘நிச்சயம் இந்தியாதான் கெலிக்கும். ஆஸ்திரேலியா டாமே ஆட்டம் கண்டிருக்கு ..ஷேன் வார்ன் இல்லே..பெளலிங் லைன் அப் போதாது .. ‘

அன்புடன்

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்